திருமணம் என்ற அமைப்பே இன்றைய காலகட்டங்களில் பல சிக்கல்களையும் சவால்களையும் சந்தித்து வரும் நிலையில், விவாகரத்து பெரும் பேசு பொருளாகி வருகிறது. சில நாட்களுக்கு முன் ஒரு பெண் விவாகரத்தைக் கொண்டாடியது சமூக வலைத்தளத்தில் பெரும் சர்ச்சைக்குள்ளானது. சட்டங்கள் பெண்களுக்குச் சாதகமாக இருக்கிறது, வரதட்சணை கொடுமை சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்தி, ஆண்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்குகின்றனர் என ஆண்கள் புலம்பித் தள்ளினர்.

பெண் சிசு கொலைகள் நடந்தது கடந்த பத்தாண்டுகளுக்கு முன்தான், அரசின் சட்டத் திருத்தமும் பெண் குழந்தைகளுக்கு அளித்த சலுகையும் ஓரளவு அதனைக் குறைத்துள்ளது என்றாலும் இன்றும் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தொடர்கிறது. அதே போல பெண் குழந்தைகளை கருவிலேயே அழிப்பதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. வரதட்சணை கொடுமை முற்றிலும் நம்மிடம் இருந்து விலகிவிட்டதா? வரதட்சணைக்காக உயிருடன் பெண்கள் எரிக்கப்படவில்லையா, இல்லை அதன் காரணமாக கொலை செய்யப்படவில்லையா?

வரதட்சணை கொடுமைக்கு எதிரான சட்டத்தினால் ஆண்கள் ஒரு சிலர் பாதிக்கப்பட்டிருக்கலாம். அதற்காக அதனை பொதுமைப்படுத்தி ஒட்டு மொத்த ஆண் சமூகமே நிர்கதியாக இருப்பது போல ஒரு சிலர் பேசி வருவதுடன், இன்றைய விவாகரத்துகள் பெருகியதற்குப் பெண்கள்தான் காரணம் என பக்கம் பக்கமாக எழுதியும், மைக் கிடைத்தால் தொண்டை வறள கதறியும் வருகின்றனர்.

குடும்ப நல நீதிமன்றங்களில் விவாகரத்து வழக்குகள் குவிய காரணம் பெண்கள் வீட்டைவிட்டு வெளியே வந்தது, பொருள் ஈட்ட ஆரம்பித்ததுதான் என முடிக்கிறார்கள்.

உண்மையில் என்ன காரணம் என்று ஆராய்ந்து பார்த்தால், மாறி வரும் கால சூழலுக்கும், பொருளாதாரத் தேவைக்கும் பெண் வீட்டைவிட்டு வெளியே சென்று பொருள் ஈட்டுவதை ஆண்கள் விரும்பினாலும், அதன் மூலம் கிடைக்கும் பணத்தின் மூலம் குடும்பத்துக்கான தேவைகளைச் சிரமமின்றி சமாளிப்பதுடன், கொஞ்சம் வாழ்வில் அடுத்த கட்டம் நோக்கி நகர முடிவதை ஏற்றுக்கொண்டாலும், வீட்டின் வேலைகளையும் பெண்ணே செய்ய வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு ஆணுக்கு இருக்கிறது. வீட்டு வேலைகள், குடும்பப் பொறுப்புகளை பெண்களுக்காக நேர்ந்து விடப்பட்டவையாகதான் ஆண் பார்க்கிறான்.

இன்றைய தலைமுறை ஆண்கள் நான் மனைவியின் சுமைகளைப் பகிர்ந்து கொள்கிறேன், வீட்டு வேலைகளைப் பகிர்ந்து கொள்கிறேன் என்று சிலவற்றைப் பகிர்ந்தாலும், பல நூற்றாண்டுகளாக ஆணுக்குள் ஆழப் பதிந்துவிட்டு இருக்கும் பெண்ணின் இலக்கணம் வழுவுதலை பல ஆண் மனதால் ஏற்க முடிவதில்லை என்பதுதான் உண்மை.

என்னுடன் பணிபுரிந்த தோழி ஒருவர் உதவி பேராசிரியர். அவருக்கு மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை உண்டு. அந்தக் குழந்தையை வீட்டின் அருகே வரும் பள்ளி வேனில் ஏற்றி அனுப்பிவிட்டு, கல்லூரிப் பேருந்தில் ஏறுவார். மாலை கல்லூரிப் பேருந்து சரியான நேரத்திற்குச் சென்றுவிட்டால், வேனில் இருந்து இறங்கும் குழந்தையைச் சரியான நேரத்துக்கு பிக்கப் செய்து கொள்ள முடியும்.

