பொதுவாக மக்கள் குழுவாக வாழும் நிலப்பரப்பைத் தமிழில் இரண்டு சொற்கள் கொண்டு குறிக்கும் வழக்கம் உள்ளது. அந்த இரண்டு சொற்கள்; நாடு மற்றும் தேசம். இவ்விரு சொற்களும் ஒரே பொருளைக் குறிக்கும் இருவேறு சொற்கள் என்று தோன்றலாம். ஆனால், கூர்ந்து நோக்கினால் இவ்விரு சொற்களுக்கும் தனித் தனி அர்த்தம் உள்ளது. ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் வசிக்கும் பொதுவான வம்சாவளிகள், வரலாறு, பண்பாடு அல்லது மொழியால் ஒன்றுபட்ட ஒரு பெரிய மக்கள் குழுவாக வாழ்வதை தேசம் என்று கூறுவர். அதேபோல், ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் வசிக்கும் மக்கள் தங்களை நிர்வகித்துக்கொள்ள ஒரு சுயமான அரசாங்க அமைப்பை நிறுவி செயல்படுவதைக் குறிக்க நாடு என்கிற சொல் பயன்படுத்தப்படுகிறது. மேலும், இவ்விரு சொற்களின் மூலம் பற்றி ஆராய்ந்தால் ஏதேனும் ஒரு வார்த்தைத் தமிழ் சொல்லே இல்லை என்று தெரிய வரலாம். ஆனால், இந்தக் கட்டுரை இவ்விரு சொற்களின் வேர்களைத் தேடும் முயற்சி பற்றியது அல்ல.    

இந்தக் கட்டுரை தேசியவாதம் பற்றியது. தேசிய உணர்வு என்பது மொழி, மதம் போன்ற ஏதாவது ஓர் அடையாளத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்படும். உதாரணத்திற்கு, பிரான்ஸ் என்கிற நாட்டைச் சேர்ந்த மக்கள் பிரெஞ்சு மொழியால் தேசிய உணர்வைக் கட்டமைத்து, தன்னாட்சி நிறுவி வாழ்ந்து வருகிறார்கள். பிரான்ஸ் நாடானது ஒரு நாடாக இருக்கும் அதே நேரத்தில் மொழிவழி தேசமாகவும் இருக்கிறது. ஆனால், கனடா போன்ற புலம்பெயர்ந்தோரால் நிரம்பி உள்ள நாட்டில் ஒற்றை அடையாளம் கொண்டு தேசிய உணர்வை உருவாக்க முடியாது. இதன் அடிப்படையில் கனடா ஒரு நாடு மட்டுமே; தேசம் அல்ல. எனவே, ஒரு தேசமானது நாடாகவும் இருக்கலாம். ஆனால், எல்லா நாடுகளும் தேசமாகவும் இருக்க முடியாது.

இந்தியா என்கிற நிலப்பரப்பில் பல மொழிவழி தேசியங்களைச் சார்ந்த மக்கள் அரசியல் சாசனம்படி இறையாண்மை, பொதுநலக்கோட்பாடு, மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயகக் குடியரசாக ஒன்றுபட்டு வாழ்ந்துவருகிறார்கள். எனவே, இந்தியா ஒரு நாடு மட்டுமே; தேசம் அல்ல. இருப்பினும், இந்தியாவில் தேசிய உணர்வைக் கட்டமைக்கப் பல வழிகளில் தொடர்ந்து முயற்சிகள் எடுக்கப்பட்டது. சர்வதேச விளையாட்டு போட்டிகளில் தொடங்கி ஏவுகணை ஏவுதல் வரை அனைத்துத் துறைகளின் சாதனைகள் மூலம் உருவான பெருமைகள் மூலமாக தேசிய உணர்வை உருவாக்கினார்கள். ஒருவகையில், நாட்டு மக்களை ஒன்றிணைக்க இது போன்ற பெருமைகள் உதவுகின்றன. எனவே, இந்தியா போன்ற ஒற்றைத் தேசிய அடையாளம் இல்லாத நாட்டில், செயற்கையாகத்தான் தேசிய உணர்வைக் கட்டமைக்க வாய்ப்பு இருக்கிறது.

