அன்புள்ள அண்ணா,

என் மாமனாருக்கு நானும் என் மனைவியும் மகிழ்ச்சியுடன் பேசிச் சிரித்தாலே பிடிக்கவில்லை. என்னிடம் மனைவி கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் குறுக்கே புகுந்து பதில் சொல்கிறார்.

“மிளகா சட்னியா அரைச்சே? நிலாவுக்குத் தேங்கா சட்னிதான் பிடிக்கும்.”

“என்னம்மா நிலா ட்ரஸ் கசங்கி இருக்கு? என்கிட்ட கொடுத்திருக்கலாம்ல, நான் அயர்ன் பண்ணிக் கொடுத்திருப்பேன்” என்று நான் ஆசையுடன் மனைவிக்குச் செய்யும் பணிவிடைகளில் எல்லாம் குற்றம் கண்டுபிடித்து மனைவியிடம் சொல்கிறார். மிகுந்த மனவுளைச்சலாக உள்ளது. நீங்கள்தான் எனக்கு ஒரு தீர்வு சொல்ல வேண்டும்.

அன்புடன்

வருண்

அன்புள்ள வருண்,

உங்கள் மாமாவுக்குப் பாதுகாப்பற்ற உணர்வு இருப்பது தெளிவாகத் தெரிகிறது. நீங்கள்தான் பக்குவமாக இதனைப் புரிந்து நடந்துகொள்ள வேண்டும். திருமணமாகி விட்ட காரணத்தினாலேயே மனைவி மீது முழு ஆதிக்கத்தைச் செலுத்த நினைக்காதீர்கள். அவர் முதலில் தந்தைக்கு மகள். பின்புதான் உங்கள் மனைவி.

பெரியவர்கள் வீட்டில் இருக்கும் போது மனைவியுடன் தனியே சிரித்துப் பேசுவதைத் தவிருங்கள். அவர்கள் முன்பு மனைவியைத் தொட்டுப் பேசுவதோ கொஞ்சுவதோ குடும்ப ஆண்களுக்கு அழகில்லை.

மனைவி உங்களை ஷாப்பிங், சினிமா என்று வெளியில் அழைத்துச் செல்லும்போது பறந்தடித்துக் கொண்டு நீங்கள் மட்டும் கிளம்ப வேண்டாம். மரியாதையுடன் மாமாவையும் அழையுங்கள்.

இன்னும் கேட்டால், “நான் வரலை. எனக்கு வீட்ல வேலை இருக்கு. மாமாவும் நீங்களும் போயிட்டு வாங்க” என்று சொல்லிப் பழகுங்கள். மாமனாருக்குத் தன்னால் உங்கள் மீது அன்பு பிறக்கும். மனைவிக்கும் உங்கள் மீது மதிப்பு கூடும்.

அன்புடன் அண்ணா

அன்புள்ள அண்ணா,

மனைவிக்கு குலாப் ஜாமூன் என்றால் கொள்ளைப் பிரியம். ஆனால் எனக்குச் சரியாகச் செய்ய வரவே மாட்டேன் என்கிறது. நான் நன்றாக எதையும் செய்தாலே, “என் அப்பா செய்வது போல் இல்லை” என்று குறைப்பட்டுக் கொள்ளும் என் மனைவி, நான் குலாப் ஜாமுன் செய்தால் அதை எல்லாருக்கும் காட்டிக் கிண்டலும் கேலியுமாக ரொம்பக் கேவலமாகப் பேசுகிறார்.

மாமியாரின் பிறந்தநாள் வருகிறது. குலாப் ஜாமூன் செய்தே ஆக வேண்டும். உதவி ப்ளீஸ்.

அன்புடன்,

வேதாந்த்

அன்புள்ள வேதாந்த்,

மாவு உருட்டும் போது பொறுமை தேவை. எண்ணெய் அதிக சூடாக இருக்கக் கூடாது. பால் பவுடர் சிறிது சேர்த்துப் பிசையலாம். முயற்சி செய்து பாருங்கள்.

அன்புடன் அண்ணா

(ஆண்கள் நலம் தொடரும்)

படைப்பாளர்:

ஜெ.தீபலட்சுமி

பெண்ணிய செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான ஜெ.தீபலட்சுமி தொடர்ச்சியாக பெண்ணுரிமைக் குரலை எழுப்பி வருபவர். ‘இப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப்படுவதில்லை’ என்ற நூலை எழுதி இருக்கிறார். ஊடகங்களில் இவர் எழுதிய பெண்ணியக் கட்டுரைகள், ’குத்தமா சொல்லல, குணமாதான் சொல்றோம்’ என்கிற நூலாக ஹெர்ஸ்டோரீஸ் பதிப்பகத்தில் வெளிவந்திருக்கிறது. ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளிலும் சரளமாக எழுதியும், பேசியும் வருகிறார். எழுத்தாளர் ஜெயகாந்தனின் சிறுகதைகள் சிலவற்றைத் தொகுத்து ‘The Heroine and other stories’ என்ற நூலாக மொழிபெயர்த்திருக்கிறார்.