தமிழ் தேசியம் என்பதென்ன? தமிழின் பெருமைகளை ஊக்கப்படுத்துவதோடு, தமிழனின் அறம்சார் வாழ்வியல் முறைகளை மேம்படுத்துவதல்லவா தமிழ்த்தேசியம்?

திராவிடம் என்பதென்ன? தமிழும் தமிழிலிருந்து பிறந்த பிற மொழிகளும் திராவிட மொழிகள், அம்மொழிகளை பேசும் மக்கள் திராவிட மக்கள்.

எனில் திராவிடம் தமிழுக்கு யார்? தமிழ் திராவிடத்துக்கு யார்? இரண்டும் ஒன்றே அன்றோ?!

ஆனால் நவீன கால தமிழ்த்தேசியத்தின் வாதம், திராவிட எதிர்ப்பாக இருப்பது, வேடிக்கையாக இருக்கிறது. திராவிடத்திலிருந்து தமிழை பிரித்தெடுத்து மீட்போம் என்று குரலுயரும் போலி தமிழ் தேசியவாதிகளின் வாதம் நகைப்பை ஏற்படுத்துகிறது.

‘திராவிடம்’ என்ற சொல்லே ‘தமிழ்’ என்ற சொல்லின் திரிபுசொல் எனப்படும்போது, தமிழும் திராவிடமும் ஒன்றுதான் எனும்போது, இவர்கள் திராவிடத்திலிருந்து தமிழை பிரிப்பதென்பது எப்படி சாத்தியம்?

தாயிடமிருந்து தாய்மையைப் பிரித்தெடுக்க முடியுமா?

திரிபுகளையும் கட்டுக்கதைகளையும் புகுத்தி, சாதியக்கட்டமைப்பை உயிருடன் காப்பாற்றுவதற்காக, போராடும் கூட்டத்தின் பிரச்சாரத்தினை உடைக்க, சில சான்றுகளை இக்கட்டுரையில் தர நினைக்கிறேன்.

விந்திய மலைக்கு தெற்கே, ஆதியில் பேசப்பட்ட மொழி தமிழ் மட்டுமேயாகும். அந்த பழந்தமிழுடன் வேற்று மொழிகள் எதுவும் கலவாத வரையில், பழந்தமிழ் மொழி பேசிய மக்கள் ‘தமிழ் மக்கள்’ என்றே அழைக்கப்பட்டனர். வரலாற்றின் பிற்காலத்தில், பாலி, பிராகிருதம் போன்ற வேற்று மொழி பேசும் மக்களும் விந்திய மலைக்கு தெற்குப் பகுதிகளில் வந்து குடியேற தொடங்கினர். அவ்வாறு குடியேறிய பாலி மற்றும் பிராகிருத மொழி பேசிய மக்கள், தமிழை தமிழ் என்று உச்சரிக்க இயலாமல், ‘த்ரமிள்’ என்றும் ‘த்ரவிடி’ என்றும் உச்சரிக்கத் தொடங்கினர். காலப்போக்கில் தென்னிந்திய வாழ் மக்களை ‘திராவிட மக்கள்’ என்று அழைக்கத் தொடங்கியதோடு, வரலாற்றின் பக்கங்களில் நமது தமிழ் மொழியின் பெயரை ‘த்ராவிடி’, ‘த்ரமிள்’, ‘தமிழி’ என்று பல பெயர்களால் பதிவு செய்தனர்.

இவ்வாறாக, வரலாறு நெடுக, விந்திய மலைக்கு தெற்கே வாழ்ந்த மக்கள் ‘திராவிடர்கள்’ என்று அழைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை மறுக்கவியலாது.

தமிழ் = த்ரமிள் = த்ரவிடி= த்ராவிட

இதிலிருந்து திராவிடமும், தமிழும் ஒன்றே என்பது தெளிவு.

இனி என் கூற்றுக்கான ஆதாரங்களை ஆராய்வோம்.

சமஸ்கிருதத்தை தாய்மொழியாகக் கொண்ட ஆரியக்கலாசாரத்தை பின்பற்றும் பார்ப்பனர்கள், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலான தென்னிந்திய திராவிட  மொழிகளை ‘நீச பாஷை’ என்றும், ‘பிசாச பாஷை’ என்றும், ‘தீட்டு பாஷை’ என்றும், பல நூற்றாண்டுகளாகக் கேவலப்படுத்தி வந்தனர்.