சமீபக் காலமாக ஒற்றை மத அடையாளத்தை முன்னிறுத்தி தேசிய உணர்வைக் கட்டமைக்கத் தீவிரமாக முயற்சிகள் எடுக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறது. குறிப்பாக, பெரும்பான்மையான மக்கள் பின்பற்றும் மதத்தை முன்னிறுத்தி தேசிய உணர்வை உருவாக்கி, அதன் மூலமாக அரசியல் ஆதாயம் அடைய முயன்றன. இதை எளிதில் சாத்தியப்படுத்த, சிறுபான்மை மதத்தவரை எதிரிகள் போல் சித்தரித்து வெறுப்பு அரசியல் செய்தனர். இதன் விளைவாக இந்தியா முழுவதும் பல இடங்களில் சிறுபான்மையினர் மீது பாகுபாடு காட்டப்பட்டுப் பல அடக்குமுறைகளும் வன்முறைகளும் அரங்கேறின. இவ்வாறு ஒரு மத அடையாளத்தை முன்னிறுத்தி மற்ற சிறுபான்மை மத அடையாளங்களை ஒடுக்கும் செயலானதைச் செய்தவர்கள் யாரென்று பார்த்தால், அவர்கள் தீவிர வலதுசாரிகளாக இருக்கிறார்கள். இதன் மூலம், தேசியவாதம் என்பது தீவிர வலதுசாரிகள் அரசியல் செய்வதற்குப் பயன்படுத்தும் ஒரு கருவி என்று புரிந்து கொள்ள முடிகிறது. 

தேசியவாதம் என்பது பெரும்பான்மை மக்களின் ஏதாவது ஓர் அடையாளத்தை முன்னிறுத்தி சிறுபான்மை மக்களைத் தனிமைப்படுத்தி ஒடுக்கும் செயலாக இருக்கிறது. எனவே, ஒடுக்குமுறைக்கு வழிவகுக்கும் தேசியவாதம் என்பது சமத்துவத்தை முன்னிறுத்தும் இடதுசாரி கொள்கைக்கு முற்றிலும் எதிரானது. மதவழி தேசியவாதம் மட்டுமன்றி இனம், நிறம் போன்ற எந்த அடையாளம் வைத்து தேசியவாதம் பேசினாலும் அது வலதுசாரி தன்மையாகத்தான் கருதப்படுகிறது. ஆனால், ஒரு வகையான அடையாளத்தை முன்னிறுத்தி பேசப்படும் தேசியவாதம் மட்டும் ஒரு சாராரால் இடதுசாரி தன்மையாகவும் மற்றொரு சாராரால் வலதுசாரி தன்மையாகவும் பார்க்கப்படுகிறது. அந்த அடையாளம், மொழி. 

இந்தியாவில் பல கட்சிகள் உள்ளன. அத்தனை கட்சிகளுக்கும் கொள்கைகள் உள்ளன. அந்தக் கொள்கைகள் அனைத்தையும் நம்மால் இடது அல்லது வலது என்று வகைப்படுத்த முடியும். ஆனால், தமிழ்த்தேசியம் என்கிற கொள்கையை இடது அல்லது வலது என்று வகைப்படுத்துவதில் சிக்கல்கள் இருக்கின்றன என்று சிலர் கருதுகிறார்கள். எனவே, தமிழ்த்தேசியம் இருவகைப்படும்; வலதுசாரி தமிழ்த்தேசியம் மற்றும் இடதுசாரி தமிழ்த்தேசியம். தமிழ் தேசியம் என்கிற சொல்லே அது தமிழ் மொழியை முன்னிறுத்திப் பேசப்படும் ஒரு தேசியவாதம் என்று தெளிவாகத் தெரிகிறது. 

