அடையாளம் குறித்துப் பல கண்ணோட்டத்தில் பேசப்படுகிறது. சமூகத்தின் பல்வேறு பிரிவினர் அடையாளம் குறித்து வெவ்வேறான பார்வை கொண்டிருக்கலாம். சொந்த மண்ணில் சொந்த இன மக்கள் மத்தியில் வாழ்பவர்களுக்கு ஏற்படும் அடையாளச் சிக்கல்கள் குறித்துப் போன கட்டுரையில் பார்த்தோம். ஆனால், புலம்பெயர்ந்து வேறு நிலப்பரப்பில் வாழும் மக்கள் மத்தியில் அடையாளம் குறித்து வேறுபட்ட பார்வை நிலவுகிறது. இக்கட்டுரையில் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் அடையாளம் குறித்து என்ன மாதிரியான கருத்து நிலவுகிறது என்று பார்க்கலாம்.    

முதலில் ஒரு புலம்பெயர்ந்த தமிழச்சியாக அடையாளம் குறித்த என் பார்வையை விளக்க விழைகிறேன். பதின் பருவத்தில் நான் தமிழ்நாட்டை விட்டு கனடாவிற்குப் புலம்பெயர நேரிட்டது. கனடா வந்த புதிதில் அனைவருக்கும் இருப்பது போல எனக்கும் “cultural shock” என்று சொல்லப்படும் பண்பாட்டு அதிர்ச்சி ஏற்பட்டது. பல பிற்போக்கான பழக்க வழக்கங்களுக்கு மத்தியில் பல அடக்குமுறைகளை அவை அடக்குமுறை என்றே அறியாமல் சர்வ சாதாரணமாக இந்தியச் சமூகத்தில் வாழ்ந்த எனக்கு கனடா போன்ற ஒரு முற்போக்கான சமூகத்தில் கிடைத்த சமத்துவமான மரியாதையே மிகப் பெரிய அதிர்ச்சியாகத்தான் இருந்தது. இந்தியாவில் ஒரு நவநாகரீக மாநகரத்து பள்ளியிலேயே ஆசிரியர் முன்னாள் நாற்காலி இருந்தாலும் நின்றே பேசிப் பழக்கபட்ட எனக்கு கனடாவில் ஒரு சின்ன ஊராட்சிப் பள்ளியில் நாற்காலி இல்லை என்றால் எங்கிருந்தோ ஓரு நாற்காலியைத் தேடி எடுத்து வந்து என்னைச் சமமாக நடத்திய ஓர் ஆசிரியரின் செயல் மிக மிக அதிர்ச்சியாக இருந்தது. 

இது போன்ற நேர்மறையான பண்பாட்டு மாற்றங்கள் நான் ஒரு நல்ல சமூகத்தில்தான் இப்போது வாழ்கிறேன் என்கிற எண்ணம் எனக்குத் தந்தாலும் ஒரு தேவை இல்லாத தனிமையில் பழக ஆட்கள் இல்லாமல் சிக்கிக்கொண்டு தவிக்கவும் நேரிட்டது. அதற்குப் பல காரணங்கள் இருந்தன. முதலில் புது நண்பர்களை உருவாக்கி சமூகத்துடன் ஒன்றி வாழ மொழி முதல் நேரம் இன்மை வரை பல காரணிகள் நம்மைத் தடுக்கும். இருந்தபோதிலும் நாம் பிறந்து வளர்ந்த சமூகத்திலிருந்து நம்மைப் போலவே இங்கு வந்த தமிழ் மக்களை ஏதாவது சங்கங்கள் மூலமாவது தேடிக் கண்டு பிடித்து ஒரு சமூக வாழ்க்கையை  அமைத்துக்கொள்ள முயற்சி செய்வர். அப்படி அமையும் நட்பு வட்டமும் பெரும்பாலும் பரபரப்பான வாழ்க்கை முறையில் காணாமல் போய்விடும். எனவே, தேவைக்கு அதிகமான தனிமையும் இந்தப் பண்பாட்டு மாறுதலால் புலம்பெயர்ந்த மக்களுக்கு ஏற்படும்.  

இந்தத் தனிமைதான் நாம் இந்தச் சமூகத்தில் யார் என்கிற கேள்வியை உருவாக்கும். அடுத்து இந்த அந்நிய சமூகத்தில் நமக்கு என்ன அங்கீகாரம் என்று கேள்வி கேட்கவைக்கும். இந்தக் கேள்வி அடுத்ததாக எந்த அடையாளம் மூலம் நாம் அங்கீகாரம் பெற முடியும் என்று யோசிக்க வைக்கும். அப்போது நாம் எது நமக்குப் பெருமை தரும் அடையாளம் என்று நம்புகிறோமோ அந்த அடையாளத்தை முன்நிறுத்தி பேசுவோம். பெரும்பாலும் இந்தியாவில் இருந்து புலம்பெயர்பவர்கள்  மொழி வழியில் தங்களை அடையாளப்படுத்திக்கொள்வர். குறிப்பாக, உலகின் பழமையான மொழி என்கிற பெருமையைக் கொண்டுள்ள தமிழர்கள் மொழிப் பற்றின் அடிப்படையில் தங்களை முன்னிருத்திக்கொள்வர்.

