“ஏ, புள்ள முத்தழகி, முத்தான அழகி! என்ன மாச்சான கண்டுக்காம அங்கனயும் இங்கனையும் குட்டி போட்ட பூன கணக்கா காலைல இருந்து ஓடிக்கிட்டு இருக்க? பாத்துடி. என் பையனும் உன்கூட ஓடி ஓடி டயர்டாயிடப் போறான்” என்றதும்  அத்தனை நேரம் பரபரப்பாக ஓடியவள் சற்று நிறுத்தி, ஒரு சிறு புன்னகையுடன் மேடிட்ட தன் வயிற்றை மெதுவாக வருடிக் கொடுத்தாள்.

“அதெல்லாம் அவங்க மாமனுக்குப் புடிச்ச பனங்கிழங்கு, அரிசி முறுக்கு, அச்சு முறுக்கு,  ஓலக் கொழுக்கட்டை எல்லாம் செஞ்சு எடுத்து வைக்கிறதுக்குள்ள ஒண்ணும் களைச்சிப் போயிற மாட்டான் உன் புள்ள” என்று கழுத்தை ஒரு வெட்டு வெட்டிவிட்டு, மீண்டும் தன் அண்ணனுக்காகத் தான் பார்த்துப் பார்த்துச் செய்த பதார்த்தங்களைப் பத்திரமாக எடுத்து வைக்கும் மும்முரத்தில் மூழ்கினாள்.

“பாத்துடி, வெட்டுற வெட்டுல கழுத்து சுளுக்கிக்கப் போகுது” என்றவனுக்குப் போகிற போக்கில், “அதெல்லாம் ஒண்ணும் சுளுக்காது. ரொம்பத்தான் கரிசனம் மச்சானுக்கு” என்றவாறு அச்சுமுறுக்கை டப்பாவில் எண்ணி அடுக்கி வைத்தாள். அதில் ஒன்றை எடுக்கப் போனவனை, “அதான் வீட்டுக்குன்னு தனியா அடுப்படில வச்சிருக்கேன்ல. அதுல போய் எடுத்துத் திண்ணாத்தான் என்னவாம்? எங்க அண்ணனுக்கு எடுத்து வக்கிற முறுக்குதான் கேக்குதோ மாப்பிள்ளைக்கு?” என்று நீண்ட அவன் கைகளை வலிக்காமல் தட்டி விட்டாள்.

“இருந்தாலும் ரொம்பத்தான் பண்ணிக்கிட்டிருக்கடீ. உங்க நொண்ணன் என்ன சீமைலயா இருக்காரு. இதெல்லாம் கண்ணுல காணாம தவிச்சுப் போய்க் கிடக்காருன்னு புள்ளத்தாச்சி பொம்பள இப்படி ஒத்தையில மாஞ்சி மாஞ்சி ஒரு வாரமா செஞ்சு எல்லாத்தையும் பொட்டலம் கட்டிட்டு கெடக்க?”

“தோ இங்க இருக்குற சென்னையில இருக்காரு. வருசத்துக்கு நாலு தடவ வந்துட்டுப் போறாரு. இதல்லாம் உங்க மைனி செஞ்சு குடுத்தா சாப்புட மாட்டாரா என்ன? நீதான் இங்க இருந்து செஞ்சு கொண்டு போய் ஏத்தணுமாக்கும்?” என்று வம்பிழுத்தான். 

அவனை முறைத்து விட்டு, வெளியே காய்ந்து கொண்டிருந்த  துணியை எடுக்கப் போனவளை மறித்து கையைப் பிடித்து, “உக்காருமா. நானே போய் எடுத்துட்டு வர்றேன். பார்வையாலயே என்னை எரிச்சிடாதம்மா பரமேஸ்வரி.”

“அபி குட்டி, சவுண்ட கம்மி பண்ணி வச்சுக் கேளுங்க. தாத்தாவுக்குத் தொந்தரவா இருக்கும்.”

“இருக்கட்டும்மா, சின்னது பாத்துட்டுப் போவுது.”

