சிரிப்பு நம் கவலைகளை எல்லாம் மறக்க வைக்கும் மாமருந்து. முன்பின் அறியாதவரைக்கூட நட்பில் இணைக்கும் ஓர் அன்புச் சங்கிலி. உடல்நலனோடு மனநலனையும் சீர்படுத்தும் வல்லமை கொண்டது. சிரிப்பு என்பது மனிதர்களால் மட்டும் செய்யக்கூடிய ஒரு செயல். மனிதன் பேசத் தொடங்கும் முன்னரே சிரித்துதான் மற்றவரிடம் தொடர்பு கொண்டிருந்திருக்கக்கூடும். உலகம் முழுமைக்கும் மொழியறிவு தேவைப்படாத ஒரு பொது மொழி, சிரிப்பு மட்டுமே. இது வயது, பாலினம், நிறம், தேசம், இனம் என்ற எல்லாவற்றையும் உடைத்துப் போடுகிறது. எளிதாகப் பிறரது இதயத்திற்குள் ஊடுருவுகிறது. 

இந்தச் சிரிப்பு புன்னகை, இளநகை, குமிண்சிரிப்பு, குறுநகை, குறுஞ்சிரிப்பு, சிறுநகை, செல்லச் சிரிப்பு,  புன்முறுவல், முகிழ்நகை, மூரல் என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. வார்த்தைகளால் சாதிக்க முடியாத ஒரு செயலை ஒரு சிறு புன்னகையில் மலர்ந்த முகம் சாதித்துவிடும். எத்தனையோ பொன் நகைகளை அணிந்தாலும் அது முகம் சிந்தும் ஒரு புன்னகைக்கு ஈடாகாது. புத்தரின் அடையாளம் அவரது புன்முறுவல் பூத்த முகம் தானே!             

புகைப்படங்கள் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது நம் சிரித்த முகம் தானே? சில விநாடிகளில் எடுக்கப்படும் புகைப்படங்களையே சிரிப்பு அழகு படுத்துகிறது எனும் போது, வாழ்நாள் முழுவதும் சிரித்துக்கொண்டே இருந்தால் அது எவ்வளவு அழகான ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கையாக இருக்கும்.                

பிறந்த குழந்தை ஒரு நாளைக்கு 200 முதல் 300 முறை வரை சிரிக்கிறது‌. அது வளர வளர அந்த எண்ணிக்கை குறைந்து, ஒரு நாளைக்கு 20 முறைதான் சிரிக்கிறது.

எபிநெஃப்ரின், நார் எபிநெஃப்ரின், கார்டிசால் போன்ற மன அழுத்தத்தை உண்டாக்கக்கூடிய ஹார்மோன்களின் சிறப்பை சிரிப்பு இயல்பிலேயே குறைக்கிறது. டோபமைன், செரட்டோனின், ஆக்ஸிடோசின் மற்றும் எண்டார்பின் ஆகிய ஹேப்பி ஹார்மோன்ஸ் சுரப்பை எக்கச்சக்கமாகத் தூண்டி.விடுகிறது. ரத்தக் குழாயின் உட்சுவரான எண்டோதீலியம் சுருங்குவதாலும், அதில் கொழுப்பு படிவதாலும் தான் உயர் ரத்த அழுத்தமும் மாரடைப்பும் ஏற்படுகிறது. வாய்விட்டு, மனம் விட்டுச் சிரித்தால் எண்டோதீலியம் விரிவடைகிறது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. குழந்தைகள் ஏன் அழகாக இருக்கிறார்கள் என்று பார்த்தால் எப்போதும் அவர்களது முகத்தில் தொக்கி நிற்கும் அந்தச் சிரிப்புதான் முக்கியமான காரணம்.         

நம் ஊர்ப் பெண்களின் சிரிப்பு ‘பொம்பளைச் சிரிச்சா போச்சு… புகையிலை விரிச்சா போச்சு…” என்ற அர்த்தமற்ற பழமொழிகளை உதிர்த்துத் திரியும் கலாச்சாரக் காவலர்களால், பிற்போக்குத் தனமான வீட்டுப் பெரியவர்களால் அடக்கி வைக்கப்படுகிறது. இதுவே அவர்களின் மன உளைச்சலுக்கும் அழுத்தத்திற்கும் காரணமாக அமைகிறது. ஆண்கள் இருக்கும் வீடுகளில் பெண்களின் சிரிப்புச் சத்தம் அடக்கப்படுகிறது. என் சிறுவயதில் சத்தம் போட்டுச் சிரிப்பது மோசமான செயல் என்றுதான் போதிக்கப்பட்டிருந்தது. 