சான்று: மனுநீதி சாஸ்திரம், தனது பத்தாம் அத்தியாயம் 33வது செய்யுளில் ‘த்ராவிட’ இனத்தவர்களோடு இன்னும் சில இனத்தவர்களை ‘சூத்திரர்கள்’ என்று குறிப்பிடுகின்றது.

‘பௌண்ட்ரகாஷ் சௌட்ர த்ராவிடா கம்போஜாயவநா ஷகா பாரதா பஹ்ளவாஷ் சீநா க்ராதா தரதா கஷா’ என்பதே அப்பாடல்.

பொருள்: பௌண்ட்கர்கள், ஒட்ரர்கள், திராவிடர்கள், கம்போஜர்கள், யவனர்கள், சகர்கள், பாரதர்கள், ப்ளஹ்லவர்கள், சீனர்கள், க்ராதர்கள், தரதர்கள், கசர்கள் முதானவர்களும் இவ்வாறு சூத்திரர்களானார்கள். எவ்வாறு சூத்திரர்களானார்கள், என்ற விளக்கம் முந்தைய பாடலில் (32 வது பாடலில்) தரப்பட்டுள்ளது.

கால்டுவெல் ஒப்பிலக்கணம், wikipedia

இந்நிலையில் 1856ம் ஆண்டு வெளிவந்த ‘கால்டுவெல்லின் ஒப்பிலக்கணம்’ திராவிட மொழிகளின் பெருமையை எடுத்துக் கூறுவதாக விளங்கியது. திராவிட மொழிகளிலும், தமிழ் தனித்தன்மையும், தனிச்சிறப்பும் வாய்ந்தது என்ற உண்மையை ஆணித்தரமாக, தக்க ஆதாரங்களுடன் பறைசாற்றியது ‘கால்டுவெல்லின் ஒப்பிலக்கணம்.’ எனவேதான் சமஸ்கிருதக் காவலர்கள் கால்டுவெல்லின் ஒப்பிலக்கணத்தை வெறுத்தார்கள்.

இந்நாள் வரையில், கால்டுவெல் ஆங்கிலேய கைக்கூலி என்றும், அவர் ஒரு  கிறிஸ்துவ மதப்பிரச்சாரகர் என்றும் பிரச்சாரங்களை செய்து, ‘கால்டுவெல்லின் ஒப்பிலக்கணம்’ என்ற தமிழின் பெருமை பேசும் புத்தகத்தை மக்களிடமிருந்து பிரித்து வைக்க முயன்று கொண்டிருக்கிறார்கள் இந்துத்துவவாதிகள்.

நிலைமை இவ்வாறிருக்க, இந்திய நிலப்பரப்பில் மிகவும் தொன்மையான மொழி, தமிழுக்கு முன்னோடியான தமிழியா? சமஸ்கிருதத்துக்கு முன்னோடியான பிராகிருதமா? என்ற கேள்வியை நோக்கி தொல்லியல் ஆராய்ச்சிகள் பலவும் பயணித்துக் கொண்டிருக்கின்றன. அரசியல் களமும் அவ்வாராய்ச்சிகளின் முடிவை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளது.

தொல்லியல் அகழாய்வுகளில், கல்வெட்டுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தமிழ் மற்றும் பிராகிருத மொழி எழுத்துக்களின் வரிவடிவம் ஒரே மாதிரியானவை! (அதாவது ஆங்கிலத்தில் ‘saappaadu’ என்று எழுதினால் உணவை குறிக்கும். ‘Kaanaa’ என்று எழுதினாலும் உணவைத்தான் குறிக்கும். ஆனால் saappaadu என்பது தமிழ். Kaanaa என்பது ஹிந்தி) அது போல் ஒரே வரிவடிவமாகிய பிராமியில், பிராகிருதமும், தமிழும் எழுதப்பட்டன.

ஆகையால் வாசித்து அர்த்தம் உணரும்போது தான், அம்மொழி(பிராமி)  தமிழியா அல்லது பிராகிருதமா என்பதைக் கண்டறிய முடியும்.

