நமக்குப் பிடித்த விஷயங்கள், பிடித்த மனிதர்கள் – அவர்களிடம் பிடித்த விஷயங்கள், பிடித்த உடை, பிடித்த உணவு, பிடித்த இடம், பிடித்த சூழல், பிடித்த நிறம், பிடித்த புத்தகம், பிடித்த படங்கள், பிடித்த விளையாட்டுகள், பிடித்த பாடல், பிடித்த நடிக – நடிகையர், பிடித்த பொருள், பிடித்த பொம்மை, பிடித்த நினைவு, பிடித்த கனவு, பிடித்த வார்த்தைகள்… இப்படி நமக்குப் பிடித்தவற்றை வரிசைப்படுத்திக்கொண்டே போனோமானால், நம்மைப் பற்றிய நமதின் ‘பிடித்த புத்தகம்’ கிடைத்துவிடும்.

இந்தத் தன் நேசிப்பு பயிற்சியை நிறைய பேரிடம் – நட்புகள், அறிந்தவர் தெரிந்தவர்களிடம் செய்து பார்த்திருக்கிறேன். பெரும்பாலானோர் ஏன் கிட்டத்தட்ட எல்லாருமே, தமக்குப் பிடித்த மனிதர்களை எழுதும்போது, பிடித்த மனிதர்கள் வரிசையில் ‘தன்னை’ச் சொல்ல மறந்திருப்பார்கள்.

நாம் பிறந்ததிலிருந்து நம் கூடவே இருப்பது யார் என்றால், அது நாம்தான். இன்பத்திலும் துன்பத்திலும் வாழ்விலும் தாழ்விலும் எப்போதும் – நம்மோடு நாம்தான் இருக்கிறோம். ஆனால், நமக்குப் பிடித்த மனிதர்கள் வரிசையில் நாமே, நம்மைச் சொல்ல மறந்திருப்போம்.

என்னுடைய பிடித்த இடங்கள் என்று பார்த்தீர்கள் என்றால், என்னுடைய முதல் பத்தில் கடலே கிடையாது. இரண்டாவது பத்தில்தான் கடல் என்கிற விஷயத்தை நான் அனுபவிக்க ஆரம்பிக்கிறேன். அதற்கப்புறம் என் வாழ்வில் எப்போதும் கடல் இல்லாமல் இருந்ததே இல்லை. எவ்வளவு பெரிய பிரச்னை என்றாலும் நான் கடற்கரைக்குப் போய்விடுவேன். அலைகளைப் பார்த்துக்கொண்டே இருந்தால், அது ஒரு பெரிய தியானம் போல, மிக ஆழ்ந்த மன அமைதியைத் தரும். குழப்பங்கள் சூழ்ந்த பொழுதில், எந்த ஒரு முக்கியமான முடிவெடுப்பதற்கும், கடற்கரைக்குச் சென்று வந்தால் போதும், மனம் அமைதி அடைந்துவிடும்.

இப்படி நமக்குப் பிடித்த இடங்கள், மனிதர்கள், சூழல்கள் மற்றும் இன்ன பிறவற்றை ஓர் எழுது புத்தகத்தில் முழுவதுமாக எழுதிப் பார்த்தோம் என்றால், அந்தப் புத்தகம், நமக்கு மிகப் பெரிய நேர்மறை சக்தியைக் கொடுக்கும் புத்தகமாக இருக்கும்.

சிலர் சின்ன வயதில் கிடார் கற்றுக்கொள்ள ஆசைப்பட்டிருக்கலாம்; ஆடல், பாடல், ஓவியம் ஏதாவது கற்க முயன்று, ஏதோ காரணங்களால் தடைபட்டு, அப்படியே விட்டிருக்கலாம்.

நம்மை நாமே நேசிக்கும்போது என்ன செய்வோம் என்றால், நாம் நமக்கு மறுபடி ஒரு வாய்ப்பு கொடுப்போம். நாம் செய்கிற எல்லா விஷயங்களிலும் தோல்வி வருகிறதோ இல்லையோ, தோல்வி வந்தாலும்கூட அடுத்து ஒரு வாய்ப்பு கொடுப்போம். இப்படிச் சின்ன விஷயங்களில் நமக்கு வாய்ப்பு கொடுப்பது போலவே, பெரிய விஷயங்களுக்கும் வாய்ப்பு கொடுக்க பழகுவோம். அது கற்றலாக இருக்கட்டும்; வியாபாரமாக இருக்கட்டும்; வாழ்வாக இருக்கட்டும் – எது என்றாலும் மறு வாய்ப்பு தரப் பழகுவோம்.

