ஓவியம்: சித்ரா ரங்கராஜன்

குளிர்கால வெப்பநிலை -13 முதல் -22 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கும் வடக்கு ஐரோப்பாவில், பனியால் மூடப்பட்டிருக்கும் பழங்கால பைன் காடுகளில் துருவ கலைமான்கள் சுற்றித் திரியும் அற்புதமான காட்சியை டிஸ்கவரி சேனலில் பார்த்திருப்பீர்கள். ஆனால், ஆர்க்டிக் ஸ்வீடன், நார்வே, பின்லாந்து, ரஷ்யாவில் உள்ள கோலா தீபகற்பத்தைச் சேர்ந்த சாமி பழங்குடி மக்களுக்கும் இதுதான் வீடு. உண்மையில், ஐரோப்பாவில் எஞ்சியிருக்கும் ஒரே பழங்குடியினரான சாமி மக்களை நீங்கள் உறைந்த படங்களில் அவர்களின் சமூகத்தின் பிரதிநிதித்துவத்திலிருந்து அடையாளம் காணலாம்.

‘ஃப்ரோசன்’ என்கிற ஆங்கிலத் திரைப்படம் பார்த்திருப்பீர்கள். படத்தின் நாயகிகளான எல்சாவும் அண்ணாவும் தங்கள் தாயார் நார்துல்ட்ரா மக்களில் ஒருவர் என்பதை அறிந்துகொள்ள மந்திரித்த காட்டில் உள்ளே தேடிச் செல்வார்கள். அந்தப் படத்தில் சித்தரிக்கப்பட்ட பழங்குடியினர், வடக்கு நார்வேயின் சாமி பழங்குடி மக்களை அடிப்படையாகக் கொண்டவர்கள். இவர்களின் மொத்த மக்கள் தொகை 50,000 – 200,000 வரை இருக்கும்.

சாமி பழங்குடி துருவக் கலைமான் மேய்ப்பிற்கு மிகவும் பெயர் பெற்றவர்கள். துருவக் கலைமான் இறைச்சி உணவாகப் பயன்படுகிறது. தோல், ரோமங்கள், காலணிகள் ஆடைகள் தயாரிக்கப் பயன்படுகின்றன. மேலும் கொம்புகள், எலும்புகள் மூலம் கருவிகள், அலங்காரப் பொருட்கள் செய்யப்படுகின்றன. சாமிகள் திறமையான மீனவர்களாகவும் ஆடு மேய்ப்பவர்களாகவும் திகழ்கிறார்கள்.

பாரம்பரிய சாமி பழங்குடி பல தெய்வ வழிபாட்டைக் கடைப்பிடிக்கிறார்கள் . இருப்பினும் சாமி ஒரு பெரிய நிலத்தை உள்ளடக்கியதால், பல்வேறு பழங்குடியினரிடையே நம்பிக்கைகள், பழக்கவழக்கங்களை அனுமதித்துள்ளது. அதில் ஆதிக்கம் செலுத்தும் மதங்கள் லூதரனிசம், கிழக்கு ஆர்த்தடாக்ஸ்.

சாமி பழங்குடி பெண்கள் மஞ்சள் முடி, நீலக் கண்களுடன் ஐரோப்பிய தோற்றத்தில் இருந்து வேறுபடுகிறார்கள். அவர்களின் பாரம்பரிய உடைகள், காக்டி என்று அழைக்கப்படுகின்றன. விருந்துகள், திருவிழாக்கள், திருமணங்கள், ஞானஸ்நானம், இறுதிச் சடங்குகள் பலவற்றில் இவை அணியப்படுகின்றன. சிலர் பாரம்பரிய உடைகளை அன்றாட உடைகளாக அணியத் தேர்வு செய்கிறார்கள். பெண்களின் காக்டி ஆண்களைவிட நீளமானது. அவை முதலில் துருவக் கலைமான் தோல்கள், ரோமங்களிலிருந்து தயாரிக்கப்பட்டன. காலப்போக்கில், ரோமங்கள் பருத்தி, கம்பளி, பட்டு, வெல்வெட் ஆகியவற்றால் மாற்றப்பட்டன. கையால் செய்யப்பட்ட ஆடைகள் வெவ்வேறு வடிவமைப்புகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. ஆடையின் வண்ணங்கள், வடிவங்கள் மற்றும் அலங்காரங்கள் ஒரு நபரின் புவியியல் தோற்றத்தைக் குறிக்கும். பாரம்பரிய சாமி பெண்கள் உடுத்தும் ஆடைகளின் நிறங்கள் சிவப்பு, பச்சை, நீலம், மஞ்சள். ஆர்க்டிக் வட்டத்தில் தொப்பிகள் குளிர்ச்சியிலிருந்து பாதுகாத்தன. ஆண்களும் பெண்களும் பலவிதமான தட்டையான தொப்பிகள் முதல் கூர்மையான தொப்பிகள் வரை அணிந்தனர். சாமி பழங்குடியைச் சேர்ந்தவரின் காலணி துருவக் கலைமான் தோலில் இருந்து தயாரிக்கப்படுகிறது.