கொடியில் காய்ந்த துணிகளை அவள் அருகில் இருந்த திண்ணையில் போட்டுவிட்டு, மடிக்கத் தொடங்கிய அவள் கணவன் பொன்துரையைப் பார்த்து, “மாமா, பாரேன்” என்று கொஞ்சலாக அழைத்தவள், எதற்காக அழைக்கிறாள் என்று தெரிந்து அவளைக் கவனிக்காத மாதிரி பாசாங்கு பண்ணினான்.

“நீ எத்தனை தடவ சொன்னாலும் என்னால முடியாது. என்ன வற்புறுத்தாத இசக்கி. நீங்க ரெண்டு பேருமே இந்த மழைக்குள்ள ஊருக்குப் போகணுமான்னு யோசிச்சிட்டுருக்கேன்” என்று முத்தழகியிலிருந்து இசக்கிக்கு மாறியதில் இருந்து அவன் தீவிரமாக மாறிவிட்டதை அவளால் உணர்ந்து கொள்ள முடிந்தது.

“எனக்காகப்பா ப்ளீஸ். இன்னைக்கு ஒரு நாள் ராத்திரி இங்க தங்கிக்கயேன். பாவம் அவருக்கு மேலுக்கு முடியலங்குறதால தானே கேக்குறேன்.  நீ அவரைப் போய்ப் பார்க்க வேண்டாம், ஏதும் பேசிக்கக்கூட வேண்டாம். டீவி ரூம்ல கிடக்குற கட்டில்ல படுத்துக்க போதும் ஏதும் அவசரம்னா” என்று இழுத்தவளுக்குத் தெரியும். அவசரம் என்றால்கூட கண்டிப்பாக அவனை அழைக்க மாட்டார் என்று. ஆனால் அதற்காக இந்த அடைமழையில் சளி, காய்ச்சல் வந்து கிடக்கும் அவரைத் தனியாக வைத்து விட்டுப் போக அவளுக்கு மனமில்லை.

நாளை காலை புதுக்குடியிலிருந்து  மங்களம் அத்தை வந்து  அவரைப் பார்த்துக்கொள்வார். இன்று ஒரு நாள் இரவு அவன் இங்கு இருந்தால் போதும்‌.

“நீ எவ்வளவு கொஞ்சினாலும் என்னால முடியாது இசக்கி‌. உங்கப்பன் என்னய நாக்கு மேல பல்லப் போட்டுப் பேசுன பேச்ச நீ மறக்கலாம். இல்ல அதக் கேட்டுகிட்டிருந்த இந்த ஊருகூட மறக்கலாம். ஆனா நான் மறக்க மாட்டேன்.”

அது நடந்து ஏழு வருடங்கள் உருண்டோடி விட்டன. அவர்கள் வாழ்க்கை எவ்வளவோ மாறிவிட்டது. ஆனால் அவர்கள் இருவரும் தங்கள் பிடிவாதத்தில் இம்மியளவுகூடக் குறையவில்லை. இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் இருவரும் இப்படி தெற்கு, வடக்காக இருக்கப் போகிறார்களோ என்று அவளுக்கும் தெரியவில்லை‌.

அவர்கள் ஆச்சி இருந்த வரை எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அப்பா கேட்டபாடில்லை. ஒருவேளை அவள் அம்மா இருந்திருந்தால் கேட்டிருக்கக் கூடும். ஆனால் அதற்குத்தான் அவள் இல்லயே. அவர் எட்டு வயது இருக்கும் போதே காமாலை நோய் அவரைக் கொண்டு போய்விட்டது. அவருடைய நினைவுகளையும் கொஞ்சம் கொஞ்சமாக.

