ஃபிளட் பேபி குறும்படத்தை யூடியூபில் காண சுட்டி இங்கே…

வங்காள விரிகுடாப் பகுதியில் காலநிலை மாற்றம் காரணமாக தாய்மாரும், பச்சிளம் குழந்தைகளும் எந்த அளவுக்கு பாதிப்படைகிறார்கள் என்பதை சுருக்கமாக, தெளிவாக ‘ஃபிளட் பேபி’ குறும்படம் விளக்குகுறது. இயற்கைப் பேரிடர்களுடன் ‘வாழப் பழகிவிட்ட’ நாம் எப்படியோ அவற்றை சமாளித்துவிட்டாலும், காலநிலை மாற்றம் குழந்தைகள் மனதிலும், இளம் தாய்மாரின் மனதிலும் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை இன்றுவரை நாம் உணர்ந்துகொண்டதில்லை. பேசாப் பொருளான இளம் தாய் சேய் உடல், உள்ள நலனை இந்தக் குறும்படம் பேசுகிறது. கௌதமியின் இந்த முயற்சி, அதிகம் தொடப்படாத களம் என்பதால் நம் கவனம் ஈர்க்கிறது.

அதிலும் படத்தில் இடையே பட்டாசாக வரும் சிறுவர்கள் இருவரும் தங்கள் அம்மாக்களின் அனுபவங்களை அருகிருந்து கவனித்தும், உள்வாங்கியும் ‘நான் ஒரு ஃப்ளட் பேபி’ என சொல்வதிலாகட்டும், ‘என் அம்மா வயிற்றில் நான் இருக்கும்போது இங்கிருந்து அங்கே இவ்வளவு தண்ணீரில் நடந்துவந்தோம்’ என விவரிப்பதிலாகட்டும், இளம் தலைமுறை காலநிலை மாற்றம் தங்களை எந்த அளவுக்கு பாதிக்கிறது என்பதை உணர்ந்து பேசுவதாகவே தெரிகிறது.

ஃபிளட் பேபியின் தொடக்கத்தில் 2015ம் ஆண்டு சென்னைப் பெருவெள்ளத்தில் வீட்டுக்குள் ஏழு அடி தண்ணீர் புகுந்துவிட்ட நிலையில் தவித்த ராதிகா, பச்சிளம் குழந்தையுடன் மூன்று நாள்கள் கஞ்சியும், தண்ணீரும் குடித்து சமாளித்த தன் அனுபவத்தை சொல்லத்தொடங்குகிறார். தாய்ப்பால் இல்லாத நிலையில் உறங்கிக்கொண்டே இருந்த மகனுக்கு மருத்துவ உதவிகூட கிடைக்கவில்லை என ராதிகா சொல்கிறார். மகனுக்குத் தேவையான மருத்துவ உதவியைப் பெற்றுத் திரும்பும் வழியில் அழுக்கு நீர் சூழ நடந்துசென்ற காரணத்தால், அறுவை சிகிச்சை முடிந்து தையலிடப்பட்டிருந்த புண்ணில் தொற்று ஏற்பட்டதைக் கூறுகிறார்.

ஐந்து மாத கர்ப்பிணியான சௌமியா லோகநாதனோ தங்கியிருந்த விடுதியிலிருந்து உதவி கிடைக்கும் இடம்வரை தவளையும் பூச்சிகளும் மிதந்த தண்ணீரில் நடந்துசென்றதாகக் கூறுகிறார். பேறு காலத்திலும், கர்ப்ப காலத்திலும் அதிகளவு சிரத்தை எடுத்துக்கொண்டு தன்னை பேணிக்கொள்வது ஒரு பெண்ணுக்கு நாம் தரும் பாதுகாப்பு; அவரது உரிமையும்கூட. ஆனால் காலநிலை மாற்றம் அந்த உரிமையைப் பெண்ணிடமிருந்து சத்தமின்றிப் பறித்திருப்பதை படத்தின் முதல் சில நிமிடங்கள் உணர்த்திவிடுகின்றன.

படத்தின் அடுத்த பகுதியில், ‘இன்னும் 20-25 ஆண்டுகளில் நாகப்பட்டினம் மாவட்டமே இருக்காது’, என நாம் சந்திக்கவிருக்கும் மிகப்பெரும் பேரழிவை தரவுகளுடன் அடுக்குகிறார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன். கடல் அரிப்பு, கடல் வெப்பம் அதிகரிப்பு, போன்றவற்றை விளக்குகிறார். இந்திய வானியல் ஆய்வு நிறுவன இயக்குனர் மிருத்யுஞ்சய் மஹோபத்ரா, பருவநிலை மாற்றத்தால் புயலின் தாக்கம் எவ்வாறு அதிகரிக்கிறது, மழை எப்படி ‘நின்று பெய்கிறது’ என நமக்குத் தெளிவு தருகிறார். மிகச் சாதாரணர்களின் வாழ்வில் காலநிலை மாற்றம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என இவர்கள் புரியவைக்கின்றனர். காலநிலையை ஊகிப்பதும் சிக்கலாகிவருவதாக மிருத்யஞ்சய் சொல்கிறார்.

