க்ரெட்டா துன்பர்க் (Greta Thunberg). காலநிலைத் தீர்வுகளுக்கான செயல்பாடுகளைத் தொடர்ந்து கவனிப்பவர்களுக்கு இந்தப் பெயர் பரிச்சயமானதாக இருக்கும். ஸ்வீடனைச் சேர்ந்த பதின்வயது காலநிலை செயல்பாட்டாளரான க்ரெட்டாவை உலகின் மிகவும் சக்திவாய்ந்த 100 பேரில் ஒருவராக டைம் இதழ் கொண்டாடுகிறது. அந்தப் பட்டியலில் இடம்பெற்றவர்களிலேயே மிகவும் இளையவர் க்ரெட்டாதான். பல முறை அமைதிக்கான நோபல் பரிசுக்கு க்ரெட்டாவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. களத்தில் இருந்தபடி காலநிலைத் தீர்வுகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் க்ரெட்டாவிற்கு வெறும் இருபது வயதுதான்!

எட்டு வயதுக்கு முன்புவரை க்ரெட்டாவின் வாழ்க்கை ஒரு சராசரி ஸ்வீடன் குழந்தையுடயதைப் போலத்தான் இருந்தது. காலநிலை மாற்றம் என்ற பிரச்னையைப் பற்றி எட்டு வயதாகும்போதுதான் க்ரெட்டா கேள்விப்படுகிறார். காலநிலை மாற்றத்தின் தீவிரத்தன்மை, அதற்கான எந்தத் தீர்வுகளும் இல்லாமல் இருப்பது ஆகியவை க்ரெட்டாவை மோசமாக உலுக்கவே, அவர் கடுமையான மனத்தொய்வுக்கு ஆளானார். உணவே உண்ணாமல் பல வாரங்கள் மன அழுத்தத்தில் இருந்தார். அதற்குப் பிறகு அவருக்கு Asperger’s Syndrome, Obssessive compulsive Disorder மற்றும் Selective Mutism ஆகிய நோய்கள் இருப்பது தெரியவந்தது. இந்தக் குறைபாடுகள் குறித்த சிறு விளக்கங்களைப் பார்த்துவிடலாம். அஸ்பெர்கர் குறைபாடு என்பது மற்றவர்களைப் புரிந்துகொள்வது, பேசுவது ஆகியவற்றில் இருக்கும் குறைபாடு. பெருவிருப்பக் கட்டாய மனப்பிறழ்வு அல்லது எண்ண சுழற்சி நோயால் (OCD) பாதிக்கப்பட்ட ஒருவர், திரும்பத் திரும்ப சில நடைமுறைகளைச் செய்வார். Selective mutism என்ற குறைபாட்டில் ஒரு சில நேரத்தில் மட்டுமே பேச்சாற்றல் இருக்கும், மற்ற சூழல்களில் பாதிக்கப்பட்டவர் பேசமாட்டார். க்ரெட்டாவின் போராட்டத்தைப் புரிந்துகொள்ள இந்த விளக்கங்கள் உதவியாக இருக்கும்.

க்ரெட்டாவுக்குப் பதினைந்து வயது இருக்கும்போது, அதாவது 2018ஆம் ஆண்டில் ஸ்வீடன் நாடாளுமன்றத்தின் வாயிலில் அமர்ந்து க்ரெட்டா ஒரு மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுத்தார். ‘காலநிலை மாற்றத்துக்கான பள்ளிப் போராட்டம்’ (School Strike for Climate Change) என்ற வாசகத்துடன் ஒரு பலகையைப் பிடித்துக்கொண்டு மூன்று வாரங்கள் அங்கேயே இருந்தார். க்ரெட்டாவின் போராட்டம் பலரைத் திரும்பிப் பார்க்க வைத்தது. இவர் யார், என்ன சொல்ல வருகிறார், இந்தப் போராட்டத்தை இவர் முன்னெடுக்கக் காரணம் என்ன போன்றவை எல்லாம் கவனிக்கப்பட்டன. பல செய்தித்தாள்களில் அவரது பேட்டிகளும் கட்டுரைகளும் இடம்பெற்றன. போராட்டம் பற்றிய க்ரெட்டாவின் ட்விட்டர் செய்தி, புகழ்பெற்ற பல செயற்பாட்டாளர்களால் கவனிக்கப்பட்டது. க்ரெட்டா மீது சமூக ஊடகங்களின் வெளிச்சம் விழுந்தது.

