சமீபத்தில் வெளியான கார்கி திரைப்படம் சமூகத்தில் பல்வேறு உரையாடல்களைத் தொடங்கி வைத்தது. குறிப்பாக, இத்திரைப்படத்தின் வசனங்கள் பெரும் தாக்கத்தை உண்டாக்கும் வண்ணம் இருந்தன. அதில் ஒரு குறிப்பிட்ட வசனம் பலரை மிக ஆழமாகச் சிந்திக்கத் தூண்டியது. “நீங்க நார்மல் இல்லனு சொல்றதுதான் என் கண்ணுக்கு பேலன்ஸா தெரியுது. ஒரு பெண்ணுக்கு எங்கெங்க வலிக்கும்னு தெரியும்; ஒரு ஆம்பளைக்கு எங்கெங்க திமிர் இருக்கும்னு தெரியும்” என்பதுதான் அந்த வசனம். இந்த வசனம் எனக்குள் சில புரிதல்களையும் பல கேள்விகளையும் எழுப்பியது. மானுடவியல் பார்வை கொண்டு எனது கேள்விகளுக்கான பதில்களைப் பார்க்கலாம்.

கார்கி திரைப்படத்தில் இடம்பெற்ற இந்த வசனத்தை, தன்னை ஒரு திருநங்கையாக அடையாளப்படுத்திக் கொண்ட நீதிபதி, ஒரு பெண் குழந்தைக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை பற்றிய வழக்கை விசாரிக்கும்போது கூறும்படி அமைந்துள்ளது. அந்தத் திருநங்கை நீதிபதி, இரு தரப்பு வாதத்தையும் மிக நேர்மையாக விசாரித்துக்கொண்டிருக்கும் போது, ஓர் ஆண் வழக்கறிஞர் வழக்கு மேலும் நீடித்துக்கொண்டிருக்கும் கடுப்பில் ஒரு normal நீதிபதி இருந்திருந்தால் இந்த வழக்கு எப்போவோ முடிந்திருக்கும் என்று கூறி LGBTQI+ சமூகத்தினரை abnormal என்று கூறுகிறார். இதை எதிர்க்கும் வகையில் அந்தத் திருநங்கை நீதிபதி கூறும் பதிலடிதான், எனக்குப் பல்வேறு புரிதல்களையும் கேள்விகளையும் உண்டாக்கியது.

முதல் புரிதல்: ஒரு திருநங்கை/திருநம்பியால் ஆண் பெண் சிக்கல்களைச் சமநிலை தவறாமல் அணுக முடிகிறது. காரணம், அவர்கள் இரு பாலினத்தின் அனுபவங்களையும் பெற்றவர்களாக இருக்கிறார்கள். மிக முக்கியமாக, சமூக விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு பாலினம் சார்ந்த சிக்கல்களை ஆராயும் தன்மை கொண்டவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். எனவே, நீதித்துறையில் மட்டுமல்லாமல் அதிகாரம் மிக்க அனைத்துத் துறைகளிலும் மருவிய பாலினத்தவர்கள் பெரும் அளவில் பங்கு வகிக்க வேண்டும் என்று தோன்றியது. இந்த எண்ணம் எனக்குள் தோன்ற முற்போக்குக் கருத்துகள்கொண்ட சில மனிதர்களின் புத்தகங்களை நான் வாசித்திருந்தது ஒரு காரணமாக இருந்திருக்கலாம். ஆனால், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாள் இருந்தே இந்த எண்ணம் கனடாவில் உள்ள ஒரு பழங்குடி இனத்தில் இருந்துவருகிறது என்றால் அதற்கு காரணம் என்ன? இந்தக் கேள்விக்கான பதில் எனக்கு அந்தப் பழங்குடி மக்களின் சமூகம் மற்றும் பண்பாட்டு கட்டமைப்பு பற்றியும் அச்சமூகத்தில் உள்ள பால் புதுமையினரின் நிலை பற்றியும் ஆழமாகப் புரிந்துகொண்ட பிறகு கிடைத்தது.

வட அமெரிக்காவில் உள்ள பழங்குடி இனக்குழுக்களில் உள்ள பால் புதுமையினர் Two Spirit People என்று அழைக்கப்படுகிறார்கள். இந்தச் சொற்றொடர் மிக அண்மையில் (1990 ஆம் ஆண்டு) அனைத்துப் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பால் புதுமையினரையும் ஒருங்கிணைப்பதற்காக ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்டது. ஒவொரு பழங்குடி இனமும் பால் புதுமையினரை வெவேறு வார்த்தைகளில் அடையாளப்படுத்துவதோடு அவர்களுக்கு வெவ்வேறு சமூகப் பொறுப்புகளை வகுத்ததனால், இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்க Two Spirit என்ற சொற்றொடர் தேவைப்பட்டது. இன்று இந்தச் சொல் அனைத்துப் பால் புதுமையினரையும் குறிக்க பயன்படுத்தப்பட்டாலும் பழங்காலத்தில் அவர்களை ஓர் உடலில் இரு பாலினம் உணர்பவர் என்ற அர்த்தத்தில்தான் அடையாளப்படுத்தினர். ஏன் என்றால், அப்போதைய பாலின வகைகள் மற்றும் பாலின ஈர்ப்பு குறித்த புரிதல் இன்றைய பரிணாமவளர்ச்சியை அடைத்திருக்வில்லை.

