When I was a baby

You would hold me in your arms

என்று தொடங்கிய அந்த ஆங்கிலப் பாடலை சாரதா டீச்சர் விவரித்துக் கொண்டிருக்க, கண்ணிசைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள் காளீஸ்வரி. காளீஸ்வரிக்கு சாரதா டீச்சரை ரொம்பப் பிடிக்கும். அவளுக்கு மட்டுமல்ல, அவரது வகுப்பென்றாலே எல்லா மாணவர்களுக்கும் ஜாலிதான். ஏனென்றால் பாடம் குறித்து மட்டுமல்லாது பொது விஷயங்கள் குறித்தும் சாரதா டீச்சர் மாணவர்களுடன் உரையாடிக்கொண்டே இருப்பார்.  பாடமோ பாடலோ, எது  நடத்தினாலும்  எதிரே இருப்பவர்களை அப்படியே தன்னுடன் கைப்பிடித்து உள்ளே இழுத்துக்கொண்டு போய்விடுவார்.

கிறிஸ்டினா எம்.கெர்சன் (Christina M. Kerschen) என்பவர் எழுதிய பாடல் அது. ஒரு குழந்தை தனது அப்பா குறித்த  உணர்வுகளை  ‘My Hero’  என்ற தலைப்பில் வெளிப்படுத்துவதாக இருந்தது. ஒவ்வொரு குழந்தையின் மனதிலும் எப்படி அக்குழந்தையின் அப்பா ஹீரோவாக வாழ்கிறார் என்பதை சாரதா டீச்சர் தன்னுடைய மொழியில் உணர்வுப் பூர்வமாக விளக்கிக் கொண்டிருந்தார். பாடல்வரிகளை விளக்கும்போதே டீச்சருக்கும் அவரது அப்பா ஞாபகம் வந்திருக்க வேண்டும். அவரது குரல் நெகிழ்ந்து வார்த்தைகள் சிதறின. லேசாகக் கண்களில் நீர் துளிர்த்ததுபோல இருந்தது. ஆனாலும் சமாளித்துக்கொண்டார்.

“எல்லோரும் அவங்கங்க அப்பாவைப் பற்றி சொல்லுங்க… பார்ப்போம்”

“என்ன டீச்சர் சொல்லணும்?” 

“ம்ம்ம்ம்… உங்க அப்பாவை உங்களுக்கு எவ்வளவு பிடிக்கும், ஏன் பிடிக்கும்னு சொல்லுங்க.  உங்க அப்பாவுக்கு உங்களை எவ்வளவு பிடிக்கும்னு சொல்லுங்க. உங்க அப்பா உங்களுக்காக என்னவெல்லாம் செய்யறார்னு சொல்லுங்க”

சாரதா டீச்சர் சொன்னதும் நான் நீ என ஆள் ஆளுக்கு முண்டி அடித்துக்கொண்டு எழுந்தார்கள். அதென்னவோ மற்ற பாட வகுப்புகளில் அமைதியாக இருக்கும் பிள்ளைகள் ஆங்கில வகுப்பில் மட்டும் டீச்சருடன் பயமில்லாமல் பேசுவார்கள்.

“டீச்சர் எங்க அப்பாவுக்கு நான்னா ரொம்ப உயிர் டீச்சர், எனக்காக என்ன வேணா செய்வாரு” – பாபு

“எங்க அப்பா எப்பப் பார்த்தாலும் ‘எங்க ஆத்தாவே வந்து பொறந்துருக்கு’னு சொல்லி என்னைக் கொஞ்சிட்டே  இருப்பாரு” – செல்விக்கு சொல்லும்போதே வெட்கம் எட்டிப்பார்க்கிறது.

“எங்க அப்பா கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறது பூரா எனக்குத்தானாம், அதனால நான் என்ன கேட்டாலும் வாங்கித் தந்திடுவார்” – அழகுநாச்சி

“நான் சின்னப்பிள்ளையா இருக்கும்போது எனக்கு சொகமில்லாம போனப்ப எங்க அப்பாதான் எனக்கு  ரத்தம் கொடுத்து என்னை பொழைக்க வைச்சுதாம்” – செல்லத்துரை

“எங்க அப்பா யார் கூடனாலும் சண்டை போட்டு ஜெயிச்சிட்டு வந்துடுவாரு…அதனால எங்க அப்பாவை எனக்கு ரொம்பப் பிடிக்கும்” – வளர்மதி.

கைதூக்கியவர்கள் எல்லாரும்  ஒவ்வொருவராக சொல்லிக் கொண்டிருக்க, காளீஸ்வரி மட்டும்  ஏதோ யோசித்தபடி அமைதியாக அமர்ந்திருந்தாள்.

