மணமகள், 1951ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். 

‘என்.எஸ்.கே பிலிம்ஸ் மணமகள்’ என படத்தின் தலைப்பைப் போட்டதும், நடிகர்கள் பெயர் போடுகிறார்கள்.

என்.எஸ். கிருஷ்ணன்

எஸ்.வி. சஹஸ்ரநாமம்

டி.எஸ். பாலையா

டி.எஸ். துரைராஜ்

புளிமூட்டை ராமசாமி

ஆழ்வார் குப்புசாமி

டி. பாலசுப்ரமணியம்

சி.எஸ். பாண்டியன்

டி.வி. ராதாகிருஷ்ணன்

கே.ஏ. தங்கவேலு

எம்.எம். ஜெயசக்திவேல்

பி.வி. சின்னசாமி

கே.எம். கௌரீசம் 

கே. சந்திரசேகரன்

வி. நாராயணன்

பெண் நடிகர்கள்

டி.ஏ. மதுரம்

லலிதா

பத்மினி

காந்திமதி 

நாகரத்தினம்

கிருஷ்ணவேணி

ஜெயலட்சுமி

குசலகுமாரி

பட்டம்மாள்

ராகினி

தங்கம்

சூர்யகுமாரி

கமலா

லீலா

எஸ்.எஸ். ராஜேந்திரன், கே.ஆர். செல்லமுத்து, முத்துப் பிள்ளை, மாஸ்டர் ஷண்முகம், பேபி வடிவா மற்றும் என் எஸ் கே நாடக சபா நடிகர்கள் எனப் போடுகிறார்கள். ஆனால் எஸ்.எஸ். ராஜேந்திரன் அவர்கள் ஒரு காட்சியில் கூட வரவில்லை. ‘எஸ்.எஸ்.ராஜேந்திரன் பிச்சைக்காரன் வேடத்தில் இப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்; ஆனால் அவரது வசனங்கள் மிகவும் புரட்சிகரமானதாக இருந்ததால் அவர் நடித்த பகுதிகளைத் தணிக்கை குழு அனுமதிக்கவில்லை’, என்கிறார், திரைப்படத் தயாரிப்பாளரும் எழுத்தாளருமான ஜி. தனஞ்சயன்.

மூலக்கதை முன்ஷி பரமு பிள்ளை எனப் போடுகிறார்கள். மலையாள மொழியில் முன்ஷி பரமு பிள்ளை எழுதிய ‘சுப்ரபா’ நாடகத்தைப் பார்த்த என்.எஸ்.கே.வுக்கு மிகவும் பிடித்துப் போனது. அதைத் திரைப்படமாக்க நினைத்தார். கதை உரிமையாக முன்ஷிக்கு 500 ரூபாய் தந்து வாங்கினார். கதை தயார் என்பதால் திரைக்கதை, வசனம் எழுத ஆள் தேடினார். அப்போது நாடக உலகில் கொடிகட்டிப் பறந்துகொண்டிருந்த கதையாசிரியரான 27 வயது கருணாநிதியை அழைத்து, திரைக்கதை, வசனம் எழுதப் பணித்தார் என்.எஸ்.கே. பத்தாயிரம் ரூபாய் பெற்றுக்கொண்டு இந்தப் படத்துக்கு திரைக்கதை வசனம் எழுதினார் இளைஞர் கருணாநிதி!

திரைக்கதை வசனம் எழுதிய இளைஞர் கருணாநிதியின் காணொளி காட்சி, மணமகள் படம்

திரைக்கதை வசனம் கருணாநிதி எனச் சொல்லி, அவரைத் திரையில் காட்டுகிறார்கள். இதற்கு முன் கலைஞர், எந்த திரைப்படத்திலும் இப்படித் தோன்றியதில்லை. கலைஞர் மட்டுமல்லாது அனைத்துக் கலைஞர்கள், தொழில்நுட்ப நிபுணர்களையும் திரையின் முன்பாக முதன்முதலில் இந்தப் படத்தில்தான் கொண்டுவந்தார்கள்!

