மிஸ்டர் அண்ணாமலை,

உங்களுக்குப் பெண்கள் கடிதம் எழுதலாமா என்று தெரியவில்லை. ஆனால், நான் என் கணவன் சார்பாக எழுதுகிறேன். என் கணவன் ஒரு குக்கிராமத்தில் பிறந்தவர். பட்டதாரியாக இருந்தாலும் நமது ‘பண்பாட்டில்’ வளர்க்கப்பட்ட அடக்க ஒடுக்கமான பாரம்பரிய அழகன். எனக்கு அவனிடம் பிடித்ததே அந்த இன்னசென்ஸ்தான். ஒரு திருமணத்தில் பார்த்தவுடன் எனக்குப் பிடித்துவிட்டது. வீட்டில் சொல்லித் திருமணம் செய்து சென்னைக்குக் கூட்டி வந்துவிட்டேன்.

தனிக்குடித்தனம். நான் அவனை ராஜா மாதிரி வைத்துக் கொண்டிருக்கிறேன். என் அப்பா சமையல் அளவுக்கு இல்லையென்றாலும் சகித்துக் கொண்டு சாப்பிடுகிறேன். கேட்டதை எல்லாம் வாங்கித் தருகிறேன். மாதமொருமுறை ஷாப்பிங், பீச் அழைத்துச் செல்கிறேன்.

இதுவரை அவனைக் கை நீட்டி அடித்ததுகூடக் கிடையாது. ஆனால், தற்போது அக்கம்பக்கத்து வீட்டு ஆண்களைப் பார்த்து, ‘மாடர்னாக’ இருக்க வேண்டும் என்று விரும்புகிறான். வேட்டி, லுங்கி வேண்டாம், சென்னை ரொம்ப வியர்க்கிறது ஷார்ட்ஸ், ஸ்லீவ்லெஸ் பனியன் வாங்கித்தா என்று அடம்பிடிக்கிறான். எப்படித் திருத்துவது?

சித்ரா,

சென்னை

அன்புள்ள சித்ரா அவர்களே,

இப்போது பல ஆண்களும் இப்படித்தான் நவநாகரிகத்துக்கு மயங்கி நமது பண்பாட்டை மறந்து வருகின்றனர். உங்கள் கணவன் வெகுளி என்று நீங்களே சொல்லிவிட்டீர்கள். எளிதாகப் பார்ப்பதற்கு எல்லாம் மயங்கிவிடுகிறார். இதை இப்படியே விட்டுவிட்டால் நாளை வேலைக்குப் போக வேண்டும், தனக்கென்று வண்டி வேண்டும் என்றெல்லாம் கேட்கத் தொடங்கிவிடுவார். நீங்கள் கணவன் மீது கண்மூடித்தனமான அன்பு வைத்திருந்திருக்கிறீர்கள். ஆனால், அவரது பாதுகாப்பு குறித்த அக்கறையும் வேண்டும்.

வெகுளி என்று நீங்களே சொல்கிறீர்கள். பிறகு ஏன் மற்றவருடன் பேசுவதை அனுமதிக்கிறீர்கள். உங்களுக்குத் தெரியாமல் அவருக்கு எந்த நட்பும் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வீட்டில் நீங்கள் அழைத்துப் பேசும்படி, காலர் ஐடியுடன் லேண்ட்லைன் மட்டும் இருக்கட்டும். வீட்டில் இருக்கும் ஆம்பளைக்கு எதுக்கு செல்போன்?

மிக்சி, கிரைண்டர் போன்ற வேலையைக் குறைக்கும் கேடுகளைத் தூக்கி எறியுங்கள்.

‘ஆணுக்கு அழகு, அம்மியில் அரைப்பது’ என்று பெண்மொழியே உள்ளது. தினமும் குனிந்து வீடு முழுவதும் துடைத்தால் விந்தணுக்கள் அதிகரிக்கும் என்கிற அறிவியல் உண்மையைப் புகட்டுங்கள். நிமிர முடியாமல் வேலைகள் இருந்தாலே இதுபோல் தேவையில்லாமல் உங்களை நச்சரிக்க மாட்டார்.

அப்புறம், வெளியூர் எதுவும் செல்ல வேண்டி இருந்தால், வேண்டியதை எல்லாம் வாங்கிக் கொடுத்துவிட்டு, கணவனை வீட்டில் வைத்துப் பூட்டிவிட்டுச் சென்றுவிடுங்கள்.

