அடுக்களையில் பரபரவென இயங்கிக் கொண்டிருந்த உமாவின் எதிரில், ‘’அம்மா, என் யூனிபார்ம் அயர்ன் பண்ணவேயில்லை’’ என்ற புகாரோடு வந்து நின்றான் பரத்.

“அப்பா கிட்ட குடுத்து அயர்ன் பண்ணிக்க’’ என்றாள் அடுப்பில் கவனம் வைத்து.

“அப்பாதான் அப்பவே ஷூவை மாட்டிக்கிட்டு ஜாகிங் கிளம்பிட்டாரே…’’

அவசரமாக ஹாலுக்கு வந்து மணி பார்த்தாள். ‘மை காட். இன்னும் நாற்பது நிமிடங்களே இருக்கின்றது. அதற்குள் மீதிச் சமையலை முடித்து, குளித்து, நான் கிளம்பவேண்டுமே’ என்கிற எண்ணம் ஓட, “கண்ணா, இன்னைக்கு ஒரு நாள் அப்படியே போட்டு அட்ஜஸ்ட் பண்ணிக்கடா ப்ளீஸ்’’ என்றாள். அம்மாவின் அவசரம் புரிந்து தலையாட்டிய பரத் அங்கிருந்து நகர்ந்தான்.

உணவு மேசை மேல் மதிய உணவு டப்பாக்களைக் கொண்டு வந்து வைத்தாள் உமா. ஏற்கெனவே நான்கு தண்ணீர் பாட்டில்களில் நீர் நிரப்பித் தயாராக வைத்திருந்தான் பரத். வர்ஷாவும் தன் பங்கிற்கு குடுகுடுவென ஓடிப்போய் கப்போர்டைத் திறந்து பைகளை எடுத்து வந்தாள். டிபன் டப்பாக்களை உரிய பைகளில் பரத் வைக்க, ஸ்பூன்களை உள்ளே போட்டு, அவை ‘கிளிங்’ என எழுப்பிய சத்தத்திற்கு பல் தெரிய அழகாகச் சிரித்த தங்கையின் தலையைச் செல்லமாகக் கலைத்தான் பரத்.

உமா குளித்துவிட்டு வருவதற்குள் தானும் சீருடை அணிந்து, தங்கைக்கும் அணிவித்திருந்தான் பரத். அம்மாவின் கைப்பையில் வீட்டுச் சாவி, கைக்குட்டை, செல்போன் ஆகியவற்றை வைத்துவிட்டு, உள் ஜிப்பைத் திறந்து அதில் பணம் இருக்கிறதா என சோதித்துவிட்டு, ‘’அம்மா உள்ள டூ ஹண்ட்ரட் ருபீஸ் இருக்கு. போதுமா?’’ என்றான் பெரிய மனிதன் போல.

புடவையின் கொசுவத்தை நீவியபடி, ‘’போதும்டா கண்ணு’’ என்று அவள் சொல்லும்போது நுழைந்தான் திலீப். “கிளம்பியாச்சு போல?’’ என்றான் சம்பிரதாயமாக. மின்னல் வேகத்தில் தலை சீவி கிளிப் மாட்டி, தண்ணீர் மட்டும் குடித்துவிட்டு, கைப்பையைத் தோளில் மாட்டிக் கொண்டு, ‘’ரெண்டு பேரும் சமத்தா சாப்பிட்டுக் கிளம்பணும் செல்லங்களா… ஏங்க, வரேன்’’ என்றதும் தலையாட்டினான்.

“அம்மா, நீங்க சாப்பிடாமல் போறீங்களே…?’’ என்கிற மகனின் வருத்தமுகம் நெகிழ்வைத் தர, “’டைமில்லை கண்ணா. கேண்டீன்ல பாத்துக்கறேன். பை’’ என அவசரமாக காலணிகளுக்குள் பாதங்களைத் திணிக்கையில், கையில் டிபன் தட்டுடன் வந்த வர்ஷா குட்டி, “அம்மா, இந்தா.. ஆ’’ அவள் குனிய, தன் பிஞ்சு விரல்களால் ஊட்டிய அந்த ஒரு துண்டு இட்லி தேனாக இனிக்க, விழிகள் கலங்கின. ஒன்பது வயது மகனுக்கும் ஐந்து வயது மகளுக்கும் இருக்கிற அக்கறையோ பாசமோ இன்றி எப்படி இருக்கிறான் இப்படிக் கல் போல? ஸ்கூட்டியை இயக்கி, சாலையில் பறக்கையில் ஆத்திரமும் கோபமும் பீறிட்டன. உருகி உருகிக் காதலித்தபோது காட்டிய அன்பு வெள்ளத்தின் துளி கூடவா மணமான பத்தாண்டுகளில் மறைந்துவிடும்?

