“மீன்பிடித் தொழிலில் ஆபத்துகள், சவால்கள் அதிகமாக இருக்கின்றன. ஆகவே மீன்பிடிப்பது ஆண்மைக்குரிய மேலாதிக்க வெளிப்பாடாக மாறிவிடுகிறது” என்கிறார் அறிவியலாளர் நெல்சன் நவா டர்கோ. “சமூக, கலாசார, மதரீதியான காரணங்களால் பெண்கள் மீன்பிடிப்பதில்லை என்று பலரும் தானாகவே யூகித்துவிடுகிறார்கள், பெண்களின் பங்களிப்பை அவர்கள் நினைத்துக்கூடப் பார்ப்பதில்லை” என்று குறிப்பிடுகிறார் அறிவியலாளர் டேனியல் பாலி.

கடலின் பல்வேறு அம்சங்கள், கடல் சீற்றம் உள்ளிட்ட ஆபத்துகள் ஆகியவற்றோடு மீனவர்கள் தினமும் போராட வேண்டியிருக்கிறது. இத்தனை தொழில்நுட்பங்கள் வந்தபிறகும் மீன்பிடித் தொழில் ஆபத்தானதாகவே இருக்கிறது. இவை எல்லாமே மறுக்க முடியாத உண்மைகள். ஆனால், அதனாலேயே மீன்பிடித் தொழிலை முழுமையாக ஆண்களுக்கான களமாகச் சுருக்கிவிட முடியாது.

உலகத்தில் உள்ள மீனவர்களில் 15% பெண்கள்தாம் என்கிறது ஓர் ஆராய்ச்சிக் கட்டுரை. சிப்பி, கிளிஞ்சல், நத்தைகள் போன்றவற்றைச் சேகரிப்பதை Shellfisheries என்பார்கள். இந்தத் தொழிலில் இருக்கும் பெரும்பாலானோர் பெண்களே. ஒட்டுமொத்தமாக உலகில் 21 லட்சம் பெண்கள் மீன்பிடித் தொழிலில் நேரடியாக ஈடுபடுகிறார்கள் என்று ஓர் ஆராய்ச்சியில் கண்டறிந்திருக்கிறார்கள். இந்தியாவில் பல இடங்களில் சங்கு, சிப்பி, கிளிஞ்சல் போன்ற கடல் உணவுகளைச் சேகரிப்பது முற்றிலுமே பெண்கள்தாம். அது மட்டுமில்லாமல் மகாராஷ்டிராவின் மால்வண் பகுதியில் மீன்பிடிக்கும் பெண்கள், பல அடி ஆழம் வரை நீரில் மூழ்கி ராமநாதபுரத்தில் கடல்பாசி சேகரிக்கும் பெண்கள், ஆழ்கடல் மீன்பிடித் தொழிலுக்காக உரிமம் வாங்கிய முதல் பெண்ணான திருச்சூரின் ரேகா கார்த்திகேயன் என்று பலரை உதாரணமாகக் காட்டலாம். கேரளாவில் இருக்கும் பல சிறு தீவுகளில் வீட்டை ஒட்டிய பகுதிகளில் பெண்களே தங்கள் தேவைக்கான மீன்களைப் பிடித்துக்கொள்கிறார்கள்.

இந்தியாவைப் பொறுத்தவரை வணிகமாக இல்லாமல் ஒரு குடும்பத்தின் அன்றாடத் தேவைக்காக மட்டும் மீன்பிடிப்பவர்களில் 45% பெண்கள்தாம் என்று தெரிவிக்கிறது 2017இல் வந்த ஓர் ஆய்வு. அதாவது ஆண்களது மீன்பிடி செயல்பாடு ஒரு தொழிலாக இருக்கிறது. பெண்களின் மீன்பிடி செயல்பாடு குடும்பத் தேவைக்கானதாக இருக்கிறது, இந்தத் துறையில் பெண்களின் பங்களிப்பு கண்டுகொள்ளப்படாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். ஒரு வேலையை வைத்து வருமானம் ஈட்டினால் மட்டுமே புள்ளியியல் உங்களைக் கவனிக்கும்.

