மரபியலையும் பரிணாம வளர்ச்சியையும் பற்றி இவ்வளவு பேசிவிட்டு டைனோசர்களைப் பற்றிப் பேசாமல் இருந்தால் எப்படி? சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் வியக்கும் ஒரு பிரம்மாண்ட உயிரியான டைனோசர்கள் இப்போது மனிதர்கள் வாழும் காலத்தில் நாய், பூனையைப் போல் சக உயிரியாக வாழ்ந்தால் எப்படி இருக்கும்! கேட்பதற்கே சுவாரசியமாக இருக்கும் இந்த கற்பனையை அடிப்படையாக கொண்டு உருவான படம்தான் ஜுராசிக் பார்க். இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, எப்படி இப்படி ஒரு கற்பனை தோன்றியது, அதுவும் தோன்றிய கற்பனையை எப்படி இப்படித் தத்ரூபமாகப் படம்பிடிக்க முடிந்தது என்பதைப் பற்றிப் பல முறை யோசித்துப் பார்த்திருக்கிறேன். ஜுராசிக் பார்க் வெறும் ஃபேன்டசி படம் மட்டுமல்ல அதையும் தாண்டி அந்தப் படம் மனிதகுலத்திற்குப் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

டைனோசரின் தாயனையில் விடுபட்ட இடங்களை வேறோர் உயிரியின் தாயனையைக் கொண்டு நிரப்பி மீண்டும் இந்த உலகிற்கு டைனோசர்களைக் கொண்டு வரும் அறிவியல் ஆராய்ச்சி குழுவிற்கும் இயற்கைக்கும் நடுவே நடக்கும் போராட்டம்தான் படம். அழிந்துப் போன உயிரினத்தை மீண்டும் உயிர்ப்பிக்க வைப்பதால் ஏற்படும் விளைவுகளை அழகாக காட்சிப்படுத்திய ஸ்டீவன் ஸ்பில்பர்க்கை பாராட்டாமல் இருக்க முடியாது. ஒருவேளை அந்தப் படத்தில் நடந்த நிகழ்வுகள் நிஜமாகவே நடந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? ஏன் சில உயிரினங்கள் சில காலங்களுக்குப் பிறகு தானாகவே அழிந்துவிடுகின்றன. எப்படி டைனோசரின் தாயனை, வேறோர் உயிரியின் தாயனையை ஏற்றுக்கொண்டது போன்ற பல கேள்விகளுக்குப் பதிலாக இருப்பது பரிணாம வளர்ச்சிதான்.

இந்த உலகின் அத்தனை உயிர்களும் ஏதோ ஒரு சிறு புள்ளியில் இருந்துதான் தொடங்கியது. இந்த உயிர்கள் அனைத்தும் ஒன்றோடு இன்னொன்று தொடர்புடையதாகவும், ஒன்றை இன்னொன்று சார்ந்து இருப்பதும்தான் இயற்கை. பூச்சிகளைத் தவளை உண்பதும், தவளையைப் பாம்பு புசிப்பதும், பாம்பைக் கழுகு சுவைப்பதும்தான் உணவுச் சங்கிலி. இதில் ஏதேனும் ஒன்று நடக்கவில்லை என்றாலும்கூட இயற்கையின் சமநிலை குலைந்து இந்த உலகம் முழுவதும் ஒரு குறிப்பிட்ட உயிரினத்தால் நிரம்பி வழிந்திருக்கும். தற்போது இருக்கும் சூழலில் மனிதன்தான் மற்ற உயிர்களின் மேல் ஆதிக்கம் கொண்டவனாக இருக்கிறான். அப்படி இருக்கையில் ஒருவேளை டைனோசர்கள் அழியாமல் இருந்திருந்தால் அவைதான் இந்த உலகின் சக்தி வாய்ந்த உயிரியாக இருந்திருக்கும். மனிதன் அதன் முன் ஒரு சிறு துரும்பை போல தெரிந்திருப்பான்.