பிள்ளைகளை எழுப்பிவிட்டு, வர்ஷாவை மட்டும் குளிப்பாட்டி விடுவான். அவளே சமர்த்தாகச் சாப்பிட்டுக் கொள்வாள். சாக்ஸ், ஷூக்கள் எல்லாம் பரத்தே வர்ஷாவிற்கு மாட்டிவிடுவான். எட்டு இருபதுக்கு வீட்டு வாசலுக்கு வரும் பள்ளிவாகனத்தில் அவர்கள் ஏறிச் சென்ற பின், அவன் வேலைக்குத் தயாராவான். பத்திலிருந்து மாலை ஆறு வரை ஒரு கெமிக்கல் ஃபாக்டரியில் சூப்பர்வைசர் உத்தியோகம். ஆனால், வேலை முடிந்து உடனே வீடு திரும்பும் வழக்கமில்லை. டென்னிஸ் க்ளப்பிற்குச் சென்று நண்பர்களுடன் அரட்டை, சீட்டாட்டம் எனச் சுழலும் அவன் உலகம். வீடு திரும்பும் போது இரவு எட்டாகிவிடும்.

மாலை நான்கு மணிக்கு தங்கையுடன் வீடு திரும்பி, பூட்டைத் திறந்து, கதவை உள்புறமாகத் தாழிட்டுக்கொள்வான் பரத். ஆறு மணிக்கு அம்மா வரும் முன், இருவரும் வீட்டுப்பாடம் எழுதி முடித்திருப்பர். சமயங்களில் அவள் வர ஏழுகூட ஆகும். “அம்மா, வர்ஷா பசிக்கிதுன்னு அழுதுச்சு. பிஸ்கட், சிப்ஸ் கொடுத்தேன். சீக்கிரம் எனக்கு தோசை செய்ய சொல்லிக் கொடுங்க’’ என அவன் சொல்லும் போது மனம் வலிக்கும். தன் குழந்தைத்தனத்தைத் தொலைத்துவிட்டு, வயதுக்கு மீறின பக்குவத்துடனும், பொறுப்புணர்வுடனும் இருக்கிறானே? இதற்கு காரணமாகி விட்டோமே என்கிற குற்றவுணர்வு அடிக்கடி எழும் அவளுக்கு. ‘அம்மா பாவம்’ என ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்வான். கேட்காமலே உதவுவான். வர்ஷாவுக்கு அவன் ஒரு குட்டி அம்மா. அத்தனை அருமையாக அவளைக் கவனித்துக் கொள்கிறான். அண்ணனைப் பார்த்து தங்கையும் போட்டி போட்டுக் கொண்டு வீட்டு வேலைகளில் உதவுவாள்.

கல்லூரி கேம்பஸிற்குள் இருக்கும் ஸ்டாஃப் குவாட்டர்ஸுக்குக் குடி போய்விட்டால் எட்டு ஐம்பதுக்கு வீட்டை விட்டு வெளியேறினால் போதும். இப்படி ஏழே முக்காலுக்கு ஓட வேண்டியதில்லை. மாலையில் அவள் ஐந்தே நிமிடங்களில் வீடடைவாளே. கைவலிக்க வண்டியோட்டி, ஐம்பது நிமிடம் பயணித்து, அலுத்து சலித்து வீடு திரும்பும் தொல்லை இல்லையே.