எழுத்துகளின் பட்டியலை குறிப்பிடும் மிகத்தொன்மையான நூல், பொ.ஆ.மு. ஒன்றாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட ‘சமவயங்க சுத்த’ என்னும் சமண நூல் ஆகும். இந்நூல் தரும் பட்டியலில், ‘பிராமி’ என்ற (வரிவடிவம்) எழுத்தின் பெயர், பட்டியலின் முதலில் காணப்படுவதாலும், தொல்லியல் ஆய்வுகளின் தொடக்க காலத்தில் கிடைத்த கல்வெட்டுகளிலிருந்த பிராமி எழுத்துக்கள், பிராகிருத மொழியை உணர்த்துவதாக இருந்ததாலும், அக்கல்வெட்டுகளில் காணப்பட்ட எழுத்து வரிவடிவத்துக்கு, ‘பிராமி’ என்று தொல்லியலாளர்கள் பெயரிட்டனர்.

அசோகரின் லௌரியா அரராஜ் கல்வெட்டு, பீகார், wikipedia

இந்திய தொல்லியல் ஆராய்ச்சியின் தொடக்க காலத்தில் கிடைத்த அசோகர் கல்வெட்டு முதலான கல்வெட்டுகளில் கிடைத்த வரிவடிவம் பாலி மற்றும் பிராகிருத மொழிகளைப் படித்து உணர்த்துவதாக இருந்தது. அசோகர் கல்வெட்டுகள் பொ.ஆ.மு 3 ம் நூற்றாண்டை சேர்ந்தவை ஆகும். தென்னிந்திய மொழிகளை ‘நீச பாஷை, பிசாச பாஷை, தீட்டு பாஷை’ என்றெல்லாம் பேசியவர்களுக்கு, பிராகிருத பிராமி கல்வெட்டுகளின் கண்டுபிடிப்பு மிகுந்த உற்சாகத்தை அளித்தது.

இந்நிலையில் 1882 ம் ஆண்டு மதுரை மாங்குளம் என்ற ஊரில் கிடைத்த பிராமி கல்வெட்டுகள், பிராகிருத மொழியை தாங்கி நிற்காமல் தமிழ் மொழியை தாங்கி நின்றது என்பதை, 1924 ம் ஆண்டு கே.வி. சுப்பிரமணியர் நிறுவினார். எனவே தமிழைத் தாங்கி நிற்கும் பிராமி மொழியை தமிழி அல்லது ‘தமிழ் பிராமி’ என்று ஆராய்ச்சியாளர்கள் அழைத்தனர். நான் தமிழியை ‘தமிழி’ என்றே அழைக்கிறேன். மாங்குளத்தில் கிடைத்த தமிழி கல்வெட்டுகள், பொ.ஆ.மு. 3 ம் நூற்றாண்டுக்கு முந்தையவை எனக் கண்டறிந்து ஐராவதம் மகாதேவன் எழுதியுள்ளார்.

மாங்குளம் கல்வெட்டில் தமிழி, Wikipedia

இது தொல்லியல் ஆராய்ச்சியிலும் இந்திய அரசியலிலும் வரலாற்றிலும் பெரும் மாற்றத்தை உருவாக்கியது. இதனைத்தொடர்ந்து நடத்தப்பட்ட பலகட்ட தொல்லியல் மற்றும் கல்வெட்டியல் ஆய்வுகளின் முடிவில், தமிழ்நாட்டில் கிடைத்த நூற்றுக்கும் மேற்பட்ட கல்வெட்டுகளும் புலிமான்கோம்பை, தாதப்பட்டியில் கிடைத்த நடுகற்களும், கொடுமணல், பொருந்தல் உள்பட பல பகுதிகளில் அகழப்பட்ட தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடுகளும் பொ.ஆ.மு. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

‘சமவயங்க சுத்த’ நூல் பதினெட்டு மொழிகளின் பெயர்களைப் பட்டியலிடுகின்றது. இந்நூலில் காணக்கிடைக்கின்ற மொழிப் பட்டியலில்தான் முதன் முதலாக ‘பிராமி’ என்னும் பெயர் இடம்பெறுகின்றது. அதே மொழிப்பட்டியலில் ‘தமிழி’ என்ற பெயரும் இருப்பது குறிப்பிடத்தக்கது. பிராகிருதத்தை தாங்கி நிற்கும்  ‘அசோகர்-பிராமி’ கல்வெட்டுகள் பொ.ஆ.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.

