“கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக, குறிப்பிடத்தக்க புதிய பயிர்கள் எதுவும் உருவாக்கப்படவில்லை. நமது மூதாதையர்கள் காட்டுச் செடிகளிலிருந்து பயிர்களாக மாற்றிய உணவுகளைத்தாம் நாம் இன்னமும் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறோம். நமது தற்கால உணவு ஒருவகையில் பண்டைய விவசாயிகளால் வடிவமைக்கப்பட்டது” என்கிறார் மானுடவியலாளர் யுவால் நோவா ஹராரி. இவர் குறிப்பிடும் பண்டைய விவசாயிகள் பெண்கள்தாம் என்பதைப் பல ஆய்வுகள் உறுதிசெய்திருக்கின்றன.

எந்தெந்த தாவரங்களைச் சாப்பிட முடியும், அவற்றின் வாழ்க்கை சுழற்சி எப்படிப்பட்டது, அவற்றை எப்படி வளர்ப்பது என்பதையெல்லாம் அறிந்துவைத்திருந்தவர்கள் பெண்கள்தாம். முதன்முதலில் பல காட்டுச் செடிகளைப் பயிரிட்டு அவற்றைத் தன்வயமாக்கியதும் (Domestication of wild plants) பெண்கள்தாம். அரிசி, கோதுமை, சோளம், பார்லி உட்பட இப்போது உலகமெங்கும் உண்ணப்படும் எட்டு முக்கியமான உணவு தானியங்களைத் தன்வயமாக்கியது பெண்கள்தாம் என்கிறார் ஆராய்ச்சியாளர் ஆட்டம் ஸ்டான்லி. மனித இனத்தின் பரிணாமப் பாய்ச்சலில் விவசாயப் புரட்சிக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. அதில் பெரும்பான்மையான பங்களிப்பு பெண்களுடையது.

இப்போது நிகழ்காலத்துக்கு வருவோம். இப்போதும் விவசாயத்தில் பெண்களின் பங்களிப்பு அதிகமாகத்தான் இருக்கிறது. இந்தியாவை எடுத்துக்கொண்டால் கிராமப்புறங்களில் உள்ள 85% பெண்கள் ஏதோ ஒரு வகையில் விவசாயப் பணியில்தான் இருக்கிறார்கள். பொருளீட்டும் பெண்களில் 80% விவசாயம் சார்ந்த பணியில் இருப்பவர்கள்தாம். தேசிய சராசரி என்று வைத்துக்கொண்டால் விவசாயத் தொழிலாளர்களில் 33 விழுக்காட்டினரும், சுயேச்சையாக விவசாயம் செய்வோரில் 40 விழுக்காட்டினரும் பெண்கள்தாம் என்கின்றன தரவுகள். நேரடி விவசாயம் மட்டுமல்லாது தோட்டம் போடுதல், கால்நடை வளர்ப்பு, காட்டுச் செடிகளைத் தன்வயமாக்குதல், விதைகளைப் பாதுகாக்கும் பொறுப்பு என்று எல்லாக் கோணங்களிலிருந்தும் பெண்கள் பங்களிக்கிறார்கள். கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று கூட்டி வருவது, பால் சேகரிப்பு, தொழுவங்களையும் பட்டிகளையும் சுத்தம் செய்வது எனக் கால்நடை வளர்ப்பிலும் பல தளங்களில் பெண்கள் உதவுகின்றனர்.