தங்கள் அடையாளத்தை கண்டு அறிந்தபின் புலம்பெயர்ந்த தமிழர்கள் அடுத்ததாக யோசிப்பது அவர்களின் பண்பாட்டை தொலைத்துவிடாமல் எப்படித் தங்களுக்குப் பின்னால் தங்கள் பிள்ளைகளுக்குக் கடத்துவது என்பது குறித்துதான். எனவே, அவர்கள் புலம்பெயர்ந்து வருவதற்கு முன்னால் சொந்த ஊரில் பின்பற்றிய அனைத்துப் பழக்க வழக்கங்களையும் தேவை இருக்கிறதோ இல்லையோ தங்கள் வீட்டில் தொடர்ந்து பின்பற்றுவார்கள். அதோடு நிற்காமல் தங்கள் பிள்ளைகளுக்கும் அந்தப் பழக்க வழங்கங்களைத் தவறாமல் கடத்துவார்கள். இப்படிக் கண்மூடித்தனமாகத் தங்கள் பண்பாட்டு பழக்கங்களை அடுத்த தலைமுறைக்குக் கடத்துவதன் மூலம் சில நல்ல பழக்கங்களோடு தங்கள் சொந்த மண்ணிலேயே காலாவதி ஆகிப்போன சில தேவையற்ற பழக்கங்களும் சேர்ந்து கடத்தப்படுகின்றன.

பல தலைமுறைகளாகப் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் கணிசமான அளவில் அதிகமாக வசிக்கும் நாடான சிங்கப்பூருக்குச் சில ஆண்டுகளுக்கு முன்னாள் நான் சென்ற போது ஒரு பழக்கத்தைத் தமிழர்கள் இன்னும் கைவிடாமல் இருப்பதை நான் கவனித்தேன். அங்கு இருந்த எல்லா நாட்களும் நான் ஊர் சுற்றிப் பார்க்க டாக்ஸியைப் பயன்படுத்த நேர்ந்தது. சிங்கப்பூரில் தமிழர்கள் அதிகம் இருக்கிறார்கள் என்பதால், ஒரு டாக்ஸி ஓட்டுநராவது தமிழராக இருப்பார், அவரோடு நிறைய பேசி சிங்கப்பூரில் தமிழ் மக்களின் வாழ்வியல் பற்றி அறிந்துகொள்ளளாம் என்று ஆசைப்பட்டேன். ஆனால்,  சிங்கப்பூரில் இருந்த கடைசி நாள் வரை ஒரு தமிழ் ஓட்டுநர்கூட நான் புக் செய்த டாக்ஸியில் வரவில்லை. கடைசியாக ஊர் திரும்ப விமான நிலையத்திற்குப் போகும் போதுதான் ஒரு தமிழ் ஓட்டுநர் வந்தார். முதலில் அவர் பெயரை டாக்ஸி புக் செய்த செயலியில் கண்டபோது அவரிடம் கண்டிப்பாக உரையாட வேண்டும் என்று தோன்றியது.

அவர் பெயர் பின்னால் சாதிப் பெயர் இருந்தது. தமிழ்நாட்டில் இப்போது வழக்கத்தில் இல்லாத பெயருக்குப் பின்னால் சாதி பெயர் போடும் பழக்கம் புலம்பெயர்ந்து வாழும் தமிழருக்கு எப்படிக் கடத்தப்பட்டது என்று ஒரு கேள்வி என்னுள் எழுந்தது. அவரிடம் பேசும்போதுதான் தெரிந்தது அவர் தாத்தா காலத்தில் இருந்தே சிங்கப்பூரில் வசிப்பவர் என்று. அவருடைய தாத்தா புலம்பெயர்ந்து வந்த காலம் சுயமரியாதை இயக்கம் பெரிய அளவில் தமிழ்நாட்டில் செயல்படாத காலம் என்று புரிந்தது. எனவே, அவர் சிங்கப்பூர் சென்று குடியேறிய பிறகும் தமிழ்ப் பண்பாட்டை மறக்கக் கூடாது என்கிற நோக்கத்துடன் அன்றைய காலத்தில் பழக்கத்தில் இருந்த பெயருக்குப் பின்னால் சாதிப் பெயரைச் சேர்க்கும் வழக்கத்தைத் தன் பேரப்பிள்ளை வரை கடத்தி உள்ளார் அந்தத் தாத்தா. அந்தத் தமிழ் ஓட்டுநரோடு தொடர்ந்து பேசப் பேச ஒரு பாதுகாப்பின்மையை உணர்ந்தேன். அங்கு நடந்த அரசியல் நிகழ்வுகள் மற்றும் உலகின் மற்ற இடங்களில் வாழும் தமிழர்களுக்கு வரலாறு நெடுக நிகழ்ந்த, நிகழ்ந்துகொண்டிருக்கும் கசப்பான அனுபவங்கள் போன்ற பல காரணிகள் அவருடைய அந்தப் பாதுகாப்பின்மை உணர்வுக்குக் காரணமாக இருக்கலாம் என்று என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. 