பிள்ளைகளையும் கேம்பஸுக்குள் இருக்கும் அதே கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த பள்ளியிலேயே சேர்த்துவிடலாம். ஐம்பது சதவீதக் கட்டணச் சலுகை வேறு கிடைக்கும். எவ்வளவோ சொல்லியும் ஏற்றுக்கொள்ளவில்லை அவன். “செகண்ட் ஹாண்ட்ல வாங்கின இந்த ஓட்டை பைக்குல தினம் இருபதிருபது நாப்பது கிலோமீட்டர் என் கம்பெனிக்கு வந்து போறதெல்லாம் நடக்கிற காரியமா?’’ என நிர்தாட்சண்யமாக மறுத்துவிட்டான். அவளுமே தினம் பதினாறு கிலோமீட்டர் பயணித்துத்தான் கல்லூரியை அடைகிறாள் என்பதை ஏனோ அவனுக்கு நினைக்கத் தோன்றவில்லை.

பார்க்கிங் ஏரியாவில் வண்டியை நிறுத்திவிட்டு, அலுவலக அறை நோக்கி நடந்தாள், பயோமெட்ரிக் கருவியில் தன் வருகையைப் பதிவு செய்ய. அன்று முதல் பீரியட் அவளுக்கு வகுப்பில்லை. கேண்ட்டீனில் டிபன் சாப்பிட்டுவிட்டு, டிபார்ட்மெண்ட் போய்க்கொள்ளலாம் என்று நினைத்த போது, அலைபேசி அழைத்தது. ஹெச். ஓ.டி ரமேஷ்!

“இன்னைக்கு சங்கரி மேம் லீவு. அதனால இப்ப செகண்ட் இயர் சிவில் க்ளாசுக்கு நீங்க போயிடுங்க’’ என்றார் மறுமுனையில் அவர். ‘அதானே, முதல் பீரியட்லயே நம்மளை ஃப்ரீயா இருக்க விட்ருவாங்களா? இப்ப சதீஷ், ரகுவுக்கும்

கூடத்தான் ஃப்ரீ அவர்ஸ். அவங்களைப் போகச் சொல்ல வேண்டியதுதான? க்ளோஸ் பிரெண்டுகளாச்சே… அவர்களை அனுப்ப மனசு வருமா? ஹெச். ஓ.டி டேபிளைச் சுற்றி அமர்ந்துகொண்டு, அரட்டையடித்துச் சிரித்தபடி நிதானமாக அவர்கள் மூவரும், காலை டிபனை ஒருகை பார்க்கும் வேளையில், காலை நான்கரையில் இருந்து வீட்டு வேலை பார்த்து, பசித்த வயிறுடன், நான் சிவில் வகுப்பில் போய்க் கத்தவேண்டும். சரியான இரட்டை வால்கள் அந்த மாணவர்கள். எப்போதும் பாதிப் பேருக்கு மேல் வகுப்பில் இருக்க மாட்டர்கள்.’

சரியாக ஒன்பது மணிக்கு வகுப்பறைக்குள் நுழைந்ததும் ‘ஐயோ, வந்துட்டியா?’ என்பது போல பார்த்தனர். ஆங்கில இலக்கணம் என்றாலே இந்த மாணவர்களுக்கு எப்போதும் வேப்பங்காய்தான். அதுவும் ‘பொறியியல் கல்லூரிக்கு வந்ததுக்கு அப்புறமும் எங்களுக்கு இந்தத் தண்டனை தேவைதானா?’ என அவர்கள் மனதில் எழுந்த ஓலத்தை முகக்குறிப்பால் உணர்த்தினர்.

அட்டெண்டன்ஸ் எடுத்து முடித்ததும் ஒரு மாணவன் எழுந்து, “மேம், எனக்கு ஒரு டவுட். பொதுவா லாங்வேஜ் கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ், கிராமர் நாலெட்ஜ், இதெல்லாம் டெஸ்ட் பண்ணிதானே கேம்பஸ்ல ஸ்டூடென்ட்ஸ் செலக்ஷன் நடக்கும்?’’

“ஆமா…’’

“சிவில் எஞ்சினீயரிங் படிக்கற எங்களுக்குத்தான் கேம்பஸ் இண்டர்வ்யூவே கிடையாதே… அப்புறம் எதுக்கு மேம் எங்களுக்கு ஸ்போக்கன் கிளாஸும், இங்கிலீஷ் கிராமரும்?’’ என்று அவன் துடுக்காகக் கேட்டதும், “ஆளேயில்லாத கடையில யாருக்கு மாப்ளை நாமெல்லாம் டீ ஆத்துறோம்?’’ கூட்டத்தில் ஒருவன் சோகக் குரலில் கத்த, மொத்த வகுப்பும் கைதட்டி ஆர்ப்பரித்தது.

