கேளடா, மானிடவா – 20

முதல் பதின் பருவத்திற்குப் பிறகு, 40களில் இரண்டாம் பதின் பருவம் வருகிறது. பதின் பருவம் என்பது எப்படி எல்லா மனிதர்களுக்கும் பொதுவானதோ அப்படித்தான் இந்த இரண்டாம் பதின்பருவமும் எல்லாருக்குமானது. ஆண், பெண், பால் புதுமையினர் என யாருக்குமே பாகுபாடு கிடையாது. இத்தனை வருடங்களாக அறிந்த தனது உடல், முற்றிலும் மாறுபட்டுப் புதிதாகத் தோற்றங்கள் காட்டுவது ‘மறுபடியும்’ இந்த வயதில்தான்.

Menopause – the ceasing of menstruation – the period in a woman’s life (typically between the ages of 45 and 50) when menstruation ceases.

என்று கூகுள் அர்த்தம் சொன்னாலும், இது எல்லா பாலினருக்குமானது.

என் தோழி சொல்வார். மெனோபாஸ் பெண்களை விட, ஆணிற்கானது. அதனால்தான் அதன் பெயரே, Men ‘o’ pause  என்று.

‘மேனொபாஸ்’, ‘மிடில் ஏஜ் க்ரைஸிஸ்’ என என்ன வேண்டுமானாலும் அறிவியல் பெயர் வைக்கட்டும்; பதின் பருவத்திற்கு இணையாக, சொல்லப்போனால் அதை விடவும் அதிகமாக பதின்பருவத்தின் அதே விதமான மாற்றங்களைப் பல மடங்கு எதிர்கொள்வது இந்த வயதினர்தான்.

பெண்களாக இருந்தால், ‘ப்யுபெர்ட்டி’ தொடங்கி இத்தனை வருடங்கள் கழித்து, ப்ரீயட்ஸ் நிற்கத் தொடங்குகிறது. 36வது வயதிலிருந்து இர்ரெகுலர் பீரியட்ஸ் தொடங்கும். 40லிருந்து 45 வயதுவரை, சிலருக்கு 50கள் வரை தொடரும்.

டாக்டரிடம் போனால், அது கேன்ஸரா என்று ‘பயாப்ஸி’ கொடுக்கச் சொல்வார்கள். மாத்திரை எழுதித் தருவார்கள். அது கேட்பது போல இருக்கும்; ஆனால், கேட்காது; மீண்டும் மாத்திரையை மாற்றி எழுதித் தருவார்கள். ஸ்கேன் எடுக்கச் சொல்வார்கள்; எல்லாருக்குமே ‘உயிர் வெல்லம்’; எனவே, பயத்தை வைத்து, மிகப் பெரிய வியாபாரம் இதில் நடந்து கொண்டிருக்கிறது. 100க்கு ஒருவருக்கு ‘கேன்ஸர்’ என்றால், எல்லாரையுமே கேன்ஸர் டெஸ்ட் எடுக்க வைப்பது என்பது, என்ன நியாயம்? ஆனால், யாரையும் நாம் கேட்க முடியாது. 

சளிப் பிடித்தால் – ஒரு பழமொழி சொல்வார்களே அது போலத்தான். மாத்திரை எடுத்தால் ஒரு வாரத்தில் சரியாகும்; இல்லாவிட்டால் ஏழு நாட்களில் சரியாகும்.

இதுவே ஆண்கள் என்றால், எதையாவது எப்போதும் மறப்பது, தன் தவறுக்கும் எதிராளியைக் குறை சொல்வது, ‘சுள்’ளென்று விழுவது, ஏதோ யோசனையில் எப்போதும் ஆழ்ந்திருப்பது, தேவையில்லாமல் கோபப்படுவது, தனதுடலின் சிறிய உடல் உபாதைக்கும் ‘செத்து விடுவோம்’ லெவலுக்குப் பயப்படுவது, கண் பார்வையில் கோளாறு என்றால் கூட, ஆண்மைக் குறைவோ என யோசிப்பது என வித விதமாக வெளிப்படும்.

