ஒடுக்குமுறை பல வகை. அதில் சாதிவெறியும் ஒன்று. இது நாம் அறிந்த விஷயமே. ஆனால், சாதியக் கட்டமைப்பு இந்தியாவில் மட்டும் இல்லாமல் இன்னும் பல நாடுகளில் நிலவுகிறது என்பது குறித்துப் பலருக்குத் தெரிவதில்லை. இந்தியாவோடு சேர்த்து, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், இலங்கை, மாலத்தீவு, பூட்டான் ஆகிய தெற்காசிய நாடுகளிலும் சாதியக் கட்டமைப்பு உள்ளது. ஏன் என்றால் சாதி என்பது இந்திய நாட்டுடைய பிரச்னை மட்டும் அல்ல; இந்து மதத்தில் உள்ள பிரச்னை. எனவே, இந்து மதம் பரவலாக உள்ள நாடுகளில் சாதியப் பாகுபாடுகள் நிலவுகிறது.

அதேபோல், சாதிவெறியையும் இனவெறியையும் சேர்த்துப் புரிந்துகொள்வதால், இனவெறியால்தான் சாதிவெறி நிகழ்கிறது என்ற ஒரு கருத்தும் பேசப்படுகிறது. இந்தியாவில் இனவெறியும் சாதிவெறியும் ஒன்றோடு ஒன்று சேர்த்துப் புரிந்துகொள்ளப்படுகிறது. அது ஏன்? உண்மையில் சாதியப் பாகுபாட்டுக்கு இனவெறிதான் காரணமா? ஜப்பான் நாட்டில் நிலவும் சாதிவெறி மற்றும் இனவெறி பிரச்னைகளை இந்தியாவோடு ஒப்பிட்டு இந்த இரண்டு கேள்விகளுக்கான பதில்களைக் காண்போம்.

இந்தியாவில் நிற வேற்றுமை இருப்பதினால், அதன் அடிப்படையில் சாதிப் பிரிவினை தோன்றியிருக்கலாம் என்று ஒரு வாதம் இங்கு தோன்ற ஒரு கதை கூறப்படுகிறது. சில ஆயிரம் வருடங்களுக்கு முன் ஸ்டெப்பி புல்வெளியில் இருந்து கால்நடையாக இந்தியா வந்தடைந்த மக்கள் வெளிர் நிறத்தில் இருந்ததாகவும் அதுவரை இந்திய நிலப்பரப்பில் வாழ்ந்த மக்கள் அடர் நிறத்தில் இருந்ததால் நிறவெறியில் அவர்களோடு வெளிர் நிறத்தவர் கூடி வாழ விரும்பாமல் இருந்ததனால் மக்கள் நிற அடிப்படையில் பிரிந்து, பின் வேலை அடிப்படையில் சாதிகளாகப் பிரிந்தனர் என்பதுதான் அந்தக் கதை. இந்தக் கதையின் அடிப்படையில் வெளிர் நிறத்தவர்கள் உயர்ந்த சாதிகளாகவும் மாநிறத்தவர்கள் இடைநிலை சாதிகளாகவும் அடர் நிறைந்தவர்கள் தாழ்ந்த சாதிகளாகவும் பெரும்பாலும் இருக்கிறார்கள் என்று கருதப்படுகிறது. இந்தக் கூற்றின் உண்மைத்தன்மையை அறிய, இதுபோன்ற சாதிய அமைப்பு உடைய இந்தியாவோடு நிலத்தொடர்பே இல்லாத ஜப்பானில் நிலவிவரும் சாதிய அமைப்போடு இந்தியச் சாதியக் கட்டமைப்பை ஒப்பிட்டுப் பார்த்தேன். முதலில் ஜப்பானிலும் இதே போன்ற கதை கூறப்படுகிறதா என்ற கேள்வி எனக்குத் தோன்றியது. அங்கு வேறொரு கருத்து நிலவுகிறது.

ஜப்பானியர்கள் தங்கள் தேசிய இன அமைப்பு மற்றும் பண்புகளில் ஒரே மாதிரியானவர்கள் என்று ஒரு மேலாதிக்க கருத்து உள்ளது. அதாவது, நிறம் மற்றும் உடல் தோற்றம் தொடங்கி பழக்க வழக்கங்கள் வரை அனைத்திலும் ஜப்பானியர்கள் ஒரே தன்மை உடையவர்கள் என்ற பிம்பம் பொதுவாக நிலவுகிறது. ஆனால், உண்மையில் ஜப்பானியர்கள் பல்வேறு இனக்குழுக்களாகப் பிரிந்து தனித்த அடையாளங்களோடு வாழ்கிறார்கள். இந்தியாவில் உள்ள சாதியக் கட்டமைப்பு போலவே ஜப்பானிலும் மக்கள் படிநிலைகளில் மேல் கீழாகப் பிரிக்கப்பட்டு வாழ்கிறார்கள். அங்கும் மக்கள் அவர்களின் வேலைகளுடன் இணைக்கப்பட்டனர். அதாவது, தொழிலாளர் பிரிவின் அடிப்படையில் முறைப்படுத்தப்பட்டனர்.