தமிழ் மொழி பெரும்பான்மையாகப் பேசும் நிலத்தில் தமிழர்களுக்கு முன் உரிமை வழங்கப்பட வேண்டும் என்று பேசும் அதேவேளையில், இந்தக் குறிப்பிட்ட தமிழ் நிலப்பரப்பில் வாழும் மொழி சிறுபான்மையினர்களை வந்தேறி என்று அவர்களை அகதி ஆக்கும் முயற்சியும் நடக்கிறது. இதற்கிடையே, யார் தமிழர் என்று கண்டறிய ஒருவரின் தாய்மொழி தமிழ்தான் என்று உறுதிப்படுத்தினால் போதுமானதாக இருக்கும் பட்சத்தில், கூடுதலாகச் சாதியையும் மதத்தையும் கேட்கிறார்கள். தர்கரீதியில் அணுகும் போது, தமிழர் என்கிற அடையாளம் ஒருவரின் தாய்மொழி அடிப்படையில்தான் சொல்லப்பட வேண்டும். அதாவது ஒருவர் எந்த மதத்தில் எந்தச் சாதியில் பிறந்து இருந்தாலும் அவரின் தாய்மொழி தமிழாக இருந்தால் அவர் தமிழர் என்ற அடையாளத்திற்குள் சேர்க்கப்பட வேண்டும். ஆனால், சில குறிப்பிட்ட மதத்தில் அல்லது சாதியில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு பிறந்தவர்களாக இருந்தாலும்கூட அந்தக் குறிப்பிட்டவர்களை மட்டும் தமிழர் என்று ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். 

மேற்கூறிய கருத்துகளின்படி, தமிழ்த்தேசியம் என்கிற அரசியல் கொள்கை தமிழ் நிலப்பரப்பில் மொழி சிறுபான்மையினர்களையும் சில குறிப்பிட்ட சாதி மற்றும் மதத்தில் பிறந்தவர்களையும் தனிமைப்படுத்தி ஒடுக்குகிறது. இவ்வாறு பிரிவினை செய்து ஒடுக்குமுறைக்கு வழிவகுக்கும் தமிழ்த்தேசியம் என்கிற கொள்கையானது வலதுசாரிதான் என்று வகைப்படுத்த முடிகிறது. இப்போது இடதுசாரி தமிழ்த் தேசியம் என்று பேசுபவர்கள் என்ன பின்னணியில் இருந்து அந்தக் கொள்கையை அணுகுகிறார்கள் என்று பார்ப்போம்.

தமிழர்கள் தங்கள் சொந்த மண்ணை விட்டுப் படிப்பு, வேலை, தொழில், போர் போன்ற பல காரணங்களுக்காகப் பிற நாடுகளுக்குக் குடிபெயர்ந்து உலகம் முழுதும் சில நூற்றாண்டுகாலமாகப் பரவி வாழ்ந்து வருகிறார்கள். புலம்பெயர்ந்து வாழும் அனைத்து மக்களும் தங்கள் சொந்த நாட்டைத் தவிர மற்ற நாட்டில் வந்தேறிகளாகத்தான் கருதப்படுவார்கள். வந்தேறி என்கிற அடையாளத்தைச் சுமப்பவர்கள் ஏதேனும் ஒரு வகையிலாவது ஒடுக்குமுறையைச் சந்திக்க நேரலாம். இவ்வாறு புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களும் பல நாடுகளில் பல வகை ஒடுக்குமுறைகளைப் பல தலைமுறைகளாகச் சந்தித்து வருகிறார்கள். காலப்போக்கில் தங்கள் பண்பாட்டு அடையாளங்களை இழந்து அடையாளம் இல்லாதவர்களாக்கப் படுவோமோ என்கிற அபாயத்தை உணர்ந்து ஒருவகையான பாதுகாப்பின்மையில் தவிக்கிறார்கள்.  எனவே, அவர்கள் புலம்பெயர்ந்த நாட்டில் இருந்து அவர்கள் விரட்டி அடிக்கப்படும் போது அவர்கள் நாடு திரும்ப வேண்டும் என்றால் தங்களுக்கு என்று ஒரு நாடு இருக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள்.

இந்தியா என்கிற நாட்டில் ஏற்கெனவே தமிழ் நாடு என்று ஒரு மாநிலம் தமிழர்களுக்கான நிலமாக இருக்கும் போது ஏன் தமிழர்களுக்கு என்று ஒரு தனி நாடு இருக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள்? காரணம், இந்திய ஒன்றியத்தின் அதிகாரம் பல முறை தமிழ் மொழியின் மீது ஆதிக்கம் செலுத்த முயற்சித்து, தமிழ் நாட்டில், தங்கள் சொந்த மண்ணில் உள்ள மக்களையே தங்கள் மொழி அடையாளம் குறித்துப் பாதுகாப்பின்மையில் இருக்க வைக்கிறது. எனவே, தங்கள் மொழியும் மக்களும் ஒடுக்கப்படாமல் சமமாக வாழ ஒரு நாடு வேண்டும் என்று சிலர் கருதுகிறார்கள். அதாவது ஒடுக்குமுறையில் இருந்து தப்பிக்கத் தமிழர்களுக்கு என்று ஒரு தனி நாட்டை அடைய உதவும் அரசியல் கொள்கையாக இடதுசாரி தமிழ்த் தேசியம் உதவும் என்று நம்பப்படுகிறது.   