பாடல்கள் : மஹாகவி பாரதியார், உடுமலை நாராயண கவி

சங்கீதம் டைரக்க்ஷன் : சி.ஆர்.சுப்புராமன்; ஆர்கெஸ்டரா : சி.ஆர். சுப்புராமன் 

பாட்டுப் பாடியவர்கள் : எம்.எல். வசந்தகுமாரி, பி. லீலா, ஜி. கிருஷ்ணவேணி, சிதம்பரம் ஜெயராமன், வி.என். சுந்தரம் 

நடனம் : ஹீராலால், தண்டாயுதபாணிப் பிள்ளை 

ஆர்ட் டைரக்டர் : கே. மாதவன் 

மேக்கப் : ஹரிபாபு, கோபால் ராவ், உதவி தனகோடி, முத்து

ஸ்டில் : நாகராஜாராவ்

உடை : நடேசன், உதவி அங்குசாமி, லோகநாதன் 

ப்ரோடக்ஷன் மானேஜர் : பிச்சாண்டி

சவுண்ட் இன்ஜினீயர் : விமலன், சுந்தரம்

கேமரா : ஜி விட்டல்

எடிட்டிங் : பஞ்சாபி (கிருஷ்ணன் – பஞ்சு இணையரில் பஞ்சு இவரே),

உதவி : திருமலை, பட்டாபி 

அசிஸ்டென்ட்  டைரக்டர் : ஏ. பீம்சிங் 

இவர்கள் அனைவரும் சில நொடிகள் வருமாறு காட்சிகள் வருகின்றன. பலருக்கு, அவர்கள் இவ்வாறு காணொளிப் பதிவாக இதில் மட்டும்தான் இருக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும் அல்லது முதல் வாய்ப்பாக இருந்திருக்கவேண்டும் என நினைக்கிறேன். 

இறுதியில்  டைரக்க்ஷன் என்.எஸ். கிருஷ்ணன் என எழுத்துடன் முடிக்கிறார்கள். 

இவ்வாறு திரைக்குப் பின்னால் உள்ள தொழில்நுட்பக் கலைஞர்களைத் திரையில் காண்பிப்பதன் மூலம், தொழில்நுட்பப் புதுமையை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள் 

ஏற்கனவே பல படங்களில் நடனக் கலைஞராக, துணை நடிகையாக நடித்த நடித்த பத்மினி, கதாநாயகியாக அறிமுகமான படம் இது.

மெய் கண்டான் (என்.எஸ்.கிருஷ்ணன்), ஏழைக் குழந்தைகளுக்காகத் திருவள்ளுவர் பெயரில் ஆசிரமம் நடத்தி வருகிறார். பாகவதர் ஒருவரால் கைவிடப்பட்ட கர்ப்பிணிப் பெண் சந்திரா (மதுரம்) அங்கு அடைக்கலமாக வருகிறார். அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது. 

அதே பாகவதர் ஒரு பணக்காரரின் மகள் குமாரிக்கு (பத்மினி) இசை ஆசிரியராக இருக்கிறான். குமாரிக்குச் சந்திரனைத்  (எஸ்.வி.சஹஸ்ரநாமம்) திருமணத்துக்குப் பேசி முடித்து இருக்கிறார்கள். சந்திரன் மேற்படிப்புக்காக லண்டன் செல்கிறார்.

மெய் கண்டான் நடத்தும் ஆசிரமத்திற்கு நிதியுதவி செய்பவர் குமாரியின் தந்தை. குமாரியின் தந்தைக்கு ஒரு கணக்காளர் இருக்கிறார், அவர் இளம் பெண்ணான விஜயாவை (லலிதா) மணந்திருக்கிறார். அவரும் குமாரியுடன் இணைந்து பாட்டு கற்றுக் கொள்கிறார். 