முன்பிருந்ததை விடவும் ஆண்மைக் குறைவு சார்ந்த பயங்கள், முன்பைப் போல இப்போது செயல்பட முடியவில்லையே… ‘ஆண்மையற்று விட்டோமோ’ என்கிற சந்தேகங்கள், தன்னை தன்னுடலை உற்று நோக்கி அறியாமல் – அதே முதல் பதின் பருவத்தினதைப் போலவே இப்போதும் தனதுடல் மாற்றக் காரணிகளை – பெண்ணின் மேலேயே தேடுவது என இருக்கும்.

ஆரோக்கியமாகச் சிந்திக்கும், உண்மையை ஆராயும், தன்னைச் சிந்தனை விரிவு செய்து கொண்டே இருக்கும் ஆண்கள் இந்த இரண்டாம் பதின் பருவத்தை, முதலை விடச் சிறப்பாகக் கையாள்வார்கள். சிறு வயதில் எப்படியாக இருந்தாலும், அதைச் சமன் செய்யும் விதத்தில் பொறுப்பானவர்களாகவும் கண்ணியமானவர்களாகவும் இருப்பார்கள்.

அப்படி அல்லாதவர்கள், நடுத்தர வயதின் வக்கிரங்களைச் சுமந்து திரிபவர்களாக நடந்து கொள்கிறார்கள்.

ஒரு வீட்டைப் பொருத்தவரை, பொருளாதாரக் கடமைகள், பொறுப்புகள், கவலைகள் சம்பாதிக்கிற எல்லாருக்குமானது. போன தலைமுறையில் இது ஆண்களுக்கு மட்டுமே என்பதாக இருந்தது. இப்போது அப்படி இல்லை.

நாற்பதுகளில் எல்லாருக்குமே சலிப்பான, ஒரு தேக்க நிலை ஏற்படுகிறது.  நாற்பதுகள் வரை பொறுத்துப் போன விசயங்கள் எல்லாம் இப்போது வெடிக்க ஆரம்பிக்கின்றன.

வீட்டில் பிள்ளைகள் தாமாகத் தனது வேலைகளைச் செய்யும் பருவத்திற்கு வளர்ந்திருப்பார்கள். எனவே வீட்டில், பெற்றோரது டிபெண்டென்சி குறையத் தொடங்கி இருக்கும். அதனாலேயே ஒரு வெற்றிடத்தை உணர்வார்கள். கூடவே, உடல் படுத்தும். யாருக்கும் வேண்டாதவர்களாக ஆகி விட்டோமோ என்கிறத் தவிப்பு இருந்து கொண்டே இருக்கும். மற்றவர்களின் சிறிய அக்கறைகளில் கூட புதிதான உறவுகள் முளைவிடத் தொடங்கும். மிகப் பெரிய வாழ்க்கை ஓட்டத்திற்குப் பிறகு, இப்போதுதான் நின்று நிதானித்து தன்னைத் தானே முற்றிலும் புதிதாகக் கவனிக்கத் தொடங்குவது நிகழும்.

மறதி, கோபம், இயலாமை, நம்மைப் பற்றிப் பெரிதாக நினைத்துக் கொள்வது, குறைவாக நினைத்துக் கொள்வது, பயப்படுவது, என பதின் பருவத்தின் அத்தனை குணங்களுமே ‘ரிப்பீட்’டாகும். இவை கூடவே, இந்தனை வருடங்களின் அறிந்த அனுபவ ‘சலிப்பு’ உணர்வும் சேர்ந்து கொள்ளும்.

Photo by Eric Ward on Unsplash

மனைவிக்குக் கணவரிடமோ, கணவருக்கு மனைவியிடமோ, இருவருக்கும் குழந்தைகளுடனோ, தமது பெற்றோர்களுடனோ முரண்பாடுகள் கூடிக் கொண்டே வரும்; சின்னச் சின்ன முரண்களும் பூதாகரமாகத் தொடங்கும்; சிலர் எப்போதும் எரிந்து விழுவார்கள்.

பொதுவாக, நமதுடலை நாம் ஆழ்ந்து உணர்வதோ, உற்று நோக்குவதோ குறைவு. ஆண் பெண் என்கிற வகைமைகளில் அல்லாமல், எல்லா வகையினரிலுமே, அடிப்படையாக இரண்டு வகையான வேறுபாடுகளில் இருப்பவர்களைக் காணலாம்.