மெல்ல மெல்ல சிரிப்பு அடங்கியதும், “நியாயமான கேள்விதான். உங்க வேலையெல்லாம் சிமென்ட், ஜல்லி, மணல், சித்தாளு, கொத்தனாரோடதான். இதுல எதுக்கு இங்கிலீஷ்னு தோணுதுதானே? ஆனா பாருங்க, நாங்க என்னமோ உங்களை அப்படி இப்படித் தேத்திவிட்டு, டீசன்ட்டான எஞ்சினீயராக்கிடலாம்னு முயற்சி பண்றோம். வேண்டவே வேண்டாம், நாங்க சித்தாள் ரேஞ்சிலேயே இருந்துக்கறோம்னு அடம் பிடிக்கறீங்க… நடத்துங்க,

நடத்துங்க. ஆனா, கடனை உடனை வாங்கி, தோட்டம், நகைன்னு அடகு வச்சு, லட்சக்கணக்குல ஃபீஸ் கட்டி, தனக்கு ஒரு நல்ல செருப்போ உடுப்போகூட வாங்கிக்காம, உங்களுக்கு விதவிதமா ட்ரெஸ், ஷூ, வாங்கிக் குடுத்து, நாளைக்குப் பிள்ளை எஞ்சினியர் ஆகிடுவான்னு கனவு கண்டிட்டு இருக்கிற உங்க அப்பா, அம்மாவை நினைச்சாதான் பாவமா இருக்கு பசங்களா’’ என்று அவள் பேசி முடித்ததும், சட்டென மந்திரம் போட்டாற் போல வகுப்பு அதீத அமைதி நிலைக்குப் போயிற்று. அதன் பின் எந்த இடையூறுமின்றி வகுப்பெடுத்தாள். பதினோரு மணிக்குதான் கேண்ட்டீன் செல்ல முடிந்தது.

சமோசாவும் டீயும் வாங்கிக்கொண்டு அமர்ந்தாள். “ஹாய், உமா மேம்” என்றபடி எதிர் இருக்கையில் வந்து அமர்ந்தார் மெக்கானிக்கல் டிபார்ட்மென்டைச் சேர்ந்த மோகன்.

“மேம், என்னோட செமினார் பேப்பர் கரெக்க்ஷன் பண்ணிட்டீங்களா?”

“’எங்க சார்? நேத்து உங்க பேப்பரைத்தான் எடுத்து வச்சேன். அதுக்குள்ள காலேஜ் நியூஸ் லெட்டர் வேலைய அவசரமா முடிக்கச் சொல்லி எச்.ஓ.டி சொல்லிட்டாரு. இன்னைக்கு முடியுமானு தெரியல. மதியத்துக்கு மேல போர்ட்டல்ல இன்டர்னல் அசெஸ்மெண்ட் மார்க்ஸ் அப்லோட் பண்ற வேலை இருக்கு. லாஸ்ட் அவர் கிளாஸ் வேற இருக்கு சார். நாளைக்கும் ஃபுல் டே கேம்பஸ் இண்டர்வ்யூ டிரைவ் இருக்கு.’’

“மேம்… நேத்தே நான் குடுத்தேன். இன்னும் ரெண்டு நாள்தான் இருக்கு லாஸ்ட் டேட்டுக்கு. இன்னிக்கே எப்படியாவது கொஞ்சம் முடிச்சுக் கொடுத்துடுங்களேன்.’’

சட்டென எரிச்சல் வந்தது அவளுக்கு. இவ்வளவு சொல்லியும் தன் வேலைதான் முக்கியம். உன்னைப் பற்றியெல்லாம் அக்கறையே கிடையாது என்கிற தொனியில்தான் எத்தனை சுயநலம்?