சாமி பழங்குடி பெண்கள் வண்ணமயமான உடைகள் அணிபவர்கள், பாரம்பரிய கைவினைப் பொருட்கள் செய்பவர்கள், துருவக் கலைமான் மேய்ப்பாளர்கள் என்று மட்டுமே பலர் நினைக்கிறார்கள். ஆனால், ராப் இசை, நவீன கட்டிடக்கலை, அதிநவீன வடிவமைப்புகள் வரை அனைத்திலும் சாமி பெண்களின் பாரம்பரியம் உயிருடன் இருக்கிறது. நவீன சாமி பழங்குடி பெண்கள் ஒரு விருது பெற்ற திரைப்படத் தயாரிப்பாளராகவும், துருவக் கலைமான் மேய்ப்பவராகவும் இருக்கலாம். ஆனால், அவர்கள் இருவரும் இயற்கையுடன் ஆழமான உறவுடனே வாழ்கிறார்கள்.

சாமி கலாச்சாரம் பல சிறப்பியல்பு வெளிப்பாடுகளைக் கொண்டுள்ளது. சாமி கைவினைப் பொருட்கள் அவற்றில் ஒன்று.

நார்வேயில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட துருவக் கலைமான்கள் உள்ளன. துருவக் கலைமான் எப்போதும் சாமி கலாச்சாரத்தின் மையப் பகுதியாக இருந்து வருகிறது. துருவக் கலைமான்களில் பயன்படுத்தப்படாத எந்தப் பகுதியும் இல்லை. சமையலுக்கு இறைச்சி, ஆடைகளுக்கும் காலணிகளுக்கும் ரோமமும் தோலும் கொம்புகள் கருவிகள் முதல் அழகான கலைவேலைப்பாடு வரை பயன்படுகின்றன. சாமியின் வாழ்க்கை முறைக்கு துருவக் கலைமான் மிகவும் முக்கியமானது. பலர் துருவக் கலைமான்களை எவ்வாறு பராமரிப்பது என்பதை அறிய ஒரு சிறப்புப் பல்கலைக்கழகத்திற்குச் செல்கிறார்கள். கணிதம், ஆங்கில வகுப்புகள் போல, துருவக் கலைமான் மந்தைகளை எவ்வாறு பராமரிப்பது என்று அவர்களுக்குக் கற்பிக்கும் வகுப்புகள் உள்ளன.

சாமி பழங்குடியினர் ‘அரை நாடோடிகள்’, அதாவது அவர்கள் ஆண்டு முழுவதும் ஒரே இடத்தில் இருப்பதில்லை. சாமி மேய்ப்பர்கள் பருவக் காலங்களில் தங்கள் துருவக் கலைமான்களுடன் இடம்பெயர்ந்து, குளிர்காலத்திற்காக மலைகளுக்குச் சென்று, கோடையில் சமூகத்துடன் திரும்பி வருகிறார்கள். பயணத்தில், சாமி மேய்ப்பர்கள் லாவ்வோ எனப்படும் பாரம்பரியக் கூடாரத்தில் முகாமிடுவார்கள்.

உலகின் மற்ற பகுதிகளைவிட ஆர்க்டிக் இரண்டு மடங்கு வேகமாக வெப்பமடைந்து வருகிறது. இது அதன் தனித்துவமான சுற்றுச்சூழல் அமைப்பிற்கு ஆபத்து விளைவிக்கிறது. அதிகரித்து வரும் கணிக்க முடியாத தீவிர வானிலை சாமி பழங்குடிகளின் வாழ்வாதாரத்தையும், பழங்குடியின மக்களாகிய அவர்களின் உரிமைகளையும் பாதிக்கிறது. காலநிலை மாற்றத்தினால் பனிப்பொழிவு குறைந்து மழையாக அடிக்கடி விழுகிறது. பின்னர் அது உறைந்து பனிக்கட்டி அடுக்கை உருவாக்குகிறது. துருவக் கலைமான்களால் பனிக்கட்டியை உடைக்க முடியவில்லை. பனிக்கட்டி வழியாக கீழே உள்ள நீலப்பச்சைப்பாசி கிடைக்காமல் பட்டினி கிடக்கின்றன. 2013 இல் மட்டும் 61 ஆயிரம் துருவக் கலைமான்கள் இறந்தன.