பெரும்பான்மையான இனக்குழுக்களில் Two Spirit மக்களுக்கு தலைமை பொறுப்பு கொடுத்து மரியாதை செய்திருக்கிறார்கள். இந்தச் சொல் ஆன்மீக அடையாளத்தையும் குறிக்கிறது. பல பழங்குடி சமூகங்களில், இரண்டு-உணர்வுகொண்ட நபர்கள் கனவுகள் மற்றும் தரிசனங்களின் வடிவத்தில் இயற்கைக்கு அப்பாற்பட்ட தலையீட்டைப் பெற்றதாக நம்பப்படுகிறது. எனவே, அவர்கள் பெரும்பாலும் தங்கள் சமூகங்களில் குணப்படுத்துபவர்கள் (healers), மருத்துவர்கள் (Shaman), சடங்கு தலைவர்கள்/பூசாரிகள் போன்ற சிறப்பு ஆன்மீகப் பாத்திரங்களை நிரப்பினர். வரலாற்று ரீதியாக, Two Spirit மனிதர்களும் அறிவின் சிறந்த ஆதாரங்களாக இருந்தனர். இதிலிருந்து கனடாவில் உள்ள பழங்குடி இனத்தில் பால் புதுமையினர் மரியாதையாகவும் சமமாகவும் நடத்த பட்டிருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

ஆனால், இன்றைய சூழலில் பல பழங்குடி மக்கள் பால் புதுமையினரைச் சமமாகப் பார்ப்பதில்லை. இதற்கான முதல் காரணம், காலனி ஆதிக்கம். காலனி ஆதிக்கத்திற்குப் பிறகு கனடிய பழங்குடி மக்கள் அனைத்து வகைகளிலும் பண்பாட்டு படையெப்புக்குப் பலியானார்கள். இதன் காரணமாக அவர்கள் தங்களுடைய பண்பாட்டு அடையாளங்களையும் பழக்கங்களையும் காலப்போக்கில் தொலைத்துவிட்டனர். இதைப் புரிந்துகொண்ட பிறகு எனக்குள் எழுந்த அடுத்த கேள்வி – காலனி ஆதிக்ககாலத்திற்கு முன்பு இருந்த பழங்குடி பண்பாட்டில் எப்படி இந்தச் சமத்துவம் சாத்தியமானது? இந்தக் கேள்விக்கான பதில் அவர்களின் சமூக பொருளாதார அமைப்பு எப்படிச் செயல்பட்டது என்று அறிந்த பிறகு வந்த புரிதலில் கிடைத்தது.

வட அமெரிக்க நிலப்பரப்பிற்கு மனிதர்கள் வந்தடைந்த காலம் தொட்டு இன்றுவரை அவர்கள் வாழ்க்கைமுறையில் எண்ணற்ற மாற்றங்கள் நடந்தன. அவர்கள் குழு (band), குலம் (clan), இனம் (Tribe ) மற்றும் தலைவன் (chieftain) என்று நான்கு வகை சமூக அமைப்பைப் படிப்படியாக கடந்து வந்தனர். இந்த நான்கு சமூக அமைப்பில், தலைவன் உள்ள நான்காவது சமூக அமைப்பைத் தவிர மற்ற மூன்று அமைப்பும் சிறு அளவில் மக்கள் தொகை கொண்ட படிநிலைகள் இல்லாத எளிய சமூகமாக இருக்கும். எனவே, இந்த மூன்று சமூகங்களின் தேவைகள் சிறிய அளவில் இருந்ததால் கிடைத்த அனைத்துமே சமமாகப் பகிர்ந்து தரப்பட்டிருக்கும். அதிலும், கனடா ஒரு குளிர் பிரதேசம். அடிப்படை தேவைகளைத் பூர்த்தி செய்வதே பெரும் சவாலாக இருந்தது. எனவே, பெரிய அளவில் படிநிலைகள் உள்ள சமூகங்கள் இங்கு குறைவு. பெரும்பான்மையான பழங்குடி மக்கள் குலங்களாகவும் இனங்களாகவும் இருந்ததற்கு குளிர்கால நிலை ஒரு முக்கிய காரணம்.