பி.கு. படுக்கையறையில் நீங்கள் மட்டும் பார்த்து ரசிக்க, ஷார்ட்ஸ், ஸ்லீவ்லெஸ் பனியன் வாங்கித் தரலாம்; தப்பில்லை.

அன்புள்ள அண்ணா,

என் மகனுக்குத் திருமண வயதாகிறது. அவனது நிறம் சோகையாக வெளுத்துப் போய்க் காணப்படுவதால் பார்க்க வரும் பெண்கள் எல்லாம் பிடிக்கவில்லை என்று போய்விடுகிறார்கள்.

நானும் என் மனைவியும் அழகுக் கறுப்பு. இவன் மட்டும் எப்படியோ இப்படி வெள்ளையாகப் பிறந்து தொலைத்துவிட்டான். சிறு வயது முதலே பார்க்காத வைத்தியம் இல்லை. மிளகு, கடுகு, கருஞ்சீரகம் அரைத்துப் பூசிக் குளிக்க வைத்திருக்கிறேன். நண்பகல் வெயிலில் ஒரு மணி நேரம் நின்றால் உடல் விரைவில் கருக்கும் என்று யாரோ சொன்னதை நம்பி அதையும் செய்து வருகிறான். இருந்தும் மேனி பூஞ்சைக்காளான் பூத்தது போல் வெள்ளை நிறமாகவே உள்ளது.

என் மகனும் பார்ப்பவர் வியக்கும் அளவுக்கு அழகிய கருவண்ண மேனியனாக என்ன வழி?

பெயர் வெளியிட விரும்பாத ஒரு தந்தையின் குமுறல்

அன்பு வாசகருக்கு,

உங்கள் மனத்தாங்கல் எனக்குப் புரிகிறது. ஆனால், என்ன செய்ய, விதிப்படிதான் எல்லாம் நடக்கும். நீங்கள் செய்த வைத்தியத்தால் ஒரு புண்ணியமுமில்லை. கறுப்பு நிற மேனி என்பது வரம். உங்கள் மகனுக்கு ஏனோ கொடுத்து வைக்கவில்லை. அறிவியல் இதற்கு ஓரளவு கை கொடுக்கிறது. மெலனின் ஊசிகள் மூலம் நிறத்தை நிரந்தரமாகக் கறுப்பாக்கலாம் என்பது நிரூபிக்கப் பட்டிருக்கிறது. ஆனால், அதற்குக் காலமும் செலவும் அதிகமாகும்.

நல்ல அடக்க ஒடுக்கமான, பண்புள்ள பையனாக வளர்த்திருந்தால் அவர் கறுப்பாக இல்லையே என்பதை ஒரு குறையாகப் பெண் வீட்டார் பொருட்படுத்த மாட்டார்கள். கவலைப்படாதீர்கள்.

அழகா முக்கியம்? ஆணுக்குக் குணம்தான் முக்கியம்.

அன்புடன் அண்ணா,

பி.கு. மேனியின் இயற்கை நிறம் கறுப்போ சிவப்போ அது குறித்து யாரும் கவலையுறத் தேவையில்லை. ஆனால், கறுப்பு நிறத்தின் மீது இன்னும் இந்த மண்ணின் மீது இருக்கும் வெறுப்பைச் சுட்டிக் காட்டவே வெள்ளை நிறத்தை மட்டம் தட்ட வேண்டியுள்ளது. அதில் தவறேதுமில்லை என்பது என் தாழ்மையற்ற கருத்து.

(ஆண்கள் நலம் தொடரும்)

படைப்பாளர்:

ஜெ.தீபலட்சுமி

பெண்ணிய செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான ஜெ.தீபலட்சுமி தொடர்ச்சியாக பெண்ணுரிமைக் குரலை எழுப்பி வருபவர். ‘இப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப்படுவதில்லை’ என்ற நூலை எழுதி இருக்கிறார். ஊடகங்களில் இவர் எழுதிய பெண்ணியக் கட்டுரைகள், ’குத்தமா சொல்லல, குணமாதான் சொல்றோம்’ என்கிற நூலாக ஹெர்ஸ்டோரீஸ் பதிப்பகத்தில் வெளிவந்திருக்கிறது. ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளிலும் சரளமாக எழுதியும், பேசியும் வருகிறார். எழுத்தாளர் ஜெயகாந்தனின் சிறுகதைகள் சிலவற்றைத் தொகுத்து ‘The Heroine and other stories’ என்ற நூலாக மொழிபெயர்த்திருக்கிறார்.