முகத்தின் இளமையைத் தக்க வைக்க சிரிப்பு பெரிதும் உதவுகிறது. சிரிப்பதால் கலோரிகள்கூட எரிக்கப்படுகின்றன.  சிரிப்பு யோகா, சிரிப்பு தெரபி என்று சிரிப்பு மருத்துவக் குணங்களும் கொண்டிருக்கிறது. வாய்விட்டுச் சிரிக்கும்போது உடலில் 57 தசைகள் வேலை செய்கின்றன. சாதாரண புன்முறுவலுக்கு நம் முகத்தில் 13 தசைகள் இயங்குகின்றன. புன்னகைத்த முகம் தரும் தன்னம்பிக்கை மிகவும் அதிகம். துன்பம் வரும் வேளையிலே சிரிக்க வேண்டும் என்று சொன்னவர் திருவள்ளுவர். அப்படி எழும் சிரிப்பு அந்தத் துன்பத்தைக் குறைக்க வல்லது. அதைக் கடந்து செல்ல நம்மைத் தூண்டுகிறது. இது எவ்வளவு அழகான மனோதத்துவம்!

எப்படிப் புன்னகை நமக்கு மிகவும் முக்கியமோ அதே அளவு முக்கியம் சில இடங்களில் புன்னகை செய்யாமல் இருப்பதும்தான். ஒருவர் எத்தகைய விஷயத்திற்குச் சிரிக்கிறார் என்று கவனித்தோமானால் அவர்களது எண்ண ஓட்டமும் மனோநிலையும் வெகு எளிதில் நமக்குப் பிடிபட்டுவிடும். மகாபாரதத்தில் ஒரு கதை உண்டு. பாண்டவர்கள் புதிதாகக் கட்டிய அரக்கு மாளிகையை துரியோதனன் பார்வையிட வந்தான். ஓர் இடத்தில் தண்ணீர் இருப்பது போல் தோற்றமளித்தது. ஆடை நனையாமல் மெல்ல அடியெடுத்து நடந்து ஏமாந்தான். இன்னோர் இடத்தில் தண்ணீர் இல்லையென்று நினைத்து வேகமாக வந்தவன் தடுமாறித் தண்ணீரில் வீழ்ந்தான். அதை மேல் மாடத்தில் இருந்து தோழிகளுடன் பார்த்துக்கொண்டிருந்த திரௌபதி சிரிப்பை அடக்க முடியாமல்  கலகலவென்று சிரிக்க, அப்போதே மனதுக்குள் அவள் மீது வன்மம் கறுவிக்கொண்டான் துரியோதனன். இடம் பொருள் ஏவல் தெரியாமல் சிரித்ததால் வந்த வினை இது.            

“சிரிக்கக் தெரிந்த மிருகத்துக்கு மனிதன் என்று பெயர். சிரிக்க மறந்த மனிதனுக்கு மிருகம் என்று பெயர்” என்ற பாடல் சிரிப்பின் அர்த்தத்தை விளக்குகிறது. சிரிப்பதன் மூலம் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கிறது. ரத்த ஓட்டம் சீர்படுகிறது. இதயத்திற்கு இதமளிக்கிறது. ஞாபக சக்தியை அதிகரிக்கிறது. முக்கியமாக நம்மை மிகவும் அழகாக்குகிறது. நாம் இருக்கும் இடத்தைச் சுற்றி மகிழ்ச்சியைப் பரப்புகிறது. மனதில் நேர்மறை எண்ணங்களை வளர்க்கிறது.

அதிகமாகச் சிரிப்பவர்கள் தனிமையில் வாடுபவர்கள் என்று உளவியல் சொல்கிறது. அதிகமாக நம்மைச் சிரிக்க வைப்பவர்கள் சோகத்தைத் தன்னுள் புதைத்துக்கொண்டு அதற்கு புன்னகை முலாம் பூசுபவர்கள் என்றும் சொல்வார்கள். உண்மைதான். சோகத்தின் உச்சகட்டத்தில் சிரிப்புதானே வரும்?           

