குழந்தைத்தனமும் புன்னகை தவழும் முகமுமாக அமர்ந்திருந்தார், 33 வயது பல்லவி. மகிழ்ச்சியாகவே பேச ஆரம்பித்தார். “எனக்குத் திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகின்றன. இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். நான் என் குடும்பத்தை மிகவும் நேசிக்கிறேன். அவர்கள் இல்லாத வாழ்வை என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. என்னுடைய மாமியார் எங்களுடன்தான் வசித்துவருகிறார்.”

அவர் மாறும் முகபாவங்களையும் அவர் வார்த்தையில் தெரிந்த உண்மைகளையும் உணர்வுகளில் தெரிந்த நம்பகத்தன்மையையும் எந்த விமர்சனக் கண்ணோட்டமும் இல்லாமல், நடுநிலையோடு (non judgemental) ஆர்வமாகக் கேட்டு வந்தேன்.

அவர் தொடர்ந்தார். “இதுவரை 12 வருடங்களாக, என்னுடைய கணவருக்காகவும் குழந்தைகளுக்காகவும்தான் வாழ்ந்துவருகிறேன். சமையல் வேலை, என் குழந்தைகளைப் பார்த்துக்கொள்வது, மாமியாரைக் கவனித்துக்கொள்வது, குழந்தைகளுக்குப் படிப்புச் சொல்லிக் கொடுப்பது, மார்க்கெட்க்குச் செல்வது என, முழு நேரமும் வேலை இருந்து கொண்டுதான் இருக்கும்.”

சரி, உங்கள் பொழுதுபோக்கு என்ன, டிவி பார்ப்பீங்களா என்று கேட்டேன். “ஐயோ… அதற்கெல்லாம் எனக்கு டைம் கிடைப்பதில்லை. எனக்குப் புத்தகங்கள் படிப்பது பிடிக்கும். ஆனால், அதற்கான நேரம் இதுவரை கிடைத்ததில்லை” என்று பெருமூச்சுடன் சொன்னார்.

எனக்கும் என் நாத்தனாருக்கும் ஒரு மனஸ்தாபம். அது இப்போது பெரிதாகிக்கொண்டே செல்கிறது. என் கணவரும் என் நாத்தனார் வீட்டாரும் என்னிடம் சொல்லாமல், சென்ற வாரம் சுற்றுலா சென்றுவிட்டார்கள். என்னைக் கூப்பிடவும் இல்லை. என்னிடம் ஏதும் சொல்லவுமில்லை. என்னால் தாங்கிக்கொள்ள முடியவே இல்லை” என்றார்.

உண்மையில் உங்களை வருத்தப்படுத்தியது எது என்றேன். நானும் அவர்களுடன் செல்வதற்கு ஆவலாகவே இருந்தேன். நானும் சுற்றுலா இடங்களுக்குச் சென்றிருக்கவில்லை.

என் கணவரிடம் கேட்டதற்கு நாங்கள் காரில் சென்றதால், உன்னையும் குழந்தைகளையும் அழைத்துச் செல்ல இயலவில்லை என்றார்.

என் மாமியார் இது குறித்து, என் பக்கமாகப் பேசுவார் என நினைத்தேன். ஆனால் அவரும் மௌனம் காத்தார். கஷ்டமாக இருந்தது.

சரி, ஏன் உங்கள் நாத்தனாரிடம் இது குறித்து நீங்கள் பேசவில்லை?

என் நாத்தனாரிடம் இது குறித்துப் பேசத் தயக்கமாக இருக்கிறது. ஏனென்றால் நிறைய உதவிகளைச் செய்திருக்கிறார். அவர் என்னைத் தவறாக நினைத்து விடுவாரோ என்று பயமாக உள்ளது.

பல்லவியைப் பொறுத்தவரை இயல்பாகவே உணர்வுகளை வெளிப்படுத்தும். தன்மை கொண்டவர்தான். குடும்ப விஷயங்களைக் கையாளத் தெரிந்தவர்தான். ஆனாலும், ஒரு குறிப்பிட்ட உறவுடன், தன் உணர்வுகளை வெளிப்படுத்துவதில் உள்ள சிக்கலைக் காணலாம்.

இதில் யார் தவறு? யார் சரி? தெரியாது. ஏனென்றால், அவரவர்களின் செயல்களுக்கான நியாயங்கள் எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கும்.

நாமும் ஒரு சில உறவுகளுடன், நம் உணர்வுகளை வெளிப்படுத்துவதில், நமக்காகப் பேசுவதில். நமக்காக உதவிகளைக் கோருவதில் தயக்கத்தைக் கொண்டிருக்கிறோம். ஒன்றை மட்டும் நினைவில்கொள்ளுங்கள், இந்த vulnerability ஒவ்வொரு மனிதரிடமுமே உள்ளது. இதில் தவறேதுமில்லை.

ஆனாலும், தனக்காகத்தான் பேசத் தயாராக இல்லாத போது, இன்னொருவர் எப்படி நமக்காகப் பேசுவார் என எதிர்பார்க்க முடியும்? அது எப்படிச் சாத்தியம்?

தோழி ஒருவர் வாடகை வீட்டில் வசித்துவருகிறார். அந்த வீட்டின் உரிமையாளர் வெளியே செல்லும் போது, தங்கள் குழந்தையைப் பார்த்துக்கொள்ளுமாறு தோழியிடம் விட்டுச் செல்வார். இவளும் தன் வேலையை ஒதுக்கி வைத்துவிட்டு, குழந்தையைப் பார்த்துக்கொண்டிருப்பார். வேலை இருக்கிறது, இன்று பார்த்துக்கொள்ள முடியாது என அவரிடம் எப்படிச் சொல்வது எனத் தயங்குவாள்.

