“கடவுளே, நான் சிவப்பாகணும், வளர்த்தியாகணும், அழகாகணும்” என்று நாள் தவறாமல் பள்ளி செல்லும்முன் ‘அவள்’ கடவுளிடம் வேண்டிக்கொண்டாள். ‘நல்லா படிக்கணும், நல்ல பிள்ளையா இருக்கணும்’ என்கிற அவள் முந்தைய வேண்டுகோள் இப்படி மாறியது எப்போது என்று அவளுக்குத் தெரியும் முன்பே மாறியிருந்தாள், அவள் பிரார்த்தனை போல் அவளும்! ‘அந்த நாலு பேர்’ அவள் அறியாமலேயே அவள் வாழ்க்கையில் தலைகாட்டத் தொடங்கியபோது அவள் வயது 12.

தான் குழந்தையா, சிறுமியா, குமரியா என்றெல்லாம் அறிந்துகொள்ள அவள் முற்படும் முன் முந்திக்கொண்டார்கள் ‘அந்த நாலு பேர்’. “பொண்ணு அப்படியே அவங்க அப்பாவ மாதிரி இருக்கால்ல, உங்க நிறம் இல்லை” என்று அவள் இருக்கும்போதே அவள் அம்மாவிடம் வருத்தம் தெரிவித்தார்கள். கறுப்பான அப்பா மீது வராத கோபம், சிவப்பாக இருந்த அம்மா மீது வந்தது. அவளைவிட வளர்ந்திருந்த உடன்பிறப்புகள் மீது வந்தது. கறுப்பும் கட்டையும் அழகு இல்லை என்று அவளாக முடிவுக்கு வந்தாளா, இல்லை ‘அந்த நாலு பேரி’ன் வார்த்தைகள் அவளை அப்படி நினைக்க வைத்ததா என்பதை அவள் மட்டுமே அறிவாள். தன் தாழ்வுமனப்பான்மையை மறைக்க கோபம் என்கிற கவசம் உதவியது. அவள் மனப்போக்கைப் புரிந்துகொண்ட அம்மாவின் அன்பை உதற முடிந்தது.

“நீ பிள்ளைய அப்பவே கடலமாவும் மஞ்சளும் போட்டுக் குளிப்பாட்டியிருந்தா, உன்ன மாதிரி அவளும் சிவப்பாயிருப்பால்ல” என்று அம்மாவிடம் விசனப்பட்ட அந்தச் சிவப்பான பெரியம்மா மீது கோபம் வந்ததா என்று அவளுக்கு நினைவில்லை. “எங்கள் பிள்ளைகள் எல்லாம் கரறுப்புனாலும் நல்ல லட்சணம்” என்று அவளைப் பார்த்து புன்னகைக்கும் ஒரு பெரியம்மாவை இப்போதும் அவளுக்குப் பிடிக்கும்.

நிறத்தைக் கண்டுகொள்ளாமல் படிப்பிலும் பிற திறமைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று அவள் முடிவெடுக்கும் முன், ‘முகப்பரு’ முந்திக் கொண்டபோது அவள் வயது 14. ஒன்று, இரண்டு என்று தொடங்கி அவை முடிவிலியை எட்டிய நேரத்துக்காகவே காத்திருந்தது போல் மீண்டும் வந்தார்கள் ‘அந்த நாலு பேர்’.

ஒரு விசேஷத்துக்கு சக தோழிகளோடு விளையாடும் ஆசையில் சென்ற அவளுக்கு, கேட்காமலே கிடைத்தது ஒரு டஜன் வீட்டு வைத்தியமும் தலைவலியும். அடக்கி வைத்து வீட்டுக்கு வந்து வெடித்து சிதறிய அரைமணி நேர அழுகையும். இனி எங்கும் போவதில்லை என்று நினைத்துக்கொண்டாள்.

முகப்பருவோ தோலின் நிறமோ ஒரு விஷயமல்ல, ‘அந்த நாலு பேரி’ன் வார்த்தைகள் ஒரு பொருட்டல்ல. வெளியுலகில் காலடி எடுத்து வைத்துக் கடந்து செல்லும் பாதையில் ஒரு பெண் சந்திக்க வேண்டிய பிரச்னைகள் பல என்று அறியாத சிறுகுழந்தையான அவளை நினைத்து சிறு புன்னகை உதிர்க்கிறாள் இன்று.

காலம் கடந்து சென்றது. “ஆமா நான் அப்படியே எங்க அப்பா மாதிரிதான்” என்று பெருமையாக, அதே நேரம் அம்மா மீது எந்த வருத்தமும் இல்லாமல் மனதார சொல்லும் அளவுக்கு மாறியிருந்தாள்.

ஆனால், ‘அந்த நாலு பேர்’ மாறவில்லை. காத்திருந்தார்கள் அவளுக்காக. வேறு இடத்தில், வேறு உருவத்தில், வேறுவிதமாக அவள் வாழ்க்கையில் விளையாடுவதற்கு!

‘அந்த நாலு பேர்’ நல்லவர்களா, கெட்டவர்களா?

காத்திருங்கள்.

(தொடரும்)

படைப்பாளர்:

rbt

பி. அனிதா பாலகிருஷ்ணன்

பல்மருத்துவர். சிறுவயதுமுதல் தன் எண்ணங்களை கவிதைகளாக, கட்டுரைகளாக எழுதப் பிடிக்கும். நாளிதழ்கள், வலைத்தளங்களில் வரும் கவிதைப் போட்டிகள், புத்தக விமர்சனப் போட்டிகள் போன்றவற்றில் தொடர்ந்து பங்கேற்று பரிசுகளைப் பெற்றுவருகிறார். மாநில அளவிலான கவிதைப் போட்டி, செஸ் ஒலிம்பியாட், ரங்கோலி போட்டி போன்றவற்றில் பரிசுகளை வென்றுள்ளார். இயற்கையை ரசிக்கும், பயண விரும்பியான இவர் ஒரு தீவிர புத்தக வாசிப்பாளர்.