கொழும்பு விமானநிலையத்தை நோக்கி திரும்பிக்கொண்டிருந்த வழியில், சாலையிலிருந்த ‘தொல்பொருளியல் பிரதேசம்’ என்ற பலகை வித்தியாசமாக இரு(ழு)க்கவே, கண்கள் நண்பர் மடுதீனை நோக்க, அவரும் குறிப்பறிந்து அந்தப் பாதையில் மகிழுந்துவைத் திருப்ப, நமக்கோ ஊருக்குத் திரும்பும் கடைசி நேரத்திலும், கண்களுக்கு விருந்தும் கட்டாயம் ஒரு கதையும் உறுதியாகக் கிடைக்கும் என்பதில் மகிழ்ச்சி. போகும் வழியிலேயே முன்னோட்டமாக, குட்டிக்கதை ஒன்றும் கிடைத்தது நண்பரின் வாயிலாக. நாங்கள் சென்றுகொண்டிருந்தது பொலன்னறுவை நோக்கி. கி.பி. 10 ஆம் நூற்றாண்டு முதல், கி.பி. 13 ஆம் நூற்றாண்டு வரை பண்டைய இலங்கையின் தலைநகரமாக சரித்திரத்தில் தன்னைப் பதித்துக்கொண்ட அந்த நகரம் கொழும்புவிலிருந்து 158 மைல் தூரத்தில் வடமத்திய மாகாணத்தில் இருக்கிறது, முக்கிய சாலையிலிருந்து இருபத்தைந்து மைல்கள் அடர்ந்த காட்டினூடாகச் செல்ல வேண்டும். அலைபேசி எதுவும் வேலை செய்யவில்லை. வழி நெடுக ஏரிகளைப் போன்ற மிகப்பெரிய குளங்களைக் காண முடிந்தது. பராக்கிரம மன்னனால் உருவாக்கப்பட்ட பராக்கிரம சமுத்திரம் என்று அழைக்கப்படுகின்ற அந்தக் குளங்கள் 1000 ஆண்டுகளுக்குப் பின்னரும் இன்றும் வேளாண்மைக்கான பயன்பாட்டில் உள்ளனவாம். நகர் முழுக்கப் பாரிய பௌத்த விகாரைகளும் இந்துக் கோயில்களுமாக நிரம்பிக்கிடக்கிறது.


பொலன்னறுவை பாலி மொழியில் புலத்தி நகரம், வடமொழியில் புலஸ்திய நகரம், தமிழில் புலை நரி என்றெல்லாம் அழைக்கப்பட்டதாம். காடுகளுக்குள் மறைந்து கிடக்கும் பொலன்னறுவை, சிதைந்த அங்கங்களுடன், தம் தொன்மைச் சிறப்பை புலப்படுத்தி எங்களை வரவேற்றது. ராஜ ராஜ சோழன் இலங்கையைக் கைப்பற்றியபோது, இந்நகரின் பெயரை ஜனநாதபுரம் அல்லது ஜனநாத மங்கலம் என்று மாற்ற, பின்பு விஜயபாகு இதைக் கைப்பற்றி 1055 முதல் 1110 வரை ஆண்டபோது விஜயராஜபுரம் என்று பெயர் மாற்றிக்கொண்டான்.


பத்தாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் இலங்கை மீது படையெடுத்து வெற்றிகண்ட ராஜராஜ சோழன், அதுவரை தலைநகரமாக இருந்த அநுராதபுரத்தைக் கைவிட்டு, அதற்கு தென்கிழக்கில் இருந்த பொலன்னறுவையை முதன்முதலில் தலைநகரமாகத் தேர்வு செய்தான். 1017 இல் ராஜேந்திரச் சோழன் மீண்டும் இலங்கை மீது படையெடுத்து, இலங்கை முழுவதையும் சோழப் பேரரசின்கீழ் கொண்டுவந்தபோதும், பொலன்னறுவையைத் தலைநகரமாகக் கொண்டே ஆட்சி செய்திருக்கிறான். இப்படியாகக் கிட்டத்தட்ட எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக சோழர்களின் தலைநகராக, ‘பொலன்னறுவை ராஜ்ஜியமாக’ கோலோச்சியிருக்கிறது இந்தப் பகுதி.