“என்ன காளீஸ்வரி… நீ மட்டும் எதுவும் சொல்லாம அமைதியா இருக்கிற?” கேட்டார் டீச்சர்.

“அவங்கப்பா நல்லா மூக்குமுட்ட குடிச்சிட்டு வந்து ரோட்டுல வேட்டி அவிழ விழுந்து கெடப்பாரு… அதனால காளீஸ்க்கு அவங்கப்பாவை ரொம்பப் பிடிக்கும், என்ன காளீஸ்?” துடுக்குப்பையன் விஷ்வா சத்தமாகக் கத்தியவுடன் வகுப்பு மொத்தமும் சிரித்தது. எழுந்து நின்ற காளீஸ்வரியின் கண்களில் நீர் நிரம்பி கன்னத்தில் வழிந்தது.

“ஸ்ஸ்ஸ்… யாரையும் இழிவா பேசக்கூடாதுனு எத்தனை தடவை சொன்னாலும் உனக்குப் புரியாதா?” டீச்சர் திட்டியவுடன் “ஸாரி டீச்சர்” என முணுமுணுத்தவாறே விஷ்வா அமைதியாக உட்கார்ந்துவிட்டான்.

“சரி… சரி எல்லாரும் உட்காருங்க. நீ அழாத காளீஸ்வரி… வாங்க அடுத்த லைனைப் படிப்போம்” என்றவாறே  தொடர்ந்தார்.

I felt the love and tenderness

Keeping me safe from harm

டீச்சர் வாசித்து தமிழில் விளக்கியவுடன் காளீஸ்வரிக்கு ஆச்சரியமாக இருந்தது. ‘அப்பா கையில் இருக்கும்போது அவ்வளவு அன்பும் ஆதரவும் பாதுகாப்புமாக இருக்குமா..?  நான் குட்டிப் பிள்ளையாக இருக்கும்போது அப்பா தன்னை எப்படித் தூக்கியிருப்பார்..? எப்படிக் கொஞ்சியிருப்பார்? அவ்வளவு அன்பா இருப்பாரா..? அவ்வளவு பாதுகாப்பாக என்னைப் பார்த்துக் கொள்வாரா? காளீஸ்வரிக்கு என்னவோ அவள் அப்பா அவளைத் தூக்கிக் கொண்டதாக நினைவே இல்லை.

இந்த சந்தேகம் ஏற்கனவே ஏற்பட்டதால் ஒருமுறை அம்மாவிடம் கேட்டாள். “ஏம்மா, அப்பாவுக்கு என்னை ரொம்பப் பிடிக்குமா..?”

“அதெல்லாம் பிடிக்கத்தான் செய்யும்… அதுக்கு என்னா இப்போ?”

“சின்னப்பிள்ளையில என்னைத் தூக்கிக் கொஞ்சியிருக்காரா? அன்பா இருப்பாரா..?”

“தூக்கி… கொஞ்சியிருப்பாராவா? நீ பொறந்தப்ப நர்ஸ்ட்ட இருந்து அவர்தான் மொதல் மொதல்ல கையில வாங்கினார். நாலு வயசு வரைக்கும் தூக்கிட்டே அலைவார். ஒரு நிமிஷம் கீழ இறக்கி விட மனசு வராது. ‘ஊர்ல இல்லாத மகளைப் பெத்துட்டியா?’னு சொந்தக்காரங்க எல்லாம் கிண்டல் பண்ணுவாங்க. ஒரு தடவை, மதுரையில அழகர் ஆத்துல எறங்குறதைப் பார்க்கப்போனோம். காலையில  ரெண்டு பக்கமும் காலைப் போட்டு தோளில் உட்கார  வைச்சவர் சாயங்காலம் நாங்க பஸ் ஏர்ற வரைக்கும் கீழ எறக்கி விடலியே? ம்ம்ம்ம்… அதெல்லாம் ஒரு காலம். ‘ஏம்புள்ள… ஏம்புள்ள’னு உன் காலு, மண்ணுல படாம பாத்துக்கிடுவாரு. என்னிக்கு இந்த குடிகாரப் பயலுகளோட சேர்ந்து குடிக்க ஆரம்பிச்சாரோ, அப்போதிருந்துதான் பொண்டாட்டி, புள்ளங்க அப்படிங்கற பந்த பாசமெல்லாம் போயிடுச்சு.”

அம்மா சொல்லச்சொல்ல கண்கள் விரிய கேட்டுக்கொண்டிருப்பாள். அந்த நிகழ்வு அப்படியே அவள் கண்களில் ஓடும்.

