சென்ற அத்தியாயத்தில் எதிர்மறை உணர்வுகள் மற்றும் மன அழுத்தத்தின் அறிகுறிகளைப் பார்த்தோம். இப்போது அதற்கான தீர்வுகளைக் காண்போம்.

நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்கள் நமக்கு எதிராகவோ அல்லது எதிர் பார்ப்புக்கு மாறாகவோ நடக்கும் போது மன அழுத்தமும், அதை ஒட்டிய உணர்வுகளும் அனைவருக்கும் நேரக் கூடியதே. சிலர் அதிலிருந்து உடனே தெளிந்து விடுவர், சிலருக்கு அது கடினம். ஆயினும் மன அழுத்தத்தோடு வாழும்போது அது நம் உடலில், மனதில் பல கோளாறுகளை ஏற்படுத்தும். இதனால் உறவு சிக்கல், கற்றலில் பிரச்னை, சரியான முடிவெடுக்க முடியாத நிலை, நம் மனதில் உள்ளதைத் தெளிவாக எடுத்துரைக்க முடியாமல் போதல், கூர்சிந்தனை குறைபாடு ஆகியவை நேரும். மொத்தத்தில் வாழ்க்கை தரம் மிகவும் பாதிக்கப்படும்.

சிலர் மன அழுத்தத்தை சுலப, தற்காலிக வழிகளில் தீர்த்துக் கொள்ள முயல்வர்.

தொலைகாட்சி, தொலைபேசி போன்றவற்றில் தன்னைத் தொலைத்தல், டிக் டாக் போன்ற செயலிகளில் நேரத்தைச் செலவிடுதல், தோன்றும் போதெல்லாம் உடனடி உணவுகளைச் சாப்பிடுதல், மது, போதைக்கு பழகிக்கொள்ளுதல் என.

இதெல்லாம் அப்போதைக்குப் பிரச்னையை மறக்கடித்தாலும், அழுத்தமும் தீரப் போவதில்லை, இதனால் உடலுக்கு, மனதிற்கு ஏன் வாழ்க்கைக்கும்கூட கேடு வரும்.

இது எதையுமே செய்யக் கூடாதென்பது அல்ல, எப்போதாவது கொஞ்ச நேரத் தளர்வுக்காகச் செய்வதற்கும் அதற்கே அடிமையாவதற்கும் வேறுபாடு உள்ளது.

ஆரோக்கியமான முறையில் இதை எதிர்கொள்ள முயற்சிக்கும் முன், இப்படி நேர்வது சகஜம்தான், அனைவருக்கும் எந்த வயதிலும் நேரக் கூடிய ஒன்றுதான் என்கிற தெளிவு அவசியம். இல்லாவிடில் சுய இரக்கமே நம்மைக் கொன்றுவிடும்.

சில பொதுவான வழிகளைப் பார்ப்போம்.

இசை, ஓவியம், புத்தகம், நடனம் என விருப்பமான ஏதோ ஒன்றில் ஈடுபடுதல். குறைந்தபட்சம் ஈடுபாட்டுடன் ரசித்தல். நம் நாளை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளுதல், ஒரு நாளில் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்துவிட்டுப் பின் மற்ற நேரமெல்லாம் சோம்பி இருத்தல் எந்தப் பயனையும் தராது. ஓய்வு வேறு சோம்பல் வேறு.

தியானப் பயிற்சி

மிகவும் பயன் தரக்கூடிய முறை, மனம் அமைதி பெறும். நேற்றைய வலிகள், நாளைய கவலைகள் இன்றி இந்த நொடியில் மட்டும் வாழும் மனப் பாங்கு வரும். தியானம் என்பது சிறிது நேரம் ஓரிடத்தில் அமர்ந்து கண்களை மூடிக் கொண்டு அமைதியாக இருப்பது மட்டுமல்ல. எந்த வேலை செய்தாலும் அதில் ஒன்றி முழு கவனமும் அதில் மட்டுமே இருப்பதும் தியானம்தான். இதில் வெற்றி கண்ட ஒருவருவருக்கும் மனதில் அமைதி மட்டுமே நிலவும்.