பாகவதர், குமாரியைத் திருமணம் செய்து கொள்ள நினைக்கிறான். இன்னொரு புறம், விஜயாவிடமும் காதல் மொழி பேசுகிறார். சந்திரன் படிப்பு முடிந்து ஊர் திரும்புகிறார். குமாரி, சந்திரன் இருவருக்குமான திருமண நாள் போன்றவை குறித்த விவாதம் வீட்டில் வருகிறது. அப்போது, பாகவதர், குமாரியைத் தான் விரும்புவதாகச் சொல்கிறான். சந்திரன் கோபப்பட,  குமாரி, “ஒருவருக்குத் தனது காதலைச் சொல்ல உரிமை உண்டு. அதை ஏற்றுக் கொள்வதும் நிராகரிப்பதும் சம்பந்தப் பட்டவரின் விருப்பம்” எனச் சொல்ல, சண்டை முற்றுகிறது. ஒரு காலகட்டத்தில் பாகவதர் – குமாரி திருமணம் நடைபெறுகிறது. 

விஜயா, பாகவதர் இடையிலான காதலை அறிந்த கணக்கப்பிள்ளை, மாமல்லபுரத்தில் அலைந்து திரிந்து கொண்டிருக்கிறார். அங்கு அவரை சந்தித்த குமாரியின் அப்பா, உண்மையை உணருகிறார். “தாலி நீ எனக்கு எழுதிக் கொடுத்த அடிமை சாசனம்” என பாகவதர் சொல்ல, குமாரி துப்பாக்கி எடுக்கிறார். 

இதன்பின், குமாரி சொத்துகள் அனைத்தையும் ஆசிரமத்துக்கு எழுதி வைப்பதற்கு ஏற்பாடு செய்கிறார். இதை அறிந்த பாகவதர் மற்றும் விஜயா, குமாரியைக் கொல்ல முயற்சி செய்கிறார்கள். சந்திரன் வந்துக் காப்பாற்றுகிறார். பாகவதரும், விஜயாவும் இறக்க, குமாரி மணமகளாகிறார். சந்திரனுடன் அவரின் திருமணம் நடைபெறுகிறது. 

பொதுவாக நகைச்சுவை நடிகராக வரும் டி.எஸ். துரைராஜ் இதில் வில்லனுடன் வருகிறார். பத்மினியின் இணையாக வரும் சகஸ்ரநாமம் மற்றும் பாலையா இருவரும் அவரைவிட, மிகவும் வயதானவர்களாகத்தான் தெரிகிறார்கள்.  அதனால் மனம் அந்த இணைகளுடன் ஒட்டவே இல்லை. 

‘சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா,’ ‘எல்லாம் இன்பமயம்,’ ‘நல்ல பெண்மணி மிக நல்ல பெண்மணி’ (டி.ஏ. மதுரம் பாடிய பாடல்) போன்ற பாடல்கள் மிகவும் பிரபலமானவை.

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா என்ற பாடல், மகாகவி பாரதியார் எழுதிய குழந்தைப் பாடல். அதில் வரும் ‘கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளம்தான் கள்வெறி கொள்ளுதடி’ என்ற அடிகளை வில்லன் பாடும்போது, நெருடலாக இருப்பதைத் தவிர்க்க முடியவில்லை.

முதல் தேதி திரைப்படத்தில் ‘எல்லோரும் கேளுங்க நீங்க 

எல்லோரும் கேளுங்க’ எனக் குழந்தைகள் பாடி ஆடுவதாக ஒரு பாடல் வருகிறது. 

‘அடி ராகினி ஒரு பாட்டுப்பாடி லல்லியும் பப்பியும் ஆடட்டும் 

எல்லாம் இன்ப மாயம் பூமிமேல்

இயற்கையினாலே இயங்கும் எழில் வளம் எல்லாம் இன்ப மாயம்

அல்ல தானவும்’

என ‘எல்லாம் இன்பமயம்’ பாடல் வருகிறது. இந்த ‘லல்லி’, ‘பப்பி’ பெயர்கள் முறையே நடிகை-சகோதரிகள் லலிதா பத்மினியின் செல்லப்பெயர்கள்!

1950ஆம் ஆண்டு படத்தின் வேலைகள் தொடங்கி, 1951ஆம் ஆண்டு, திரைப்படம் வெளி வந்து இருக்கிறது. 1960 எப்படி இருக்கப் போகிறது எனக் கற்பனையாக ஒரு பாடலும் ‘ஐம்பதும் அறுபதும்’ என்ற நாடகமும் வருகின்றன.