“காலேஜ்ல டைம் இல்லைனா, வீட்டில செய்யலாமே மேம்? என்ன, ஒரு ஒன் அவர் செலவழிக்கணும்’’ கொஞ்சமும் வெட்கமின்றிக் கேட்டவனை, சில விநாடிகள் தீர்க்கமாக உற்றுப் பார்த்துவிட்டு, “ஒன் அவர் தானேன்னு எவ்வளவு ஈஸியா சொல்லீட்டீங்க? துணி துவைக்கறது, பாத்திரம் தேய்க்கறது, சமைக்கிறது, பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லித் தர்றதுனு ஒரு மணி நேரத்துல எத்தனையோ செய்யலாம். நீங்க, இதில எந்த வேலையை ஷேர் பண்ணிக்க ரெடியா இருக்கீங்க சார்?’’

சிரித்துக்கொண்டே அவள் கேட்க, அவன் முகம் விளக்கெண்ணெய் குடித்தது போல ஆனது. அவளை முறைத்தபடி எழுந்து சென்று, மூன்றாவது டேபிளில் அமர்ந்து டீ குடித்துக்கொண்டிருந்த, சேகரின் அருகில் அமர்ந்தான். இருவரும் ஒரே துறையை சேர்ந்தவர்கள்.

“ஆனாலும் அந்தம்மாவுக்கு ரொம்பத்தான் திமிரு’’ என்றான் சேகர்.

“எப்படிப் பேசுது பார்த்தேயில்லை? பத்துப் பன்னிரண்டு பக்கம் திருத்தறதுக்கு எவ்வளவு அலட்டல்? இது கிட்டப் போயி இந்த வேலையை ரமேஷ் அலாட் பண்ணியிருக்காரே?’’

“கிராமர்ல கில்லாடி. அதான் வாய் நீளுது.’’

அவர்கள் மெதுவாகப் பேசினாலும் அத்தனையும் அவள் காதில் விழுந்தது.

அந்தப் பொறியியல் கல்லூரியில் பணிபுரிபவர்கள் தங்கள் துறை சார்ந்த ஆய்வுக் கட்டுரைகளைப் பிற கல்லூரிகளில் நடைபெறும் கருத்தரங்குகள், மாநாடுகள், ஜர்னல்களில் சமர்ப்பிக்க வேண்டும், வருடத்திற்கு குறைந்தது இரண்டு மூன்றாவது. அவற்றுக்கு கல்லூரி சார்பில் மதிப்பெண்கள் வழங்கப்படும். இண்டிவிஜுவல் பெர்ஃபார்மென்ஸை வைத்துத்தான் இங்கே ஒவ்வொருவரின் இன்சென்டிவ் தீர்மானிக்கப்படும். பிரச்னை என்னவென்றால் முனைவர் பட்டம் பெற்ற துறை சார்ந்த ஆழமான அறிவு மிக்க பேராசிரியர்கள் பலர், ஆங்கிலத்தோடு போராடிக் கொண்டிருந்தனர். எந்த இடத்தில் ஹேவ், ஹேஸ் போடுவது என்று தெரியாமல், ஆக்டிவ் வாய்ஸ், பேசிவ் வாய்ஸ் எனப்படும் செய்வினை செய்யப்பாட்டுவினை வாக்கியங்கள் அமைப்பது எனத் தடுமாறுவர். கல்லூரி முதல்வர் உத்தரவுப்படி அந்தக்கட்டுரைகள் ஆங்கிலத் துறைக்கு அனுப்பப்பட்டு திருத்தம் செய்து வாங்கிய பிறகு சமர்ப்பிக்கப்பட வேண்டும். அந்தப் பணி உமாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