தென்கொரியாவின் ஜெஜூ மாகாணத்தில் ‘ஹேன்யோ’ என்று அழைக்கப்படும் சில பெண்கள் உண்டு. ஹேன்யோ என்றால் கொரிய மொழியில் ‘கடல் மகளிர்’ என்று அர்த்தம். இந்தப் பெண்கள் கடலுக்குள் சென்று கடல்பாசி, சிப்பிகள், பிற கடல் உயிரிகள் போன்றவற்றைச் சேகரிப்பவர்கள். இது இன்று நேற்று வந்த வழக்கமல்ல. கி.பி 434ஆம் ஆண்டிலிருந்தே இது நடைமுறையில் இருக்கிறதாம்! 1960களில் இவர்களின் மீன்பிடித் தொழில் உச்சத்தில் இருந்ததாகத் தெரிவிக்கின்றன வரலாற்றுக் குறிப்புகள்.

நேரடியாகக் கடலுக்குள் சென்று மீன்பிடிப்பது மட்டுமல்லாமல் பிடிக்கப்பட்ட மீன்களைப் பாதுகாப்பாக ஐஸ்கட்டிகளில் வைப்பது, விற்பது, ஏலம் விடுவது, விற்காத மீன்களைக் கருவாடாக்குவது, கருவாடுகளை விற்பது, மீன்களை வெட்டித் தருவது என எல்லாவற்றிலும் பெண்களின் பங்களிப்பு முக்கியமானது. மீன் மற்றும் இறால் பண்ணைகளுக்காகக் குஞ்சுகள் சேகரிப்பது, பண்ணைப் பராமரிப்பு, பண்ணையில் இருக்கும் மீன்களை அறுவடை செய்வது, வலைகளைச் சரிசெய்வது என்று பல விதங்களில் பெண்கள் பங்களிக்கின்றனர். இதில் மீன் வளர்ப்பைப் பொறுத்தவரை பெண்கள் கூலிக்காக வேலை செய்வதில்லை, பண்ணை உரிமையாளர்களின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள், கணவனுக்கோ தந்தைக்கோ ஓர் உதவியாகவே இந்த வேலைகளைச் செய்து தருகிறார்கள். ஆகவே இவர்களது பங்களிப்பு கணக்கில் வராமலேயே போய்விடுகிறது.

பெண்கள் பங்களிக்கக்கூடிய இன்னொரு முக்கியமான களம் கடல் உணவு சார்ந்த தொழிற்சாலைகள். குறிப்பாக இறால் தொழிற்சாலைகளில் இருக்கும் பணியாளர்களில் 90% பெண்கள்தாம் . மற்ற மீன் இனங்களின் தரவுகளைச் சேர்த்தாலும் பெண்களின் பங்களிப்பு அதிகமாகத்தான் இருக்கிறது. உலக அளவில் கடல் உணவுத் தொழிற்சாலைகளில் இருக்கும் பணியாளர்களில் இருவரில் ஒருவர் பெண். ஒரு மீன்பிடித் துறைமுகத்துக்குப் போனால் கடலுணவுத் துறையில் பெண்களின் பங்களிப்பு எத்தனை பிரம்மாண்டமானது என்பது தெரிந்துவிடும். தரையில் சில சூரை மீன்களைப் போட்டு ஒரு கூட்டத்துக்கு நடுவில் நின்றுகொண்டு, “ஆயிரம்… ஆயிரத்தி நூறு… ஆயிரத்தி நானூறு” என்று ஒரு பெண் ஏலம் விட்டுக் கொண்டிருப்பார். அருகிலேயே அலுமினிய அன்னக்கூடைகளைக் கவிழ்த்துப் போட்டு அமர்ந்தபடி பெண்கள் மீன் விற்றுக் கொண்டிருப்பார்கள். கொஞ்ச தூரம் நடந்துபோனால் காயவைத்த கருவாடுகளை ஒரு பெண் திருப்பிப் போட்டுக்கொண்டிருப்பார். துறைமுகத்தின் மறுமுனையில் “நெத்திலி கருவாடு இருக்கு வா” என்று ஒரு பெண் கருவாடுகளை விற்றுக்கொண்டிருப்பார். அரிவாள்மனையோடு சில பெண்கள் வாடிக்கையாளர்கள் வாங்கிய மீன்களைப் பக்குவமாக வெட்டித் தந்துகொண்டிருப்பார்கள். கடலில் இருந்து பிடித்து வரப்படும் மீன்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது பெண்கள்தாம்.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், கடல்சார் தொழிலில் இருப்பவர்களில் 41.6% பெண்களே. இது மட்டுமில்லாமல், கடலுக்குள் ஆண்கள் சென்ற பிறகு குழந்தை வளர்ப்பும் வீட்டு நிர்வாகமும் பெண்களின் பொறுப்பாகத்தான் இருக்கிறது. குறிப்பாகத் தங்கு மீன்பிடித் தொழிலில் பதினைந்து நாட்களுக்கும் மேலாக ஆண்கள் கடலில் இருக்க வேண்டியிருக்கிறது. இந்தச் சூழலில் குடும்பத்தை நடத்துவதே பெண்கள்தாம். இவற்றையும் சேர்த்துப் பார்த்தால் கடல்சார் தொழிலில் பெண்களின் பங்களிப்பு எவ்வளவு முக்கியமானது என்பது தெரியவரும். ஆனால், பெண்களுக்கான போதுமான முக்கியத்துவம் தரப்படுகிறதா?

