பெயர்கள் என்பவை வெறும் ஒலிக் குறிப்புகள் இல்லை. ஒரு பெயரைக் கேட்டவுடனேயே அந்தப் பெயரின் மொழி, இனம், நாடு என்ற மூன்றின் குறியீடாக அப்பெயர் விளங்குவதை நம்மால் உணர முடியும்.

பெயர்கள் பாலினம், இனம், மதம், நாடு, கண்டம், பண்பாடு, பாரம்பரியம், கலாச்சாரம் போன்றவற்றை வேறுபடுத்தி அடையாளப்படுத்திக் காட்ட உதவுகிறது. இயற்கையை, இடங்களை, விலங்குகளை, பொருட்களை வேறுபடுத்திப் புரிந்துகொள்ள பெயர்கள் வைக்கப்பட்டன. அதேபோல் ஆதியில் மனிதர்களுக்கும் பெயர்கள் ஏதும் இல்லை. தனித்தனியே திரிந்து கொண்டிருந்த மனிதர்கள் நாளடைவில் குழுக்களாக இணைந்து வாழத் தொடங்கியபோது, அவர்களுக்குத் தங்களைத் தனித்துக் காட்ட ஓர் அடையாளம் தேவையாயிருந்தது. அப்போதுதான் பெயர்கள் வைக்கும் வழக்கம் தோன்றியிருக்கக்கூடும். அது மட்டுமின்றி பெயர் என்ற ஒன்று அமைந்ததால்தான் நமக்கெல்லாம் முகவரி கிடைத்தது.


பெயர்கள் முதலில் இயற்கை சார்ந்துதான் வைக்கப்பட்டன. இன்றும் பழங்குடியினர், மலைவாழ் மக்கள் அழகான இயற்கையின் பெயர்களைத்தான் கொண்டிருக்கிறார்கள். அதன்பின் மொழியில் வளர்ச்சி ஏற்பட்ட பிறகு கொஞ்சம் கொஞ்சமாகப் புதிய புதிய பெயர்கள் தோன்றின. பொதுவாக பழங்காலத்தில் பெயர்கள் இயற்கை, பண்பாடு, மனிதர்களின் தன்மை, கடவுள்கள் இவற்றைப் பொறுத்தே வைக்கப்பட்டன. மேலும் அவரவர் வாழ்ந்த இடத்திற்கேற்ப பெயர்கள் அமைந்தன.


பழந்தமிழர் நிலங்களை ஐந்திணைகளாக வகுத்தனர். அந்தந்த நிலங்களுக்கென்று உருவாக்கப்பட்ட கடவுளின் பெயர்கள், அந்த நிலங்களில் இருக்கும் பொருட்களின், மலர்களின், இயற்கைத் தன்மையின் அடிப்படையில் பெயர்கள் உருவாக்கப்பட்டன. அங்கு வசித்த மக்கள் அவர்களின் முதன்மைத் தெய்வத்தின் பெயரையும், அவர்களைச் சுற்றிச் சூழ்ந்திருந்த இயற்கையையும், மலர்களின் பெயர்களையும் சூட்டிக்கொண்டனர். அதன்பின் சாதிப் பிரிவுகள் தோன்றியதும் தமிழக ஆண்களின் பெயருக்குப் பின்னால் சாதி தொக்கிக்கொண்டு நின்றது. இவ்வாறு வைக்கப்பட்ட பெயர்கள் காலத்திற்கேற்பவும், பிற மொழியினர் இங்கு வந்து குடியேறியதிலும், இவர்கள் அங்கு வசிக்கத் தொடங்கியதிலும் மாற்றங்கள் அடையத் தொடங்கின. இன்றைய சூழலில் ஒருவரின் பெயரைக் கொண்டு அவரது பின்புலத்தை நம்மால் அறிந்துகொள்ள இயலாது.


சமஸ்கிருதப் பெயர்கள் நம்மை ஒரு காலத்தில் ஆட்கொள்ளத் தொடங்கின. அதன்பின் திராவிட இயக்கங்களின் புண்ணியத்தில் மீண்டும் தூயத் தமிழ்ப் பெயர்கள் வலம் வர ஆரம்பித்தன. இருபது வருடங்களுக்கு முன்பு சமஸ்கிருதப் பெயர்கள் அதிகமாக இருந்தன. இப்போது திடீர் விழிப்புணர்வாக சுத்தத் தமிழ்ப் பெயர்கள் மீண்டும் ஒரு ‘ரவுண்ட்’ வருகின்றன. நிறைய எழுத்தாளர்கள் புனைபெயரில் எழுதுகிறார்கள். இந்தப் புனைபெயர் வைத்துக்கொள்வதில் உள்ள சௌகரியம் என்னவென்றால் நாம் சொல்ல வந்த விஷயத்தை யாருடைய கருத்துக்கேற்பவும் மாற்றிக்கொள்ளாமல் ஒளிவுமறைவின்றிச் சொல்லலாம்.