‘ஆயிரம் பேரின் சொத்தை அபகரித்துச் சேர்த்து வைப்பது ஐம்பது

அவரவருக்குள்ளதை அவரவர் ஆண்டு அனுபவிப்பது அறுபது

மனைவி இருக்கும்போதே இரண்டு மூன்றைச் சேர்த்துக்கொண்டு கும்மாளம் அடிப்பது ஐம்பது

ஒருத்தியோடு வாழ்வது அறுபது

கல்லும் மணலும் கலந்த அரிசி, உளுத்த சோளம் கம்பைத் தின்னு வம்பு வந்தது ஐம்பது

முல்லை அரும்பு போன்ற அரிசி, மூட்டைக்கணக்கில் வாங்கிப் போட்டு மூக்கு வரைக்கும் சாப்பிடுவது அறுபது

பேயிருக்குது கிணத்திலே பிசாசு இருக்குது மரத்திலே எனச் சொல்லிக் கொடுத்தது ஐம்பது

அறிவிருக்குது படிச்சுக்கோங்குது அறுபது

பிள்ளைகளை அதிகம் பெத்தெடுக்கக் கூடாதுன்னு பெண்களுக்கு கர்ப்பத்தடை என பேசிக்கிட்டே இருந்தது ஐம்பது

ஒண்ணு ரெண்ட பெத்துக்கிட்டு உலகத்த மாத்திக்கிட்டு உடல் நலம் தேடுவது அறுபது’

என அந்தப் பாடல் வருகிறது.

நாடகத்தில், மெய்கண்டான், சந்திரா இருவரும் தமிழ்நாடு முழுவதும் சுற்றுகிறார்கள். ‘கூவம் நதியில் இருந்து குடத்தில் தண்ணீர் எடுத்துக் கொண்டு போகிறார்கள். பெரியாத்து தண்ணிய வைகைக்குத் திருப்பி விட்டு, வைகை கரைபுரண்டு ஓடுகிறது. சேலம் மணிமுத்தாற்றில் (திருமணிமுத்தாறு) அனைவரும் குளிக்கிறார்கள். ராமநாதபுரம் ஜில்லா, பசுமையாகச் செழிப்பாக இருக்கிறது. பிச்சைக்காரர்கள் இந்தியாவிலேயே இல்லை. அவரவர் பொருளை எடுத்துக் கொண்டு காசுபோடும் முதலாளி இல்லாத கடை இருக்கிறது.  ஊரில் சீனி தீர்ந்து போய்விட்டது என்பதால், வீட்டில் அதிகமா சர்க்கரை இருப்பவர்கள் கொண்டு கொடுக்க வந்து வரிசையில் இருக்கிறார்கள். இரவில் துணை இல்லாமல் இளம் பெண் நகை அணிந்து பத்திரமாக வீடு வருகிறார்’ என வருகிறது. வரப்போகிற தேர்தலில் கவனமாக ஓட்டுப் போட்டால், இவை எல்லாம் நடக்கும் எனத் தேர்தல் குறித்த விழிப்புணர்வு கொடுப்பதாக நாடகம் நிறைவடைகிறது.

‘அரிசி சாப்பிடுவதைக் குறைத்து, எல்லா தானியங்களும் சாப்பிடப் பழகி இருந்தால் இந்த சிக்கல் இருந்து இருக்காது. சோறு, பொங்கல், புளியோதரை, இட்லி, தோசை, புட்டு, இடியாப்பம் எனச் சாப்பிட்டுத்தான் அரிசிப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது’ என வசனம் வருகிறது. ஆனால் அப்போது கிராமங்களில் நெல்லுச்சோறு என்பது அரிதானது எனத்தான் தாத்தா பாட்டி சொல்கிறார்கள். நகரம் அப்போதே அரிசியை நோக்கிச் சென்று இருந்து இருக்க வேண்டும். 

‘கிராமத்திலிருந்து பட்டணத்துக்குப் பலரும் வந்ததாலே வேலை இல்லை. வந்தவர்களில் பாதிப் பேருக்கு வேலை கிடைத்தது. பாதிப் பேர் பிச்சை எடுக்கிறார்கள்’ எனவும் இந்த நாடகத்தில் வசனம் வருகிறது.