2018ஆம் ஆண்டில் காலநிலை செயல்பாட்டுக்கான ஐ.நா. சபை மாநாட்டில் கலந்துகொண்டு பேசினார். அவரது செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்ட லட்சக்கணக்கான இளைஞர்கள், Fridays for Future என்ற தன்னார்வல கூட்டமைப்பைத் தொடங்கி, காலநிலை மாற்றத்துக்கு எதிராகக் குரல் கொடுக்கத் தொடங்கினார்கள். 2019இல் காலநிலை மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, விமானத்தை விடுத்து ஒரு சிறு படகில் அட்லாண்டிக் பெருங்கடலில் பயணித்தார் க்ரெட்டா. நிகர பூஜ்ய கார்பன் செயல்பாடு (Carbon Neutral Activity) என்று இது பாராட்டப்பட்டது. கோவிட் பெருந்தொற்றுக் காலத்திலும் தன்னுடைய காலநிலை செயல்பாடுகளை விடாமல் க்ரெட்டா தொடர்ந்து வருகிறார்.

உலகளாவிய உச்சி மாநாடுகள், அமெரிக்க அரசின் கூட்டங்கள், போராட்டக் களங்கள், ஐ.நா சபைக் கூட்டங்கள் என்று முக்கியமான இடங்களிலெல்லாம் க்ரெட்டா உரையாற்றியிருக்கிறார். அவரது பேச்சுகள் எளிமையானவை, கூர்மையானவை, சொல்ல வந்ததை மிகக்குறைந்த வார்த்தைகளில் நறுக்குத் தெறித்தாற்போல சொல்லும் ஆற்றல் க்ரெட்டாவுக்கு உண்டு. “ஒரு வகையில் என்னுடைய பேச்சுக் குறைபாடு இதற்கு உதவியாகவே இருக்கிறது, தேவைப்படும் விஷயங்களை மட்டும் நான் பேசுவதற்கு அதுவே காரணம் என்று நினைக்கிறேன்” என்று க்ரெட்டா ஒருமுறை குறிப்பிட்டார். தன்னுடைய ஆஸ்பர்கர் குறைபாடு பற்றியும் க்ரெட்டா வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். “ஆஸ்பர்கர் குறைபாடு இருப்பவர்களெல்லாம் இப்படித்தான் இருப்போம். சுற்றி நடப்பதைப் பார்த்துவிட்ட பிறகும் கண்டும் காணாததுபோல் எங்களால் கடக்க முடியாது, அதுவே என் சூப்பர் பவராக மாறிவிட்டது” என்கிறார்.

ஒரு கூட்டத்தின்போது, “எங்களது குழந்தைப் பருவத்தைப் பறித்துக்கொண்டீர்கள். என்ன தைரியம் உங்களுக்கு?” என்று உலகத் தலைவர்களைப் பார்த்து க்ரெட்டா எழுப்பிய கேள்வி எல்லாரையும் உலுக்கியது. “நம் வீடு பற்றி எரிகிறது. இது சிந்திக்க வேண்டிய நேரம் அல்ல, பதறவேண்டிய நேரம்” என்ற க்ரெட்டாவின் சொற்கள் காலநிலைப் போராட்டங்களில் பயன்படுத்தப்படுகின்றன. “ஒன்றும் மாறவில்லை. எல்லாம் ப்ளா ப்ளா ப்ளா. இந்த மாநாடு ஒரு தோல்விதான்” என்று காலநிலை உச்சி மாநாட்டை அவர் விமர்சித்தார். அந்த விமர்சனம் உலக நாடுகளின் வழவழா கொழகொழா செயல்பாடுகளைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்திக் கேள்வி கேட்டது. “நமது அரசியல்வாதிகள் செயல்படுவதற்கு யாருக்கும் காத்திருக்கத் தேவையில்லை, இப்போதே தங்கள் வேலையை அவர்கள் தொடங்கலாம். ஆனால், பெரும்பாலானோர் எதுவும் செய்ய வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கிறார்கள்” என்று ஒரு கூட்டத்தில் ஆவேசமாகப் பேசினார். அதை எல்லா காலநிலை செயல்பாட்டாளர்களும் ஆமோதிக்கின்றனர்.