இப்படிப்பட்ட பாதுகாப்பின்மை உணர்வு உலகம் முழுதும்  வாழும் அனைத்துப் புலம்பெயர் தமிழர்கள் மத்தியிலும் இருக்கிறது. மொழி, நிறம், சாதி, மதம் போன்ற பல அடையாளங்கள் அடிப்படையில் பல அடுக்குகளில் தமிழர்கள் ஒடுக்கப்படுகிறார்கள். இதன் விளைவாக அவர்களுக்குப் பாதுகாப்பின்மையில் சிக்கித் தவிக்க நேரிடும். இந்தப் பாதுகாப்பின்மையைத் தமிழ் மொழி மற்றும் இனத் தூய்மை வாதம் பேசிப் பிரிவினையைத் தூண்டும் பிற்போக்குக்காரர்கள் தவறாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இந்தப் பிற்போக்குகாரர்கள் பல பிற்போக்கான கருத்துகளைப் பரப்பி பயமுறுத்தி, அந்தப் பாதுகாப்பின்மை உணர்வை மேலும் அதிகரித்துப் புலம்பெயர் தமிழர்களின் நம்பிக்கையைப் பெற்று, பணம் மற்றும் பல செல்வங்களைச் சுரண்டுகிறார்கள்.  

புலம்பெயர் தமிழர்களிடம் இருந்து சுரண்டும் இது போன்ற பிற்போக்குகாரர்கள் பரப்பும் தேவை அற்ற பெருமைகளில் ஒன்று சாதிப் பெருமை. அவர்கள் பரப்பும் சாதி தூய்மைவாதத்திற்குப் பலியாகி, பல புலம்பெயர் தமிழர்கள் தங்கள் சமூக வலைத்தளத்தில் தாத்தா காலத்தில் தூக்கி எறிந்த சாதிப் பெயரை மீண்டும் இணைத்துக்கொண்டு வலம்வருகிறார்கள். இது இப்படியே போனால், வருங்காலத்தில் அவர்களுக்கு வெளிநாட்டில் பிறக்கப்போகும் பிள்ளைகளுக்கு தங்கள் சாதிப் பெயரை மறக்காமல் சேர்த்துவிடுவார்கள் போலும். 

தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களுக்கு இருக்கும் அத்தனை அடையாளச் சிக்கலும் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கும் உள்ளது. ஆனால், அந்த அடையாளச் சிக்கல் புலம்பெயந்தவர்களுக்கு இன்னும் பல அடுக்குகளில் உருவாகிறது. இருந்தபோதிலும், எல்லாத் தமிழர்களும் பல பிற்போக்கான பரப்புரைகளுக்குப் பலியாகிறார்கள் என்பது மட்டும் நிதர்சனம். இந்தப் பிற்போக்குக் கருத்துகளை எதிர்த்து முற்போக்குகாரர்கள் தொடர்ந்து இந்தச் சமூகத்தில் செயல் ஆற்ற வேண்டிய அவசியம் இருக்கிறது. அனைவரும் சேர்ந்து சமத்துவம் நோக்கிப் பயணிப்போம் வாரீர். 

படைப்பாளர்:

தீபிகா தீனதயாளன் மேகலா

தமிழகத்தைச் சேர்ந்த தீபிகா, தற்போது கனடாவின் மக் ஈவன் பல்கலைக்கழகத்தில் மானுடவியல் பட்டப்படிப்பு பயின்றுவருகிறார். தான் கற்றுவரும் மானுடவியல் கோட்பாடுகளை தமிழ் நிலப்பரப்புக்கும், அமெரிக்கக் கண்டத்துக்கும் பொருத்திப் பார்த்து கட்டுரைகளை எழுதத் தொடங்கியுள்ளார். வரலாறு மற்றும் தமிழ் மேல் தீவிர பற்று கொண்டவர். இவரது யூடியூப் செய்தி சேனலின் சுட்டி: https://www.youtube.com/channel/UCyNXWPShwgZG4IsyjP7BnAQ