“அதெல்லாம் போட்டோ பிடிச்சு வைச்சிருக்கலாம் இல்லம்மா…”

“அப்ப டச்சு போனெல்லாம் இல்லியே..? இப்ப மாதிரி போன் இருந்துச்சுனா  நெறய போட்டோ எடுத்திருக்கலாம். பொறு பொறு… ஒரு தடவை மதுரை பொருட்காட்சில ஒரு போட்டோ எடுத்தோம்”, அம்மா தகரப்பெட்டியை உருட்டி ஒரு கவரில் பத்திரமாக வைத்திருந்த போட்டோவை எடுத்துக்காட்டினாள். அம்மாவும் அப்பாவும் நிற்க அப்பாவின் கையில் ஒரு வயசுப் பிள்ளையாக காளீஸ்வரி. அதில் தெரிந்த அப்பாவின் முகத்தையே பார்த்தாள். திருத்தமாக தலைவாரி புளு கலர் முழுக்கை சட்டையில் சிரித்த முகமாக அப்பா. இறுக்கமாக பிள்ளையைப் பற்றியபடி… “இப்படியே சின்ன வயசாக இருந்திருக்கலாம் இல்ல… அப்பா என்னை செல்லம் கொஞ்சிட்டே இருந்திருப்பார்”, தனக்குள் நினைத்துக்கொள்வாள்.

“காளீஸ்வரி பாடத்தைக் கவனி” சாரதா டீச்சர் சொல்ல, நிகழ்காலத்துக்குத் திரும்பினாள். டீச்சர் பாடத்தை தொடர்ந்து கொண்டிருந்தார்.

I would look up into your eyes

And all the love I would see

காளீஸ்வரி கண்களை மூடினாள்.  குடிபோதையில் ரத்தச்சிகப்புடன் இவளைப்பார்த்து முறைக்கும் அப்பாவின் கண்கள் நினைவுக்கு வர, பயத்தில் உடம்பு ஒருமுறை உலுக்கிப்போட்டது. அவரது இயல்பான கண்கள் எப்படி இருக்கும் என்பதே அவளுக்கு மறந்து விட்டது. காளீஸ்வரிக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து, அப்பா எந்த நேரமும் குடிபோதையில் அம்மாவுடன் சண்டை போடுவதையும் அடிப்பதையும் இடையில் அகப்படும் காளீஸ்வரியையும் தம்பியையும் சேர்த்து மிதிப்பதையும் வழக்கமாக்கிக் கொண்டிருந்தார். குடியென்றால் குடி… அப்படி ஒரு குடி. சில சமயம் காளீஸ்வரி காலையில் கண்விழிக்கும்போதே அப்பா முழு போதையில்  அம்மாவுடன் சண்டை போட்டுக் கொண்டிருப்பதைப் பார்ப்பாள்.

அதனால் காளீஸ்வரிக்கு அப்பாவின் அரவணைப்பும் அன்பும் எப்படி இருக்கும் என்பதே  தெரியாமல் போனது. ரோட்டில் யாராவது குழந்தைகள் தங்களுடைய அப்பாவின் கையைப் பிடித்துக்கொண்டு கதை பேசிக்கொண்டும் ஆடிக்கொண்டும் செல்வதைப் பார்க்கும்போது ஏக்கமாக இருக்கும். போனவருஷம் டிவியில் ‘அபியும் நானும்’ சினிமா பார்த்துவிட்டு ஒரு வாரத்திற்கு நினைத்து நினைத்து அழுதாள். பிரகாஷ்ராஜ் போல ஒரு அப்பா தனக்கு கிடைத்திருந்தால் எப்படி இருக்கும் என நினைத்துக்கொள்வாள். ஆனால் உண்மையில் அப்பாவின் பக்கத்தில் போகக்கூட பயமாக இருக்கும்.