உலகளாவிய ஆதரவாளர்களைக் கொண்டவராக இருக்கிறார், வெளிப்படையாகக் கேள்வி கேட்கிறார், தங்களது போதாமைகளைத் துல்லியமாக எடுத்துக்காட்டி விமர்சிக்கிறார், செயல்படவில்லை என்பதை எல்லாருக்கும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார், சும்மா புள்ளி விவரங்களை எல்லாம் காட்டி மழுப்பி நழுவலாம் என்று பார்த்தால் தீர்வுகள் எங்கே என்று கேட்கிறார். எதிர்த்தரப்பு க்ரெட்டாவை வெறுக்க இவை எல்லாம் போதாதா என்ன! அரசியல் தலைவர்கள், எண்ணெய் நிறுவனங்கள் போன்றோருக்கு க்ரெட்டா ஒரு சிம்ம சொப்பனமாகத் தெரிந்தார். ஆனால், பதிலடி கொடுக்கத் தகுந்த ஆதாரங்கள் தங்களிடம் இல்லை என்பதால் மிகவும் கீழ்த்தரமான செயல்பாடுகளில் இறங்கியது எதிர்த்தரப்பு. அவரைக் கேலி செய்வது, அவரது ஆஸ்பர்கர் குறைபாட்டை சுட்டிக் காட்டுவது, வயதில் சிறியவர் என்று கிண்டலடிப்பது, உருவ கேலி என்று எல்லாமே நடந்தன.

மடியில் கனமில்லை என்பதாலோ என்னவோ, பயமில்லாமல் தன் வழியில் பயணித்தார் க்ரெட்டா. உலகத் தலைவர்கள் தன்னைப் பற்றி வைக்கும் விமர்சனங்களை அப்படியே ட்விட்டர் தன்விவரமாகப் (Twitter Bio) பதிவிடுவார். “ஆமாம் நான் அப்படி என்றே வைத்துக்கொள்ளுங்கள், ஆனால், உங்களது காலநிலைத் தீர்வு என்ன?” என்று மறைமுகமாகக் கேள்வி எழுப்புவார். அட்டகாசமான பதிலடிகளையும் அவ்வப்போது வழங்குவார். “க்ரெட்டா முன்கோபக் குறைபாடு கொண்ட ஒரு பதின்வயது சிறுமி. இதை நீக்க அவர் முயற்சி செய்யலாம். நண்பர்களுடன் படம் பார்க்கலாம், கோபத்தைக் குறைத்துக்கொள்ளலாம். அமைதிப்படுங்கள் க்ரெட்டா, அமைதிப்படுங்கள்” என்று அப்போதைய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அவரைக் கேலி செய்தார். அதை அப்படியே தன்விவரமாக வைத்துக்கொண்டார் க்ரெட்டா. சில காலம் கழித்து தேர்தல் நேரத்தில் ட்ரம்ப் மிகவும் பதற்றத்துடன் செயல்படவே, “நீங்கள் நண்பர்களுடன் படம் பார்க்கலாம், கோபத்தைக் குறைத்துக்கொள்ளலாம். அமைதிப்படுங்கள் ட்ரம்ப், அமைதிப்படுங்கள்” என்று க்ரெட்டா ட்வீட் செய்தார்! ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், முன்னாள் பிரேசில் பிரதமர் பொல்சனாரோ உட்பட, க்ரெட்டாவை விமர்சித்து மூக்குடைபட்டவர்கள் ஏராளம். “அறுந்தவால்” என்பதுபோல ஒரு சொல்லால் பொல்சனாரோ க்ரெட்டாவை விமர்சிக்க, அடுத்த நாள் க்ரெட்டாவின் ட்விட்டர் தன்விவரத்தில் அறுந்தவால் என்று பொருள்தரும் போர்த்துகீசிய சொல் வந்து உட்கார்ந்துகொண்டது! அந்த விமர்சனத்தையும் க்ரெட்டா நகைச்சுவையாகவே எடுத்துக்கொண்டார்.