பிற துறையைச் சார்ந்த பேராசிரியர்களைக்கூட மன்னித்துவிடலாம். ஆனால், ஆங்கிலத் துறையைச் சேர்ந்த சிலருக்கு அடிப்படை இலக்கண அறிவு கூட கிடையாது. அதை என்ன சொல்வது? முனைவர் பட்டம் பெற்ற ரகுவும் சதீஷும் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில்கூட டாக்டர் எனக் குறிப்பிடத் தவறுவதில்லை. ஆனால், இருவருக்கும் வினைச்சொல், பெயர்ச்சொல், ஒருமை, பன்மை உள்ளிட்ட ஏராளமான குழப்பங்கள். ‘’லெட் வி கோ, ஹி டூ நாட் கம்ப்ளீட் த ஒர்க்’’ எனத் தப்பும் தவறுமாகப் பேசும்போது நொந்தே போவாள், இவர்களிடம் பயிலும் மாணவர்களை நினைத்து. வெறுமனே டெக்னிக்கல் அறிவு மட்டும் போதும் என நினைக்கும் அவர்களின் முட்டாள்தனத்தை என்ன சொல்வது? அவர்களும் அசோசியேட் புரொபசர்களாக காலம் தள்ளுகின்றனர். இவள் இப்போதுதான் பி.ஹெச்.டி படித்துக் கொண்டிருக்கிறாள். பணி அனுபவமும் குறைவு. அதனால் ஜூனியர் என அவள் மேல் எப்போதும் இளக்காரம்தான்.

சங்கரி இருந்திருந்தால் உதவியிருப்பாள் என நினைத்தவாறு மதிப்பெண்களைப் பதிவேற்றம் செய்தாள். நீண்ட நேரமாக கணினித் திரையை உற்றுப் பார்த்ததில் தலையும் கண்களும் வலித்தன. கல்லூரி முடியும் வேளையில், ‘’அஞ்சு மணிக்கு மேல செக்ரட்டரி, பிரின்சிபல்கூட ஸ்ஃடாப் மீட்டிங் இருக்கு’’ என ஹெச்.ஓ.டி சொல்ல, காற்றுப் போன பலூனாக சுருங்கியது அவள் மனம்.

நாளையும் இன்டர்வியூ இருக்கிறது. எப்படியும் முடிவதற்கு ஏழரை, எட்டு ஆகிவிடும். இன்றைக்காவது நேரத்தோடு வீட்டிற்குப் போகலாம் என்கிற நினைப்பில் மண் விழுந்தது. கல்லூரி சேர்மனின் மகனான செகரட்டரி நிதானமாக ஆறு மணிக்கு ஆடி காரில் வந்து இறங்கினார்.

மழை வரும் போல இருக்கிறது. திடீரென பவர் கட் ஆனாலும் ஆகும். வீட்டில் யூ. பி.எஸ். பேட்டரி எந்நேரமும் தீர்ந்து போகலாம் என்ற நிலையில் இருக்கிறது. புதிது வாங்க தற்போது கையில் காசு இல்லை. ‘பிள்ளைகள் இருவரும் இருட்டில் தனியாக இருப்பார்களே? வீட்டில் மெழுகுவர்த்தி இருக்கிறதோ இல்லையோ என்ற கவலை மனதை அரிக்க, மீட்டிங்கில் தரப்பட்ட முட்டை பப்ஸும் ஜூஸும்கூட சுவைக்கவில்லை அவளுக்கு.

நாலே முக்காலுக்கு கணவனைத் தொடர்பு கொண்டு மீட்டிங் விஷயத்தைக் கூற, ‘’அப்போ நீ வர லேட்டாகுமா? சரி, அதுக்காக என்னைச் சீக்கிரம் வீட்டுக்குப் போகச் சொல்லாதே’’ என்று வைத்து விட்டான். இயலாமையும் சலிப்பும் சேர்ந்து கொள்ள, தலைவலி இன்னும் தீவிரமானது.

ஒரு வழியாக ஏழு மணிக்கு மீட்டிங் முடிய, அவசரமாக வண்டியை எடுத்துக்கொண்டு விரைந்தாள். அந்த நேரத்தில் போக்குவரத்து கனஜோராக களைகட்டி இருந்தது. சாலை முழுக்க டூவீலர்களும் கார்களும் ஆக்கிரமித்திருந்தன. சத்திரம்புதூரைத் தாண்டும்போது இடதுபுற மண் ரோட்டில் இருந்து வந்து, திடீரென சாலையில் கலந்த லாரிக்கு வழி விட்டு பக்கவாட்டில் ஒதுங்க முயன்ற போது, ரோட்டோர மணலில் வண்டிச்சக்கரங்கள் சிக்க, தடுமாறி வண்டியுடன் கீழே சாய்ந்தாள்.