“ஏம்மா அப்பா இப்படி குடிக்கிறாரு?” என அம்மாவிடம் எப்போது கேட்டாலும், அம்மா பழைய நினைவுக்குப் போய்விடுவாள். கல்யாணம் ஆன புதிதில் எல்லாம் மாரிமுத்து நன்றாகத்தான் இருந்தான். நல்ல உழைப்பாளி. பட்டாசு ஆலையில் ஃபோர்மேனாக இருந்தான். பாக்கியமும் உள்ளூர் தீப்பெட்டி ஆபிசில் பெட்டி அடைக்கப் போய்விடுவாள். அதனால் குடும்பத்துக்குப் போதுமான அளவு சம்பளம் கிடைத்தது. இரண்டு குழந்தைகள் அடுத்தடுத்து பிறக்கும்வரை எல்லாம் நன்றாகத்தான் போனது. காளீஸ்வரிக்கு நான்கு வயதும், மகன் முத்துப்பாண்டிக்கு இரண்டு வயதும் ஆகும்போது, மாரிமுத்து வேலை பார்த்த பட்டாசு ஆலையில் பயங்கரமான தீ விபத்து.  ஏழு பேர் ஒரு குடோனுக்குள் மாட்டி செத்துப்போனார்கள். அந்த நேரம் வேறு ஏதோ ஒரு வேலையாக மாரிமுத்துவை திருத்தங்கலுக்கு முதலாளி அனுப்பியிருந்ததால், நல்லகாலமாக உயிர் தப்பித்துவிட்டான்.

விஷயம் தேசிய அளவில் பெரிதாகியதால் காவல்துறைக்கு யாரையாவது கைது செய்து அன்றைய பரபரப்பை அடக்க வேண்டும் என்ற நெருக்கடி. பட்டாசு ஆலை முதலாளி  கைகாட்ட ‘மாரிமுத்துவின் கவனக்குறைவு’ என அவனைக் கைது செய்தார்கள். பதறிப்போய் பாக்கியம் ஓடிப்போய் பார்க்கும்போது, “கவலைப்படாத புள்ள, இந்த ஆரவாரமெல்லாம் அடங்கிய பிறகு மொதலாளியே ஜாமின்ல எடுத்துடுவாரு. அது மட்டுமில்ல… மொதலாளி ரெண்டு லட்சம் பணம் தர்றேனு சொல்லி இருக்காரு. ரெண்டு பிள்ளைங்க பேர்லயும் அதை ஆளுக்கொரு லட்சம் பேங்க்ல போட்டுட்டு நாம நிம்மதியா இருக்கலாம். ஒரு வாரம் சமாளிச்சுக்கோ, உடனே வந்திடுவேன்”, என சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தான்.

 ஆனால் ஒரு வாரம் என சொன்னது வெளியே வர மூன்று மாதமானது. அதுவரை பாக்கியம்தான் குடும்பத்தை கவனித்துக் கொண்டாள். மூன்று மாதம் கழித்து வந்தவன் முதலாளியை பார்க்கப் போனபோது அவர்  பெரிதாக கண்டு கொள்ளவில்லை. பத்தாயிரம் ரூபாயை தூக்கி மேசையில்  போட்டார். “இப்போதைக்கு உன்னை இங்க வேலையில சேர்த்தா நல்லாயிருக்காது. ஒரு ஆறு மாதம் கழிச்சு வேலையில சேர்றதைப் பத்தி யோசிப்போம்”, எனச் சொல்லிவிட்டு எழுந்து போய்விட்டார். அந்த இரண்டு லட்சத்தைப்பற்றி அவர் வாய் திறக்கவேயில்லை. மாரிமுத்துவும் கேட்கவில்லை.

அன்றைக்குப் பிடித்தது சனி. தான் காட்டிய விசுவாசத்திற்கு முதலாளி துரோகம் செய்துவிட்டதைப்போல் உணர்ந்தான். அவர்மீது  இருந்த கோபத்தை பாக்கியத்திடம் காட்டினான். பாக்கியம் வேறு இடத்தில் வேலைக்குப் போகச் சொன்னபோதும், வேலைக்குப் போகாமல் ஊர்சுற்றினான். புதிது புதிதாக நண்பர்கள் கிடைக்க, குடிக்கத் தொடங்கினான்.

ஒரு கட்டத்தில், வேலைக்குப் போகவில்லை என்றால்கூட பரவாயில்லை, குடிக்காமல் இருந்தால்போதும் என பாக்கியம் எவ்வளவோ கெஞ்சிப்பார்த்தாள்; நைச்சியமாக கொஞ்சிப்பார்த்தாள்; போராடினாள்; மன்றாடினாள்… ம்ஹூம்… அவன் எதற்கும் மசியவுமில்லை, மாறவுமில்லை.

குடி மறுவாழ்வு மையத்துக்கு அழைத்துச் சென்றால் அவர்கள் சரிபடுத்தி விடுவார்கள் என்று தீப்பெட்டி ஆபிசில் யாரோ கூறியதைக் கேட்டு, கழுத்திலிருந்த நகையை விற்று இருபதாயிரம் ரூபாய் கட்டி, பதினைந்து நாள் அந்த மையத்தில் இருக்க வைத்தாள். திரும்பி வந்தவன் திருந்தி விட்டதைப்போலத்தான் தோன்றியது. வேலைக்கும் போகத் தொடங்கினான். எல்லாம் மூன்று மாதம்தான். மறுபடியும் நண்பர்களுடன் சேர்ந்து குடிக்கத் தொடங்கிவிட்டான். அதன்பிறகு அவனைத் திருத்தவே முடியவில்லை.