இதுவரை செய்யப்பட்ட தொல்லியல் ஆய்வுகளில், தமிழின் தொன்மை பொ.ஆ.மு. ஆறாம் நூற்றாண்டுக்குத் தள்ளப்பட்டது, பிராகிருத மொழியின் காலம் பொ.ஆ.மு. மூன்றாம் நூற்றாண்டுக்குத் தள்ளப்பட்டது. அதாவது தமிழி மொழி, பிராகிருதம் தோன்றுவதற்கு முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய மூத்த மொழி என்பது சமீபத்திய ஆய்வுகளில் புலனாகியுள்ளது.

அத்துடன், இதுவரை நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவில், தென்னிந்திய நிலப்பரப்பில் ஆதியில் பேசப்பட்ட மொழி, தமிழுக்கு முன்னோடியான தமிழி என்பது தெளிவு. எனவே, பொ.ஆ.மு. மூன்றாம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட காலத்தில்தான் பிராகிருதம் மற்றும் பாலி மொழி பேசும் மக்கள் தென்னிந்தியாவில் குடியேறி, நம் மக்களுடன் கலந்திருக்கக்கூடும் என்பதும் தெளிவு.

எதிர்கால ஆய்வுகளில் மொழிகளின் தொன்மத்தில் மாறுபாடு இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் தமிழ் பேசும் மக்களும், பாலி, பிராகிருதம் போன்ற மொழி பேசும் மக்களும் ஒன்றாக தென்னிந்திய நிலப்பரப்பில் கூடி வாழ்ந்தனர் என்ற உண்மை தெளிவு. இவ்வாறான கூடி வாழும் சமூகத்தில், பாலி மற்றும் பிராகிருதம் பேசும் மக்கள், தமிழ் என்ற சொல்லை உச்சரிக்க இயலாமல், தமிழை ‘த்ரமிள்’ என்றும் ‘த்ரவிட’ என்றும் உச்சரிக்கத் தொடங்கினர் என்பதும் தெளிவு.

சுமார் பொ.ஆ.பி. 1 அல்லது பொ.ஆ.பி. 2ம் நூற்றாண்டினதாகக் கருதப்படும் ‘லலிதவிஸ்தர’ என்ற பௌத்த நூல், 64 வகை எழுத்துகளைப் பட்டியலிடுகின்றது. அப்பட்டியலில் ‘திராவிட லிபி’ என்ற எழுத்து பன்னிரெண்டாவது இடத்தில் காணக்கிடைக்கின்றது. இவற்றுள் ‘தமிழி’ குறிப்பிடப்படவில்லை. தமிழியின் மாற்றுவடிவமாகவே ‘திராவிடி’ என்ற சொல் பொ.ஆ.மு.முதலாம் நூற்றாண்டிலேயே இடம்பெற்றுள்ளது; அன்றே தமிழியும் திராவிடியும் ஒன்றே என்ற எண்ணம் இங்கு நிலவியுள்ளது.

பொ.ஆ.பி. 470ம் ஆண்டில் வச்சிர நந்தி எனும் சமண முனிவர், மதுரையில் ‘த்ரமிள சங்கம்’ என்ற ஒன்றை, சமண மதப் பரப்புரைக்காக உருவாக்கியதாக தேவசேனர் என்னும் சமண ஆசிரியர் தமது தர்சனசாரம் என்னும் நூலில் எழுதியிருக்கிறார். ‘த்ரமிள சங்கம்’ என்பது வேறொன்றும் அல்ல! எண்ணிக்கையில் அதிக தமிழர்களை கொண்ட, சமண மத சங்கம் ‘த்ரமிள சங்கம்’.

