ஓவியம் : சித்ரா ரங்கராஜன்

இந்தியாவையும் பாகிஸ்தானையும் போரின் விளிம்பிற்குக் கொண்டு வந்த வடக்கு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் சர்ச்சைக்குரிய காரகோரம் மலைகளில், சுற்றியுள்ள பிளவுபட்ட அரசியலில் இருந்து துண்டிக்கப்பட்ட ஓர் அமைதி பூங்காவாக ஹன்சா பள்ளத்தாக்கு வாழ்ந்துகொண்டிருக்கிறது. பைன் காடுகள், பழத்தோட்டங்கள் கிராமங்களைச் சூழ்ந்துள்ளன. அவற்றின் கூரைகளில் பாதாமி பழங்கள் காய்ந்து ஆரஞ்சு நிறத்தில் ஒளிரும். ஹன்சா பழங்குடி மக்கள் மிகவும் சாதகமான நிலப்பரப்பில் வாழ்கின்றனர். மிக உயரமான மலைகளால் சூழப்பட்டுள்ள ஹன்சா பள்ளத்தாக்கு, இரண்டாயிரத்து ஐந்நூறு மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. அழகான நீல வானம், மெல்லிய சுத்தமான காற்று, கண்கவர் இயற்கைக்குச் சொந்தகாரர்கள் ஹன்சா பெண்கள்.

ஹன்ஸா பெண்கள் தங்கள் அழகுக்காகவும் உலகின் மிக நீண்ட ஆயுளுக்காகவும் அறியப்படுகிறார்கள். ஹன்ஸா சமூகத்தின் ஆயுள்காலம் 120 முதல் 160 ஆண்டுகள். அவர்களின் எளிய, மன அழுத்தமில்லாத, ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் காரணமாக, அவர்கள் முதுமையிலும் இளமையாகவும் அழகாகவும் இருக்கிறார்கள்.

அதிக உயரத்தில் அதிக எதிர்ப்பாற்றல், ஆரோக்கியமான உடல்நிலை கொண்டவர்களாக இருக்கிறார்கள் ஹன்சா மக்கள். ஹன்ஸாவில் உள்ள ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர் ஒருவர், ஹன்சாவை ‘மகிழ்ச்சிப் பள்ளத்தாக்கு’ என்று அழைக்கிறார். அவர்களின் நீண்ட ஆயுளுக்கு ஆக்சிஜனேற்றங்கள், தாதுப்பொருட்கள் கொண்ட மலை நீர் மற்றொரு திறவுகோல். அவர்கள் குடிப்பதற்கும் குளிப்பதற்கும் இமயமலைப் பனிப்பாறை தண்ணீரை மட்டுமே உபயோகிக்கின்றனர். வாரம் இருமுறை உணவு ஏதும் உட்கொள்ளாமல், பாதாமி பழச்சாற்றை மட்டுமே குடித்து, மற்ற நாள்களில் ஆரோக்கியமான உணவை மட்டுமே உட்கொள்கின்றனர்.

ஹன்சா பெண்கள் இளமை, பொலிவான சருமத்திற்கு இயற்கை பாதாமி எண்ணெய்களைப் பயன்படுத்துகின்றனர். இந்த எண்ணெய் கலவை, சில நேரத்தில், ‘இயற்கையான போடோக்ஸ்’ என்று அழைக்கப்படும். உலகின் விலையுயர்ந்த குங்குமப்பூவும் இங்கே விளைவதால் இந்த மூலப்பொருளைச் சமையலில் அடிக்கடி பயன்படுத்துகின்றனர். இந்த மூலிகையில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன.

ஹன்ஸா பெண்கள் மலை நீரூற்றுகளில் இருந்து வரும் நன்னீர் கொண்டு ஒரு சிறப்பு உப்புத் தேநீர் தயாரிக்கிறார்கள். இந்தத் தேநீரில் உயரத்தில் வளரும் காட்டு தைம், ஒரு சிறப்பு மூலிகை ‘துமுரு’ முக்கிய மூலப்பொருள்களாக இருக்கின்றன. இந்தத் தேநீரின் அருமையை விவரிக்கும் வகையில் விஞ்ஞானிகள், ‘வயதில்லா அமுதம்’ என்று பெயரிட்டனர்.

நூறு வயதிலும் மக்கள் சுறுசுறுப்பாக வேலை செய்துகொண்டு இருக்கிறார்கள். பெரும்பாலும் தாவர அடிப்படையிலான உணவைத் தவிர, அவர்களின் கடின உழைப்பு அவர்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் ஒரு பங்கு வகிக்கிறது. ஹன்ஸா பழங்குடியினருடன் வாழ்ந்த ஏராளமான பயணிகள் அவர்களின் அழகையும் புத்திசாலித்தனத்தையும் உடல் வலிமையையும் பாராட்டியதாகக் கூறப்படுகிறது. அவர்களின் கலாச்சாரத்தில் ஓய்வு என்பதே இல்லை. ஹன்ஸா மக்கள் தங்கள் முதுமையிலும் சுறுசுறுப்பாக இருக்க முனைகிறார்கள். ‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும் ‘ என்பது இவர்களுக்கு நன்கு பொருந்தும்.