‘சுதந்திரம் வந்ததுன்னு சொல்லாதீங்க

சொல்லிச் சொல்லி சும்மா வெறும் வாயை மெல்லாதீங்க…

குடிக்கத் தண்ணீரில்லாது பெருங்கூட்டம் தவிக்குது

சிறுகும்பல் மட்டும் ஆரஞ்சுப்பழ ஜூசு குடிக்குது

அடுக்குமாடி மீது சிலது படுத்துத் தூங்குது

பல ஆயிரக்கணக்கான மக்கள் பாயில்லாம ஏங்குது

சோத்துப் பஞ்சம் துணிப்பஞ்சம் சுத்தமாக நீங்கல

சுதந்திரம் சுகம் தரும் என்றால் யாரு நம்புவாங்க’

இப்படி ஒரு பாடல் வருகிறது. 

‘பஞ்சங்கள் நாட்டில தாண்டவமாடுகிறது சுதந்திரம் வந்து விட்டதாம் சுதந்திரம்’ எனச் சந்திரா சொல்ல, ‘சுதந்திரம்தான் வரும், சுபீட்சட்த்தை நாம தான் உண்டாக்க வேண்டும் உழைப்பினாலே’ என்கிறார் மெய் கண்டான். இப்படி திரைப்படம் நெடுக, விடுதலை பெற்ற முதல் சில ஆண்டுகளிலிருந்த எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள் என அனைத்தும் உரையாடல்களாக விரவிக் கிடக்கின்றன.

திரைப்படம் முழுவதுமே கதை ஒருபக்கம் போய்க்கொண்டு இருந்தால், சுதந்திரம் நமக்குத் தந்தது என்ன? தராதது என்ன? எனப் பட்டிமன்றம் போல கேள்விகளும் பதில்களும் படம் முழுவதும் வருகின்றன. 

பெண்களுக்கு அறிவுரை சொல்லும் ‘நல்ல பெண்மணி’ பாடல் வருகிறது.

‘நல்ல பெண்மணி மிக நல்ல பெண்மணி

தாய் நாட்டு நாகரீகம் பேணி நடப்பவள் எவளோ 

அவளே நல்ல பெண்மணி 

வெள்ளி முளைத்து சேவல் கோழி கூவிடும் வேளை விடி வெள்ளி முளைத்து சேவல் கோழி கூவிடும் வேளை 

தன் மேனி குளித்து அழுக்கு நீங்க துவைக்கணும் சேலை 

தன் மேனி குளித்து அழுக்கு நீங்க துவைக்கணும் 

பள்ளிக்கூடம் செல்ல வேணும் காலையும் மாலை 

பள்ளிக்கூடம் செல்ல வேணும் 

காலையும் மாலை நல்ல பழக்க வழக்கத்தோடு நூலை 

படிப்பவள் எவளோ அவளே

அம்மாவுக்கு உதவியாக ஆக்கிப் பழகணும் சோறாக்கிப் பழகணும் அடுப்பை மூட்டி கூட்டிப் பெருக்கி இடுப்பை வளைக்கணும்

அப்பா சொல்லும் அற நெறியில் தப்பாதிருக்கணும் தினம் 

அச்சம் பயிற்பு மடமை நாணம் அமைந்தவள் எவளோ அவளே

புகுந்த இடத்தில் பிறந்த இடத்தை புகழக் கூடாது கொண்ட புருஷனோடு வம்புச் சண்டை போடக் கூடாது

இகழ்ச்சியாக எவரையுமே எண்ணக் கூடாது பண ஏற்றத்தில் இறுமாந்திடாமல் இருப்பவள் எவளோ அவளே

பொட்டு வைத்து கோலம் கூட போடத் தெரியணும் 

புத்தி புகட்டும் நாட்டு பாடல் கூட பாடத் தெரியணும்’

இந்தப் பாடலில் வரும் ‘அடுப்பை மூட்டிக் கூட்டிப் பெருக்கி இடுப்பை வளைக்கணும்’ என்ற வரிகள், ‘மணமகள் திரைப்படத்தின் உடுமலை நாராயண கவிராயர்’ எனச் சொல்லித்தான், ‘பணம்’ திரைப்படத்தில் ‘குடும்பத்தின் விளக்கு’ என்ற பாடல் தொடங்குகிறது.