மேலோட்டமாகப் பார்க்கும் போது இடதுசாரி தமிழ்த் தேசியம் சரிதானே என்று தோன்றும். ஆம். சரிதான். தங்கள் மொழிக்கும் மக்களுக்கும் நிகழும் ஒடுக்குமுறைகளைத் தகர்த்தெரிய தங்களுக்கென ஒரு மொழிவழி தேசியத்தை உருவாகும் வரை அந்தக் கொள்கை சரிதான். ஆனால், மொழி வழி தேசியவாதம் தீவிரம் அடைந்தால் மற்ற மொழி சிறுபான்மையினர்களைத் தமிழர்கள் ஒடுக்க நேரிடும். அதாவது, தமிழர்கள் மற்ற நாடுகளில் வந்தேறிகளாகப் பார்க்கப்பட்டு ஒடுக்கப்படுவது போல் தமிழர் தேசியத்தில் தமிழர்கள் மற்ற மொழி பேசுவோரை வந்தேறிகளாகப் பார்த்து ஒடுக்குவர். மொழிவழி தேசியம் மட்டுமன்றி வேறு எந்த அடையாளம் மூலம் தேசியவாதம் பேசினாலும் அது ஏதோ ஒரு வகையில் யாரையோ ஒடுக்கவே செய்கிறது. எனவே, எல்லாவகை தேசியவாதமும் வலதுசாரி தன்மை உடையதுதான். 

எதிர்பாராதவிதமாக, புலம்பெயர்ந்தவர்களுக்கு வரும் பாதுகாப்பின்மை உணர்வுக்குத் தீர்வே கிடையாது. உதாரணத்திற்கு, புலம் பெயந்த ஒருவரின் அடையாளங்களைப் பார்ப்போம். ஒருவர் தமிழ் நாட்டில் பிறக்கிறார்; அவரது தேசிய/பண்பாட்டு அடையாளம் தமிழ்; குடியுரிமை அடையாளம் இந்தியன். அதே நபர் கனடாவிற்கு வந்து குடியுரிமை பெற்ற பின் அவரது தேசிய/பண்பாட்டு அடையாளம் இன்னமும் தமிழ்தான். ஆனால், அவரது குடியுரிமை கனடியன். எனவே, அடையாளம் எதுவாகவும் மாறலாம்; அதன் மூலம் ஒடுக்குமுறைகள் நிகழலாம், நிகழாமலும் போகலாம். ஆனால் ஒடுக்குமுறை நிகழும்பட்சத்தில், சமூகநீதியின் வழியில் தீர்வு காண வேண்டும். தேசியவாதம் மூலம் காணும் தீர்வு தற்காலிகமானது. ஒடுக்குமுறைக்குத் தீர்வு மற்றோர் ஒடுக்குமுறை ஆகாது. மொத்தத்தில், தேசியவாதம் வலதே.  

படைப்பாளர்:

தீபிகா தீனதயாளன் மேகலா

தமிழகத்தைச் சேர்ந்த தீபிகா, தற்போது கனடாவின் மக் ஈவன் பல்கலைக்கழகத்தில் மானுடவியல் பட்டப்படிப்பு பயின்றுவருகிறார். தான் கற்றுவரும் மானுடவியல் கோட்பாடுகளை தமிழ் நிலப்பரப்புக்கும், அமெரிக்கக் கண்டத்துக்கும் பொருத்திப் பார்த்து கட்டுரைகளை எழுதத் தொடங்கியுள்ளார். வரலாறு மற்றும் தமிழ் மேல் தீவிர பற்று கொண்டவர். இவரது யூடியூப் செய்தி சேனலின் சுட்டி: https://www.youtube.com/channel/UCyNXWPShwgZG4IsyjP7BnAQ