பாக்கியம்தான் பாவம். இரண்டு பிள்ளைகளைக் காப்பாற்ற வேண்டுமே… தீப்பெட்டி ஆபிசில் காலையிலிருந்து மாலை வரை வேலை பார்த்துவிட்டு வருவாள். இரவு சமையலை முடித்துவிட்டு மறுபடியும் கட்டு ஒட்ட உட்கார்ந்தால், ஏழு கட்டு முடித்துவிட்டு படுக்கப்போக பதினோரு மணி ஆகிவிடும். குருவி சேர்ப்பது போல பிள்ளைகளின் எதிர்காலத்துக்காகச் சேர்த்துவைக்கத்தான் இந்தப்பாடு.   அந்தக்காசையும் பறித்துக் கொண்டுபோகத்தான் சண்டை. அடிதடி…

How did I get so lucky                                                            

You were the dad chosen for me

‘நல்ல அப்பா கிடைப்பதற்குக்கூட அதிர்ஷ்டசாலியாக இருக்க வேண்டுமா? எனக்குத்தான் ராசியில்லையோ?’ என காளீஸ்வரி அடிக்கடி நினைத்திருக்கிறாள். ஒவ்வொரு முறையும் வீட்டில்  சண்டை பெரிதாகும் போதெல்லாம் காளீஸ்வரியின்  ஜாதகக்கட்டை தூக்கிக் கொண்டு கோட்டூர், இருக்கங்குடி, பாண்டிகோவில் என பாக்கியம் ஓடுவாள். குறிசொல்லுபவர், நாடி ஜோசியம், கிளி ஜோசியம், ஏடு ஜோசியம் என பார்க்காத ஆள் இல்லை. எல்லோரும் காசுவாங்கிக்கொண்டு “இந்த ஜாதகம் யோக ஜாதகம்தான்… ஆனா பதினேழு வயசு வரைக்கும் இந்த ஜாதகத்தோட கெரகம் குடும்பத்தைப் பிடிச்சு ஆட்டும்” என ஒரேமாதிரி  சொல்லிவிட்டார்கள்.

‘என் மோசமான ராசிதான் அம்மாவை வீட்டை விட்டு துரத்தியதோ?’ அம்மா வீட்டை விட்டுப்போன அந்த நாளை காளீஸ்வரி நினைத்துப் பார்க்கிறாள்.

தீபாவளிக்கு ஒரு வாரம் இருக்கும். பாக்கியம் வேலை பார்த்த தீப்பெட்டி ஆபிசில்  தீபாவளி போனஸ்  கொடுத்துவிட்டார்கள்.  வழக்கம்போல இரவில்  குடிபோதையில் வந்த மாரிமுத்து அந்தப் பணத்தைக் கேட்டு அடிக்க, பெரிய சண்டையாகிவிட்டது.  தடுக்கப்போன காளீஸ்வரிக்கும் தம்பிக்கும்கூட நல்ல அடி.  குடிபோதையில் பிள்ளைகளையும் பாக்கியத்தையும் வெளியில் தள்ளி கதவைப் பூட்டிக் கொண்டான். அதுவரை எத்தனையோ அடி, மிதிகளைத் தாங்கியவளுக்கு மாரிமுத்து வீட்டை விட்டு வெளியே தள்ளியதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

இரண்டு பிள்ளைகளையும் மடியில் போட்டுக்கொண்டு இரவு முழுக்க வாசலிலேயே அமர்ந்திருந்த பாக்கியம், விடிகாலையில்  பிள்ளைகளை அழைத்துக்கொண்டு இரண்டு கிலோமீட்டர் தூரத்திலிருக்கும் தனது அம்மா வீட்டுக்குப்போய் விட்டாள். “கட்டு ஒட்டியோ, குச்சி அடுக்கியோ ஒரு வாய்க்கஞ்சியாவது நிம்மதியாக் குடிச்சுக்கலாம்” என முடிவு செய்துவிட்டாள்.