கார்க்காரர்கள் கண்டுகொள்ளாமல் செல்ல, சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு ஆட்டோவும் மூன்று பைக்காரர்களும், இவளைக் கவனித்து உதவிக்கு ஓடி வந்தனர். ஒருவர் கைகொடுக்க, இவள் மெல்ல எழுந்து நின்றாள். மற்றொருவர் வண்டியைத் தூக்கி நிறுத்தினார். கையில் லேசான சிராய்ப்புக் காயம் மட்டுமே. இடுப்பும் தோள்பட்டையும் செமையாக வலித்தன.

‘அடிபட்டு விட்டதா? ரத்தம் வருகிறதா?’ என்று அக்கறைக் கேள்விகளையும் ‘பார்த்துப் போம்மா, ஜாக்கிரதை’ என்கிற கரிசனக் குரல்களையும் சுமந்துகொண்டு வீடு வந்து சேர்ந்தாள். நினைத்தது போலவே கரண்ட் இல்லை.

பிள்ளைகளுக்கு தோசை ஊற்றிக் கொடுத்து தானும் சாப்பிட்டாள். ‘’அம்மா இன்னைக்கு அபிமன்யு கதை சொல்றேன்னு சொன்னீங்களே’’ என்று வர்ஷா ஞாபகப்படுத்த, சொல்லத் தொடங்கினாள். ‘’அச்சச்சோ, பாவம் அபிமன்யு. அம்மா வயித்துல இருக்கிறப்போ பாதியிலேயே தூங்கிட்டான்’’ என்றபடியே அவள் மடியில் தூங்கி போனது வர்ஷா குட்டி.

ஒன்பது மணிக்கு வந்து சேர்ந்த திலீப், ‘’என்னது, தொட்டுக்க பொடி வச்சிருக்க? சட்னி அரைக்கலையா?’’ என்றான் எரிச்சலுடன் நெற்றியைச் சுளித்தபடி சாப்பிட்டான்.

“ஏங்க, உங்களுக்குப் பழைய பைக்ல போயிட்டு வர கஷ்டமா இருக்குல்ல. அதனால என் ஸ்கூட்டியை நீங்க எடுத்துக்கோங்க.’’ அவன் முகம் பிரகாசமானது.

“அப்ப நீ? ஓ, காலேஜ் பஸ்ல போறதா பிளானா? நல்ல ஐடியாதான். ஆனா என்ன? பஸ்ல போறதுனா காலையில இன்னும் சீக்கிரம் கிளம்பணும். சாயந்திரமும் லேட் ஆகும். இல்லையா?’’

“ஐ.டி. டிபார்ட்மென்ட் விவேக் சாருக்கு கவர்மெண்ட் ஜாப் கிடைச்சிருக்கு. இன்னும் நாலு நாள்ல ரிலீவ் ஆகுறாரு’’ என்றதும், ‘இதை எதுக்கு என்கிட்ட சொல்ற’ என்கிற தொனியில் பார்த்தான்.

“காலேஜ் கேம்பஸ்ல அவர் குடியிருந்த குவாட்டர்ஸ் வேகன்ட் ஆயிடும். நாம அங்க போயிடலாம். நாளைக்கே ஏ. ஓ சாரைப் பார்த்துச் சொல்லிட்டு, கையோட அப்ளிகேஷனும் கொடுக்கலாம்னு இருக்கேன். நமக்கே அலாட் பண்ணிக் கொடுத்துடுவாரு. வேற யாரும் காம்படிஷனுக்கு இப்போதைக்கு இல்லை.’’

‘’ஏய், என்ன உளர்ற? நான்தான் ஏற்கெனவே வேண்டாம்னு சொல்லிட்டேன்ல. எதுக்கு மறுபடியும் அந்த பேச்சு? ஓஹோ, குவாட்டர்ஸ்ல இருந்து வந்து போறதுக்குதான் மேடம், உங்க ஸ்கூட்டியை எனக்குத் தானம் பண்றீங்களா?’’

