சமீபத்தில் படித்த செய்தி ஒன்று எனக்கு இன்றுவரை மன உளைச்சலைத் தந்து கொண்டே இருக்கிறது. ராஜஸ்தான் மாநிலம், கோட்டாவில் நாற்பது வயதுப் பெண் ஒருவர், தனது ஐந்து பெண் குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அந்த ஐந்து குழந்தைகளின் வயது  முறையே 14, 8, 6,4 மற்றும் 1.  அனைவரும் இறந்து விட்டனர். இனி அதைப்பற்றிப் பேச என்ன இருக்கிறது என்று கூட நமக்கு எண்ணம் எழலாம். இந்தச்சம்பவம் ஒற்றைக் குடும்பத்து நிகழ்வு என்று என்னால் கடந்து போக முடியவில்லை. 

குடும்பப் பிரச்னைகள் காரணமாகவோ, பொருளாதாரச் சூழல் காரணமாகவோ இவ்வாறான முடிவை நோக்கி ஒரு பெண் நகரும்போது, அவளுக்கு ஆதரவுக்கரம் நீட்ட குடும்பத்தில், பொதுவெளியில் ஒருவர் கூட இல்லை என்பது அடிப்படையான உண்மை. அதைக் கடந்து, குழந்தைப்பேறு என்பதை வம்சத்தின் தொடர்ச்சி என்றும் பெண்ணாகப் பிறந்ததன் முழுமைப்பொருள் என்றும் கொண்டாடும், புனிதப்படுத்தும் குடும்பம் மற்றும் சமூக அமைப்புகள், மிகச்சிறிய அளவிலேனும் தாயானவளின் மனச்சுமையைப் பகிரக்கூட முன்வருவதில்லை என்பதும் முகத்தில் அறையும் உண்மை.

நமது தமிழ்ச்சமூகக் கதைப்பரப்பில் பல்லாண்டுகளாக சொல்லப்பட்டு வரும் இது போன்ற ஒரு நிகழ்வு நினைவுக்கு வருகிறது. இன்றைய விருதுநகர் மாவட்டம் , ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அர்ச்சுனாபுரத்தை ஆட்சி செய்த நல்லதம்பியின் சகோதரி நல்லதங்காள், மானாமதுரையில் உள்ள காசிராஜாவிற்கு மணமுடிக்கப்படுகிறாள்.  நான்கு ஆண் மற்றும் மூன்று பெண் குழந்தைகள் அவளுக்குப் பிறக்கின்றன. அங்கு மழைபொய்த்து, பஞ்சம் பரவியதால், ஒரு வேளை சோற்றுக்குகூட வழியின்றி தாய் வீட்டிற்கு தன் குழந்தைகளுடன் நல்லதங்காள் வருகிறாள்.

அவளது அண்ணி மூளியலங்காரி எதுவும் சாப்பிடத்தராமல், தரக்குறைவாகப் பேசினாள். மனமுடைந்துபோன நல்லதங்காள் தன் ஏழு குழந்தைகளையும் கிணற்றில் வீசியெறிந்து, தானும் குதித்து தற்கொலை செய்துகொண்டாள். இன்றும்கூட கோவில் திருவிழாக்களில் நல்லதங்காள் கதை நடிக்கப்பட்டால், நல்லதங்காளின் துயருக்கு பார்வையாளராய் இருக்கும் பெண்கள் அனைவரும் அழுது புலம்பி, மூளியலங்காரியின் கேடுகெட்ட செயலுக்கு, இல்லாத வசையெல்லாம் சொல்லி விடிய விடியப் பேசுவர்.

ஆனால், நல்லதங்காளின் கணவரான காசிராஜா என்ன ஆனார்? குடும்பத்தினரின் பசியாற்ற அவர் எந்த முயற்சியும் எடுக்கவில்லையா என்பது குறித்த தெளிவான தகவல்கள் கதைகளில் சொல்லப்படுவதில்லை. போலவே, நல்லதம்பியைப் பற்றிய தகவலும் நம்மிடம் இல்லை. மிகவும் எளிமையாக, குழந்தைகளின் பொறுப்பை முழுமையாக நல்லதங்காளின்மேல் சுமத்தி, அதை நிறைவேற்றாத குற்றவுணர்வுக்கு அவளை ஆளாக்குவதோடு நில்லாமல், மூளியலங்காரியின் கதாபாத்திரத்தை, பெண்ணுக்கு பெண்ணே எதிரி எனும் பிற்போக்கு கருத்தை வலியுறுத்தவும் இந்தக் கதை வழிவகுக்கிறது.

இந்த தருணத்தில், என் மனதில் திரும்பத்திரும்ப ஒரே கேள்வி தான் மேலெழுகிறது. குழந்தைகளைப் பெற்றெடுப்பது உயிரியல் ரீதியாகப் பெண்ணின் செயல்பாடாக இருக்கிறது. ஆனால், எல்லாக் காலகட்டத்திலும், அக்குழந்தைகளை  உணவு, உடை, இருப்பிடம் அளித்து, வளர்த்து, ஆளாக்கும் முழுக் கடமையும் ஏன் பெண்ணின் மேல் முழுமையாக சுமத்தப்படுகிறது?  குடும்பத்திலும், சமூகத்திலும்  இந்தக் கடமை சார்ந்து, உளவியல் ரீதியாக பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தான் எத்தனை எத்தனை?

தேசத்தின் கடைக்கோடியில் தமிழகத்தில் நானூறு வருடங்களாகப் புழங்கி வரும் நல்லதங்காள் கதை, இன்னும் உயிர்ப்புடன் வடகோடியில் உள்ள ராஜஸ்தான் மாநிலத்தில் ஏன் இந்த இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில்  நிகழ வேண்டும்?

குழந்தைகளைக் காப்பாற்றும் பொறுப்பு பெண்ணுடையது மட்டுமே என்ற பெருஞ்சுமை தாளாமல்தானே பிஞ்சுக் குழந்தைகளைக் கிணற்றில் வீசி எறிய அந்தப் பெண் துணிந்திருக்கிறாள்? அந்த அளவுக்கு செல்லாவிடினும், நம்மைச் சுற்றி உள்ள குடும்பங்களில், சற்று குறைவான வீரியத்துடன் இதே பிரச்சினை உலவத்தானே செய்கிறது? 

அவற்றை நாம் கொஞ்சம் கவனிக்க முற்படுவோம். சக பெண்களின் துயர்களுக்கு தீர்வு தர முடியாமல் போகலாம். ஆனால், அவர்களின் துயரங்களுக்கு செவிமடுக்க சிறிது நேரமும், ஆறுதல் வார்த்தைகளும்கூட இவ்வாறான முடிவுகளுக்கு அவர்கள் செல்லாமல் தடுக்கக்கூடும். இனியொரு சம்பவம் இவ்வாறு நிகழக் கூடாது என்பது மட்டுமே என் மனதில் உறுதியாக நிற்கிறது.

****************************************************************************************************

படைப்பு:

ரஞ்சனி பாசு

நூல் விமர்சகர்.