ஆனால் ஒரு வாரத்தில் குடித்துவிட்டு வந்த மாரிமுத்து, “எம்பிள்ளைகளை கூட்டிவர நீ யாரு? நீ எனக்குத்தானே இந்தப் பிள்ளைகளை பெத்த?” என அசிங்க அசிங்கமாகக் கேட்டுவிட்டு, பிள்ளைகளை அழைத்துக்கொண்டு வந்து விட்டான்.  காளீஸ்வரிக்கு அழுகையாக வந்தது. அம்மாகூட இருப்பதா… அப்பாகூட போவதா என்று தெரியவில்லை. அப்பாவைப் பார்த்தாலே பயமாக வந்தது. ஆனால் மாரிமுத்து இருவரையும் தரதரவென இழுத்துக்கொண்டு வந்து விட்டான். வந்து ஆறு மாதங்கள் ஆகிவிட்டன.

வந்ததிலிருந்து இவள்தான் வீட்டைப் பார்த்துக்கொள்கிறாள்.   வீடு என்ன வீடு… ஒரே ரூம் தான். அறையின் மூலையில் அடுப்பு இருப்பதால் அது அடுப்படி. மற்றபடி அங்கேயேதான் சாப்பாடு, படிப்பு, படுக்கை எல்லாம். மாரிமுத்து வழக்கம்போலத்தான். பிள்ளைகளைக் கூட்டி வந்து விட்டானே தவிர அந்தப்பிள்ளைகளுக்கு என்ன தேவை என கவனிப்பதில்லை. இருவரும் காலையில் சாப்பிடுவதே கிடையாது. மதியம் பள்ளியில் சாப்பாடு. பக்கத்தில் இருக்கும் மாரிமுத்துவின் அக்காதான் குடிகாரனின் கூடப்பிறந்த தோஷத்துக்காக பிள்ளைகள் இருவருக்கும் இரவு மட்டும் சாப்பாடு போடுவாள். ஆனால் காளீஸ்வரி கெட்டிக்காரி. அத்தை வீட்டில் தினமும் இலவசமாக சாப்பிடக்கூடாது என்ற வைராக்கியத்தில்  மாலை பள்ளிக்கூடம்  விட்டதும் தம்பியையும் அழைத்துக்கொண்டு நேராக தீப்பெட்டி ஆபிசுக்குத்தான் போவாள். இருவருமாக எப்படியோ வாரம் இருநூறு, முன்னூறு சம்பாதித்துவிடுவார்கள். அதை அப்படியே அத்தையிடம் கொடுத்துவிடுவாள்.

வீட்டுவேலை, சாப்பாடு இதையெல்லாம் காளீஸ்வரி சமாளித்து விடுகிறாள். மாதவிடாய் நேரம்தான் காளீஸ்வரிக்கு சங்கடமாக இருக்கும். வயிறு வலிக்கும்போது அம்மா பக்கத்தில் இருந்தால் நன்றாக இருக்குமே என நினைப்பாள். அப்பாவிடம் எதுவும் சொல்ல முடியாது. சொன்னாலும் கேட்கும் மனநிலையில் அவர் இருப்பதில்லை. அந்த சமயங்களில் அம்மாமேல் கோபம் கோபமாக வரும். ‘அப்பாவுடன் சண்டை போட்டு எங்களையும் ஆச்சி வீட்டிலேயே வைச்சிருக்கலாம்  இல்லையா..?’ என நினைத்துக்கொள்வாள். மாதவிடாய் வந்த ஒரு சனிக்கிழமை அம்மாவின் நினைப்பு அதிகம் வர, தம்பியை அழைத்துக்கொண்டு அம்மாவைத்தேடிப் போனாள். அம்மா ஓடி வந்து கட்டிப்பிடித்துக்கொண்டு அழுதாள்.

“அம்மா ப்ளீஸ் மா வந்துரும்மா… எனக்கு அங்க இருக்கவே பிடிக்கல”

“அந்தக் குடிகாரன் திருந்துனாத் தானேடி வர முடியும்?”

“இல்லாட்டி நானும் தம்பியும் உங்கூட இங்க வந்திடறோம்”

“வேணாம் காளீஸ்வரி, இன்னும் கொஞ்ச நாள் தான்… பங்குனிப்பொங்கல் போனஸ் வந்ததும் மாமா வீட்டுக்கு பக்கத்துல ஒரு வீட்டை வாடகைக்குப் பிடிச்சிடறேன். உங்கப்பன் திருந்தினாப் பார்ப்போம். இல்லாட்டி, பெரியாளுங்களை வைச்சி தீர்த்துவுட்டுட்டு  நாம் மூணு பேரும் சேர்ந்து இருப்போம். என் செல்லம்ல, தம்பியை நல்லாப் பார்த்துக்கடா”, என  சாப்பாடு போட்டு, கையில் நூறு ரூபாய் கொடுத்து அனுப்பி வைத்துவிட்டாள். அதன்பிறகு அம்மா எப்போதாவது பள்ளிக்கு வந்து பிள்ளைகளைப் பார்த்துவிட்டு, தான் கொண்டுவரும் சாப்பாட்டை இருவரையும் சாப்பிட வைத்து விட்டுப்போவாள்.