‘உங்கம்மா உன்னய ஸ்கூல்ல கொண்டு உட வரலயா? ஏன் எப்பவும் உங்க ஆச்சியே வாராங்க?’ என்று பள்ளி நாட்களில் தோழிகளின் கேள்விகளில் தொடங்கி, அவள் பெரியவள் ஆனபோது ஊர்கூடி சடங்கு நடத்திய போது, அவள் கல்லூரி முடித்து பட்டம் வாங்கிய போது, அவள் அம்மா ஆசைப்பட்ட மாதிரி அவள் பள்ளி ஆசிரியராகி முதல் நாள் பணியில் சேர்ந்த போது, அவள் திருமணத்தின் போது, அவள் முதல் பிரசவத்தின் போது என்று அவள் காலம் முழுக்க அந்த இன்மை அவளைத் தொடரும் என்று நினைத்தவாறே முன் அறையில் சந்தன மாலைக்குப் பின் கறுப்பு வெள்ளை படமாக புன்னகைத்த அம்மாவைப் பார்த்த போது விழியோரம் நீர் கசிந்தது.

அண்ணன் எவ்வளவுவோ வற்புறுத்தியும் தான் பிறந்து வளர்ந்த இடத்தையும், பழக்கடையையும், வாய்க்கா வரப்பையும் விட்டுவிட்டு அவனுடன் சென்னைக்குப் போக மறுத்து ஊரிலே இருந்துவிட்ட அப்பாவை, அம்மா இருந்தால் இன்று யார் பார்த்துக் கொள்வார்கள் என்கிற கவலையில்லாமல்  ஊருக்கு நிம்மதியாக கிளம்பியிருக்கலாம் என்று நினைத்த போது விழிகள் குளமாகின.

“ஏ, முத்தழகி இப்ப எதுக்குக் கண்ணைக் கசக்கிட்டு இருக்கே? மாசமா இருக்கப் பொண்ணு இப்படி அழக் கூடாது. அது உனக்கும் நம்ப புள்ளைக்கும் நல்லதில்ல. என்னயப் பாரு புள்ள” என்று தன் கையால் அவள் கண்களைத் துடைத்துவிட்டான்.

“காலு இன்னும் குடையுதா என்ன? சீக்கிரம் எல்லாத்தையும் எடுத்து வச்சிட்டு வா. நம்ம வீட்ல போயி வெண்ணி போட்டு ஊத்தி விடுறேன்.”

“இதுவும் நம்ம வீடுதான்.”

குழந்தை போல் அவள் முகத்தைப் பார்த்துச் சிரித்தவனின் அடர்த்தியான சுருண்ட தலைமுடியை விரல்களால் கோதிவிட்டாள். பின் அவன் காதுகளை மெல்ல வலிக்காமல் திருகினாள்.

“அடங்காப்பிடாரி. ஒரு சொல்லு கேக்குதாப் பாரு. தான் பிடிச்சதுதான் பிடின்னு ஒத்த கால்ல நிக்குறது. அவருதான் பெரியவரு. நீயாவது கொஞ்சம் விட்டுக் குடுத்து போனாத்தான் என்ன?”

“மாமன் ரொம்ப பிஸி. தொந்தரவு பண்ணாத” என்று கால் அமுக்கி விடுவதில் மும்முரம் காட்டினான். அந்த இடத்தில் இந்த ஊரே கூடியிருந்தாலும் யாரையும் கண்டுகொள்ளாமல் அவள் கால்களைப் பிடித்துவிடத் தயங்க மாட்டான் என்பதும் அவளுக்குத் தெரியும். அது அவள் மாசமாக இருப்பதால் மட்டுமல்ல, எப்போதுமே அவளை உள்ளங்கையில்தான் வைத்து தாங்குவான். அதுதான் அவன்.

அவள் அப்பா எப்போதோ கோபத்தில் சொன்ன ஒரு வார்த்தையை இத்தனை வருடங்களாகப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறான்.

இந்த கரிசனமும் அதே அளவு பிடிவாதமும் ஒருவனிடம் தான் இருக்கிறதென்பது அவளுக்கு எப்போதும் அதிசயமாக இருக்கும். அவன் ஆச்சி சொல்வது போல் கோபம் இருக்கும் இடத்தில்தான் குணமும் இருக்கும் போல.

அவள் அப்பாவும்  நான் பிடித்த முயலுக்கு மூணு கால் என்று அப்படியே பேசாமலே இருந்து விட்டார்.