இந்தச் சாதி அமைப்பு போர்வீரர்கள், விவசாயிகள், கைவினைக் கலைஞர்கள், வணிகர்கள் என நான்கு முதன்மை சாதிகளாகப் பிரிக்கப்பட்டது. இந்தியாவில், சாதியக் கட்டமைப்பை எதிர்த்துப் போராடி அதிலிருந்து வெளியே வந்து பின் ஒடுக்குமுறைக்கு ஆளாகிக்கொண்டிருக்கும் தலித் மக்களை போலவே, ஜப்பானின் மக்கள்தொகையில் ஒரு பகுதியினர் இந்தச் சாதிக் கட்டமைப்பிலிருந்து வெளியேறினர். உண்மையில், இந்தப் போராளிகள் வெளியேற்றப்பட்டனர். அப்படி வெளியேற்றப்பட்டவர்கள் சமூகத்தில் இழிவான வேலைகளைச் செய்பவர்களாக மாற்றப்பட்டனர். அந்தச் சமூகத்தின் தீண்டத்தகாதவர்களாக இந்தப் போராளிகள் கருதப்பட்டனர். ஜப்பானின் தீண்டத்தகாத மக்களை ‘புறக்குமின்’ என்று அடையாளப்படுத்தினர்.

ஜப்பானின் சாதியக் கட்டமைப்பைப் பற்றி அறிந்த பிறகு எனக்குத் தோன்றிய முதல் கேள்வி இதுதான். நிறம் மற்றும் உடல் அமைப்புகளில் இந்தியர்கள் மத்தியில் உள்ள வேறுபாடுகளே சாதிய அமைப்பின் தோற்றம் என்றால், ஒரே நிறம் மற்றும் உடல் தோற்றம் உடைய ஜப்பானில் சாதிய வேற்றுமை எப்படி உருவாகியிருக்கும்?. இந்தக் கேள்விக்கான பதில், தனிச்சொத்துடமை.

ஜப்பான் ஒரு தீவு நாடு. அங்கு குடியேறிய முதல் மக்கள் தங்களுக்குளேயே கூடிவாழ்ந்து காலப்போக்கில் இந்த தீவு முழுவதும் பரவியிருப்பார்கள். தீவு நாடாக இருப்பதினாலேயே அங்கு பெரிய அளவில் பிற இனக்கலப்பு நடக்கவில்லை. எனவே, அங்கு உள்ள மக்கள் ஒரே தோற்றம் மற்றும் பழக்க வழக்கங்கள் உடையவர்களாக பல காலம் இருந்திருக்கக்கூடும். அப்போது, இந்த மக்கள் மத்தியில் பிரிவினை என்பது எப்போது தோன்றியிருக்கும் என்று யோசித்தபோது கிடைத்த பதில்தான் தனிச்சொத்துடமை. மனிதன் தன்னுடைய அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான நீர், உணவு, உறைவிடம் போன்றவற்றை அடைவதே கடினமாக இருந்தபோது கிடைத்த அனைத்தும் பகிர்ந்தளிக்கப்பட்டது.

அதேபோல், ஜப்பான் நிலப்பரப்பில் கிடைத்த செல்வங்களை அனைவரும் பகிர்ந்து வாழ்ந்த வரை ஏற்றத் தாழ்வு இருந்திருக்காது. மக்களுக்குத் தேவையான செல்வங்கள் எப்போது தேவைக்கு அதிகமான அளவிற்கு கிடைக்கப்பெற்றதோ, அதாவது விவசாயம் மற்றும் நாகரிக வளர்ச்சிக்குப் பிறகு, செல்வம் தனி நபர்களால் சேர்க்கப்பட்டது. அதுவரை குழுக்களாகச் செல்வங்களைப் பகிர்ந்து வாழ்ந்தவர்கள் தனியாகச் செல்வங்களைச் சேகரிக்கத் தொடங்கினர். இந்நிலையில் அனைவரிடத்திலும் செல்வப் பகிர்வு சமமாக இருக்க வாய்ப்பில்லை. ஒரு சாராரிடம் அதிகமாகவும் மற்றொரு சாராரிடம் குறைவாகவும் இருக்கலாம். இந்த வேற்றுமைக்குக் காலச் சூழல் ஒரு முக்கியக் காரணம். உதாரணத்துக்கு, ஒரே ஊரில் ஒரு பகுதியில் வாழும் மக்களின் நிலத்தில் விளைச்சல் செழிப்பாக இருக்கும்போது மற்ற பகுதியில் வாழும் மக்களின் நிலத்தில் நீர்வரத்து நின்றுபோன காரணத்தால் விளைச்சல் சரியாக இல்லாதபட்சத்தில் இரு சாராரிடத்திலும் செல்வம் சமமாக இருக்காது. எனவே, மக்களிடையே ஏற்றத்தாழ்வு உருவாக மிக முக்கியப் பங்கு வகுப்பது சமமான செல்வபகிர்வற்ற தனிச்சொத்துடமை.