காளீஸ்வரிக்கு படித்து வேலைக்குப்போகவேண்டும் என்று மிகுந்த ஆசை. இங்கிலீஷ் டீச்சரிடம் இப்பவே கேட்டு வைத்திருக்கிறாள். ‘பத்தாம் வகுப்பு படிச்சிட்டு அடுத்து என்ன க்ரூப் எடுக்கணும், காலேஜ் எங்க படிக்கணும்?’ எல்லாம் விசாரித்து வைத்துவிட்டாள். ‘கலெக்டருக்கு படிக்கிறது  கூட ஈசி தான். கலெக்டரானா எல்லாருமே மதிப்பாங்க. அதனால குடும்பச் சூழ்நிலை பத்தி யோசிக்காம நல்லாப் படிக்கனும்’ என்று டீச்சர் சொல்லிச் சொல்லி, அவளுக்கும் கலெக்டராக வேண்டும் என்ற ஆசை வந்திருக்கிறது.

‘I want to become a Collector’ என்று தினமும் பத்து முறை சொல்லிக்கொள்வாள். ‘நம்ம ஆசையை தினமும் சொல்லிக்கிட்டே இருந்தா கண்டிப்பா நடக்கும்’ என்று டீச்சர் சொன்னதிலிருந்து இப்படிச் சொல்ல ஆரம்பித்திருக்கிறாள்.

Our love is everlasting

I just wanted you to know

– Christina M. Kerschen

https://www.brainkart.com/article/Special-Hero_42874/

‘அந்த கிறிஸ்டினா அவுங்க அப்பாவை எவ்வளவு நேசிச்சிருந்தா, இப்படி உருகி உருகி  ஒரு  பாட்டு எழுதியிருக்கணும்?’, என நினைத்துக்கொண்டே, டீச்சர் நடத்தி முடித்திருந்த ஆங்கிலப் பாடலை  மனப்பாடம் செய்து கொண்டிருந்த காளீஸ்வரி, காலடிச் சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்தாள். அப்பா நின்று கொண்டிருந்தார். அதே கண்கள்… ரத்தச்சிகப்புடன். கால்கள் ஒரு இடத்தில் நில்லாமல் அலைந்து கொண்டிருந்தன. காளீஸ்வரிக்கு பயமாக இருக்க, குனிந்து கொண்டாள்.  இரவு அத்தை வீட்டில் சாப்பிட்டவள் ஏதோ யோசனையுடன்…

“அத்தை… இன்னிக்கு உங்க வீட்டுல படுக்கட்டுமா?” என்றாள்.

“ஏண்டி… என்ன ஆச்சு?”

“ஒண்ணுமில்ல. சும்மாதான்… அப்பா இன்னிக்கு ரொம்ப குடிச்சிட்டு வந்திருக்கு. அதான்…”

“சரி சரி வந்து படுங்க. இவன் என்னிக்குத்தான் திருந்தப் போறானோ… தெரியல.”

மாமா, அத்தை, அதற்கடுத்து காளீஸ்வரி அடுத்து தம்பி எனப் படுக்க காளீஸ்வரி சீக்கிரமே தூங்கிவிட்டாள். ஆழ்ந்த உறக்கத்திலிருந்த காளீஸ்வரிக்கு உடம்பில் ஏதோ ஊர்ந்தது போலிருக்க திடுக்கிட்டு கண்விழித்தாள். அத்தையைத் தாண்டி மாமாவின் கை நீண்டு வந்து, இவள் மேல் படர்ந்திருந்தது.

ச்சீய்…

மறுநாள் “இல்ல அத்தை… நான் எங்க வீட்டுலேயே படுத்துக்கறேன்” என்று வந்துவிட்டாள். ‘குடிகாரரா இருந்தாலும் எங்க அப்பாதான் எனக்குப் பாதுகாப்பு.’ தீர்க்கமாக நம்பிக்கொண்டாள்.

That you’re my special hero

And I wanted to tell you so.

மறுநாள் இரவு தூக்கத்தில்கூட காளீஸ்வரியின் உதடுகள் அந்தப் பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்தன.  That you’re my special hero … That you’re my special hero…

உடம்பில் ஏதோ ஊர்ந்தது. அரைத் தூக்கத்தில், நேற்றைய நாளின் கனவு போல என்று நினைத்து திரும்பிப் படுத்தாள். மேலும் மேலும்  கண்ட இடங்களிலும் கை ஊர்ந்ததை உணர்ந்து படக்கென எழுந்தாள்.