நுழைவு வாயிலில் ‘அரசமாளிகை’, ‘சிவன்கோயில்’ என இரு வழிகாட்டும் பலகைகள் காணப்பட, முதலில் அரசமாளிகை வழியில் சென்றோம். பாண்டியநாட்டைச் சேர்ந்த பராக்கிரமபாகு மன்னன் காலத்தில் கட்டப்பட்டதாக வரலாறு கூறும் அந்த அரசமாளிகை, இடிபாடுகளுடன் கூடிய கட்டிடத் தொகுதிகளாகத் தொல்லியல்துறையால் பாதுகாக்கப்பட்டிருக்கிறது. அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய அரசமாளிகை ஏழு அடுக்குகளில் 1000 அறைகளுடன் கட்டப்பட்டது எனக் கூறப்பட்டாலும், தற்போது மூன்று அடுக்குகளும், 53 அறைகளும் இருந்ததற்கான அடையாளங்கள் மட்டுமே காணப்படுகின்றன. சிதிலமடைந்து காணப்படும் மேலடுக்குக்குச் செல்வதற்கான படிகளில் காணப்படும் கலைநயம் மதிமயக்குகிறது. மன்னர்களின்…. அவர்களின் மனைவிகளின், நூற்றுக்கணக்கான உதவியாளர்களின். அந்தப்புர அழகிகளின். போர்த்தளபதிகளின் சிரிப்பும் அழுகையும் வீரமும் கோபமும் ஆரவாரமும் ஒளி ஒலிப் படங்களாக கண்முன்னே கடந்து சென்றது. இந்த அரண்மனை கலிங்க மகான் ஆட்சிக்காலத்தில் தீயிட்டு அழிக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும் அதற்கான சான்றுகள் எதுவும் இல்லை. இங்குள்ள லங்காதிலக ஆலயமும் பராக்கிரபாகு மன்னனால் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.


அருகிலிருக்கும், அரச சபை 73 அடி நீளமும், 33 அடி அகலமுமாக மூன்று அடுக்குகளாகக் காணப்படுகிறது. மிகப்பரந்த வெளியில் கற்றூண்கள் வரிசையாக நின்று, அரசவையின் பிரமாண்டத்தை அறிவிக்கிறது. அரச குமாரர்கள் நீராடிய இடமான குமாரகுளத்திற்கான நீரை, அருகிலிருக்கும் வாவியிலிருந்து உள்ளெடுத்து, கழிவுநீரை வெளியேற்றும் தொழில்நுட்பமும் அந்தக் காலத்திலயே இருந்ததாக மகாவம்சம் கூறுவதாக அங்கிருந்த அறிவிப்புப் பலகையின் வாயிலாக அறிந்துகொள்ள முடிகிறது.


தலதா மண்டபம் அல்லது தலதா மலுவ அல்லது தலதா முற்றம் என்ற கட்டிடத் தொகுதிக்குள் சென்றோம். காலம் தன்னைத்தானே மெதுவாகச் சிதைத்துக்கொண்டிருப்பதை அங்கிருக்கும் சிற்பங்களின் வாயிலாகக் காண முடிகிறது. இங்கிருக்கும் கட்டிடத் தொகுதிகள் தூண்களும் செங்கற்சிதைவுகளுமாகக் காட்சியளிக்கிறது. புத்தபிரானின் புனித தந்ததாது (பல்), இந்த தலதா முற்றத்தின் மரத்தால் அமைந்த முதல் தளத்தில் வைக்கப்பட்டிருந்ததாம். தமிழர், தெலுங்கர், கேரளர் எனப் பல சமூகங்களைச் சேர்ந்த ‘வேளைக்காரர்’ என்னும் வீரர்கள் சோழர் காலத்திலும் விஜயபாகு காலத்திலும் படைப்பிரிவில் இடம்பெற்றிருந்ததாக மகாவம்சம் கூறுகிறது. அந்த வேளைக்காரர்கள் அமைத்த கல்வெட்டு ஒன்று ஏழடி உயரத்தில் வெண்கற்பலகையாக வரலாற்றின் சாட்சியாக நிற்கிறது. அதில் சமஸ்கிருத ஸ்லோகம் ஒன்றும் தமிழ் வரிகளும் காணப்படுகின்றன. முழுக்க முழுக்க தலதாப் பள்ளியை வேளைக்காரர்கள் பொறுப்பேற்றுக் கொண்டதற்கான ஆதாரமான இக்கல்வெட்டிலுள்ள மற்றொரு செய்தி மிகச் சுவையானது. ஒவ்வோர் ஆண்டும் புத்தபிரானுக்கு ‘நயனமோட்சமாகிய அஞ்சன நிறுக்கும் கண்ணாலம்’ நடத்தப்பட்டிருக்கிறது. அதாவது, ஒவ்வோர் ஆண்டும் தலதாப் பெரும்பள்ளியில் வீற்றிருந்த புத்த பெருமானுக்குக் கண்களில் மை தீட்டும் திருவிழா இடம்பெற்றிருக்கிறது. அதைப் பார்ப்பது மோட்சத்தை அளிக்கும் என்ற நம்பிக்கையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் அங்கு கூடியிருக்கிறார்கள்.