காலநிலை மாற்றம் உண்மையே எனும் பட்சத்தில், அதனால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பை மருத்துவர் கார்த்திக் அண்ணாமலை விளக்குகிறார். மனித இனத்துக்கு காலநிலை மாற்றம் பெரும் அச்சுறுத்தல் என பேறுகால உதவியாளர் பிரியங்கா இடிகுலா குறிப்பிடுகிறார். தாய்சேய் நலன் தான் சமூகத்தின் அடிப்படை அலகு என்பதைத் தெளிவாகக் குறிப்பிடும் எஃபத் யாஸ்மின், காலநிலை  மாற்றம் கட்டாயம் தாய் சேய் நலனை பாதிக்கிறது என்கிறார். பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் மருத்துவர் நொயி வுட்ஸ், மருத்துவ சமூகம் அரசியல் சார்ந்த விஷயங்களில் முடிவெடுக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது என்கிறார்.

எதிர்காலத்தில் காலநிலை மாற்றமே நோயாளிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கப்போகிறது எனும் எச்சரிக்கையை குறும்படத்தில் பேட்டிதரும் அத்தனை மருத்துவர்களும் சொல்கிறார்கள். காலநிலை மாற்றம் ஏற்படுத்தும் அழுத்தம் காரணமாக குறைந்த எடையுடன் குழந்தைகள் பிறப்பது (IUGR), குறைமாதக்குழந்தைகள் பிறப்பது போன்றவை அதிகரித்திருக்கிறது என மருத்துவர்கள் சொல்கின்றனர்.

இயக்குனர் கௌதமி சுப்பிரமணியன்

குறைப்பிரசவத்தால் தாயும் சேயும் பிரிக்கப்படும்போது இருவருக்குமிடையே தாய்ப்பாலூட்டுவதால் உண்டாகும் முதல் ‘பிணைப்பு’ அறுந்து போவதை குறும்படம் வருத்தத்துடன் பதிவு செய்கிறது. இது தவிர மூச்சுத்திணறல் உள்ளிட்ட சுவாசப்பிரச்னைகள், மஞ்சள் காமாலை போன்றவையும் குழந்தைகளை அதிகம் தாக்குகின்றன எனச் சொல்லப்படுகிறது.

தாய் சேய் மன நலனை எந்த அளவுக்கு காலநிலை மாற்றத்தால் உண்டாகும் புயல், கடும் மழை பாதிக்கின்றன என்பதை படம் உணர்த்துகிறது. இதுவரை நாம் கவலை கொள்ளாத, கண்டுகொள்ளாத தாய் சேய் மனநலன் மேல் இந்தக் குறும்படம் ஒளிபாய்ச்சுகிறது. இதன்மேல் அரசும் கவனம் செலுத்தவிருப்பதாக திமுக சுற்றுச்சூழல் அணிச்செயலாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி கூறுகிறார். புயல்களால் மக்கள் இடம்பெயர்வது, அவர்களுக்கு சரியான மனநல ஆலோசனைக்கான வழிகிடைக்காமல் போவது பற்றி உள்ளார்ந்த அக்கறையுடன் படம் பேசுகிறது.

காலநிலை தாக்கத்தை குறைத்தாலும்கூட, 2 முதல் 2.5 டிகிரி வரை வெப்பம் உலகளவில் அதிகரிக்கக்கூடும் என்றும், இதனால் ஏற்படவிருக்கும் தண்ணீர்த் தட்டுபாடுக்கு என்ன செய்யப்போகிறோம் என்பதும் நம்முன் கேள்வியாக முன்வைக்கப்படுகிறது. இதற்கான தீர்வுகளை படம் முன்வைக்கிறது.

பல்வேறு துறைசார் நிபுணர்களின் நேரடி பேட்டிகள் முக்கியமானவையாக அமைகின்றன. மருத்துவர்கள், சூழலியல் செயற்பாட்டாளர்கள், தாய் சேய் நல உதவியாளர்கள், பாதிக்கப்பட்டவர்கள் என சம்பந்தப்பட்ட அத்தனை ‘ஸ்டேக் ஹோல்டர்களுடன்’ பேசுவதன் மூலம் நம் எதிர்காலத்துக்கு என்ன தேவை என்பதை அலசி ஆராய இந்தப் படம் பெரிதும் உதவியிருக்கிறது. காலநிலை மாற்றம் என்ற பெரும் சிக்கலை அவிழ்ப்பது, நாம் அனைவரும் ஆளுக்கொரு கை தந்தால் மட்டுமே சாத்தியம் என்பதை தெளிவாக விளக்கும் குறும்படம் ஃபிளட் பேபி. சமூகத்தில் ஒவ்வொருவருக்கும் இருக்கும் பொறுப்பை சுட்டிக்காட்டி தக்க நேரத்தில் இயக்குனர் கௌதமி எச்சரிக்கை செய்திருக்கிறார். என்ன செய்யப் போகிறோம்?

நிவேதிதா லூயிஸ், இணை இயக்குனர், ஹெர் ஸ்டோரீஸ்.