தாயனை

வெகு நாட்களாக எழுத நினைத்து ஏதேதோ காரணங்களால் தள்ளிப் போட்டுக்கொண்டே போன, அதுவும் என் மனதுக்கு மிகவும் நெருக்கமான ஒன்றை எழுதத் தொடங்கிய போது ஏதோ ஒரு பெரிய பொறுப்பு என் மேல் விழுந்து அழுத்துவதைப் போல உணர்ந்தேன். இந்தத் தொடரில் வரப் போகும் விஷயங்கள் அனைத்தும் அன்றாடம் நாம் நேரடியாகவோ மறைமுகமாகவோ கடந்து வரும் நிகழ்வுகள்தாம்.

குழந்தை பிறந்த வீட்டில் அனைவரின் ஆரவாரங்களோடு சேர்ந்து கூடவே ஒட்டிக்கொள்ளும் வாடிக்கையான வசனங்களில் ஒன்று, ‘குழந்தை அப்படியே அவங்க அம்மா மாதிரி.’ குழந்தைகள் தாயைப் போலவோ தந்தையைப் போலவோ இருப்பது இயல்பான விஷயம். அதேபோல், ‘குழந்தைக்குப் பாட்டி சாயல் இருக்கு’ போன்ற வசனங்களையும் நாம் கடந்து வந்திருப்போம். குழந்தைகள் தங்கள் முன்னோர்களின் நகலாகவும் இருப்பர் என்பதும் நாம் அறிந்த ஒன்றே. ஆனால், இதற்கெல்லாம் பின்னால் இருப்பது என்ன? ஏன் குழந்தைத் தன் முன்னோரைப் போன்றோ அல்லது தன் பெற்றோரைப் போன்றோ இருக்க வேண்டும்? ஏன் ஏதேனும் நெருங்கிய ரத்த சொந்தத்தின் சாயலைக் கொண்டிருக்க வேண்டும்? இந்தக் கேள்விகளுக்கான விடைதான் தாயனை.

DNA என்பதன் தமிழாக்கம்தான் தாயனை. தாயனையில்தான் நாம் மரபணுக்கள் என்று சொல்லக்கூடிய genes இடம்பெற்றிருக்கின்றன. கடந்த காலத்தை நிகழ்காலத்திற்கு கடத்தும் ஒரு பெரும் பொறுப்பு இந்தத் தாயனைக்கு உண்டு. அதாவது நம் முன்னோர்களின் குணாதிசயங்களையும், அவர்களின் மரபணுக்களின் தனித்துவத்தையும் அப்படியே நகலெடுத்து அதைக் கச்சிதமாக அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் வல்லமை பெற்றவை. இந்தத் தாயனையில் இருக்கும் வேறுபாடுகள்தாம் நாம் ஒவ்வொருவரும் தனித்துவமாக இருக்கக் காரணம்.

தொலைக்காட்சியில் ஐபிஎல் தொடர் பார்த்துக் கொண்டிருக்கும் போது கிரிக்கெட் வீரர்களான போலார்டும், க்ரிஸ் கெயிலும் நம் கவனத்தை ஈர்ப்பதற்கான ஒரு காரணம் அவர்களின் தோற்றம். வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சேர்ந்தவர்கள் உயரமாகவும், தங்கள் உயரத்திற்கேற்ற எடை உடையவர்களாகவும் இருப்பார்கள் என்பது பொதுவான கருத்து. ஆனால், இதற்குப் பின்னால் இருப்பது தாயனையும் அது தாங்கி நிற்கும் மரபணுக்களும். ஜப்பானியர்களின் உயரமும் ஐரோப்பியர்களின் நிறமும் நேபாளியர்களின் தோற்றமும் சீனர்களின் கண்களும் மரபணுக்களால் தீர்மானிக்கப்பட்டவைதான்.

இவை அனைத்தும் எதன் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன? உலகில் உயிர்கள் உருவாகத் தொடங்கிய நாள் முதல் இன்று வரை தாயனை எண்ணிலடங்கா மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. அந்த மாற்றங்கள்தாம் பரிணாம வளர்ச்சியின் அடிப்படை. ஓர் உயிரில் இருந்து இன்னோர் உயிர் உருவாவதும் அந்த மாற்றங்களால்தாம்.