பிறக்கும்போதே குறித்த நாள் தாண்டிப் பிறக்கிற குழந்தைகள், சற்று முன்பாகவே பிறப்பவர்கள்… இந்த குறைந்தபட்ச வகைமையில் தொடங்கி, அதன் வித வித வண்ணங்ககளில் இது கிளை விரியும்..

சைவம், அசைவம் என இரு வகை முக்கிய வித்தியாசங்கள் தொடங்கி, இது நீளும்.

ஒருவர் சுயம்பு ஆனால் தனக்கான எதையும் தான் தேர்ந்தெடுக்காமல் பிரபஞ்சம் தருவதை அப்படியே ஏற்பவர், இன்னொருவர் தனது ஒவ்வொன்றையும் தேர்ந்து வாழ்பவர்.

ஒருவருக்கு வியர்வை அதிகமாகக் கொட்டும்; மின் விசிறி கட்டாயம் வேண்டும்; இன்னும் வசதி படைத்தவராக இருந்தால், ஏசி வேண்டும். கூட வாழும் இன்னொருவருக்கோ வியர்வையே வராத உடம்பு; அவருக்கு மின் விசிறியை மெதுவாகச் சுழல விட்டால்கூடப் பிடிக்காது.

ஒருவர் வேலை செய்யும் இடத்தைக் குப்பைக் கூளமாகத்தான் வைத்திருப்பார்; இன்னொருவர் தான் வேலை செய்ய ஆரம்பிக்கும் முன் அந்த குப்பைக் கூளமில்லாமல், எல்லாவற்றையும் அழகாக அடுக்கி சுத்தமாக அமைத்த பிறகுதான் வேலையைத் தொடங்குவார். இதே போலத்தான் அவருக்கு தூங்குமுன் தூங்கி வழிந்துகொண்டே கூட தனது தூக்க அமைப்பிற்கான வேலைகளை எல்லாம் செய்து முடித்தபின் தான் அவரால் நிம்மதியாக உறங்கவே முடியும். இவர்களுக்கு குறைந்த தூக்கமே கூட போதும். அவ்வளவு விழிப்பாக மலர்ச்சியாக இருப்பார்கள். ஆனால் மற்றவருக்கோ, படுத்ததும் தூங்கிவிடுவார்கள்; இடியே விழுந்தாலும் தெரியாது; அவ்வளவு நேரம் தூங்கி எழுந்த பின்பு கூட, பிறகு எப்போது தூங்கச் சொன்னாலும் தூங்கிவிடுவார்கள்.

ஒருவருக்கு முட்டை என்றால் உயிர்; மற்றவரோ முட்டையைப் பார்த்தாலே அலர்ஜி ஆவார். இவருக்கு வாசனை, சாம்பிராணி, ஊதுவர்த்தி புகை ஆகியவற்றை அவ்வளவு இணக்கமாக உணர்வார்; மற்றவர் ‘பூ’ வாசத்திற்குக் கூட, தும்மல் போடுவார்.

ஒருவர் அதிகாலையில் விழிப்பும், இரவில் சீக்கிரமாகவும் தூங்கும் குணமுடையவர்; இன்னொருவரோ இராப்பறவை.

காகம் ஒருவகை; ஆந்தை மறுவகை.

ஒருவர் கழுத்தை அசைத்து வேகமாகப் பார்ப்பார்; இன்னொருவரோ தலையைக் கூட வேகமாக ஆட்டமாட்டார்; கண்களால்தான் சுழற்றிப் பார்ப்பார்.

ஒருவர் ஒவ்வொரு வேலையாகச் செய்வார்; எளிதாகச் சொல்ல வேண்டுமானால், ‘எரிமலை’ போல ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு முறை சென்று வேலை செய்வார்; இன்னொருவரோ, ஒரே தடவையில் அனைத்தையும் செய்துவிட்டு, ‘அக்கடா’ என்று இருப்பார்.

தன்னால் முடியாத ஒன்றை அவர் எளிதாகச் செய்கிறாரே என்று ஒருவருக்கு மற்றொருவர் மேல் வியப்பு; அதுவே சிலசமயம், ‘ஏன் இவ்வளவு சுற்றி வளைத்துப் பேசுகிறார்கள்’, ‘எளிதாகச் செய்ய வேண்டிய ஒன்றை ஏன் இத்தனை கஷ்டப்பட்டு வேலை செய்வதாக ‘காட்டிக்கொண்டு’ செய்கிறார்கள் என்கிற புரிந்துகொள்ளாமையாகவும் ஆகிறது.