சமண மதத்துறவிகளின் சங்கம் தொடக்கத்தில் ஒரே சங்கமாகத்தான் இருந்தது. காலம் செல்லச்செல்ல சங்க உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டதால், சங்கத்தை நான்கு பிரிவுகளாகப் பிரித்தனர். அவை முறையே நந்தி கணம், சேன கணம், சிம்ம கணம், தேவ கணம் என்பவையாகும். இந்நான்கில் ‘நந்தி கணம்’ புகழ் பெற்ற சமண மத சங்கமாகத் திகழ்ந்தது. நாளடைவில் நந்தி கணத்தில் உறுப்பினர்கள் எண்ணிக்கையில் பெருகியதால் பொ.ஆ.பி. 470ம் ஆண்டு வச்சிரநந்தி, நந்தி கணத்தை இரண்டாகப் பிரித்து, முதல் பிரிவுக்கு ‘நந்தி கணம்’ என்ற பெயரைத் தொடர்ந்துகொண்டு, இரண்டாவது பிரிவுக்கு ‘த்ரமிள சங்கம்’ எனப் பெயரிட்டார். தமிழர்களை அதிகமாகக் கொண்ட சமண சங்கம் ‘த்ரமிள சங்கம்’ என்பதாகும். அதுவே பின்னாளில் ‘திராவிட சங்கம்’ என்று அழைக்கப்பட்டது என்பது வரலாறு வாசித்து அறிந்தவர்களுக்குத் தெரியும்.

‘ஸ்ரீமத் த்ரமிள ஸங்கேஸ்மிம் நந்தி ஸங்கேஸதி அருங்களா அன்வயோ பாதி நிஸ்ஸேஷ ஸாஸ்திர வாராஸி பாரகை ஹி’ என மைசூர் நாட்டு சாசனம் ஒன்று கூறுகிறது. ‘நந்தி சங்கத்தோடு கூடிய த்ரமிள சங்கத்து அங்கன்வய பிரிவு’ என்பது மேற்கூறிய சாசன சொற்றொடரின் பொருளாகும்.

‘கடைச்சங்க காலத்தின் இறுதியில், பொ.ஆ.பி. 2ம் நூற்றாண்டில் வாழ்ந்த யவன நாட்டு தாலமி, ‘டாமிரிகெ’வின் எல்லை துளுநாட்டில் இருந்து துவங்குவதாகக் குறிப்பிடுகிறார்’ என்பதைத் ‘துளு நாட்டு வரலாறு’ புத்தகத்தில் சுட்டிக்காட்டுகிறார் மயிலை சீனி வேங்கடசாமி. ‘டாமிரிகெ’ என்றால் ‘திராவிடகம்’ என்று பொருள். அதாவது தமிழர்கள் வாழ்கின்ற தமிழகத்தை ‘தமிழகம்’ என்று உச்சரிக்க இயலாத தாலமி ‘டாமிரிகெ’ என்று உச்சரிக்கிறார். ‘டாமிரிகெ’ நாளடைவில் ‘திராவிடகம்’ என்றானது.

எட்கர் தர்ஸ்டனின் நூல், wikipedia

எட்கர் தர்ஸ்டன் அவர்கள் எழுதிய ஏழு தொகுதிகளைக் கொண்ட ‘தென்னிந்திய குலங்களும் குடிகளும்’ நூலும், தென்னிந்திய மக்களைக் குறிப்பிட ‘திராவிடர்’ என்ற  சொல்லையே பயன்படுத்துவதைக் காணமுடிகிறது. ஆக, தமிழைக் குறிக்கும் ‘த்ரமிள’ ‘த்ராவிடி’ என்ற சொல்லின் மருவுச் சொல்லே ‘திராவிடம்’ என்பதாகும். எனில் தமிழ்தான் திராவிடம் என்பது உறுதியாகும்.

வைதீக ஆரியரும், சமணரும், பௌத்தரும் தென்னிந்தியாவில் புகுந்த பிறகு,  பிறமொழி கலப்பாலும், பரிணாம மாற்றங்களாலும், தமிழிலிருந்து புதிதாகப் பிறந்த மொழிகள் தான், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, குடகு போன்ற திருந்திய மொழிகளும், கோடா, கோத்தா, கொரகா, இருளா, தூதம், கோதம், கோண்டு, கந்தம் அல்லது கூ, இராஜ்மஹால், ஓரொவன் போன்ற திருந்தாத மொழிகளும் ஆகும். மேற்கூறிய வரலாற்று பரிணாம வளர்ச்சியின் காரணமாக, இம்மொழிகளுக்கு திராவிட மொழிகள் என்ற பெயரும் இம்மொழிகளைப் பேசும் தென்னிந்திய மக்களுக்கு திராவிட மக்கள் என்ற பெயரும் நிலைக்கலாயிற்று.

தமிழும் திராவிடமும் ஒன்றே!