முக்காலமும் உணர்ந்த இயற்கை அந்தந்த சூழலுக்கேற்ப தன்னைத் தானே அவ்வப்போது புதிப்பித்துக்கொள்கிறது. இதன் விளைவுதான் இங்கே சில உயிரிகள் அழிவதும், சில உயிரிகள் உருவாவதும். ஆவதும் அழிவதும் இயற்கையாகவே அரங்கேறுகிறது. எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய அறம் சிறுகதை தொகுப்பிலிருந்து ‘யானை டாக்டர்’ சிறுகதையில் யானை டாக்டரான ‘டாக்டர் கிருஷ்ணமூர்த்தி’, சிறுத்தையால் தாக்கப்பட்டு சாகும் தருவாயில் இருக்கும் ஒரு செந்நாயைப் பரிசோதித்துவிட்டு எந்த முதலுதவியும் செய்யாமல் திரும்புவார். அது ஏன் என்று கேட்கும்போது, “செந்நாயின் காலை சிறுத்தைத் தாக்கியிருக்கிறது. என் வேலை அடிபட்ட செந்நாயிடம் இருந்து வழக்கத்திற்கு மாறாக ஏதேனும் தொற்று பரவுவதற்கான வாய்ப்பிருக்கிறதா என்பதைப் பரிசோதிப்பதும், இந்த நிகழ்வில் மனிதனின் செயல் ஏதும் இருக்கிறதா, அப்படி இருந்தால் அந்த நபரைக் கண்டறிந்து தண்டிப்பதும் மட்டும்தான் நாம் செய்ய வேண்டிய கடமைகள். இவை எல்லாவற்றையும் தாண்டி இதுதான் அவற்றின் வாழ்க்கை. அவை இதற்குப் பழக்கப்பட்டவை” என்பார்.

இந்த உலகில் இருக்கும் உயிர்களின் தாயனைகள் அனைத்தும் ஒன்றோடு இன்னொன்று தொடர்புடையவை. இதுதான் பரிணாம வளர்ச்சியின் அடிப்படை. மனிதனின் தாயனையும் சிம்பன்சியின் தாயனையும் 98.8 சதவீதம் ஒத்துப்போகிறது. குரங்கில் இருந்து மனிதன் தோன்றினான் என்பதற்கு இதுதான் சான்றாகவும் விளங்குகிறது. ஓர் உயிரினம் முற்றிலுமாக இந்த உலகில் இருந்து அழிவதில்லை. அது வேறோர் உயிரினமாகப் பரிணாம வளர்ச்சி அடைகிறது. அப்படி அழிந்து போன டைனோசர்கள்தாம் தற்போதிருக்கும் பறவைகளின் மூதாதையர்கள்.

இந்த உயிரினத்தில் இருந்துதான் இந்த உயிரினம் பரிணாம வளர்ச்சி அடைந்தது என்பதைக் கண்டறிய தாயனைதான் முக்கிய சாட்சி. தாயனையை ஒப்பிட்டும், தோற்ற ஒற்றுமையை வைத்தும் உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியை அறியலாம். பல்லாயிர வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்த உயிரினங்களின் தொல்லியல் சாட்சிகள் கிடைக்கப்பெறும் போது அதை வைத்து அந்த உயிரினத்தின் காலம், தோற்றம், பரிணாம வளர்ச்சி போன்றவற்றைக் கணிக்க முடியும். இந்த அறிவியல் பிரிவை பாலியன்டாலஜி (paleontology) என்பர்.