“என்னம்மா மறுபடியும் கால் வலிக்குதா?” என்றவாறு அவள் காலை தன் சிறுகைகளால் அமுக்கத் தொடங்கினாள் சின்னவள். பிள்ளைகள் நாம் சொல்வதைக் கேட்பதில்லை, நாம் செய்வதைப் பார்த்துதான் கற்றுக் கொள்கிறார்கள் என்பது எத்தனை உண்மை.

“இப்ப அம்மாவுக்குப் பரவால்லம்மா, அப்பா அமுக்கிவிட்டாங்க போதும்” என்று அவளை இழுத்து அணைத்து இரண்டு கன்னங்களிலும் முத்தமிட்டாள்.

“எனக்கு…” என்று தன் கன்னத்தைக் காட்டிய அப்பாவின் கன்னங்களை அம்மா செல்லமாக அடிக்கவும் சிரித்தாள்.

“பாப்பா, நீங்கதான் அம்மாவையும் தம்பிப் பாப்பாவையும் பத்திரமா பாத்து சாயங்கால டிரெயின்ல ஊருக்குக் கூட்டிட்டுப் போவீங்களாம். அப்பா நாளைக்கு  வேலைய முடிச்சிட்டு வந்துருவேணாம். சரியா?”

“சரிப்பா. அது ஏன் எப்பவும் தம்பிப் பாப்பான்னே சொல்லுறீங்க? அது தங்கச்சி பாப்பாவா இருக்காதா?” என்று கேட்டாள்.

“அப்படிக் கேளுடி என் தங்கமயிலு, உங்கப்பா ஏன் பையன் பையன்னு சொல்லிக்கிட்டு இருக்காங்கன்னு. ஒரு பொன்துரைய வச்சே என்னால சமாளிக்க முடியல. இதுல இன்னொண்ணா?”

அவன் ஐந்து வயதில் ஒரு சாலை விபத்தில் அவன் அப்பா, அம்மா இருவரும் இறந்த போது, அவன் ஆச்சி செல்லக்கிளி வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு, “அந்தப் பொன்இசக்கியும் இப்படிக் கண் அவிஞ்சு போயிட்டாளே நான் என்ன பண்ணுவேன்? அழுகாத ராசா, ரெண்டு பேருக்கும் ஆயிசு கட்டைன்னு எழுதியிருக்கு. அத நம்ம மாத்தியா எழுத முடியும்?  உன்னய விட்டுவிட்டு எங்கயும் போயிட மாட்டங்க. உங்கூடயேதான் கிடந்து துடிக்கும் அதுக சீவன். நீ  பெரியவனானதுக்கு அப்புறம் உனக்கு மகளுக்கு மகளாவும் மகனாவும் வந்து பிறப்பாங்கய்யா. கலங்காத. அப்ப நீ அவங்கள நல்லா வச்சிப் பாத்துக்கப்பா” என்று சமாதானம் செய்யச் சொல்லிய வார்த்தைகளை முப்பது ஆண்டுகள் கடந்தும்  அவன் மறக்கவில்லை.

ஒருவேளை இன்னும் சில மணி நேரம் கழித்து நிகழப்போவது முன்னமே தெரிந்திருந்தால் அவளிடம் சொல்லியிருப்பானோ என்னவோ?

 (தொடரும்)

படைப்பாளர்:

பொ.அனிதா பாலகிருஷ்ணன் 

பல் மருத்துவரான இவருக்குச் சிறுவயது முதல் தன் எண்ணங்களைக் கவிதைகளாக, கட்டுரைகளாக எழுதப் பிடிக்கும். நாளிதழ்கள், வலைதளங்களில் வரும் கவிதைப் போட்டிகள், புத்தக விமர்சனப் போட்டிகள் போன்றவற்றில் தொடர்ந்து பங்கேற்று பரிசுகள் பெற்று வருகிறார்.  இயற்கையை ரசிக்கும், பயண விரும்பியான இவர் ஒரு தீவிர புத்தக வாசிப்பாளர். தன் அனுபவங்களைக் கவிதைகளாக, கட்டுரைகளாக, ஒளிப்படங்களாக வலைத்தளங்களில் பதிந்து வருவதோடு சிறுகதைகளும் கதைகளும் எழுதி வருகிறார்.