ட்ராபிக் காரணமாகவோ எதனாலோ கால தாமதம் ஏற்பட்டு ஓர் ஐந்து நிமிடம் தாமதமாகக் கல்லூரிப் பேருந்து கிளம்பினால்கூட, இவர் குழந்தையின் பள்ளி வேன் எங்கள் பேருந்தைக் கடந்து சென்றுவிடும். அதன் பின் அந்த வேன் அனைத்துக் குழந்தைகளையும் இறக்கிவிட்டு, இறுதியாக வர கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் ஆகிவிடும். அதுவரை அவர் அங்கேயே காத்திருக்க வேண்டும்.

வீட்டில் யாரும் இருக்க மாட்டார்கள் என்பதால் குழந்தையை வீட்டில் விட முடியாது. கல்லூரிப் பேருந்து, ஸ்கூல் வேன் ஆகியவை மெயின் ரோடுகளில்தான் பிக்கப் பாயிண்ட் வைத்து இருக்கும் என்பதால், அந்த மெயின் பாயிண்டையே தனக்கும் குழந்தைக்குமான மீட்டிங் ஸ்பாட்டாகத் தேர்வு செய்திருந்தார். அங்கிருந்து இறங்கி ஆட்டோ பிடித்து ஒரு ரயில்வே க்ராஸிங்கைத் தாண்டி ஒரு கிலோமீட்டர் பயணிக்க வேண்டும்.

குழந்தை வருவதற்குள் வீட்டிற்குச் சென்று வேலைகளைப் பார்த்து வரலாம் எனச் செல்லவும் முடியாது, ரயில்வே க்ராஸிங், எலெக்ட்ரிக் ட்ரெயின் அதிகம் என்பதால் கேட் மூடுவதும் திறப்பதும் அதன் காரணமான ட்ராபிக் ஜாமும் வீட்டுக்குச் சென்று திரும்பி வருவதை அனுமதிக்காது.

ஒவ்வொரு நாளும் தனது கல்லூரிப் பேருந்து மாலை சரியாக கிளம்ப வேண்டும் என்றும், அந்த வேனைச் சந்திக்கும் வரை பெரும் பதற்றத்துடன், வேன் டிரைவருக்குப் பேசியபடியே வருவார். ‘இங்க வந்துட்டேன், ஒரு ரெண்டு நிமிஷம்ண்ணா ப்ளீஸ்’ என்று கெஞ்சுவதையும், நிலைகொள்ளாமல் தவிப்பதையும் பார்க்க அவ்வளவு சிரமமாக இருக்கும்.

அவரின் கணவர் ஒரு நல்ல நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் வேலை செய்கிறார். காலை பத்து மணிக்கு டூ வீலரில் சென்று மாலை ஏழு மணிக்குத் திரும்புவார். அதற்கே தனக்கு அசதியாக இருப்பதாக அலட்டிக்கொள்வார். பெரிய மனதுடன் பாத்திரங்கள் கழுவும் பொறுப்பை மட்டும் ஏற்றுக் கொண்டார்.

இவர் தினமும் அனுபவிக்கும் பதற்றம் குறித்து எல்லாம் அவருக்கு கவலை இல்லை. ‘உனக்கென்ன கல்லூரி வேலை, க்ளாஸ் எடுக்குற நேரம் தவிர ரெஸ்ட்தானே! எனக்கு அப்படி இல்லை’ என்று கூறுவதை அந்த உதவிப் பேராசிரியரும் நம்பி சுமைகளை, மன அழுத்தங்களைத் தனக்குள்ளாகவே அழுத்தி அழுத்தி வைத்திருந்தார்.

இதில் அவர் திடீரென தனக்கு ஓய்வு தேவை என லீவ் எடுத்துக்கொள்வார். ஆனால், அதை மனைவியிடம் கூற மாட்டார். இவர் அரக்கப் பரக்க எழுந்து மகளைத் தயார் செய்து, அனைவருக்கும் சாப்பாடு கட்டி கல்லூரி வர, இவர்களை அனுப்பிவிட்டு அவர் வீட்டில் கிரிக்கெட்டோ டிவியோ பார்த்துக்கொண்டு ஓய்வெடுப்பார்.

தான் லீவ் என்று சொல்லிவிட்டால் மனைவி வேலை ஏதாவது கொடுத்துவிடுவாரோ என்ற எண்ணத்தில் லீவ் என்பதையே மறைத்துவிடுவார். இதை எங்களுடன் பகிரும் போது அவ்வளவு கொந்தளிப்பார். இதனிடையே இரண்டாவது குழந்தை உருவாக, எங்களிடம் குழந்தை பேறுக்கு லீவ் எடுக்கும்போது, குழந்தைகள் வளரும் வரை வேலைக்கு வரப் போவதில்லை எனக் கூறிக்கொண்டே இருந்தார். பேறு காலம் வரும்போது கணவர், குழந்தை பிறந்த பின் ரெசிக்னேஷன் கொடுத்து கொள்ளலாம், இப்போதைக்கு மேடர்னிட்டி லீவ் மட்டும் எடுத்துக்கொள் என்று கூற, அரை மனதாக அதற்குச் சம்மதித்தார்.