சுற்றுச்சூழலுக்கேற்ப ஏற்படும் தாயனை மாற்றத்தால்தான் பரிணாம வளர்ச்சி ஏற்படுகிறது. போலார் கரடிகளின் அடர்த்தியான வெண் ரோமங்கள், கடும் குளிரைத் தாங்குவதற்காக உருவானவை. அதே போல வேட்டையாடி உண்ணும் மிருகங்களின் பற்கள் கூர்மையாக இருப்பதும் பரிணாம வளர்ச்சியின் அறிகுறிதான். வாழ்வியலுக்கும் சூழலுக்கும் ஏற்ப தாயனையில் மாற்றங்கள் ஏற்பட்டு, அது தனித்துவமான சில அம்சங்களை அந்தந்த உயிரினங்களுக்கு அளிக்கிறது. பூமியின் தட்பவெப்ப நிலையில் மாற்றம் ஏற்படும் போது சுற்றுச்சூழலில் மாற்றம் ஏற்படுகிறது. அந்தச் சுற்றுச்சூழல் மாற்றத்தை ஏற்றுக்கொள்வதற்கும் பழகிக்கொள்வதற்கும் உடலில் தாயனை மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதுதான் உயிர்கள் பரிணாம வளர்ச்சி அடைவதற்கு காரணம். பாலைவனங்களில் வாழும் ஒட்டகங்களின் திமில்களும் கண் இமைகளும் பாத வடிவமும்கூட அந்தச் சூழலுக்கு உகந்ததாக இருக்க வேண்டும் என்று தனித்துவமாக பரிணாமத்தில் உருவானவைதாம்.

மனிதர்களுக்குள்ளும் எண்ணற்ற வித்தியாசங்கள் இருப்பதற்கு காரணம் இந்தச் சுற்றுச்சூழலும் அதற்கேற்ப தீர்மானிக்கப்பட்ட தாயனையும். இந்த உலகில் இருக்கும் எல்லா உயிர்களின் தாயனையும் தனித்துவமானது. அதுதான் தடயவியலின் (forensic) அடிப்படை. குற்றம் நடந்த ஓர் இடத்தில் கிடைக்கும் தலைமுடி, நகம் முதலியவற்றிலிருந்து கிடைக்கும் தாயனையை வைத்து குற்றவாளியைக் கண்டறிவதுதான் தடயவியல். உடலில் இருக்கும் ஒவ்வொரு செல்லிலும் தாயனை இருப்பதால் முடி, நகம், ரத்தம் முதலியவற்றில் இருந்து தாயனையைச் சேகரிக்க முடியும்.

ஒருவரின் தாயனையை வைத்து அவருக்குப் பிற்காலத்தில் வரும் நோய்களைத் தீர்மானிக்கும் அளவிற்குத் தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறது. அதுவும் குறிப்பாக மரபணு சார்ந்த நோய்களையும் சில வகை புற்று நோய்களையும் முன்கூட்டியே கண்டறிய முடியும். இத்தனை வசதிகளும் தொழில்நுட்பமும் இருக்கின்றன என்கிற சந்தோஷம் ஒருபுறம் இருந்தாலும், இவை அனைத்தும் தவறாகப் பயன்படுத்தப்படக் கூடாது என்னும் பொறுப்பும் ஒருபுறம் இருக்கிறது. இயற்கையோடு ஒன்றி வாழும் வாழ்வே வளமானது. இயற்கைக்கு எதிராக மனிதன் செய்யும் ஒவ்வொரு செயலிலும் இயற்கையின் சமநிலை உடைந்து, அது சரி செய்ய முடியாத பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதுதான் ஜுராசிக் பார்க் நமக்குச் சொல்லாமல் சொல்லும் பாடம். தாயனையில் ஒன்றைத் திருத்தப் போய் அதைச் சமன் செய்ய இயற்கை எடுக்கும் கடினமான முடிவுகளைக் கணிக்கும் அளவிற்கு இன்னும் மனிதன் பரிணாம வளர்ச்சி அடையவில்லை. இந்த உண்மையை உணர்ந்து இயற்கையை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

(தொடரும்)

படைப்பாளர்:

வைஷ்ணவி என்கிற வாசகியாக இருந்து வெண்பா எனும் எழுத்தாளராக, ‘அவளொரு பட்டாம்பூச்சி’ வழியாக எழுத்துலகிற்கு அறிமுகமானவர். SRM கல்லூரியில், மரபணு‌ பொறியியலில் இளநிலை தொழில்நுட்பம் (B.Tech Genetic Engineering) பயின்று, தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் கணக்கீட்டு உயிரியலில் முதுநிலை தொழில்நுட்பம் (M.Tech Computational Biology) பயின்று வருகிறார்.