‘குடும்பத்தின் விளக்கு நல்ல 

நூலைப் போல சேலை தாயைப் போலவே பெண்ணு’ 

இந்தக்காலகட்டம் தான் இவ்வாறான பாடல்கள் திரைப்படங்களில் வரத்தொடங்கிய காலகட்டம் எனத் தெரிகிறது. தொடர்ந்து பல திரைப்படங்களில் இவ்வாறான பாடல்கள் வலிந்துகூட திணிக்கப் பட்டிருப்பதைப் பார்க்கலாம்.

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் மழை

என்ற குறளுக்கு, கணவனைத் தொழுகின்ற மனைவி தேவையானபோது பெய்கின்ற மழையைப் போன்றவள் என விளக்கம் வருகிறது. திருமணமான பெண், தனது பழைய காதலனை மீண்டும் திருமணம் செய்யும் மணப்பெண்ணாக மாறுவது என்பதே, அந்த காலகட்டத்துக்கு மிகவும் புரட்சிகரமானதுதான். நல்ல முறையில் ஓடி வெற்றியைப் பெற்றுத் தந்த திரைப்படம் என்னும் போது, மக்களிடமும் இத்தகைய கருத்துக்களுக்கு வரவேற்பு இருந்திருக்கிறது எனத் தான் சொல்லத் தோன்றுகிறது. 

பெரும் சமூகத் தாக்கத்தை உண்டாக்கிய படம் இது என்றும், இந்துப் பெண்களுக்கு இருந்த ஒடுக்குமுறைக்கு எதிராக எடுக்கப்பட்ட படம் இது என்றும் திரைப்பட ஆய்வாளர் ரண்டார் கை குறிப்பிடுகிறார். பெருவெற்றி பெற்ற இப்படம், தெலுங்கில் ‘பெல்லி குத்துரு’ என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.

லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் கைதாகி விடுதலை பெற்ற பிறகு சரிவர படங்கள் எதுவும் பெரிதாக வெற்றி காணாத நிலையில் தவித்துவந்த என்.எஸ். கிருஷ்ணனுக்கு இந்தப் படத்தின் வெற்றி பெரும் மன திடத்தைத் தந்தது எனலாம். இப்படத்தின் வெற்றியை அடுத்து அகமகிழ்ந்துபோன என்.எஸ்.கே., அதில் திரைக்கதை வசனம் எழுதிய கலைஞர் கருணாநிதிக்கு கார் ஒன்றையும் வாங்கிப் பரிசளித்தார்! இருவரின் நட்புக்கு சாட்சியாக, நாகர்கோயிலில் என்.எஸ்.கிருஷ்ணன் மறைவுக்குப் பிறகு சிலை எழுப்பியபோது அதன் திறப்புவிழாவில் கலந்துகொண்டார் கலைஞர். இருவரும் கொள்கைக் கூட்டாளிகள்… திராவிடக் கொள்கைகளை, பகுத்தறிவுக் கருத்துகளை சினிமா என்ற ஊர்தியிலேற்றி வீடு வீடாக மக்கள் மனங்களுக்குக் கொண்டு சென்றதில் என்.எஸ்.கிருஷ்ணனின் பணி அளவிடமுடியாதது.

என்.எஸ்.கே. மணமகள் பட வெற்றிக்குப் பரிசாக வழங்கிய காருடன் கலைஞர், அறிஞர் அண்ணா, https://namathu.blogspot.com/2019/07/blog-post_494.html
கலைவாணர் சிலை திறப்பு விழாவில் கலைஞர், அறிஞர், புரட்சித் தலைவர் என மூன்று முன்னாள் முதல்வர்கள் – திராவிடச் செம்மல்கள்

தொடரும்…

படைப்பாளர்

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’ என்கிற புத்தகமாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கிறது.