குழந்தை பிறந்த நான்காம் மாதமே வேலைக்கு வர ஆரம்பிக்க, என்ன என்று விசாரித்தபோது கணவர் என் அம்மா வீட்டில் குழந்தையை விட்டு வரச் சொல்லிவிட்டார் என ஆரம்பித்து அழுது குவித்துவிட்டார். லோன் ஏகத்துக்கு இருப்பதால் மனைவியின் வருமானம் இல்லாமல் சமாளிப்பது கஷ்டம் எனக் கெஞ்சி, கொஞ்சி வேலைக்கு அனுப்பிவிட்டார். அம்மா வீடோ ஆறு ஏழு மணி நேரம் பயண தூரம். வார இறுதியில்தான் குழந்தையைப் பார்க்க முடியும்.

‘நான் அவர் வருமானத்தில் சிக்கனமாகச் செலவுகளைச் சமாளித்து, குழந்தை பள்ளி செல்லும் வரை அவனுடன் மூன்று நான்கு வருடம் இருந்துவிட்டு, வேலைக்கு வரலாம் என இருந்தேன். ஆனால், கணவருக்கு அதில் துளிகூட சம்மதமில்லை. இப்போதைய வருமானம் குறைவதை அவரால் ஏற்க முடியவில்லை, வீட்டில் சண்டை சண்டை என நிம்மதி குலைகிறது. அதனால் வேலைக்கு வந்து விட்டேன்’ என்றார். இதில் இன்னொரு விஷயம் அந்தப் பெண்ணின் பேங்க் டெபிட் கார்டு உட்பட அனைத்தும் கணவரிடம்தான் இருக்கும். முழு வரவு செலவும் அவர்தான் பார்ப்பார். மனைவிக்கு மாதம் கை செலவுக்கு என ஒரு குறிப்பிட்ட தொகை கொடுப்பார். தேவை என்றால் கேளு நான் என்ன தரமாட்டேன் என்றா சொல்கிறேன் என்று பெரிய மனதுடன் கூறியிருந்தார், கொடுக்கவும் செய்வார் என்றாலும், இவர் ஒவ்வொன்றுக்கும் கணவரிடம் இதற்கு பணம் வேண்டும், அதற்கு பணம் வேண்டும் என்று கை நீட்டும் நிலைதான்.

படித்து உதவி பேராசிரியராக ஒரு கல்லூரியில் பணிபுரியும் பெண்ணுக்கு இதனை எதிர்த்து தன் நலம் குறித்தும், தன் விருப்பம் குறித்தும் தைரியமாக முடிவெடுக்க முடியாமல் தடுப்பது எது? குழந்தை வளர்ப்பில் தனது பங்கு குறித்து ஆணுக்குப் பெரியளவில் குற்ற உணர்வின்றி இருக்க காரணம் எது?

அவரின் கணவர் குடிகாரர் இல்லை, மனைவியை அடிப்பவர் இல்லை. லீவ் போட்டதை மறைத்ததற்கு மனைவி திட்டினாலும் சிரித்துக் கொண்டே சகித்துக் கொள்வதுடன் அதனைத் தொடர்பவர்தான். மனைவி தவிர வேறு பெண்களை ஏறெடுத்தும் பார்க்காத ஒழுக்க சீலர்தான், சர்சுக்கு மாதா மாதம் சரியாக தசம பாகம் கொடுப்பவர்தான். இதனாலேயே குடும்பம் மொத்தத்தாலும் அவர் கணவர் நல்லவர் என்ற பெயரை எடுத்துவிட்டதுடன், அவர் சொல்வது போல அட்ஜஸ்ட் செய்து போனால் என்ன என்ற குடும்பத்தின் இலவச அறிவுரையும் ஏற்க வேண்டிய கட்டாயம், எனக்கு அந்த உதவி பேராசிரியரைச் சில நேரம் பார்க்கும் போது வெடிக்கக் காத்திருக்கும் எரிமலையைச் சுமந்து கொண்டிருப்பதாகத்தான் தோன்றும். ஆனால், அந்த எரிமலை எப்போது எப்படி வெடிக்கும் என்பதை அந்தக் கணவனும் அறிய மாட்டான், குடும்பத்தினர்களும் அறிய மாட்டார்கள்.

(தொடரும்)

படைப்பாளர்:

கமலி பன்னீர்செல்வம். எழுத்தாளர். ‘கேட் சோபின் சிறுகதைகள்’ என்ற நூல் இவர் மொழிபெயர்ப்பில் வெளிவந்து, பாராட்டுகளைப் பெற்று வருகிறது.