ஒருவர் அத்தனை தின்பார்; ஆனால், ஸ்லிம்’மாக இருப்பார். இன்னொருவர் எத்தனை உடற்பயிற்சிகள் செய்தாலும், எத்தனை ‘டயட்’ இருந்தாலும் குண்டாக இருப்பார். இது அவரவர் உடல்வாகு.

இந்த மருத்துவங்கள், ஆராய்ச்சிகள், கணக்கெடுப்புகள் எல்லாம் செய்வதற்கு முன்பு ‘நார்மல்’ இது ஆவரேஜ் இது என்றெல்லாம் தெரிவதற்கு முன்பு, அவரவர் அவரவரை அவரவராகவே உள்ளது உள்ளபடி ஏற்கும் காலத்தில் இவ்வளவு குழப்பங்கள் இல்லை. இப்போதும் எதற்கு கணக்கெடுப்பும் ஆராய்ச்சியும் பண்ண வேண்டுமோ அவற்றிற்கு செய்யாமல், எதில் தேவையில்லையோ அதில் செய்வது என்பது இழுக்க வேண்டிய கதைவைத் தள்ளிக் கொண்டிருப்பதற்கு ஒப்பாகும்.

சரி, இந்த வேறுபாடுகளை எப்படிக் களைவதாம்? அவரவரின் இயல்பான குணங்களில் எது ஒன்றும் சரியும் இல்லை, தவறும் இல்லை என்பது புரிந்தால், களைய வேண்டிய அவசியமே இல்லை. அவரவரை அவரவராக அப்படியே ஏற்பது நலம். எப்போதும் யாரிடமும் அடிப்படை மரியாதையும் அன்பும் மட்டுமே வேண்டும்.

Photo by Ronny Sison on Unsplash

அதே சமயம், ஒவ்வொருவரும் தனது தனித்துவத்தை இழக்காமல், வீட்டினரோடு இயைந்து, வேலைகளைப் பகிர்ந்து செய்யும் வழக்கம் இருந்தால் பிரச்சினைகள் வராது. ‘எனக்கு வராது; பழக்கமில்லை; பிடிக்காது’ என்பதெல்லாம் பொறுப்புகளுக்குக் கிடையாது; நமக்கு எப்படி சரியோ, அதே போலத்தான் மற்றவருக்கும் என்பதை உணர்ந்தால், நம்மை நாமே சரி செய்து கொள்ளத் தொடங்கி விடுவோம்.

ஃபேஸ்புக்கில் பெண் ஒருவர் தனது கணவருக்கு கடலைப் பருப்பிற்கும் துவரம் பருப்பிற்கும் வித்தியாசம் தெரியவில்லை என்பதைப் பகடி செய்திருந்தார். பிறகு அந்தப் பதிவின் கமெண்ட்ஸ் முழுவதுமே அவ்வாறான பகடிகளைக் காண முடிந்தது.

அதே போல பெண்கள் காரோட்டுவது, டூவீலர் ஓட்டுவது பற்றிய பகடிகளை ஆண்கள் செய்வார்கள்.

ஆண்கள் பல பெண்களிடம் உறவு கொள்வது அனுபவம், திறமை எனக் கொள்ளப்படுவதும்,

அதுவே பெண்கள் செய்தால், அவளை இழிவாகப் பேசுவதும்,

ஆண்களுக்கு சிகரெட், குடி போன்ற தீய பழக்க வழக்கங்கள் இருந்தால், அது அவனது ‘மேன்லினெஸ்’ஸாகப் பார்க்கப்படுவதும், அதுவே பெண் செய்தால், பெருங்குற்றமாகப் பார்க்கப்படுவதும் சரிதானா? தீயப் பழக்கம் இருவருக்குமே தீமையானதுதான். உடல் நலத்திற்கு கேடுதான். ஓருறவின் நம்பிக்கைக்கு மாறாக நடப்பது என்பது, அது யாராக இருந்தாலும் சம்பந்தப்பட்டவர்களுக்குள் பிரச்சினையான ஒன்றுதான்.

