தன் நேசிப்பில் மிக முக்கியமான ஒன்று, தன்னை உள்ளபடியே ஏற்றல் (Self Acceptance).

நம்மை நாம் உள்ளபடியே ஏற்பது; நாம் எப்படி இருக்கிறோமோ அப்படியே ஏற்றுக்கொள்வது. கறுப்பான / சிவப்பான, குண்டான / ஒல்லியான, பல் தூக்கி / பல் உள்ளடங்கி, உயரமாக / குள்ளமாக என எப்படி இருக்கிறோமோ அதை அப்படியே ஏற்பது; ஏழைத் தாய்க்கு மகளாக / மகனாகப் பிறந்திருக்கிறோமா, அப்படியே நம் நிலையை ஏற்றுக்கொள்வது; நம் சம்பளம் இவ்வளவுதானா, ஆம் அதுதானே யதார்த்தம்!

நாம் நம் தோற்றத்தில், அறிவில், சமூக அந்தஸ்த்தில், நல்ல அல்லது தீயப் பழக்கங்களில், மனிதர்களுடன் பழக அல்லது பழகத் தெரியாத தன்மையில், மனித நேயமுள்ள பார்வையில் அல்லது சுயநலத்துடன், மற்றவர்களுக்கு உதவும் தன்மையில் அல்லது மற்றவர்களைக் கஷ்டப்படுத்தும் பொறாமைகொண்ட மனத்தோடு எப்படி இருக்கிறோமோ, அப்படியே நம்மை உள்ளது உள்ளபடி கொஞ்சமும் பொய்க் கலப்பற்று ஏற்றுக்கொள்வது.

நம்மை நாம் அப்படியே ஏற்கும்போது, மற்றவர்களையும் அவர்கள் எப்படி உள்ளார்களோ அப்படியே ஏற்கும், ஏற்று நேசிக்கும் பக்குவம் ஏற்படும்.

நாம் நம்மை நேசிப்பது என்பது நாம் அறிந்தோ அறியாமலோ செய்த நமது தவறுகளை மன்னிப்பது, குட்டிக் குட்டியாக நாம் செய்யும் செயல்களை நாமே பாராட்டிக்கொள்வது, அதற்குச் சின்னச் சின்னப் பரிசுகள் கொடுத்துக்கொள்வது, நம்மை நாமே உற்சாகமூட்டிக் கொள்வது இவை போன்ற எல்லாமும்தான்.

பள்ளியில் படிக்கும்போது அம்மா பக்கோடா போன்ற எதுவும் சாப்பிடக் கொடுத்தார்கள் என்றால், ஒரு பாடம் படித்துவிட்டு, ஒரு பக்கோடா பரிசளித்துக்கொள்வேன். அந்தப் பழக்கம் எனக்கு இப்போதுவரை உள்ளது. 5 கி.மீ. நடந்தேன் என்றால், ஒரு காபியைப் பரிசளித்துக்கொள்வேன். சின்னச் சின்னதாக நான் செய்யும் செயல்களைப் பாராட்டி, நானே எனக்குச் சின்னஞ்சிறிய பரிசுகள் வழங்கிக்கொள்வேன்.

நாம் தினமும் சாதாரணமாகக் குடிக்கும் காபிக்கும் 5 கி.மீ. நடந்து பரிசாக அடையும் காபிக்கும் ருசியில் அவ்வளவு வித்தியாசம் இருக்கும். அது அவ்வளவு மேம்பட்டு ருசிக்கும். தின வாழ்வை இப்படியான சின்னஞ்சிறிய விஷயங்களால், நாம் சுவாரசியப்படுத்திக்கொள்ளலாம்.

நம்மை நாம் நேசிக்கிறோமா இல்லையா? எப்படித் தெரிந்து கொள்வது?

உங்கள் வயதைப் பத்துப் பத்தாகப் பிரித்துக்கொள்ளுங்கள். உதாரணமாக இப்போது 45 வயதுள்ள ஒருவர் 10 + 10 + 10 + 10 + 5 எனப் பிரித்துக்கொள்ளலாம். (அதிக ஞாபக சக்தி உள்ளவர்கள், ஐந்து ஐந்து வருடங்களாகக்கூடப் பிரித்துக்கொள்ளலாம்). பிரித்துக் கொண்டு ஒவ்வொரு பத்து வருடங்களிலும் உங்களுக்குப் பிடித்த விஷயங்கள், பிடித்த மனிதர்கள், அவர்களிடம் உங்களுக்குப் பிடித்த விஷயங்கள், பிடித்த உடை, பிடித்த உணவு, பிடித்த இடம், பிடித்த சூழல், பிடித்த நிறம், பிடித்த புத்தகம், பிடித்த படங்கள், பிடித்த விளையாட்டுகள், பிடித்த பாடல், பிடித்த நடிகர் நடிகையர், பிடித்த பொருள், பிடித்த பொம்மை, பிடித்த நினைவு, பிடித்த கனவு, பிடித்த வார்த்தைகள்… இப்படி.

இவற்றை நாம் வரிசைப்படுத்திக்கொண்டே போகிறோம் என்றால், இத்தனை வருடங்களாக நாமே அறியாத நம்மைத் தெரிந்துகொள்வோம்.


நம் வயதில் முதல் பத்து வருடங்களை எடுத்துக்கொள்ளலாம். முதல் பத்து வருடங்கள் ஞாபகம் இல்லாதவர்கள், பின்னாலிருந்து வரலாம். இப்போதிருக்கும் வயதிலிருந்து பின்னோக்கிய பத்து வருடங்கள், அப்படி.