உலகளாவிய தலைவர்களின் இந்த மோசமான விமர்சனங்கள் உண்மையில் க்ரெட்டாவிற்கு மேலும் ஆதரவாளர்களைக் கொண்டுவந்து குவிப்பவையாகவே இருந்தன. “என்னைக் கேலி செய்கிறார்கள். என் குறைபாட்டையும் உருவத்தையும் விமர்சிக்கிறார்கள். அப்படியானால் என்ன அர்த்தம்? என்னிடம் வாதிட அவர்களால் முடியவில்லை என்றுதானே பொருள்?” என்று க்ரெட்டா கேள்வி எழுப்பினார். அவர்களது போதாமையை மீண்டும் வெளிச்சம் போட்டுக் காட்டினார். உயர்மட்டம் முதல் சாதாரண குடிமக்கள் வரை க்ரெட்டாவை விமர்சிக்கும் பெரும்பாலானோர் வெள்ளை இனத்தைச் சேர்ந்த, வலதுசாரி கருத்தாக்கம் கொண்ட நடுத்தர வயது ஆண்கள்தாம் என்கிறது ஒரு புள்ளிவிவரம். க்ரெட்டாவின் கேள்விகள் யார் வயிற்றில் புளியைக் கரைக்கின்றன என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது. வலதுசாரி மனநிலை, ஆண்மைய சிந்தனை ஆகியவற்றுக்கு எதிராக க்ரெட்டா என்ற ஒரு தனி இளம்பெண் விஸ்வரூபமெடுத்து நிற்கிறார். அதை அவர்களால் ஏற்க முடிவதில்லை.

விமர்சனங்களின் உச்சகட்டமாக, 2020ஆம் ஆண்டில் கனடாவைச் சேர்ந்த எக்ஸ் சைட் எனர்ஜி என்ற ஆற்றல் நிறுவனம், ஒரு சிறுமியின் பின்னலைப் பிடித்து இழுத்து வன்புணர்வு செய்வதுபோன்ற ஒரு கேலிச்சித்திரத்தை உருவாக்கியது. அதற்கு ‘க்ரெட்டா’ என்று தலைப்பிட்டு துண்டுசீட்டுகளாக அச்சிட்டு எல்லாரிடமும் அந்த நிறுவனம் விநியோகித்தது. உண்மையில் எண்ணெய் நிறுவனங்கள் எந்த அளவுக்குக் கேவலமாக இயங்கும் என்பதை அந்த நிகழ்வு உறுதிப்படுத்தியது. அப்போது க்ரெட்டாவுக்கு 18 வயதுகூட முடிந்திருக்கவில்லை. எதிர்த்துக் கேள்வி கேட்கும் ஒரு குழந்தையை வன்புணர்வு செய்வதாக அந்த நிறுவனம் சித்தரித்திருந்தது. அந்தச் சித்தரிப்பை ஒரு மறைமுக எச்சரிக்கையாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தத் துண்டுசீட்டு எச்சரிக்கை பலரை உறைய வைத்தது. “இதைச் செய்தது நாங்கள் இல்லை” என்று எக்ஸ் சைட் நிறுவனம் வழக்கம்போல் கையை விரித்தாலும், “இவர்கள் இந்த அளவுக்கு மோசமாக இறங்கக் கூடியவர்கள்தாம்” என்று காலநிலை செயல்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

உலக அளவில் இளைஞர்களிடையே காலநிலை செயல்பாடு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியதில் க்ரெட்டாவின் பங்கு முக்கியமானது. அவரது செயல்பாடுகளால் உந்தப்பட்டு 150 நாடுகளில் உள்ள பதின்பருவத்தினர் காலநிலை செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். க்ரெட்டாவைப் பார்த்து ஊக்கம் பெற்று இவ்வாறு இளைஞர்கள் களத்தில் இறங்குவது ‘Greta Effect’ என்று அழைக்கப்படுகிறது. சமகால சூழல் வரலாற்றில் க்ரெட்டா ஏற்படுத்தியிருக்கும் சலசலப்பு மிகவும் முக்கியமானது, அவசியமானதும்கூட.