‘அய்யோ…’

கத்தத் தொடங்கியவள் யாரெனப் புரிந்து கையைத் தட்டிவிட்டாள். காளீஸ்வரி விழித்துவிட்டாள் என்பது தெரிந்ததும்  கை விடுக்கென்று அகன்றது. முழுமையாக சுயநினைவு வந்து அதிர்ந்து போனாள்.

“அப்பாவா..? அப்பாவா…” ஒருவேளை குடிபோதையில் புரண்டு படுக்கும்போது கை பட்டு விட்டதோ? நிதானித்து நடந்ததை யோசித்துப் பார்த்தாள். இல்லை. தூங்க முயற்சிக்கும்போது மறுபடியும்… மறுபடியும் கை. உடலில்… எல்லாமே பேட் டச் தான். காளீஸ்வரிக்கு ஒன்றும் புரியவில்லை.

பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும்போதே டீச்சர் குட் டச், பேட் டச் பற்றியெல்லாம் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். ‘உடனடியாகக் கத்த வேண்டுமாம். அம்மா அப்பாவிடம் சொல்ல வேண்டுமாம். ஆனால் அப்பாவே பேட் டச் பண்ணுவாருனு டீச்சர் சொல்லலியே..? அப்படி அப்பாவே பேட் டச் பண்ணினால் யாரிடம் சொல்லணும்னு சொல்லிக்கொடுக்கலியே?’

ஏனோ சம்பந்தமில்லாமல் டீச்சர் நடத்திய பாடலில் வந்த அத்தனையும் மனசுக்குள் ஓடியது. 

And You are my Special Hero.

ஹீரோவாம் ஹீரோ…

கோபமும் அருவருப்புமாக வந்தது. ஏதோ முடிவுடன்  எழுந்தவள், பக்கத்தில் கதவுக்கு அணை கொடுப்பதற்காக வைத்திருந்த கருங்கல்லை கையில் எடுத்துக்கொண்டு திரும்பிப் பார்த்தாள். மாரிமுத்து இவளுக்கு முதுகைக் காட்டியவாறு அந்தப்பக்கம் திரும்பிப் படுத்திருந்தான்.  

NO. You are not my Hero.

சொல்லிக்கொண்டே… அந்தக் கல்லால் அவன் மண்டையில் ஒரே போடாகப் போட்டாள். தம்பியை எழுப்பி இழுத்துக்கொண்டு அந்த இருட்டில் அம்மா இருந்த ஊர் நோக்கி ஓடினாள்.  

படைப்பாளர்

ரமாதேவி ரத்தினசாமி

எழுத்தாளர், அரசுப்பள்ளி ஆசிரியர். பணிக்கென பல விருதுகள் வென்றவர். இவர் எழுதி வெளிவந்துள்ள ‘கனவுகள் மெய்ப்படட்டும்’ கட்டுரைத் தொகுப்பு பரவலாக கவனம் பெற்றது. 2014, 2015ம் ஆண்டுகளில் ஐ நா சபையில் ஆசிரியர் பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். ‘அடுக்களை டூ ஐநா’ தொடரில் அவரது ஐ நா அனுபவங்களை நகைச்சுவையுடன் விவரித்திருக்கிறார். அடுத்து, ‘இலங்கை – எழுதித் தீராச் சொற்கள்’ என்கிற பெயரில் இலங்கை அனுபவங்களையும், ‘என்ன செய்கிறது ஐநா – பெண் கல்வி த் தடைகள் உடைபடும் தருணங்கள்’ என்கிற கட்டுரைத் தொடர்களையும் நம் வலைதளத்தில் அழகாக எழுதியிருக்கிறார். இம்மூன்று தொடர்களும் ஹெர் ஸ்டோரீஸ் வெளியீடாகப் புத்தகங்களாகவும் வெளிவந்து பாராட்டுகளைப் பெற்றுள்ளன. ‘வியட்நாம் அனுபவங்கள் ‘என்கிற இவரது நான்காவது தொடர் நூலாக்கம் பெற்றுவருகிறது. இது தவிர ஹெர் ஸ்டோரிஸ் பதிப்பகத்துக்காக ‘பிள்ளையாரும் 22 நண்பர்களும்’ என்ற இளையோர் நாவலையும் எழுதியுள்ளார். குட்டிப் பெண்களின் பெரிய கதைகள் இவர் எழுதும் ஐந்தாவது தொடர்.