அறுபதுகளில் ஒரு தாயாக மாறுவது ஹன்சாவில் ஒரு சாதாரண நிகழ்வாகக் கருதப்படுகிறது. ஹன்சா பழங்குடி பெண்கள் படித்தவர்கள்.

நீண்ட ஆயுளும் அழகும் மட்டுமே ஹன்சாக்களின் பண்புகள் அல்ல. அவர்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தை மதிப்பது போல் தங்கள் மன ஆரோக்கியத்தையும் மதிக்கின்றனர். குறைந்தபட்சம் 95 சதவீதம் மக்கள் கல்வியறிவு பெற்றவர்கள். லட்சக்கணக்கில் பெண் குழந்தைகளுக்குக் கல்வி மறுக்கப்படும் ஒரு நாட்டில், எல்லோருக்கும் கல்வியை வழங்கும் ஹன்சா பள்ளத்தாக்கை, ‘கல்வியின் சோலை’ என்று அழைப்பதில் எந்த ஐயமும் இல்லை.

ஹன்சா பள்ளத்தாக்கில் குற்றங்கள் துளியும் இல்லை என்றே சொல்லலாம் . அதிக குற்ற விகிதத்தைக் கொண்ட ஒரு நாட்டில் ஹன்சா பள்ளத்தாக்கு, ‘அமைதியின் சோலையாக’ விளங்குகிறது. வறுமை இருந்தபோதிலும், சிறு குற்றங்கள்கூட ஹன்ஸாவில் மிகவும் அரிதாகவே காணப்படுகின்றன. பெரும்பாலான வீட்டுக் கதவுகள் பூட்டப்படாமலே இருக்கும்.

ஹன்சா பெண்கள் சமூகத்தின் சம உறுப்பினர்கள். சில அண்டை நாடுகளில் உள்ள பெண்கள் இருப்பதைப் போலல்லாமல், ஹன்ஸா இனத்தைச் சேர்ந்த பெண்கள் அவர்களின் சமூக வாழ்க்கையிலும் சுறுசுறுப்பாக இருக்கிறார்கள்.

ஹன்ஸா பள்ளத்தாக்கு கடந்த பத்து ஆண்டுகளில் நடந்த அதன் எதிர்பாராத பெண்ணியப் புரட்சிக்குக் குறிப்பிடத்தக்கதாக உள்ளது. பஜாரில் பணிபுரியும் பெண்கள், இருட்டிய பின்னும் தனியாக ஊருக்குள் வலம்வருவது சாதாரணமாக உள்ளது. பெண் விளையாட்டு லீக்குகள் அமைக்கப்பட்டு டயானா பெய்க் போன்ற கிரிக்கெட் வீரர்கள் சர்வதேச அளவில் உயர்ந்துள்ளனர். 2013 இல், சமினா பெய்க் என்ற இளம் ஹன்சாகுட் பெண், எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய மிக இளைய இஸ்லாமிய பெண். சஷ்கின் சார் மலையின் உச்சியை அடைந்த வரலாற்றில் முதல் நபராக ஆன பிறகு, அவரது நினைவாக சமினா சிகரம் என்று பெயர் மாற்றப்பட்டது.

நிலப்பரப்பில் கான்க்ரீட், ஞெகிழி ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடும் முயற்சியில் கைவினைப் பொருள்கள் செய்வதற்கான பட்டறைகளை அமைத்து, வில்லோ, வால்நட், ஆலிவ், மல்பெரி மற்றும் உள்ளூர் கட்டுமானப் பொருட்களின் பயன்பாட்டை ஊக்குவித்தனர். கடந்த மூன்று ஆண்டுகளில், 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் பெண்களால் நடப்பட்டுள்ளன. 2012 இல் பாகிஸ்தானிலேயே முதன்முறையாக முழுக்க முழுக்கப்

பெண்களால் நிர்வகிக்கப்பட்ட ‘கா பாசி’ சிற்றுண்டி நிறுவனத்தைத் திறந்தனர். இது உள்நாட்டில் விளைந்த பொருட்களைப் பயன்படுத்தி பிராந்திய உணவுகளை வழங்குகிறது. அதன் கட்டுமானத்திலும் பெண்கள் பங்கேற்றனர்.

அன்றிலிருந்து, ஹன்சாவில் இருபது பெண்ணிய நிறுவனங்கள் திறக்கப்பட்டுள்ளன. அதே போல கராச்சி, குவெட்டா போன்ற நாட்டின் பிற முக்கிய நகரங்களிலும் பெண்களால் நடத்தப்படும் சிற்றுண்டி நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

உலக மகளிர் தின வாழ்த்துக்கள் !

படைப்பாளர்:

சித்ரா ரங்கராஜன்

கட்டிடக் கலை மற்றும் உட்புற வடிவமைப்பாளராக சென்னையில் தன் கணவருடன் நிறுவனத்தை நடத்திவருகிறார். ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதுவதை ஆர்வமாகக் கொண்டுள்ளவர். புத்தகங்களுக்குப் படங்கள் வரைவதிலும் நாட்டம் கொண்டவர். பெண்ணியச் சிந்தனையில் மிகுந்த ஆர்வமுள்ளவர். ஒருவரின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதில் ஓர் எழுத்தாளருக்கு முக்கியப் பங்குண்டு என்பது இவருடைய வலுவான கருத்து.