சமூகத்தில் சமநிலை தவறும்போது தாழ்ந்தவர்கள் என்று கருதப்படும் மக்கள் பல்வேறு அடக்குமுறைகளுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். நாகரிகம் மேலும் வளர்ச்சி அடையவும் சமூகத்தில் பல்வேறு அடுக்குகளாக மக்கள் பிரிக்கப்பட்டனர். இப்படிப் பிரிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்து அகமனமுறையைப் பின்பற்றுவதால் இந்தச் சமூகப் பிரிவினை இன்றுவரை சாதியக் கட்டமைப்புடைய அனைத்து நாட்டிலும் தொடர்கிறது, இந்தியா உள்பட. இந்தியாவில், உண்மையில் நிறம் அடிப்படையில் சாதியப் பிரிவினை தோன்றவில்லை. அனைத்து சாதிய படிநிலையிலும் மக்கள் அனைத்து நிறத் தோற்றத்தில் இருப்பதை எளிதில் காணமுடியும். இருப்பினும் இந்தக் கண்ணோட்டம் எப்படித் தோன்றியது?

இந்திய அரசு, நிர்வாக வசதிக்காகச் சமூகம் மற்றும் கல்வி அளவில் பின்தங்கிய மக்களைச் சாதி அடிப்படையில் பிரிக்கும் பொருட்டு Forward castes (FC), Other backward castes (OBC), Scheduled castes (SC), Scheduled tribe (ST) என்று பிரித்ததை நாம் அறிவோம். பெரும்பாலும் வெளிர் நிறத்தில் உள்ள பார்ப்பன படிநிலையைச் சார்ந்த மக்கள் FC வகுப்பில் சேர்க்கப்பட்டனர். அதே நேரம், வெளிர் நிறத்தவர் பெரும்பான்மையாக இருக்கும் சில பழங்குடி இன மக்கள் FC வகுப்பில் சேர்க்கப்படவில்லை. இதற்கான முதன்மை காரணம் இந்த மக்கள் இடையே சமூகம் மற்றும் கல்வி சார்ந்த முன்னேற்றதில் உள்ள இடைவெளி. சமூகத்தில் உயரிய மதிப்பு என்பது அதிகப்படியான கல்வி தகுதி உடையவருக்கு கிடைக்கபடிக்கிறது; கல்வி தகுதி அடைவதற்கு செல்வம் மிகுதியாக தேவைப்படுகிறது.

எனவே, செல்வமிகுதியால் தனிச்சொத்துகளை அதிகமாக வைத்திருக்கும் பார்ப்பன மக்கள் FC வகுப்பிலும், பார்ப்பனர்களைப் போலவே வெளிர் நிறமுடைய பழங்குடி மக்கள் தனிச்சொத்துகளை மிகுதியாக வைத்திருக்காததால் அவர்கள் பிற வகுப்பிலும் சேர்க்கப்படுகிறார்கள். அதுமட்டுமில்லாமல், தனிச்சொத்து மிகுதியாக இல்லாததால் சாதிய படிநிலையில் இந்த வெளிர் நிறப் பழங்குடி மக்களுக்கு எந்த ஒரு சமூக அந்தஸ்தும் கொடுக்கப்படாமல். அவர்கள் சாதியக் கட்டமைப்பில் இருந்து ஒதுக்கப்பட்டு, பல ஒடுக்குமுறைகளுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். இதன் அடிப்படையில் பார்க்கும் போது, சாதிய வேற்றுமையின் முதல் காரணம் தனிச்சொத்துடமையின் அளவுகோல் தானே தவிர, நிற வேற்றுமை அல்ல என்பதைப் புரிந்துகொள்ளமுடிகிறது.

இந்திய நிலப்பரப்பிற்கு வெளிர் நிறமுடைய ஆரியர்கள் வருகை தராமலேயே இருந்திருந்தாலும் சாதியக் கட்டமைப்பு போல் இங்கு தனிச்சொத்து அடிப்படையில் வேறுவகையான சமூகப் படிநிலைகள் இருந்திருக்கும் என்பதுதான் நிதர்சனமான உண்மை. எனவே, இங்கு தீர்வு காணவேண்டிய பல பிரச்னைகளில் ஒன்று தேவைக்கும் தகுதிக்கும் அதிகமான தனிச்சொத்துடமை.

(தொடரும்)

படைப்பாளர்:

தீபிகா தீனதயாளன் மேகலா

தமிழகத்தைச் சேர்ந்த தீபிகா, தற்போது கனடாவின் மக் ஈவன் பல்கலைக்கழகத்தில் மானுடவியல் பட்டப்படிப்பு பயின்றுவருகிறார். தான் கற்றுவரும் மானுடவியல் கோட்பாடுகளை தமிழ் நிலப்பரப்புக்கும், அமெரிக்கக் கண்டத்துக்கும் பொருத்திப் பார்த்து கட்டுரைகளை எழுதத் தொடங்கியுள்ளார். வரலாறு மற்றும் தமிழ் மேல் தீவிர பற்று கொண்டவர். இவரது யூடியூப் செய்தி சேனலின் சுட்டி: https://www.youtube.com/channel/UCyNXWPShwgZG4IsyjP7BnAQ