மனிதனும் குரங்கும் ஒரே மூதாதையரிடமிருந்து தோன்றினர். அந்த ஆதிமனிதன் குகை, காடு, சமவெளி என இடம்பெயர்ந்து கொண்டே இருக்க, பருவநிலை மாற்றங்களை எதிர்கொண்டான். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக காலத்திற்கேற்பவும், சுற்றுச்சூழலுக்கேற்பவும் தன்னைப் பழக்கப்படுத்திக்கொண்டான். இதில் இயற்கை அவனுக்கு உறுதுணையாக இருந்தது. உயிர் வாழ்தலுக்குத் தேவையான, இயற்கையால் தேர்ந்தெடுக்கப்பட்ட குணாதிசயங்கள் யாவும் அடுத்த தலைமுறைக்குத் தாயனையில் இருக்கும் மரபணுக்கள் வழியாகக் கடத்தப்பட்டது.

மரபணுக்கள் நல்ல குணாதிசயங்களை மட்டும்தான் அடுத்த தலைமுறைக்கு கடத்துமா என்று கேட்டால், இல்லை என்பதுதான் பதில். மரபணு மாற்றங்களால் ஏற்படும் நோய்கள்தாம் அதற்கு உதாரணம். புற்றுநோய், நீரிழிவு நோய் போன்றவை எல்லாம் ஒரு தலைமுறையில் இருந்து இன்னொரு தலைமுறைக்குக் கடத்தப்படுபவை.

எல்லா மரபணு மாற்றங்களும் தீய விளைவுகளை உண்டாக்குவதும் இல்லை, அதே போல அவை நல்ல விளைவுகளுக்கான தொடக்கமும் இல்லை. தாயனையில் எந்த இடத்தில் மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதைப் பொறுத்துதான் விளைவுகள் தீர்மானிக்கப்படுகின்றன. இந்த மாற்றங்கள் அனைத்தும் தற்போது இருக்கும் சுற்றுச்சூழல், பழக்கவழக்கங்கள், உணவுமுறைகள் போன்றவற்றால் ஏற்படுகின்றன. ஒரு நூற்றாண்டுக்கு முன்னால் இதுபோன்ற மரபணு மாற்றங்களால் ஏற்படும் நோய்கள் இருந்தனவா என்று கேட்டால், சற்றுக் குறைவாக இருந்தது என்பதுதான் விடை. ஒரு நூற்றாண்டுக்கு முன்னால் மரபணு மாற்றங்களால் ஏற்படும் நோய்கள் அறவே இல்லை என்று முற்றிலுமாகச் சொல்லிவிட முடியாது. அதற்குக் காரணம் தகவல் தொழில்நுட்பம். இப்போது இருக்கும் புள்ளி விவரங்கள், கணக்கெடுப்புகள், தொழில்நுட்ப வளர்ச்சி யாவும் அப்போது குறைவாகவே இருந்ததனால் இதைப் பற்றிய தகவல்கள் வெளிவராமல் இருந்திருக்கலாம். ஆனால், மரபணு மாற்றம் என்பது மிகத் தொன்மையானது. இந்தப் பூமியில் உயிர்கள் தோன்றிய நாள் முதல் தாயனை மற்றும் மரபணுக்களில் ஏற்படும் மாற்றங்கள் ஆரம்பமாகின.

இயற்கையில் இது சரி இது தவறு என்று உறுதியாக எதையும் சொல்லிவிட முடியாது. ஆனால், இப்படியும் ஒன்று இருக்கிறது. இதை இப்படியும் அணுகலாம் என்கிற அறிவியல் பார்வையை இது போன்ற பெரிதும் பரிட்சையமில்லாத தலைப்புகளுக்கு அளிப்பதுதான் இதன் நோக்கம்.

(தொடரும்)

படைப்பாளர்:

வைஷ்ணவி என்கிற வாசகியாக இருந்து வெண்பா எனும் எழுத்தாளராக, ‘அவளொரு பட்டாம்பூச்சி’ வழியாக எழுத்துலகிற்கு அறிமுகமானவர். SRM கல்லூரியில், மரபணு‌ பொறியியலில் இளநிலை தொழில்நுட்பம் (B.Tech Genetic Engineering) பயின்று, தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் கணக்கீட்டு உயிரியலில் முதுநிலை தொழில்நுட்பம் (M.Tech Computational Biology) பயின்று வருகிறார்.