போதும் பொண்ணு, மங்களம், பூர்ணம், போதும் மணி, வேண்டா வரம், வேண்டாமிர்தம், வேம்பு இவையெல்லாம் பெண் குழந்தைகள் போதும் என்று நினைப்பவர்கள் வைக்கும் பெயர்கள். அந்த ஊரில் இருக்கும் வரை இது சரி. வெளியூருக்கு படிக்கச் செல்லும் போது, பணிக்குச் செல்லும் போது அவர்கள் எப்படியெல்லாம் கேலிக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்று இத்தகைய பெயர் வைப்பவர்கள் நினைத்துப் பார்ப்பார்களா?.


பெயர்களை வெறும் பெயர்தானே என்று அலட்சியப்படுத்தக் கூடாது. ஒருவரது வாழ்நாள் முழுவதும் உடனிருப்பது அந்தப் பெயர் தானே?. ஒரு பெயரால் படிக்கும் இடத்தில், பணி புரியும் இடத்தில், காதலிக்கும் பெண்ணிடம் எல்லாம் அவமானப்படும் ஓர் இளைஞனின் கதையை ‘எதிர்நீச்சல்’ திரைப்படம் விரிவாகப் பேசியது. சில கிராமங்களில் பெண் குழந்தைகளே வரிசையாகப் பெற்ற பெற்றோர், ‘போதும் பொண்ணு’ என்று பெயர் வைத்தபின், ஆண் குழந்தை பிறந்த கதைகளும் உண்டு. அப்படிப் பெயர் வைக்கப்பட்ட ஒரு பெண் குழந்தைக்கு ‘கல்பனா’ என்று பெயர் மாற்றி ஜப்பான் நாட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணி கிடைத்தது.


இன்னொரு ‘போதும் பொண்ணு’ என்ற பெயர் கொண்ட பெண்ணின் கதையோ தற்கொலையில் முடிந்திருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டம் நெடுஞ்சேரிக்கு அருகில் இருக்கும் அன்னவாசலைச் சேர்ந்த பத்தொன்பது வயது நிரம்பிய பெண், கீரனூருக்கு அருகில் இருந்த மலையிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்டார். காவல்துறை அதிகாரிகள் விசாரணையில் அந்த ஊர் வழக்கப்படி மூன்றாவதாகப் பிறந்த பெண் என்பதால் ‘போதும் பொண்ணு’ என்று அவருக்குப் பெயர் வைத்திருந்தார்கள். அந்தப் பெயரால் தோழிகளிடையேயும் உறவினர்களிடையேயும் எழுந்த கிண்டல், கேலிப் பேச்சுகளைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொள்வதாக ஒரு குறிப்பையும் விட்டுச் சென்றிருந்தார். இந்தச் சின்ன விஷயத்துக்கு எல்லாமா தற்கொலை செய்வார்கள் என்று கேட்கிறீர்களா? ஆமாம். கேலி எல்லை மீறாத வரை ஜாலிதான். எல்லை மீறினால் எதுவும் நடக்கும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஓர் உதாரணம். எப்போதாவது கிண்டல் செய்தால் ரசிக்கலாம். எப்போது பார்த்தாலும் கிண்டல் செய்தால் இறுதியில் அது வருத்தங்களுக்கும், மனக்கசப்புகளுக்கும்தான் இட்டுச் செல்லும்.


அயர்லாந்தின் நியூடவுன்பேயில் உள்ள ஒரு பிரபலமான உணவகத்தில் அடிக்கடி சாப்பிட வரும் தம்பதியர், தங்களுக்குப் பிறந்த பெண் குழந்தைக்கு அவர்கள் விரும்பிச் சாப்பிடும் இந்திய உணவு வகையான ‘பகோரா’வின் பெயரைச் சூட்டியிருக்கிறார்கள். நாம் ஸ்னாக்ஸாகச் சாப்பிடும் அதே பகோடாதான் அந்தக் குழந்தையின் பெயர். இந்தத் தகவலை ஃபேஸ்புக்கிலும் வெளியிட்டு உறுதி செய்திருக்கிறார்கள்.

நம் நாட்டில் குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் பெயர் வைக்கப் பெரிதும் அலட்டிக்கொள்வதில்லை. எந்த ஊரில் அல்லது இடத்தில் குழந்தை பிறக்கிறதோ அந்தப் பெயரையே வைத்து விடுவார்கள். டெல்லி, செங்கோட்டை, ஹைகோர்ட் என்றெல்லாம் பெயர் வைத்திருக்கிறார்கள்.
கேரளா போன்ற தென்னிந்திய மாநிலங்களிலும் வட இந்திய மாநிலங்களிலும் குடும்பப் பெயர்கள் தோன்றின. ஆண், பெண் பேதமின்றி பெயர்களின் பின்னொட்டாக இணைந்திருக்கின்றன. தமிழ்ப் பெண்களும் இதில் இணையத் தொடங்கிவிட்டார்கள். பொதுவாகப் பெண்கள் பெயருக்குப் பின்னால் திருமணத்திற்குப் பிறகு கணவர் பெயரோ அல்லது அவரது குடும்பப் பெயரோ இணைந்துவிடுகிறது. இந்த வழக்கம் இன்னும் மாறவில்லை.


