யூடியூப் சேனல் ஒன்றில் நேற்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை மிகக் கேவலமாக சித்தரித்து கார்ட்டூன் நடனம் ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. அரைகுறை ஆடையில் அருவெறுக்கத்தக்க உடலசைவுகளுடன், அந்த கார்ட்டூன் மம்தா ‘பொம்மையை’ ஆடவிட்டிருந்தனர். தோழி ஒருவர் அதை யூடியூப் நிர்வாகத்துக்கு ரிப்போர்ட் செய்த ஸ்கிரீன் ஷாட்டைப் பகிர்ந்து அது குறித்து தன் வருத்தத்தை ஃபேஸ்புக்கில் பதிவு செய்திருந்தார்.

50 ஆண்டுகாலம் அரசியலில் காத்திரமாக இயங்கி வருபவர் மம்தா. நமக்குப் பிடிக்கிறதோ, இல்லையோ, மேற்கு வங்கத்தின் மிக முக்கியமான ஆளுமை அவர். ஆனால் அரைகுறை ஆடையுடன் அவர் ஆடுவதைப் போன்ற காணொலிக் காட்சிகளை வெளியிடுவது எவ்வளவு மோசமான மனநிலை?அரசியல் விமர்சனங்கள் முன்வைப்பது எந்த ஜனநாயகத்துக்கும் நன்மை பயக்கும்தான். அதில் ஐயமில்லை. கருத்தை கருத்தால் எதிர்கொள்வதுதானே ஆரோக்கியமான ஜனநாயகம்? அதை விடுத்து பெண் என்பதற்காக ஒரு தேர்ந்த முதிய அரசியல்வாதியை கொச்சையாக சித்தரிப்பது மிகக் கேவலமானது. எப்போதாவது ஆண் அரசியல்வாதிகளை இவ்வாறு சித்தரித்து ‘ஐட்டம் டான்ஸ்’ (இந்த சொல்லாடலே பெண்ணை முன்வைத்துதான்!) ஆடவைத்த வீடியோக்கள் வந்துள்ளனவா?

பொது வாழ்க்கையில் ஈடுபடுவதாலேயே ஒரு பெண் ஆணின் தொடர்ச்சியான ‘கவனிப்பு வளையத்துக்குள்’ வந்துவிடுகிறாள். அவள் சொல்வது, செய்வது அனைத்தும் இங்கே ‘ஆண் லென்ஸ்’ கொண்டே பார்க்கப்படுகிறது; விமர்சிக்கப்படுகிறது. பொது வெளியில் இயங்கும் பெண்கள் அதீத ஜாக்கிரதை உணர்வுடன் ஒவ்வொரு நொடியும் ஆணின் விமர்சனப் பார்வைக்கு அஞ்சித்தான் வாழவேண்டியுள்ளது என்பது மறுப்பதற்கில்லை.

இங்கே ஆணுக்கான மதிப்பீடு வேறு, பெண்ணுக்கான மதிப்பீடு எப்போதும் வேறுதான். வெற்றி பெறும் ஆண் தன்முயற்சியால் முன்னேறியிருக்கிறான் என்பதும், வெற்றி பெறும் பெண் ‘அட்ஜஸ்ட்’ செய்துதான் வெற்றிபெறுகிறாள் என்பதும் எவ்வளவு பெரிய முரண்? இதை அப்பட்டமாக பேசிய அரசியல்வாதியை இன்னும் எதுவும் செய்ய முடியாத சமூக சூழலில்தானே நாம் இன்னமும் வாழ்கிறோம்?

ஒரு பெண்ணை சாய்த்துவிடவேண்டும் என்றால், அவளது உடலை கேலிக்குரிய பொருளாக்கலாம் என்பது ஆண்மைய சிந்தனை ஓட்டத்தின் அலகுதான். அவள் உடலை, தோற்றத்தை கொச்சைப்படுத்துவதன் மூலம், அவளை மூலையில் உட்காரவைத்துவிடவேண்டும் என்ற ஆணாதிக்க வெறிதான் இவ்வாறான செயல்பாடுகளில் ஆண்கள் ஈடுபடக் காரணமாகிறது.

இதை எப்படித்தான் எதிர்கொள்வது? நேற்று இந்த வீடியோவின் சுட்டி கிடைத்ததும், சில பெண்கள் அதை ரிப்போர்ட் செய்தோம். சில ஆயிரம் பேர் அதற்குள் அதை லைக்கிட்டு, பகிர்ந்துள்ளனர். மூல வீடியோ அதைப் பதிவேற்றியவர்களால் அழிக்கப்பட்டுவிட்டது. ஆனால் அதை பதிவிறக்கம் செய்தவர்கள் மீண்டும் அதே வீடியோவை வேறு சானல் பெயரில் பதிவேற்றி இருக்கிறார்கள். எவ்வளவு வக்கிரம் பாருங்கள்.

பெண்ணை உடலாகவும், சதைப் பிண்டமாகவும் பார்க்கும் இந்தப் பாங்கு இளைய சமுதாயத்திடமாவது மாறவேண்டிய அவசியமிருக்கிறது. வீடுகளில் பெண்ணுடல் குறித்த உரையாடல்களை தயவுசெய்து பதின்பருவ ஆண் குழந்தைகளிடம் தொடங்குங்கள். கருத்தை கருத்தைக் கொண்டே சண்டை செய்யவேண்டும் என்பதைப் புரியவையுங்கள். இப்படியான சித்தரிப்பால் வெற்றிகரமானப் பெண்களை எவ்விதத்திலும் அசைக்க முடியாது என்பதையும் தெளிவாக்குங்கள். இன்று ‘ஜாலி’க்காக இதைச் செய்பவன் தன்வீட்டுப் பெண்ணை மட்டும் எப்படி வக்கிரமின்றிப் பார்ப்பான் என்ற கேள்வியை முன்வையுங்கள்.

நாம் சண்டை செய்ய வேண்டிய களம் என்ன என்ற தெளிவை வீட்டுப் பெண்களிடம் உருவாக்குதல் அவசியமாகிறது. பெண் பிள்ளைகளிடம் இவ்வாறான இணைய தாக்குதல்களை எதிர்த்து சண்டை செய்யப் பழக்குங்கள். இவ்வாறான வக்கிர வீடியோக்களைப் பார்த்தால், அதற்கு ஒரு சில மணித்துளிகள் ஒதுக்கி பெண்களும், சக ஆண் தோழர்களும் ரிப்போர்ட் செய்யப் பழகுவோம். பெண்களாக நம் பொறுப்பு இது. (இதே அளவீடு எல்லா கட்சியைச் சேர்ந்த பெண்களுக்கும் உண்டா என்ற கேள்வியை முன்வைக்காதீர்கள். யார் இதை அதிகம் செய்வது என்ற கேள்வியை உங்களுக்குள் கேட்டு விடை காண் முயலுங்கள்.)