அரச அரண்மனை, கல்விகாரை, பொலன்னறுவை வட்டகே, பராக்கிரமபாகு மன்னர்சிலை, லங்காதிலக ஆலயம், பராக்கிரம சமுத்திர நீர்த்தேக்கம், நிஸ்ஸங்க லதா மண்டபய, நெலும் பொகுனா (தாமரை வடிவிலான குளம்) என இலங்கைச் சரித்திரத்தின் சிறப்பான நிகழ்ச்சிகள் நடைபெற்ற அந்தப் பண்டைய நகரின் அழிபாடுகளால் நிரம்பிக்கிடக்கிறது அந்த இடங்கள்.
அடுத்து, கோயில்கள் நோக்கி நகர்ந்தோம். பத்தாம் நூற்றாண்டில் சோழர்கள் இலங்கையைக் கைப்பற்றினாலும், அதற்கு முன்பும் பின்பும்கூட இலங்கையில் சோழ, பாண்டிய நாடுகளின் ஆதிக்கம் மிகுதியாகவே இருந்தது. அதற்கான சான்றுகளாக நம் முன் குவிந்து கிடக்கிறது அங்குள்ள சைவக்கோயில்களும் பொலனறுவையில் கிடைத்த ‘வேளைக்காரக் கல்வெட்டும்’. சிங்களர்களுக்கும் சோழர்களுக்கும் நீண்டகாலப் பகை இருந்ததால், ஆட்சியைப் பாதுகாப்பதற்காகச் சோழர்கள் தமிழ்நாட்டுப் படைகளையும் அதிகாரிகளையும் அலுவலர்களையும், இலங்கையில் வைத்திருக்க வேண்டியிருந்திருக்கும், அவர்கள் பெரும்பாலும் இந்துக்களாக இருந்திருக்கலாம்., அதனால், சோழராட்சிக் காலத்தில் அவர்களுக்காக இந்துக் கோயில்கள் அமைக்கப்பட்டிருக்கலாம். ஏனெனில் சிங்கள தேசத்தில் இந்துக் கோயில்கள் அமைப்பதற்கான வேறெந்த சாத்தியக்கூறுகளும் இல்லை. பத்து சிவன் கோயில்கள், ஐந்து விஷ்ணு கோயில்கள், ஒரு காளி கோயில் என பதினாறு கோயில்கள் இதுவரை அகழ்வாராய்ச்சிகள்மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்துமே சோழர் காலத்தில் கட்டப்பட்டதா அல்லது பாண்டியர் காலத்திலும் கட்டப்பட்டதா என்பதில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் உண்டு. ஆனாலும், ராஜேந்திரச் சோழன் காலத்தில் இரண்டு சிவாலயங்கள் கட்டப்பட்டுள்ளதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளனவாம். ஆலயங்கள் இருந்த பகுதிகள் ஆள் நடமாட்டமின்றி அமைதியாக இருக்கிறது. கருங்கற்களால் கட்டப்பட்டுள்ள அடிப்பகுதிகள் மட்டுமே கோயில்களின் மிச்சமாக நிற்க, செங்கற்களால் கட்டப்பட்ட விமானப்பகுதிகள் முற்றிலும் சிதைந்து போய் காணப்படுகின்றன. பராமரிப்பின்றி கிடந்தாலும், தன் தொன்மையையும் அழகையும் இழக்காமல் நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கம்பீரமாக நிற்கின்றன அத்தனை ஆலயங்களும்.


ஒருகட்டத்தில் மன்னர்களால் கைவிடப்பட்டு, பின்னர் மக்களாலும் கைவிடப்பட்டு, பாழடைந்து, காடடர்ந்து, மக்களும் மன்னரும் வாழ்ந்து சிறந்த இடத்தில் புலியும் யானையும் நரியும் பாம்பும் ஆக்கிரமிக்கத் தொடங்கின. நாற்புறத்திலும் காடுகள் சூழ இடிந்த மண்டபமும், கோயிலும் நிரம்பிய பாழூராக மாறிய பகுதி, 19 ஆம் நூற்றாண்டின் கடைப்பகுதியில், தொல்பொருள் ஆய்வாளர்களால் வெளிக்கொணரப்பட்டது. 1901 முதல் இலங்கை அரசு காடுதிருத்தி சாலை போட்டு, தொன்மைச் சின்னங்களைப் பாதுகாக்கத் தொடங்கியது.


வாகனத்தில் ஏறுமுன் திரும்பிப் பார்த்தேன், திருக்கரங்கள் சிதைந்த நிலையில் புன்னகையுடன் வீற்றிருக்கிறார், ஆயிரம் ஆண்டுகளூக்கு முன் ‘நயனமோட்சமாகிய அஞ்சன நிறுக்கும் கண்ணாலம்’ பண்ணி மோட்சத்தைக் காட்டிய புத்தபெருமான். ஆயிரம் ஆண்டுகளாக மாறாமல் புன்னகைக்கும் அந்த முகத்தில்தான் எத்தனை அமைதி!


(தொடரும்)