அன்புள்ள அண்ணா,

எங்கள் வீட்டு பாத்ரூம் மிகவும் கறை படிந்து இருக்கிறது. நானும் விளம்பரங்களில் வரும் எல்லா வகையான க்ளீனர்களையும் பயன்படுத்திப் பார்த்துவிட்டேன். ஆனால், என் மனைவிக்குத் திருப்தி இல்லை. உதவி ப்ளீஸ்.

காலன் நாறவாயணன்,

திருச்சி

அன்புள்ள காலன்,

பெரும்பாலான ஆண்கள் இப்படித்தான். தங்கள் அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அளவுக்கு வீட்டுச் சுத்தத்தில் கவனம் செலுத்துவதில்லை என்பது வேதனை தரும் விஷயம். சீரியல்களிலும் சமூக வலைத்தளங்களிலும் நேரத்தைப் போக்காமல் தினமும் அரை மணி நேரமாவது அமர்ந்து ப்ரஷ்ஷைக் கொண்டு அழுத்தித் தேய்த்திருந்தால் பாத்ரூம் துலங்கி இருக்கும்.

இப்போது கறைகள் அதிகமாகி விட்டபடியால் ஆசிட்டுடன் எலுமிச்சம் பழம் கலந்து ஒரு மணி நேரமாவது தேய்க்கக் கறைகள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துவிடும். முயன்று பாருங்கள்.

அன்புடன் அண்ணா

அன்புள்ள அண்ணா,

என் மகனின் தலையில் பேன் தொல்லை அதிகமாக உள்ளது. நானும் எத்தனையோ மருந்துகள் முயற்சி செய்து பார்த்து விட்டேன். பலனில்லை. மகன் தலையைச் சொறியும் போதெல்லாம் மனைவியின் கோபத்துக்கு ஆளாகிறேன்.

“புள்ள தலையக்கூட சுத்தம் செய்யாம அப்படி என்னதான் நாளெல்லாம் வீட்ல ___கிற?” என்று நாக்கைப் ___கிற மாதிரி கேட்கிறார். உதவி ப்ளீஸ்!

அன்புடன் குந்துமதன்

அன்புள்ள குந்து,

பேன் தொல்லை சாதாரண விஷயம். ஆனால், இவ்வளவு தூரம் பிரச்னையாகி உள்ளது என்றால் தந்தையாகிய நீங்கள் குழந்தைகள் விஷயத்தில் அக்கறை எடுப்பதில்லை என்று புரிகிறது. உங்கள் மனைவி கேட்ப்து நியாயம்தானே!

நன்கு கனிந்த வாழைப்பழத்தில் கொஞ்சம் உப்பைப் போட்டுப் பிசைந்து (சாப்பிட்டுவிடாதீர்கள்) அதை மகன் தலையில் தேய்த்து அப்படியே இரண்டு மணி நேரம் உட்கார வையுங்கள். பின்பு சீயக்காய் போட்டுத் தேய்த்துக் குளிக்க, பேன்கள் செத்துவிடும். இதை வாரமிருமுறை தொடர்ந்து ஆறு மாதங்களுக்குச் செய்து வரவும். நல்ல பலன் கிடைக்கும்.

அன்புடன் அண்ணா

அன்புள்ள அண்ணா,

நான் என் பெற்றோருக்கு ஒரே மகன். என்னை மிகவும் செல்லமாக வளர்த்தார்கள். ஆனால், என்னைக் கட்டிக் கொடுத்த வீட்டில் என் மாமனாரும் மாமியாரும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் என் அம்மாவை மிகவும் கேவலமாகப் பேசுகிறார்கள். என்னால் தாங்கவே முடியவில்லை. என் மனைவியிடம் சொன்னால், “நாங்க அப்படித்தான் ஜாலியா ஜோக்கா சிரிச்சிப் பேசுவோம். இதெல்லாம் பெருசா எடுத்துக்காதே. உன்னை மாதிரியே உம்முனு இருக்கச் சொல்றியா?” என்று என்னையே குற்றம் சொல்கிறார்.

அதுகூடப் பரவாயில்லை என்னைப் பார்க்க ஆசையுடன் ஊரில் இருந்து அம்மா வந்தபோது சரியாகக் கவனிக்கக்கூட இல்லை.

எனக்கு அவ்வப்போது தலைவலி வரும். அதைச் சொல்லி, “சீக்காளி பையனை எங்க தலைல கட்டிட்டீங்களா?” என்று குத்தலாகப் பேசினார் என் மாமனார்.

ஒரு நாளாவது என்னுடன் இருக்கலாம் என்று வந்தவர் ஒரே மணி நேரத்தில் கிளம்பிப் போய்விட்டார். சாப்பிடக்கூட இல்லை. எனக்கு இதயமே வெடித்துவிடும்போல் இருக்கிறது. என் இன்னல் தீர ஒரு வழி சொல்லுங்கள் அண்ணா.

வேதனையுடன் வெங்கி,

திருவண்ணாமலை

அன்புள்ள வெங்கி,

முதலில் சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் மனதைப் போட்டு அலட்டிக் கொள்வதையும் இப்படிக் கலங்கி நிற்பதையும் நிறுத்துங்கள். நமது பாரத ஆண்கள் வீரமும் விவேகமும் மிக்கவர்கள் என்பதை மறந்துவிட வேண்டாம்.

உங்கள் மாமனார், மாமியார் உங்கள் உடல் நலன் குறித்த அக்கறையில்தானே உங்கள் அம்மாவிடம் பேசி இருக்கிறார்கள்? அதை ஏன் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டும்? எதையும் பாசிட்டிவாகப் பார்க்க நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம்.

உங்கள் அம்மா சாப்பிடாமல் போனது குறித்து வருந்த வேண்டாம். பையனைக் கல்யாணம் செய்து கொடுத்த வீட்டில் சாப்பிடுவது நம் நாட்டுக் கலாசாரம் இல்லை. உங்கள் அம்மாவை நினைத்துப் பெருமைப்படுங்கள்.

நீங்கள்தான் நிறைய மாற வேண்டி இருக்கிறது. அடிக்கடி தலைவலி தலைவலி என்று சுணங்கி அமராமல் கலகலப்புடன் இருங்கள். வலி நிவாரணிகளை விழுங்கிவிட்டு வீட்டை வளைய வாருங்கள்.

அன்புடன் அண்ணா

படைப்பாளர்:

ஜெ.தீபலட்சுமி

பெண்ணிய செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான ஜெ.தீபலட்சுமி தொடர்ச்சியாக பெண்ணுரிமைக் குரலை எழுப்பி வருபவர். ‘இப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப்படுவதில்லை’ என்ற நூலை எழுதி இருக்கிறார். ஊடகங்களில் இவர் எழுதிய பெண்ணியக் கட்டுரைகள், ’குத்தமா சொல்லல, குணமாதான் சொல்றோம்’ என்கிற நூலாக ஹெர்ஸ்டோரீஸ் பதிப்பகத்தில் வெளிவந்திருக்கிறது. ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளிலும் சரளமாக எழுதியும், பேசியும் வருகிறார். எழுத்தாளர் ஜெயகாந்தனின் சிறுகதைகள் சிலவற்றைத் தொகுத்து ‘The Heroine and other stories’ என்ற நூலாக மொழிபெயர்த்திருக்கிறார்.