நான் என்னுடைய முதல் பத்து வருடங்களை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.

முதல் பத்து வருடங்களில் பள்ளிக்குப் போகிறேன். காக்கா கடி நண்பர்கள். சையத் என்று ஒரு பையன் ‘யூ’வைத் திருப்பிப் போட்ட மாதிரி எனக்கு யானை வரையக் கற்றுத் தந்தான்; அவனைப் பிடிக்கும். என் அப்பாவை மிகவும் பிடிக்கும். அப்பாவை ஏன் என்னென்ன விஷயங்களில் பிடிக்கும் என்று பார்த்தால், என்னை அப்படிக் கொண்டாடுவார். அப்புறம் தமிழ் எழுத்துகளை அவர் கற்றுக் கொடுத்த முறைகள் – ‘ந’ எழுதி அதில் காகம் வரைவது, ‘க’ எழுதி பறவை இறக்கை அடித்துக்கொண்டு பறக்க முயல்வது போல வரைவது, இந்த மாதிரி கற்றலை மகிழ்வாக, எளிதாக, மனதில் பதியும் வண்ணம் கற்றுக்கொடுத்த முறை பிடித்தமானது.

அப்புறம் ரஸியா பேகம் டீச்சர். நான் அடம்பிடிக்கிற, மிகவும் குறும்பான பிள்ளை. அப்பா பள்ளிக்கூடத்தில் என்னை விட்டுவிட்டு வீடு வருகிறார் என்றால், அவருக்கு முன்னதாக நான் வீட்டில் இருப்பேன். தையல் டீச்சர். அவர் ஒரு பெரிய கத்திரிக்கோல் வைத்திருப்பார். அதாலேயே ‘டங்’கென்று தலையில் ஒன்று வைப்பார். அதனால் பள்ளிக்குப் போகவே பிடிக்காது. கோபமாக வரும். இப்படியே விட்டால் சரிப்படாது என்று ஒருநாள் நிஜமாகவே கயிறைப் போட்டுக் கட்டி, முதல் வகுப்பு ரஸியா பேகம் டீச்சரிடம் போய் விட்டார்கள். அவர் பேசிய அன்பான வார்த்தைகள் ‘இப்ப என்ன உனக்கு பிரச்னை. நான் இருக்கேன். நான் உன்னைப் பார்த்துப்பேன்’ என்று கருணையுடன் நடந்துகொண்டது மிகவும் பிடித்திருந்தது. அதற்கப்புறம் நான் எப்போதும் பள்ளிக்கு விடுப்பு எடுத்ததே இல்லை. அவ்வளவு விருப்பத்துடன் பள்ளிக்குச் சென்றேன்.

இதே வயதில் பிடிக்காத விஷயம் என்றால், கொஞ்ச வருட முன்பு வரை எனக்குப் பாசிப்பயறு கடைசல் பிடிக்காது; எதனால் என்று யோசித்தால், இந்த முதல் பத்து வருடங்களில் சொந்தக்காரர்கள் ஒருவர் வீட்டில் விருந்துண்ணப் போகும்போது, பாசிப்பயறு கடைசல் போட்டார்கள். அது ஒரே உப்பு. வாயில் வைக்கவே முடியவில்லை. ‘நல்லாருக்கா’ என்று அவர்கள் கேட்க, ஒரு மரியாதைக்காக, நன்றாக இருப்பதாக நான் சொல்ல, அவர்கள் மறுபடியும் அதையே நிறைய அள்ளிப் பரிமாறிவிட்டார்கள். அதற்கப்புறம் அதை எப்போது நினைத்தாலும் ஓர் உமட்டலான நினைவுதான்.

என் முதல் பத்து வருடங்களில் பிடித்த மனிதர்கள், அவர்களிடம் பிடித்த விஷயங்கள் என்று பார்த்தால் கல்கோணா மிட்டாய் கடித்துக் கொடுத்ததில், கூட்டாளிகள் என்னிடம் பகிர்ந்துகொள்கிறார்கள்; என்னைத் தனக்குச் சமமாக நடத்துகிறார்கள்; மரியாதை தருகிறார்கள்; இவை எல்லாமும்தான்.

இப்படி நம்மை நாமாக நடத்துகிற இடத்தில், நமக்கு மரியாதை கொடுக்கிற இடத்தில், நமக்கான வெளியை நமக்குத் தருகிற இடத்தில், நமக்கு அவர்களை மிகவும் பிடிக்கிறது. நம்மிடம் கருணையோடு நடந்துகொண்டது, மகிழ்ச்சியாக ஒரு விஷயத்தை நமக்கு அறிமுகம் செய்திருப்பது, மிக முக்கியமாக, நம் எதிர்காலத்திற்கான கற்றலை எளிமையாகவும் விளையாட்டுப் போல மகிழ்வாகவும் கற்பித்தது, இப்படியான காரணங்களால் நமக்கு அவர்களைப் பிடித்திருக்கிறது.

இதே தன்மையில் நாமும் நம்மை அணுகினோம் என்றால், நமக்கே நம்மை இன்னும் பிடிக்கும்.

(தொடரும்)

படைப்பாளர்

பிருந்தா சேது

சே.பிருந்தா (பிருந்தா சேது), கவிஞர். எழுத்தாளர். திரைக்கதை ஆசிரியர். ஹெர்ஸ்டோரீஸில் இவர் எழுதிய ’கேளடா மானிடவா’ என்ற தொடர் நல்ல வரவேற்பைப் பெற்றது. புத்தகமாகவும் வெளிவந்திருக்கிறது.