ஒரு கணவர் குழந்தைப் பருவத்தில் இல்லாவிடினும், திருமணமான 20 வருடங்களாகக் கூட்டவே தெரியாமல், சமைக்கக் கற்காமல் இருப்பது எந்த விதத்தில் நியாயம்? தமது பொறுப்புகளைத் தட்டிக் கழிக்கிறார் என்றுதான் அர்த்தம். போலவே, பக்கத்திலிருக்கும் கடைகளுக்கும் சிறிய டாகுமெண்டேஷன் எழுதுவதற்கும் கூட கணவர்தான் வர வேண்டும் என்று ‘தெரிந்து கொள்ளாமலே’ வாழும் மனைவியும் தமது பங்கு பொறுப்புகளைச் செய்யத் தவறுகிறார் என்றுதான் அர்த்தம். எந்த வேலையும் ஆண் வேலை பெண் வேலை என்று இருப்பதில்லை. அது வீட்டினருடைய வேலை; அவர்களுடைய பொறுப்பு; யாருக்கும் விருப்பமும் ஓய்வும் இருக்கிறதோ அவர் இயல்பாக எடுத்துச் செய்ய வேண்டும். அதற்கு பரந்த மனம் வேண்டும்.

‘டேக்கன் ஃபர் க்ராண்டட்’ ஆக இல்லாமல், ஓருறவைப் புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும். சின்னச் சின்ன அன்பளிப்புகள், பாராட்டு வார்த்தைகள், மகிழ்வான புரிதல்கள், எப்போதும் மென்மையான பகிர்தல்கள் இவை எல்லாருக்கும் அவசியம்.

நாற்பதுகளில் இரண்டாம் பதின்பருவம் ஏற்படுவது போலவே, 70களில் மூன்றாம் பதின் பருவம் வருகிறது. பதின் பருவ குழந்தைகளை விடவும், 40 ப்ளஸ் மத்திய வயதினரை விடவும் இவர்கள் பெரும் பிடிவாதமாக நடந்து கொள்வார்கள். வாழ்வின் எல்லாவற்றையும் பார்த்துவிட்டதினால், பெரியவர்கள் என்கிற மரியாதையும் சேர்ந்து கொள்ள, தான் செய்வது மட்டுமே சரி என்பதான தன்மையில் இருப்பார்கள்.

Photo by Caleb Oquendo from Pexels

ஆனால், முதிய தம்பதிகளுக்கான ப்ரைவஸி கிடைக்கிறதா என்று பார்த்தால், இல்லவே இல்லை. அக்கறை என்பது வேறு; தலையீடு என்பது வேறு. இந்தியாவில்தான் பெற்றோர், தாம் சாகும் வரை பிள்ளை வளர்த்திக் கொண்டிருப்பார்கள். போலவே, பிள்ளையின் வாழ்வில், தலையிட்டுக் கொண்டேவும் இருப்பார்கள். பிள்ளைகள் வளர்ந்து பெரிதாகி, பெற்றோரது ‘பிரைவஸி’யில் இதே தலையீடு பரஸ்பரம் நிகழ்கிறது.

நாற்பது ப்ளஸ் வயதில் உள்ளவர்களுக்குச் சொன்னதே போலத்தான், இவர்களுக்கென்று தங்களுடைய தனித்துவத்தை இழந்து விடாமல், வீட்டினரோடு இயைந்த பகிர்தலான உரையாடல்களே எல்லாவற்றையும் சமன்படுத்தும்.

ஒவ்வொரு தனி மனிதரும் தன்னுடைய ‘வெளி’யை மதித்து, பிறருடையதில் தான் தலையிடாமல் கண்ணியம் காத்தால், தன்னையும் குறைத்துக் கொள்ளாமல், மற்றவரையும் பெருமையாக நடத்த முடியும்.

– கேளடா, மானிடவா நிறைவுபெற்றது –

தொடரின் முந்தைய பகுதி:

படைப்பாளர்

பிருந்தா சேது

சே.பிருந்தா (பிருந்தா சேது), கவிஞர். எழுத்தாளர். திரைக்கதை ஆசிரியர்.