தமிழ்நாட்டில் பல மீன்பிடித் துறைமுகங்களில் போதுமான கழிப்பறை வசதி இல்லை என்று பெண்கள் என்னிடம் வருத்தத்துடன் தெரிவித்திருக்கிறார்கள். “அதிகாலையில் இருந்து இங்குதான் இருக்கிறோம், எப்படிச் சமாளிப்பது?” என்று நாகப்பட்டினத்தில் ஒரு பெண் கேட்டது இன்னமும் நினைவிருக்கிறது. பல பொதுப் போக்குவரத்துகளில் மீன்கூடைகளோடு வரும் பெண்களை நடத்துநர்கள் அனுமதிப்பதில்லை. ஆகவே பெண்கள் தங்களுக்கான வாகன வசதிகளை ஏற்படுத்திக்கொள்ளவேண்டியிருக்கிறது. ஆண்களைக் கைகாட்டி,”அவங்கள மாதிரி டூ வீலர்ல நம்மால போக முடியாது, அப்போ என்னதான் செய்யுறது?” என்று என்னிடம் ஒரு மீன் விற்பனை செய்யும் பெண் கேட்டார். இந்தியாவில் பல துறைமுகங்களில் இதே நிலைமைதான் இருக்கிறது. கடல்சார் தொழிலில் பெண்களின் பங்களிப்பு கண்டுகொள்ளப்படுவதில்லை என்பதால் துறைமுகங்களிலும் அவர்களுக்கான வசதிகள் இருப்பதில்லை. சில ஊர்களில் இவர்களுக்கான தனி அடையாள அட்டை, நிவாரண நிதி, மானியம் போன்றவற்றைப் பெறுவதில் சிக்கல் இருக்கிறது. இன்னும் பல சிறிய நடைமுறைப் பிரச்னைகளை இவர்கள் தினமும் எதிர்கொள்கிறார்கள். திடீரென்று ஒரு சூழல் மாற்றம் வரும்போது இவர்கள் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள். உதாரணமாக, மீன் விற்பனையில் பெண்களின் பங்களிப்பு அதிகம் என்றாலும் ஏற்றுமதி என்று வரும்போது அது ஆண்களின் களமாக மாறிவிடுகிறது. ஒரு நிறுவனத்தோடு இணைந்து மீன்களை வாங்கி விற்கும் வேலைகளில் ஆண்கள்தாம் அதிகமாக இருக்கிறார்கள். சமீபமாக மீன் விற்பனை இணையம் மூலமாகவும் நடக்க ஆரம்பித்திருக்கிறது. இந்தப் புது ஊடகத்தின் வருகை பெண் விற்பனையாளர்களையே அதிகம் பாதிக்கும் என்பது என்னுடைய கணிப்பு. ஏற்கெனவே நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வரும் ஆண்கள் எளிதில் இந்தக் களத்துக்குள் நுழைந்துவிடுவார்கள். இந்த இணைய நிறுவனங்கள் மீன்களுக்குத் தரக்கட்டுப்பாடு வைத்திருக்கின்றன என்பதால் ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளுக்குப் பழகிய ஆண்களுக்கு அதுவும் எளிதாகவே இருக்கும். இணைய விற்பனையின் விகிதம் அதிகமாகும்போது பெண் விற்பனையாளர்கள் அதிகமாக பாதிக்கப்படுவார்கள்.