நான் அலுவலகத்தில் பணிபுரிந்துகொண்டிருந்த காலத்தில், அலுவலகத் தோழன் ஒருவர் மட்டும் திருமணம் ஆகாமல் இருந்தார். அதையே காரணமாகச் சொல்லி, உனக்குதான் வேலை எதுவும் இல்லையே என்று சொல்லி, தான் முடிக்க வேண்டிய வேலையை, அவர் தலையில் கட்டிவிட்டுச் செல்வார்கள். அவர் எப்படி மறுப்பது என விழிபிதுங்க நின்று கொண்டிருப்பார். தேவையின் போது, அறிந்து உதவி செய்யாத, மகனிடம் அல்லது மகளிடம் பண உதவி கேட்கத் தயங்கும் பெற்றோர்கள். ஓய்வெடுப்பதற்கு உடலும் மனமும் சொன்னாலும், தன் மகனுக்காக, மருமகளுக்காக, பேரக்குழந்தைகளைப் பொறுப்பாகக் கவனித்து வரும் வயதானவர்கள். இதோ தருகிறேன் என்று பணத்தையோ பொருளையோ வாங்கிவிட்டு, திருப்பித் தராமல் போன நண்பனிடம் எப்படிக் கேட்பது என யோசிக்கும் நண்பர்கள்.

தன் மாமியாருக்குப் பிடிக்கவில்லை என்ற காரணத்திற்காக, தன் வாழ்க்கை முறையில் (life style) மாற்றங்களைச் செய்து கொண்டு வாழும் மருமகள்கள்.

மேற்கூறிய எல்லா நபர்களையும் கவனித்துப் பார்த்தால், அவர்களால் மற்றவர்கள் செய்த தவறைச் சுட்டிக்காட்டி, மிகக் கண்டிப்பாக, அவர்களைப் பழித்துக் கூறவும் முடிந்திருக்கும். அல்லது தன் மகிழ்ச்சியை மட்டுமே கவனத்தில் கொண்டு, தனக்கு வசதியானதை மட்டுமே அவர்களால் செய்திருக்க முடியும்.

ஆனாலும் அவர்கள் அதைச் செய்யவில்லை. மற்றவருக்கு அந்தக் கஷ்டத்தைத் தரவில்லை. அடுத்தவருக்குத் துன்பம் தருவதில்லை. சரிதான். ஆனால், நம்மை மகிழ்ச்சியாக வைத்திருப்பதும் நமது கடமைதானே? எனவே, நம் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அந்த உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டியதும் நமது கடமையே.

எல்லாவற்றையும் தாண்டி உங்களுக்குக் கஷ்டமாக இருக்கிறது என்பதை வெளிப்படுத்த வேண்டியது நீங்கள் தான். உங்களுக்காகப் பேச வேண்டியது நீங்கள்தான்.

நாம் ஒவ்வொருவரும் நிறைய நேரம் மற்றவர்களுக்கு உதவி செய்வதில் விருப்பமாகச் செய்வோம். ஆனால், நமக்காக மற்றவர்களிடம் பேசுவதோ நம் நிலையை வெளிப்படுத்துவதோ நமக்காக உதவி கேட்பதோ அல்லது பெறுவதோ எளிதான ஒன்றாக உணர்வதில்லை.

மற்றவர்களுக்கான உதவிகளைச் செய்வதற்கு முன்னால், உங்களுக்கு நீங்கள் உதவி செய்யக் கற்றுக்கொள்ளுங்கள். அவரவர்களின் செயல்களுக்கான நியாயங்கள் எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கும். அதைக் கருத்தில் கொள்வதற்கு முன்னால், உங்கள் நியாயங்களைக் கருத்தில் வையுங்கள்.

சில நேரம் சில உறவுகளிடம் கண்டிப்பாக நடந்துகொள்ள முடியாவிட்டால் என்ன? சில நேரம் மிக அழுத்தமாக, இல்லை (NO) எனச் சொல்ல முடியாமல் போனால் என்ன?

அந்த மென்மையும் (vulnerability) ஏற்றுக்கொள்ளலாம். தனக்காகப் பேச வேண்டியதற்கான தேவையையும் ஏற்றுக்கொள்ளலாம்.

மென்மையில் திண்மையாய், நம் தேவைகளுக்காக, பேசத் தொடங்கி, உதவிகள் தேவைப்படும்போது, பிறரிடம் எந்தத் தயக்கமும் இன்றி கேட்டுப் பெற்று, வாழ்வைக் கொண்டாடலாம், வாங்க!

(தொடரும்)

படைப்பாளர்:

ஜான்சி ஷஹி

மனநல ஆலோசகர். மன நலத்திற்கான தெரப்பிகளையும் ஆற்றுப்படுத்துதலையும் வழங்கி வருகிறார். வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழவும், பிடித்த எதிர்காலத்தை அமைத்துக்கொள்ளவும், பொது மக்களுக்கு பயிற்சிப் பட்டறைகளை நடத்திவருகிறார். இவர் பெங்களூர் கிரைஸ்ட் பல்கலைக்கழகத்தில் மாணவர் மன நல ஆலோசகராக (student counsellor) பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.