லியோனார்டோ டாவின்சி வரைந்த மோனாலிசாவின் மர்மப் புன்னகை பொதிந்த படம் உலகப்புகழ் பெற்றது. இந்தியா நடத்திய அணுகுண்டு சோதனைக்கு ‘புத்தரின் புன்னகை’ என்று சங்கேதப் பெயர் வைத்திருந்தார்கள். பழங்காலச் சிற்பங்களின் இதழ்களில் நெளியும் புன்னகை இத்தனை நூற்றாண்டுகள் கடந்தும் உயிர்ப்போடுதான் இருக்கின்றன. இந்தப் புன்னகைக்கென்று ஒரு நாள் கொண்டாடப்படுகிறது. ஹார்வே பால் என்பவர் 1963 ஆம் ஆண்டு மகிழ்ச்சியான மனநிலையை வெளிப்படுத்தும் விதமாக மஞ்சளும் கறுப்பும் கலந்த ஒரு ஸ்மைலியை உருவாக்கினார். 1999ஆம் ஆண்டிலிருந்து அக்டோபர் மாதம் முதல் வெள்ளிக்கிழமை உலகப் புன்னகை தினமாகக் கொண்டாடப்படுகிறது.

டிசம்பர் புன்னகை என்ற ஒன்றைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? மலை வாசஸ்தலங்களில் வசிக்கும் மக்கள் இந்த வார்த்தையை நன்கு அறிவார்கள். ஏனெனில் டிசம்பர் மாதத்தில் கடுமையான பனிப்பொழிவு இருக்கும். அப்போது மலைகளில் வசிக்கும் மக்களுக்கு உதடுகள் வறண்டு, வெடித்திருக்கும். எதிரில் வருபவரைப் பார்த்துச் சிரிக்கக்கூட இயலாது. மீறி சிரித்தால் உதட்டில் ரத்தக் கசிவு ஏற்படும். அந்த மாதத்தில் அங்கிருந்தவர்கள் எல்லோரும் புன்னகையை மறந்துவிடுவார்கள். அதனால் அதற்கு இந்தப் பெயர்.           

அமெரிக்க வடிவமைப்பாளரான பெர்க் இல்ஹன் என்பவர் ஒரு புதுமையான முகம் பார்க்கும் கண்ணாடியை உருவாக்கியுள்ளார். அந்தக் கண்ணாடியில் சாதாரணமாக முகத்தைக் காண முடியாது. நாம் சிரித்தால்தான் முகம் தெரியும். முக உணர்வு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அவர் இந்தக் கண்ணாடியை உருவாக்கியிருக்கிறார். சிரிப்பை எல்லாருக்கும் பரப்ப அவர் தேர்ந்தெடுத்த நவீன உத்தி இந்தக் கண்ணாடி.           

ஒரு நம்பிக்கையூட்டும் புன்னகை நோயைக் குணப்படுத்தும். ஓர் ஊக்கமளிக்கும் புன்னகை வெற்றிகளைக் குவிக்கும். ஒரு நேசமான புன்னகை காதலை மலர்த்தும். ஒரு கள்ளமற்ற புன்னகை மனதைக் குளிர்விக்கும். முன்பின் அறியாதவரைக்கூடச் சிறு புன்னகை நட்பாக்கிவிடும். மற்றவர்கள் சிரித்தால் மட்டுமே சிரிப்போம் என்றில்லாமல் நாமாகப் புன்னகை செய்வோம். புன்னகை என்னும் அற்புதமான பரிசை எல்லோருக்கும் கொடுப்போம்!

சிரிப்பு ஒரு தொற்று வியாதி. முடிந்தவரை அதை மற்றவர்களுக்குப் பரப்புவோம். வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும், சிரித்தால் என்ன செலவா ஆகும்? சிரிங்க… சிரிங்க… சிரித்துக்கொண்டே இருங்க!

(தொடரும்)

படைப்பாளர்:

கனலி என்ற சுப்பு

‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபி தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துகளை எழுதவே கனலி என்ற புனைபெயரில் எழுதத் தொடங்கியிருக்கிறார்.