நம்பிக்கை

மன அழுத்தத்தை நீக்க மிகச் சிறந்த வழி. மனிதனுக்கு எதன் பேரிலாவது நம்பிக்கை மிக அவசியம். எதையுமே நம்பாத ஒருவர் வாழ்வு முழுவதும் பிரச்னைகளின் அழுத்தத்திலேயே வாழ்கிறார்.

நீங்கள் உங்கள் மதத்தின் கடவுளை நம்பலாம், குருவை நம்பலாம், இயற்கையை நம்பலாம், பிரபஞ்சத்தை நம்பலாம் அல்லது உங்களை நம்பலாம். எதுவாக இருந்தாலும் உங்களின் கஷ்டத்தைவிடப் பெரிதான, சக்தி வாய்ந்த ஒன்று இருப்பதை நம்பும் போதே மனம் அமைதி அடையும். நீங்கள் நம்பும் ஒன்றிடம் சரண்டையுங்கள்.

யோகா

மனதையும், உடலையும் ஒரே புள்ளியில் இணைக்கும் கலை. சுய நேசம் பெருக மிக சிறந்த வழி. இனிப்பு என்று எழுதிப் படிப்பதைவிட, நாவில்தானே நன்கு உணர முடியும். முயற்சி செய்யுங்கள். நாள் முழுவதும் இலகுவாகவும் துள்ளலோடும் உணர்வீர்கள்.

மசாஜ்

தலை, கால்களில் மசாஜ். உடனடி மற்றும் தற்காலிக பலன் தரும் ஆரோக்கியமான வழி. ஆங்காங்கே தேங்கி நிற்கும் சக்தியை மறுபடியும் செயல்பட வைக்கும், ரத்த ஓட்டம் மேம்படுவதால் உடலுக்குச் சுறுசுறுப்பு கூடும்.

அன்புக்குரியவர்களோடு நேரம் செலவிடுதல்

அன்பு அனைத்திற்குமே மாமருந்து. நாம் அன்பு செலுத்துபவர்கள் நம் மேல் அன்பு செலுத்துபவர்கள் அனைவருமே நமக்குத் தரபட்ட நோய் தீர்க்கும் மருந்து. நீங்கள் மற்றவருக்குக் குடுத்தாலும் பெற்றுக் கொண்டாலும் உங்கள் நோய் தீர்வதை உணர முடியும்.

உங்களை நிறைவாக உணர வைக்கும் தருணங்கள்.

நாம் எத்தனையோ துயரத்தில் இருந்தாலும் சில விஷயங்கள் மனதில் ஓர் உற்சாகத்தையும் முகத்தில் புன்னகையையும் தரும்.

யாரோ ஒரு குழந்தையின் மலர்ந்த புன்னகை, ஏதோ ஒரு வயதோகருக்குச் செய்யும் உதவி, முகமறியா மனிதரின் துயரத்தைத் துடைக்க நாம் எடுக்கும் முயற்சிகள் நம் மூளையில் டோபமைன் என்கிற வேதிப் பொருளைச் சுரக்க வைக்கும். இயற்கையாகவே நாம் மகிழ்வாக உணர்வோம்.

இன்னும் சில வழிகளை அடுத்த அத்தியாயத்தில் காண்போம்.

படைப்பாளர்:

யாமினி

வாழ்க்கைக் கல்வி மற்றும் மென்திறன் பயிற்சியாளர், இயற்கை விரும்பி, நெகிழி ஒழிப்பு ஆர்வலர், திடக் கழிவு மேலாண்மை பயிற்சியாளர். பயிலரங்குகள் நடத்துகிறார். உறவு மேலாண்மை தனிபட்ட ஆலோசகர். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு விழிப்புணர்வை உருவாக்குவதின் மூலமே நாட்டின் நலம், இயற்கை வளம், சரிவிகித சமுதாயத்தை அடைய முடியுமென்று தீவிர நம்பிக்கை உள்ளவர். எல்லாச் சூழ்நிலைகளிலும் வாழ்தலைக் கொண்டாடுபவர்.