இந்த நிலையில் சமீபத்தில் நாடாளுமன்றத்தில் நமது பிரதமர், காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியின் பெயருக்குப் பின்னால் அவரது கணவரின் முன்னோரான நேரு பெயரைச் சேர்க்காமல் ஏன் காந்தி பெயரை வைத்திருக்கிறார் என்று கேள்வி எழுப்பினார். அது மகாத்மாவைக் குறிக்கும் பெயரல்லவென்றும், முன்னாள் பிரதமர் இந்திராவின் கணவரான ஃபெரோஸ் காந்தியைக் குறிக்கிறதென்றும் விளக்கப்பட்டது. நாடாளும் பெண்ணோ, நடைபாதையில் வசிக்கும் பெண்ணோ யாராக இருந்தாலும் இன்னும் அவர்களின் கணவர் பெயரால்தானே அறியப்படுகிறார்கள்? அந்த அடையாளத்தைக் களையும் முயற்சியை ஏன் பெண்கள் எடுக்கத் தயங்குகிறார்கள்? அவர்களைத் தடுப்பது எது?


பிரபஞ்சன் எழுதிய ஒரு சிறுகதையில் ஆண்டை(?)யிடம் வந்து அவரது வேலையாள் ஒருவர், பெண்குழந்தைக்குப் பெயர் வைக்குமாறு வேண்டுவார். ஆண்டை திமிராக அடிமைகளுக்கெல்லாம் பெயர் வேண்டுமாவென இகழ்ந்து விட்டு, வீட்டுக்கருகில் இருக்கும் துவரைச் செடியைப் பார்த்து, அந்தக் குழந்தைக்கு ‘துவரை’ என்று பெயர் சூட்டுவார். அந்தளவுக்கு சாதிப் பாகுபாடுகள் நிறைந்த அந்தக் காலத்தில் பெயர் வைப்பதற்குக்கூடக் கட்டுப்பாடுகள் இருந்தன. அதுவும் கேரளத்தில்.


என்னுடன் படித்த ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த நண்பர் ஒருவர் தன்னுடைய மகனுக்கு ‘சுப்ரமண்ய பாரதி’ என்று பெயர் சூட்டினார். “இந்தந்த ஜாதிக்காரங்க இன்னின்ன பேருதான் வைக்கணும்னு இருக்கா என்ன? எங்க ஆளுங்க ரங்கன், குப்பன், காளி, பழனின்னு இருந்தது போதும்னுதான் எனக்குப் பிடிச்ச பாரதியார் பேரை வெச்சேன்..'” என்று அழகாக ஒரு விளக்கமும் தந்தார். ஆனால், அவர்கள் அப்படிப் பெயர் வைப்பதை ஏற்றுக்கொள்ளாத மக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். எனக்குத் தெரிந்த பெண் ஒருவர் ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த சிறுமியை, “அஞ்சலை இங்க வா..” என்று விளித்தார். அந்தப் பெண்ணின் பெயர் அஞ்சலி என்பதை நான் அறிவேன். இவ்வாறு பெயரைக் கொச்சையாக விளிப்பதன் காரணத்தைக் கேட்டபோது, “ம்க்கும்.. அவளையெல்லாம் அப்படி நாகரிகமா கூப்புட்டா… திமிர் எக்கச்சக்கமா ஏறிப் போயிரும்ல..” என்றாரே பார்க்கலாம். பெயரில்கூட சாதிவெறி இருப்பதை அப்போதுதான் கண்டேன்.


கிட்டத்தட்ட ஐம்பது, அறுபது வருடங்களுக்கு முன்னர் குலதெய்வம், சிறு தெய்வங்கள் பெயர்கள் வைக்கப்பட்டன. அதன்பின் கல்வியறிவு பரவலானதும் தமிழறிஞர்கள், புலவர்கள் பெயர்கள் வைக்கப்பட்டன. அதன்பின் சுதந்திரப் போராளிகள் பெயர்கள், பின்னர் நாவல்களில் புகழ்பெற்ற கதாபாத்திரங்களின் பெயர்கள் என்று பெயர்களும் காலந்தோறும் மாறுதலுக்கு உள்ளாகி வருகின்றன. வெற்றுச் சொல்லாக இல்லாது பெயர்கள் என்பவை நாம் மறைந்த பின்னரும்கூட நமக்கான ஓர் அடையாளத்தைச் சுட்ட வேண்டும். அதற்கேற்ப நம் செயல்பாடுகளையும் நாம் அமைத்துக்கொண்டால்தான் இது சாத்தியம். நல்ல செயல்களைச் செய்வோம். நம் பெயரை வரலாற்றில் பொறிப்போம்.

படைப்பாளர்:

கனலி என்ற சுப்பு

‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபி தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துகளை எழுதவே கனலி என்ற புனைபெயரைப் பயன்படுத்துகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பெருங்காமப் பெண்களுக்கு இங்கே இடமிருக்கிறதா?’ என்ற நூலாக வெளிவந்திருக்கிறது.