“கொஞ்சமாவது புரிஞ்சுக்கிட்டுப் பேசுங்க. தினம் தினம் பிள்ளைகளை இங்க தனியா விட்டுட்டு வீடு வந்து சேர்றதுக்குள்ள எனக்கு உயிரே போயிடுது. டிராபிக்ல வண்டியை கான்சென்ட்ரேட் பண்ணி ஓட்ட முடியல. இன்னைக்கு கூட ஒரு ஆக்சிடென்ட்ல சிக்கத் தெரிஞ்சேன்.’’

“அதுக்கு என்ன பண்றது? பார்த்து தான் வண்டி ஓட்டணும்.’’

“ஏங்க இப்படிப் பிடிவாதம் பிடிக்கிறீங்க? பெருந்துறையில் ரெண்டு கெமிக்கல் ஃபேக்ட்ரீஸ் இருக்கு. நீங்க முயற்சி பண்ணுனா உங்க எக்ஸ்பீரியன்ஸ்க்கு நிச்சயம் கிடைக்கும். காலேஜ்ல இருந்து மூணு கிலோ மீட்டர்தான். ப்ளீஸ்ங்க, சரின்னு சொல்லுங்க.’’

“முடியவே முடியாது. என்னால பழகின கம்பெனி, பிரண்ட்சை விட்டுட்டு அங்கல்லாம் வர முடியாது’’ என்றான் திட்டவட்டமாக.

‘அடப்பாவி… இருபத்தியிரண்டு வருஷம் வளர்த்த பெத்தவங்களையும் குடும்பத்தையும் விட்டுட்டு நான் உன் பின்னால வரல? நீ என்னவோ பிரண்ட்ஸ், பழகுன இடம்னு கதை பேசுற?’ உள்ளுக்குள் வலித்தது.

‘’முடிவா என்ன சொல்றீங்க?’’

“நான் அங்க வரமாட்டேன். உனக்கு வேணும்னா பிள்ளைகளைக் கூட்டிக்கிட்டு நீ போய்க்க’’ என்றான் எகத்தாளமாக.

“உங்க விருப்பம் அதுதான்னா, அப்படியே நடக்கட்டும். நான் தீர்மானிச்சிட்டேன். கூடிய சீக்கிரம் நாங்க அங்கே குடிபோறோம். நீங்க இங்கதான்தான் இருப்பேன்னு பிடிவாதம் பிடிச்சா, இருந்துக்கோங்க, தனியா சமைச்சுச் சாப்பிட்டுக்கிட்டு. எனக்கு அதைப் பத்தி கவலையில்லை’’ என அழுத்தமாகச் சொல்லிவிட்டு அவள் எழுந்து போக, உறைந்து நின்றான்.

பிள்ளைகளுக்கு நடுவில் படுத்துக்கொண்டு தலையணையில் முகம் சாய்த்தவளிடம், ‘’அம்மா’’ என்றான் பரத்.

‘’என்னடா கண்ணு, நீ இன்னும் தூங்கலையா?’’

“ம்கூம். நான் ஒன்னு சொல்லட்டா?’’

“என்னப்பா?’’

“அபிமன்யு மாதிரி அப்பாவும் நீங்க போட்ட சக்கர வியூகத்தில மாட்டிக்கிட்டாரு. இன்டெலிஜென்ட்டா இருந்தா நிச்சயம் அப்பா வெளில வருவாரு, இல்லையாமா?’’ என்ற மகனை ஆச்சரியத்துடன் பார்த்துக் கட்டிக்கொண்டாள்.

படைப்பாளர்:

விஜி ரவி.பத்தாண்டுகள் கல்லூரியில் ஆங்கிலத்துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். புத்தகங்களின் காதலி. இணைய இதழ்களில் பதினைந்து நூல் விமர்சனங்கள் எழுதியுள்ளார். அறுபதுக்கும் மேற்பட்ட குறுங்கட்டுரைகளும், முப்பது குறுங்கதைகளும் தினமலர் – பெண்கள் மலர், மங்கையர்மலர், கல்கி, தங்கமங்கை, குமுதம் ஆகிய இதழ்களில் வெளிவந்துள்ளன. தற்போது கல்கி ஆன்லைனில் தொடர்ந்து எழுதி வருகிறார். சில சிறுகதைப் போட்டிகளில் பங்கு பெற்று, பரிசுகளையும் பெற்றுள்ளார்.

.