கற்றுக்கொள்வதற்கு எப்போதும் வயது தடையில்லை; உண்மையில், நமது மனம்தான் தடையாக இருக்கிறது. நாம் மனம் வைத்தால் போதும்; எப்போது வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம். நிஜத்தில், வயது என்பது ஓர் ஓவியம் போல, அது ஓர் எண் மட்டுமே. இதை உணர்ந்தால், எந்த வயதிலும் உற்சாகமாக, மகிழ்ச்சியாக வாழலாம்.

எல்லாருக்கும் தெளிந்த நீரோடை போல தெளிவான வாழ்க்கை அமைந்துவிடுவதில்லை. வாழ்க்கை என்றாலே ‘முயலுதல், தவறுதல் செயல்முறை’ (Trial & Error Process) தானே! சிலருக்கு அவர்கள் என்னதான் நன்கு படிப்பவர்கள் என்றாலும், படிக்க வேண்டிய வயதில் வறுமை காரணமாக, படிக்க முடியாமல் போயிருக்கலாம். சிலருக்குப் பணமிருந்தும், சூழல் காரணமாகப் படிக்க இயலாது போயிருக்கலாம். சூழல் அமைந்து, பணமும் இருந்து, நன்றாகப் படித்திருந்தும் சிலருக்கு நல்ல வேலை அமையாமல் இருக்கலாம்.

எனது தூரத்து சொந்தம் தாத்தா – அவர் கட்டிடப் பொறியாளர் பணிக்குப் படித்து, திருமணமாகி, பிள்ளைகள் பிறந்து, பேரன் பேத்திகளும் எடுத்துவிட்டார். ஆனால், அவருக்குச் சொல்லிக்கொள்ளும்படி சரியான வேலை அமையவில்லை. பூர்விக சொத்தில் வாழ்ந்துகொண்டிருந்தார். கிட்டத்தட்ட அவரது 50களில் திடீரென சில வேலைகள் அமைய, பிறகு பூர்விக சொத்தைவிடவும் அதிகமாகச் சம்பாதித்தார்.

என் நண்பரின் மாமா, எந்த வேலைக்கும் போக மாட்டார். மனைவிக்கு ஆர்பிஐயில் வேலை. இவர் வேலை எதற்கும் செல்லாமல் சுகவாசியாக இருந்தார். ஆனால், அவர் விடாமல் செய்த ஒன்று என்ன என்றால், ஜப்பானிய மொழி கற்றதுதான். யாரும் எதிர்பார்க்கவேயில்லை, பத்திருபது வருடங்கள் முன்பு ஐடி துறைக்கு ஜப்பானிய மொழி கற்றவர்கள், அதை மொழி பெயர்ப்பவர்கள் அதிகம் தேவைப்பட, திடீரென அவர் தனது இத்தனை கால ஓய்வையும் சம்பாதிக்காததையும் ஈடுகட்டும்படியாகச் சம்பாதிக்கத் தொடங்கினார்.

மேற்சொன்ன இருவருமே தொடர்ந்து தமக்கு வாய்ப்பளித்துக் கொண்டே இருந்ததுதான், இதற்கு முக்கியக் காரணம்.

சிலர் தனக்கு என்ன வேண்டும், எது பிடிக்கும் என்பது தெரியாமல் இருப்பார்கள். அவர்கள், இந்த நேர்மறைப் புத்தகத்தைத் தயாரிக்கும்போது, தமக்கு என்ன வேண்டும், எது பிடிக்கும், தாம் எத்தகைய தன்மை உடையவர்களாக இருக்கிறோம் என்று எளிதாகத் தெரியவரும்.

நமக்கே, நமக்கு என்ன வேண்டும், என்ன பிடிக்கும் என்று தெரியாதபோது – அது தெரிய நாம் இந்தளவு மெனக்கெட வேண்டியிருக்கும்பொழுது, மற்றவர்கள் நம்மைப் புரிந்து நடந்துகொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பது எந்த விதத்தில் சரி? இதை யோசிப்போம்.

(தொடரும்)

படைப்பாளர்Example Ad #2 (only visible for logged-in visitors)

பிருந்தா சேது

சே.பிருந்தா (பிருந்தா சேது), கவிஞர். எழுத்தாளர். திரைக்கதை ஆசிரியர். ஹெர்ஸ்டோரீஸில் இவர் எழுதிய ’கேளடா மானிடவா’ என்ற தொடர் நல்ல வரவேற்பைப் பெற்றது. புத்தகமாகவும் வெளிவந்திருக்கிறது.