இத்தனை முக்கியமான பங்களிப்புகளைச் செய்தாலும் ஓர் இடத்தில் உணவுப் பாதுகாப்பு கேள்விக்குறியாகும்போது அங்கே முதலில் பாதிக்கப்படுவது பெண்களும் குழந்தைகளும்தாம். குழந்தைகளில் என்று எடுத்துக்கொண்டாலும் பெண் குழந்தைகளுக்கான பாதிப்பு அதிகம். உலக அளவில் பசியால் வாடுபவர்களில் 60% பெண்களே என்கிறது ஒரு தரவு. இந்தியாவைப் பொறுத்தவரை ஒட்டுமொத்த ஊட்டச்சத்துகளில் பாலின வேறுபாடு இல்லை என்றாலும் பிற நுண் சத்துகளின் குறைபாடு பெண்களிடையே அதிகமாக இருப்பதை ஆவணங்கள் உறுதிப்படுத்துகின்றன. இந்தியாவில் இரண்டில் ஒரு பெண்ணுக்கு ரத்த சோகை இருக்கிறது. நான்கில் ஒரு பெண்ணுக்கு ஏதோ ஒரு வகையில் ஊட்டச்சத்துக் குறைபாடு இருக்கிறது. இந்தியாவில் உள்ள 41.4.% கர்ப்பிணிப் பெண்களுக்கு ரத்த சோகை இருக்கிறது. இந்தப் பெண்களின் பேறுகாலம், குழந்தை பிறப்பது, பிறக்கும் குழந்தையின் உடல்நலம் என எல்லாமே கேள்விக்குறியாக இருக்கிறது. உணவில் இருக்கும் இந்தப் பாலினம்சார்ந்த அநீதியை (Gendered Injustice of food) நாம் கவனிக்க வேண்டும். இதற்குக் காரணம் சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் பாலின ஏற்றத்தாழ்வுதான் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. விவசாயத்தில் முக்கியமானவர்களாக இருந்தாலும் பயிர்கள் உணவாக மாறி தட்டுக்கு வரும்போது பெண்கள்மீதான பாரபட்சம் வந்துவிடுகிறது.

அடுத்த கேள்வி உரிமை மற்றும் அங்கீகாரம் குறித்தது. முதலில் அங்கீகாரத்துக்கு வருவோம். ஆண்களுக்குச் சமமாக, சில இடங்களில் ஆண்களை விடவும் அதிகமான பங்களிப்பைத் தந்து உணவு உற்பத்தி செய்யும் பெண்கள் விவசாயிகளாக அங்கீகரிக்கப்படுகிறார்களா என்றால், இல்லை என்று நிச்சயமாகச் சொல்லலாம். விவசாயத்தில் பெண்களின் வேலை ஏன் அங்கீகரிக்கப்படுவதில்லை என்பதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. “ஒரு முதலாளித்துவ சமூகத்தில் எது வேலையாக அங்கீகரிக்கப்படுகிறது என்று பார்த்தால், எந்தெந்த வேலைகளையெல்லாம் சம்பளமாக மாற்றலாமோ அதைத்தான் முதலாளித்துவம் அங்கீகரிக்கிறது. அந்த வகைக்குள் பெண்களின் விவசாயப் பணிகள் வருவதில்லை” என்கிறார் சூழலியலாளர் வந்தனா சிவா. இன்னொரு காரணத்தை முன்வைக்கிறார் ஆராய்ச்சியாளர் நித்யா ராவ். விவசாயத்திலும் கால்நடை வளர்ப்பிலும் பெண்களின் வேலை வீட்டுக்கு அருகிலேயே முடிந்துவிடுகிறது. ஆனால், விலங்குகளை வெட்டுவது, உற்பத்தி செய்யப்பட்ட தானியங்கள், பொருட்கள், கால்நடைகளை வாங்குவது / விற்பது ஆகிய வேலைகள் சமூகத்துக்கு வெளிப்படையாகத் தெரியும். அப்படி வெளியில் தெரியும் வேலைகளை ஆண்கள்தாம் செய்கிறார்கள் என்பதால் ஆண்களின் பங்களிப்பே அதிகம் என்பது போன்ற ஒரு புரிதல் வருகிறது என்று அவர் சுட்டிக் காட்டுகிறார்.