சாமி பழங்குடி பெண்கள் துருவக் கலைமான் மேய்ப்பர்களாக துருவ கலைமான்களுக்காகவும் தங்கள் மூதாதையர் நிலங்களுக்கான உரிமைக்காகவும் போராடுகிறார்கள். ஆனால், புவி வெப்பமடைதல், தொழில்மயமாக்கல், காலனித்துவம், ஸ்காண்டிநேவிய அரசாங்கங்களால் கலாச்சார அழித்தல் ஆகியவற்றின் காரணமாக, இவர்களின் கலாச்சாரம் அழியும் நிலையில் இருக்கிறது. சாமி பழங்குடியின் உறுதியான பெண் தலைவர்கள்தாம் உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் தங்கள் சமூகங்களின் நிலம், பாரம்பரிய உரிமைகளுக்காகப் போராடுகின்றனர்.

சிறிய கிராமங்களின் எல்லைகளுக்கு அப்பால் தங்கள் குரலை வெளிப்படையாக எடுத்துச் செல்லும் சாமி பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் உலக அரங்கில் ஒவ்வோர் ஆண்டும் ஐ.நாவின் காலநிலை மாற்றம் குறித்த பேச்சுகளில் பழங்குடியின பிரதிநிதிகளாக சாமி பழங்குடி பெண்கள் குழுவில் இணைகிறார்கள்.

தன் ஒன்பது வயதில் துருவக் கலைமான்களைச் சேகரித்தல், குறியிடுதல், தடுப்பூசி போடுதல் போன்ற வேலைகளில் ஈடுபட்ட டீனா சனிலா-ஐகியோ, பின்லாந்தின் சாமி நாடாளுமன்றத்தின் முதல் பெண் தலைவராக ஆனார்.

ஆர்க்டிக் வட்டத்தில் உள்ள ஒரு முக்கியமான துருவக் கலைமான் மேய்க்கும் பகுதியில் வர இருந்த பிரிட்டன் நிறுவனத்தின் இரும்புத்தாது சுரங்கத்திற்கு எதிராக சாமி பெண்கள் போராட்டம் செய்தது குறிப்பிடத்தக்கது .

காலநிலை மாற்றம், இனவெறி, வன்முறை ஆகியவற்றால் அச்சுறுத்தப்பட்ட பழங்குடி சமூகத்தை ஆராயும் ‘ஸ்டோலன்’ என்கிற சிறந்த நாவலில், சாமி பழங்குடியைச் சேர்ந்த எல்சா துருவக் கலைமான்களைப் பாதுகாப்பதிலும், அதற்காக காவல்துறைக்கு கடிதங்கள் எழுதுவதிலும், அறிக்கைகள் தாக்கல் செய்வதிலும், தன்னை அர்ப்பணித்துக்கொள்வதாக அமைந்திருக்கிறது.

சாமி பழங்குடியின் உரிமைக்காகப் போராடும் பெண்களில் பலர், தங்கள் பூர்வீக நிலத்தில் பணிபுரியும் உரிமைக்காகப் போராடுகிறார்கள், அடுத்த தலைமுறைக்கு தங்கள் பாரம்பரியத்தை விதைக்க ஆர்வத்துடன் உழைக்கிறார்கள்.

(தொடரும்)

படைப்பாளர்:

சித்ரா ரங்கராஜன்

கட்டிடக் கலை மற்றும் உட்புற வடிவமைப்பாளராக சென்னையில் தன் கணவருடன் நிறுவனத்தை நடத்திவருகிறார். ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதுவதை ஆர்வமாகக் கொண்டுள்ளவர். புத்தகங்களுக்குப் படங்கள் வரைவதிலும் நாட்டம் கொண்டவர். பெண்ணியச் சிந்தனையில் மிகுந்த ஆர்வமுள்ளவர். ஒருவரின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதில் ஓர் எழுத்தாளருக்கு முக்கியப் பங்குண்டு என்பது இவருடைய வலுவான கருத்து.