சிறிய இனக்குழுக்களாக இருக்கும் பழங்குடி மக்களுக்கு மக்கள் தொகை குறைவது ஒரு பாதகமான விஷயம். உணவு உடை போன்ற அடிப்படைத் தேவைகள் அனைவருக்கும் கிடைக்க அனைவரும் சேர்ந்து பொருள் தேடி கொண்டுவரவேண்டி இருக்கும். எனவே, கணிசமான அளவு மக்கள் தொகை அவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும். இப்படிப்பட்ட சூழலில் யாரையும் சமூகத்தில் இருந்து ஒதுக்கிவைக்க முடியாது. அப்படி ஒதுக்கி வைப்பதால் எந்த லாபமும் இல்லை. இப்படி இருக்கையில், பால் புதுமையினராக ஒருவர் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் போது, பொதுவான நடைமுறை என்று நம்பப்படும் நடைமுறையிலிருந்து விலகி இருப்பவர்களை அந்த இனக்குழு மக்களால் தனியாக ஒதுக்கி வைத்துப் பார்க்க முடியவில்லை. மாறாக, அவர்களை இயற்கை தங்கள் இனத்திற்குத் தந்த வரமாக பாவித்து, அவர்களைச் சமமாக மதித்து சமூகத்தில் சிறந்த பொறுப்புகளை வழங்கினர்.

கிடைத்த அனைத்துச் செல்வங்களையும் சமமாகப் பகிந்து வாழும் சமூகம் பொதுவுடைமை சமூகமாக இருக்கும். எனவே, பெரும்பான்மையான கனடிய பழங்குடி மக்கள் பொதுவுடைமை சமூகமாக இருந்ததால் அவர்கள் சமூகங்களில் சமத்துவம் இருந்தது; குறிப்பாகப் பாலின சமத்துவம். இன்றைய நிலையில், நம் சமூகத்தில் எண்ணற்ற வகைகளில் வேறுபாடுகளும் மேல் கீழ் என்ற படிநிலைகளும் உள்ள சிக்கலான சமூகமாக இருக்கிறது. சாதி, மதம், இனம், மொழி, பாலினம் போன்ற அடையாளங்களை வைத்து எண்ணற்ற அடக்குமுறைகளும் நடக்கின்றன. சமத்துவமான சமூகம் மீண்டும் பிறக்க வேண்டும் என்றால் என்ன செய்யவேண்டும் என்பது தான் என்னுடைய அடுத்த கேள்வி. இந்தக் கேள்வியைச் சில நண்பர்களிடம் எழுப்பிய போது தனிச்சொத்துடைமையை ஒழிக்க வேண்டும் என்பதுதான் பதிலாகக் கிடைத்தது.

தனிச்சொத்தை எப்படி ஒழிப்பது என்ற கேள்விக்குச் சரியான பதில் எனக்கு எளிதில் கிடைக்கவில்லை. சிலர் மக்கள்புரட்சி நடக்க வேண்டும் என்றனர். ஆனால், அது எளிதில் சாத்தியமானதாக எனக்குத் தோன்றவில்லை. புரட்சி என்பது மக்கள் அனைத்து வேற்றுமைகளையும் கலைந்து மனிதன் என்ற அடையாளத்தோடு மட்டும் ஒன்று சேர்ந்து சமத்துவத்திற்காகப் போராடும் போது நடக்கக்கூடியது. மக்கள் ஒன்று சேர்வதைத் தடுப்பதே சாதி மதம் போன்ற வேற்றுமைகளாக இருக்கும்போது எப்படிப் புரட்சி உருவாகும் என்பது என்னுடைய கடைசிக் கேள்வி. இந்தக் கேள்விக்கான பதில் சீர்திருத்தம்.

அனைத்து வேற்றுமைகளையும் கடந்து மனிதனை மனிதனாக மட்டும் அணுகும் தன்மை மக்கள் மத்தியில் தோன்ற தொடர்ந்து சமத்துவம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சமத்துவ மனப்பான்மையை மக்கள் மனதில் தொடர்ந்து விதைப்பது மூலம் இந்தச் சமூகம் மெல்ல மெல்ல மாறும். அடுத்த தலைமுறையாவது சமத்துவம் நிறைந்த உலகுகில் வாழ வழி செய்வோம். சமத்துவம் கடைபிடிப்போம்; சமத்துவம் போதிப்போம்.

(தொடரும்)

படைப்பாளர்:

தீபிகா தீனதயாளன் மேகலா

தமிழகத்தைச் சேர்ந்த தீபிகா, தற்போது கனடாவின் மக் ஈவன் பல்கலைக்கழகத்தில் மானுடவியல் பட்டப்படிப்பு பயின்றுவருகிறார். தான் கற்றுவரும் மானுடவியல் கோட்பாடுகளை தமிழ் நிலப்பரப்புக்கும், அமெரிக்கக் கண்டத்துக்கும் பொருத்திப் பார்த்து கட்டுரைகளை எழுதத் தொடங்கியுள்ளார். வரலாறு மற்றும் தமிழ் மேல் தீவிர பற்று கொண்டவர். இவரது யூடியூப் செய்தி சேனலின் சுட்டி: https://www.youtube.com/channel/UCyNXWPShwgZG4IsyjP7BnAQ