உரிமை என்று எடுத்துக்கொண்டாலும் பெண்கள் பாரபட்சமாகவே நடத்தப்படுகிறார்கள். இந்தியாவில் விவசாயம் செய்யும் பெண்களில் 12.8% பேரிடம் மட்டுமே நிலம் இருக்கிறது. பீகார் போன்ற மாநிலங்களில் நிலைமை இன்னும் மோசம், அங்கே 7% பெண்களிடம் மட்டுமே நிலம் இருப்பதாகக் கூறுகிறது ஓர் ஆக்ஸ்ஃபாம் அறிக்கை. பாரபட்சமான சமூக சூழலே இதற்குக் காரணம் என்கின்றன உலகளாவிய அமைப்புகள். உலகின் பல நாடுகளில் பெண்களுக்கான நில உரிமை ஐம்பது சதவிகிதத்துக்கும் குறைவாக இருப்பதாக ஐ.நா. தெரிவிக்கிறது. ஒருவரிடம் நிலம் இருந்தால் அது வளம் மட்டுமல்ல, அதுவே ஓர் அடையாளமாகவும் உணவுப் பாதுகாப்புக்கான ஒரு கருவியாகவும் மாறுகிறது. நிலத்தைச் சொந்தமாக வைத்திருப்பவர்கள் மட்டுமே பெறக்கூடிய பல பேரிடர் சார்ந்த நிவாரண நிதிகள் உண்டு. அந்த உரிமை இல்லாததால் பெண்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். “பேரிடர் நிவாரண நிதியைச் சில நேரம் அதிகாரிகள் நேரடியாக வங்கிக்கணக்கில் செலுத்திவிடுவார்கள். அது சூழலை இன்னும் மோசமானதாக மாற்றுகிறது. நிலத்தின் உரிமையாளராகக் கணவன் இருக்கும்பட்சத்தில் அவனது வங்கிக் கணக்குக்குப் பணம் வரும். அந்த நிதியை அணுகுவது, எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று முடிவெடுப்பது என எந்த உரிமையுமே பெண்ணுக்கு இருக்காது. ஆனால், பேரிடரால் சீரழிந்த நிலத்தின் பாதிப்புகளைச் சமாளிப்பதில் மட்டும் அவளது பங்களிப்பு தேவைப்படும்” என்று எழுதுகிறார் ஷில்பா வசவடா.

இவையெல்லாம் கவலை அளிப்பவையாக இருந்தாலும் தன்னெழுச்சியாக ஒருங்கிணைந்து விவசாயத்தின் போக்கையே மாற்றிக் காட்டியிருக்கும் பெண்களும் உண்டு. மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள செனகலைச் சேர்ந்தவர் மரியாமா சோங்கே. ஒரு பண்ணையில் வேலை செய்துகொண்டிருந்த இவருக்கு ஒரு கட்டத்தில் சில உரிமைகள் மறுக்கப்பட்டன. பெண்களின் பங்களிப்புக்கு அங்கீகாரம் இல்லை என்று அவருக்குப் புரிய வந்தது. அந்த ஒரு சிறு சம்பவத்தால் உத்வேகம் பெற்று, ‘நாமே தீர்வு’ என்று பொருள் தரும் என்.எஸ்.எஸ் என்கிற அமைப்பைத் ஆரம்பித்தார் சோங்கே. செனகல், கானா, பர்கினா ஃபஸோ, காம்பியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இப்போது இந்த அமைப்பில் 10,000 பெண்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இந்த அமைப்பின் கிளைக் குழுக்களே ஐந்நூறு இருக்கும்! மரபுசார் விவசாயம், விவசாய சூழலியல் செயல்பாடுகள், உயிர் உரம் உருவாக்குவது என்று எல்லா கோணங்களிலும் விவசாயத்தை இந்தக் குழு மீட்டெடுத்து வருகிறது.

தெலங்கானாவைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவரான அட்ரம் பத்மா பாய், வங்கியில் கடன் வாங்கி விவசாயத்துக்குத் தேவையான நவீன கருவிகளை வாங்கி வைத்திருக்கிறார். சுற்றுவட்டாரத்தில் தன் கட்டுப்பாட்டுக்குக் கீழே உள்ள எட்டுக் கிராமங்களில் யாருக்குக் கருவி தேவை என்றாலும் இவரிடம் வந்து கருவிகளைக் கடனாகப் பெற்றுக் கொள்ள முடியும். நவீன கருவிகளைச் சொந்தமாக வாங்க முடியாத கிராமத்து விவசாயிகள் இந்தத் திட்டத்தால் பயன் பெற்று வருகிறார்கள். கருவிகள் மூலம் வசூலாகும் வாடகைப் பணத்தை இவர் தண்ணீர் சம்பந்தமான வசதிகளை உருவாக்கப் பயன்படுத்துகிறார். இதன் மூலம் கிராமங்களில் தண்ணீர்க் குழாய்களை நிறுவியிருக்கிறார்.