தமிழில்லா திராவிடம் தாயில்லா அனாதைகளைக் கொண்ட குழுமம்! திராவிடமில்லா தமிழ் தன் பெருமைகளையிழந்த மலட்டுத்தாய்!

ஒரு குடும்பத்தின் தலைவன் தன் குடும்பத்தை எவ்வாறு வெறுப்பான்? தமிழ் என்பது திராவிடக்குடும்பத்தின் தலைவனாகும். எனில் தமிழ் எப்படி திராவிடத்தை வெறுக்க முடியும்? உண்மையான தமிழ்த்தேசியவாதி, தமிழுக்கும் திராவிடத்துக்குமான உண்மை வரலாற்றை, உண்மைத் தொடர்பை அறிந்திருப்பான். எனவே சாதிவெறியைத் தூண்டும் நோக்கத்தோடு ‘தமிழும் திராவிடமும் வேறு வேறு’ என்று பரப்புரை செய்யும் அரைகுறை போலிகளை, நான் போலி தமிழ்த்தேசியவாதி என்றே குறிப்பிடுவேன்.

தந்தை பெரியார், pinterest

“நீ சமூகத்துக்கு எதாவது நல்ல காரியம் செய்ய வேண்டும் என்று நினைத்தால், உனக்கு மத பக்தி இருக்கக்கூடாது, சாதி பக்தி இருக்கக்கூடாது, மொழி பக்தி இருக்கக்கூடாது, இன பக்தி இருக்கக்கூடாது, கணிசத்துக்கு தேச பக்தி கூட இருக்கக்கூடாது” என்று கூறிய பெரியாரின் வழி, மனிதத்தை மட்டுமே எதிர்நோக்கும் சமுதாயம் உருவாகட்டும்!

எந்த திராவிடம் என்ற பெயரால் இழிவு செய்தார்களோ, எந்த திராவிடம் என்ற பெயரால் ஒடுக்கி வைத்தார்களோ, அந்த திராவிடம் என்ற பெயராலேயே தலை நிமிர்வோம்!

மீண்டும் அடுத்த கட்டுரையுடன் வருகிறேன்…

குறிப்பெடுத்த புத்தகங்கள்:

‘திராவிட மக்கள் வரலாறு’ , ஆங்கிலத்தில் மட்டக்களப்பு இ.எல். தம்பி முத்து, தமிழில் ஜி.சுப்பிரமணியம், 1946

‘கல்வெட்டியல்‌ தொல்லெழுத்தியலும்‌, கல்வெட்டியலும்‌’, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, 1972

‘சங்ககால தமிழக வரலாற்றில் சில செய்திகள்’ , தொல்காப்பியர் காலம், பாண்டியரின் தமிழ்ச் சங்கமும், வச்சிரநந்தியின் திரமிள சங்கமும், மயிலை சீனிவேங்கடசாமி, 1970

‘கால்டுவெல் ஒப்பிலக்கணம், கிரீயர்சன் மொழியாராய்ச்சி குறிப்புகளுடன்’ , கால்டுவெல், 1941

‘தமிழ்-பிராமி கல்வெட்டுக்கள்’, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை

‘ஆவணம்’ இதழ், தொல்லியல் துறை, தஞ்சாவூர், 2018

‘சிந்து முதல் காவிரி வரை’, துரை இளமுருகு, 2016

‘தமிழக வரலாறு, மக்களும் பண்பாடும்’, கே.கே.பிள்ளை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 2002

‘மனுநீதி என்னும் மனு தர்ம சாஸ்திரம்’ உரையாசிரியர்: பிரம்ம பீடம், இளைய பீடாதிபதி, அன்னை ஸ்ரீ ஆனந்த நாச்சியாரம்மா, ஸ்ரீ இந்து பப்ளிகேஷன் வெளியீடு, 2011

படைப்பு:

சக்தி மீனா

பட்டதாரி, தொழில் முனைவர். பெரியாரின் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டவர். பொழுதுபோக்காக ஆரம்பித்த எழுத்து, பெரியாரின் வழிகாட்டுதலில், பொதுவுடைமை சித்தாந்தம் நோக்கி நகர்ந்தது. எதுவுமே செய்யவில்லையே என்ற தன் மனக்கவலையைக் களைய, படித்துக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கிறார்.