தொழிலுக்காகக் கடன் பெறுவதில் இவர்களுக்குப் பல நடைமுறைப் பிரச்னைகள் இருக்கின்றன. ஆனால், இந்த ஒரு சிக்கலை இந்தியாவின் பல பெண்கள் மிகவும் சாமர்த்தியமாக எதிர்கொண்டிருக்கிறார்கள். மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலமாக அவர்கள் எளிதாகக் கடன் பெறுவதற்கு வழி செய்துகொள்கிறார்கள். இதுபோக பெண் மீன் தொழிலாளர் கூட்டமைப்புகளை ஏற்படுத்தி அதன்மூலமும் நிதிசார்ந்த செயல்பாடுகளை எளிதாக்குகிறார்கள். பல மீனவர் சங்கங்களில் பெண்களுக்கான போதுமான பிரதிநிதித்துவமும் அதிகாரமும் இல்லை என்பதால் இந்தக் குழுக்களின் செயல்பாடு மேலும் முக்கியத்துவம் பெறுகிறது.

கடலுணவுத் தொழிற்சாலைகளைப் பொறுத்தவரை பெண்கள் சந்திக்கும் முக்கியமான பிரச்னை ஊதிய இடைவெளி (Wage Gap). ஆண்களுக்கு நிகராக இவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுவதில்லை. ஒரே வேலைக்கு ஆணுக்கு ஒரு ரூபாய் என்றால் இவர்களுக்குத் தரப்படுவது 60 முதல் 72 பைசாதான். இவர்களுக்குத் தற்காலிகப் பணியே ஒதுக்கப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் வேலையிலிருந்து நீக்கலாம் என்கிற நிலையிலேயே இவர்கள் பணியமர்த்தப்படுகிறார்கள். திருமணமாகாத இளம் பெண்களே பெரும்பாலும் இந்த வேலைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறார்கள். ‘அப்போதுதான் இடைவெளியின்றி ஓய்வின்றி வேலை செய்வார்கள்’ என்று முதலாளிகள் காரணமும் சொல்கிறார்கள்.

மீன்பிடித் தொழில் பற்றிய கொள்கை முடிவுகளைப் பெண்மையப் பார்வையோடு அணுகினால் அவற்றில் எத்தனை போதாமை இருக்கிறது என்பது தெளிவாகத் தெரியும். காலநிலை மாற்றத்தின் தீவிரம் அதிகரித்துவருகிறது. மீன்பிடித் தொழில் ஏற்கெனவே பல தள்ளாட்டங்களைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது. பெண்கள் உட்பட இந்தத் துறையில் இருக்கும் எல்லாரையும் மனதில் கொண்டு திட்டங்களை உருவாக்கினால்தான் எதிர்காலத்தில் வரப்போகும் மாற்றங்களைச் சமாளிக்க முடியும்.

பால்சார் ஒடுக்குமுறையால் சூழலுக்கும் பெண்களுக்குமான உறவு எப்படி மாறுபடுகிறது என்று பார்த்தோம். இதே களத்தில் பால்புதுமையினரின் இயங்கியல் எப்படி இருக்கிறது? அவர்களுக்கும் சூழலுக்குமான தொடர்பு என்ன?

(தொடரும்)

படைப்பாளர்:

நாராயணி சுப்ரமணியன்

கடல் சார் ஆய்வாளர், சூழலியல் ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் என்ற பன்முக ஆளுமை இவர். தமிழ் இந்து உள்ளிட்ட முன்னணி இதழ்களில் சூழலியல், கடல் வாழ் உயிரினங்கள் குறித்து தொடர்ச்சியாக எழுதி வருபவர். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய ‘விலங்குகளும் பாலினமும்’ தொடர் புத்தகமாக வெளிவந்து, சூழலியலில் மிக முக்கியமான புத்தகமாகக் கொண்டாடப்படுகிறது!