கென்யாவைச் சேர்ந்த ஜமீலா அபாஸ், விவசாயத்துக்கான ஓர் அலைபேசி செயலியை உருவாக்கியிருக்கிறார். பெண் விவசாயிகளுக்கான இந்தச் செயலியில் அன்றாட சந்தை நிலவரங்கள் உடனுக்குடன் கிடைக்கும். இதன் மூலம் இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக விற்பனை செய்து லாபம் ஈட்ட முடிவதாக அங்கு இருக்கும் பெண்கள் தெரிவிக்கின்றனர். தண்ணீரில் பயிர் வளர்க்கும் பண்ணையை உருவாக்கிய சகீனா ராஜ்கோட்வாலா, பெண் விவசாயிகளுக்கான ஃபார்ம் ஹர் (FarmHer) அமைப்பை உருவாக்கியிருக்கும் மார்ஜி குங்க்லர், கறுப்பினப் பெண்களுக்கான உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் குழுக்கள் என்று உலக அளவில் விவசாயத்தில் பெண்கள் நிகழ்த்தியிருக்கும் பாய்ச்சல்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

இவையெல்லாம் பெண்களாகவே முன்னெடுக்கும் தீர்வுகள். ஆனால், விவசாயத்திலும் கால்நடை வளர்ப்பிலும் பெண்கள் மீது காட்டப்படும் பாரபட்சத்தை அமைப்புரீதியாக எப்படிக் குறைப்பது என்றும் விவாதங்கள் நடக்கின்றன. 2017இல் வந்த ஓர் ஆய்வுக்கட்டுரையில் சில பரிந்துரைகளைத் தருகிறார் நித்யா ராவ். பெண்களை விவசாயிகளாக அங்கீகரிப்பது, நில உரிமைகள் வழங்குவது, பெண் விவசாயிகளின் தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ற தொழில்நுட்ப வசதிகள், சந்தை மற்றும் போக்குவரத்து போன்ற பிற வசதிகளை உருவாக்கித் தருவது, அவர்களுக்கான பிரதிநிதித்துவத்தைத் தந்து குரலுக்குச் செவி சாய்ப்பது ஆகியவற்றைச் செய்ய வேண்டும் என்கிறார். இதன் மூலம்தான் பெண் விவசாயிகளுக்கான அங்கீகாரம் உறுதிப்படும், உணவில் இயங்கும் பாலின அநீதி தடுக்கப்படும் என்கிறார். காலநிலை மாற்றத்தால் அடுத்த சில தசாப்தங்களில் மிக மோசமான உணவுப் பிரச்னைகள் வரலாம் என்று வல்லுநர்கள் எச்சரித்திருக்கிறார்கள். இந்த நிலையில் உணவு உற்பத்தித் துறையில் அமைப்புரீதியாக இருக்கும் ஏற்றத்தாழ்வுகளைக் களைய வேண்டும். அப்போதுதான் அனைவருக்குமான உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும்.

நவீனமாகப் பல அம்சங்களைப் பேசிக்கொண்டிருக்கிறோம். சூழல் பாதுகாப்பு இயக்கங்கள் தொடங்கிய காலத்திலிருந்தே ஓர் அச்சுறுத்தல் தொடர்ந்து பேசப்படுகிறது. அது என்ன? அது பெண்களை எப்படிப் பாதிக்கிறது?

(தொடரும்)

படைப்பாளர்:

நாராயணி சுப்ரமணியன்

கடல் சார் ஆய்வாளர், சூழலியல் ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் என்ற பன்முக ஆளுமை இவர். தமிழ் இந்து உள்ளிட்ட முன்னணி இதழ்களில் சூழலியல், கடல் வாழ் உயிரினங்கள் குறித்து தொடர்ச்சியாக எழுதி வருபவர். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய ‘விலங்குகளும் பாலினமும்’ தொடர் புத்தகமாக வெளிவந்து, சூழலியலில் மிக முக்கியமான புத்தகமாகக் கொண்டாடப்படுகிறது!