க்ரெட்டாவைப் பற்றிப் பேசும்போது, ஊடகங்களில் காலநிலை செய்திகள் முன்னிறுத்தப்படுவதில் உள்ள அரசியலையும் நிச்சயமாக நாம் விவாதிக்கவேண்டும். க்ரெட்டா ஒரு முன்னோடிதான், அதில் எள்ளளவும் சந்தேகமில்லை. ஆனால், க்ரெட்டாவுக்குப் பிறகு ஒவ்வொரு நாட்டிலும் பல இளம் வயதினர் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். ஆனால், பொது ஊடகங்களில் அவர்களுக்குப் போதிய முக்கியத்துவம் தரப்படுவதில்லை. இந்தியாவின் லிஸிப்ரியா கங்குஜம், உகாண்டாவின் லியா நமுகெர்வா, பெல்ஜியத்தின் அனுனா டி வெவர், அமெரிக்க தொல்குடியான ஜியுடெஸ்காட்ல் மார்டினெஸ் என்று பலர் இதற்காகப் போராடி வருகின்றனர். மூன்றாமுலக நாடுகளைச் சேர்ந்த, வெள்ளை இனத்தவரல்லாத இவர்களின் போராட்டங்கள் வெளிச்சத்துக்கு வருவதில்லை. இது நிச்சயம் க்ரெட்டாவின் தவறல்ல, ஊடகங்கள் க்ரெட்டாவை மட்டும் கவனிப்பதே இதற்குக் காரணம். இதன் உச்சகட்டமாக, ஒரு முக்கியமான நிகழ்வின் புகைப்படத்தில் கறுப்பின செயற்பட்டாளரின் உருவத்தை வெட்டிவிட்டு வெள்ளை இனத்தவர்களை மட்டுமே காட்சிப்படுத்தும் கேலிக்கூத்தும் நடந்தது. இந்த உலகத்தை வெள்ளை இனத்தவர்கள்தாம் மீட்டெடுக்கிறார்கள் என்கிற White Saviour Complex மனநிலையின் வெளிப்பாடு இது!

பல நூறு பேரைச் சூழலியல் செயல்பாட்டில் ஈடுபடுத்தியிருக்கும் க்ரெட்டா தொடர்ந்து பேசிவருகிறார். செயல்பாடுகளைத் தொடர்கிறார். அவரால் உந்தப்பட்டு உலகெங்கிலும் ஓர் இளைஞர் பட்டாளமே இணைந்து காலநிலை மாற்றத்துக்கு எதிராகப் போராடி வருகிறது. வெகு விரைவில் இவர்கள் தரும் அழுத்தம் தாளாமல் உலகத் தலைவர்கள் செயல்படத் தொடங்குவார்கள் என்பதே அனைவரது நம்பிக்கை.

சூழல்சார் போராட்டங்களில் பெண்கள் பங்குபெறுவது குறித்த விவாதம் எழும்போதெல்லாம், பெண்களின் ஒரு குறிப்பிட்ட செயல்பாடே சூழலுக்கு எதிரானதுதானே என்று சொல்லப்படுகிறது. அது என்ன?

(தொடரும்)

படைப்பாளர்:

நாராயணி சுப்ரமணியன்

கடல் சார் ஆய்வாளர், சூழலியல் ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் என்ற பன்முக ஆளுமை இவர். தமிழ் இந்து உள்ளிட்ட முன்னணி இதழ்களில் சூழலியல், கடல் வாழ் உயிரினங்கள் குறித்து தொடர்ச்சியாக எழுதி வருபவர். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய ‘விலங்குகளும் பாலினமும்’ தொடர் புத்தகமாக வெளிவந்து, சூழலியலில் மிக முக்கியமான புத்தகமாகக் கொண்டாடப்படுகிறது!