இன்றைய நவீன யுகத்திலும் பெண் என்ற ஒற்றைக் காரணத்திற்காக இங்கு பல பெண்கள் புறக்கணிக்கப்பட்டு, வாய்ப்புகள் இழக்கப்பட்டு, தனது அடையாளத்திற்காகப் போராடி வருகின்றனர். இந்த ஒடுக்கப்பட்ட பெண் சமூகம் தன் முயற்சியால் சமூகத்தில், தன் ஆளுமையை நிரூபிக்க எண்ணினாலும் அவளது வெற்றியில் பங்கு கொள்ள இந்த ஆண் சமூகம் முந்தியடிப்பது எதனால்? அவள் பெண் என்பதாலா? இந்தச் சமூகம் வரையறுத்த கோட்டிற்குள் நிற்காமல் அவர்களுக்குச் சரி என்று மனதில் பட்டதைச் செய்யும் பல பெண்களின் ஒழுக்கத்தைக் கேள்வி கேட்கும் இந்தச் சமூகம் அதனை என்றாவது ஆண்களைப் பார்த்துக் கேட்டதுண்டா? பெண்கள் அடிமைகள் போல வாழ்ந்து கொண்டு இருக்கும் இந்தச் சமூகத்தில் அவர்கள் அடிமைகளாக உள்ளனர் என்ற புரிதல் அவர்களுக்கு வருவதற்கே பல வருடங்கள் தேவைப்படுகின்றன. கல்வியே இந்தப் பெண் சமூகத்தை முன்னேற்றும் என்பதனாலோ என்னவோ பள்ளி கல்வியை முடிப்பதற்கே பெண்கள் பல வரம்புகளை மீறி கல்வி கற்க வருகிறார்கள், அதனை முடித்தாலே பெரிய சாதனைபோல் கருதுகின்றனர்.

இன்னும் சில கிராமப்புறங்களில் திருமணமே வாழ்வின் தலையாய குறிக்கோளாக கருதுகின்றனர். ஒரு பெண்ணின் லட்சியத்தை உதாசீனப்படுத்துவது எவ்வளவு பெரிய குற்றமோ, அதே போல ஒரு பெண்ணிற்கு எது லட்சியம் என்பதைத் தெளிவுபடுத்தாமல் வளர்ப்பது அதைவிடக் கொடுமையான செயல். இன்றும் கிராமப்புற பெண்களிடம் வீட்டைக் கவனிப்பது, கணவருக்குப் பணிவிடை செய்வது, குழந்தைகளைப் பார்த்துக் கொள்வது, குடும்பத்தை நிர்வகிப்பது போன்றவையே முதன்மை பொறுப்புகள். அதனைத் தாண்டி குடும்பத்தில் ஒரு முடிவு எடுக்கும்போதுகூட அவர்களது கருத்துகளைக் கேட்பதற்குக்கூட யாருக்கும் அக்கறை இருந்தது இல்லை. இது எதனால் என்றால் அவர்கள் பெண் என்பதால். தனி ஒரு பெண்ணாகக் குடும்பம், வேலை, வாழ்க்கை எனப் பல அழுத்தங்களையும் தாண்டி சமாளித்து வெற்றிப் பெற்றாலும், அது ஏதோ ஓர் ஆணின் உதவியால் மட்டுமே நிகழ்ந்தது என்பது போல எண்ணி அவளது உழைப்பை மட்டுமல்ல அவளது ஒழுக்கத்தையும் கேள்வி கேட்டு குற்றம் சாட்டுகிறது இந்த ஆணாதிக்க சமூகம்.

ஒரு பெண்ணின் உடை, உணவு, பழக்கவழக்கம், நட்பு என அனைத்தையும் கேள்வி கேட்டு தீர்மானித்த பின்பே ஆமோதிக்கிறது இந்தச் சமூகமும் அவளது குடும்பமும். இதே அதிகாரத்தை அவளது வாழ்க்கை துணையைத் தேர்ந்தெடுப்பதிலும் பின்பற்றுகிறது. அவளது திருமண வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கும் உரிமைகூட அவளிடம் இல்லை. அதிலும் குறிப்பாக ‘காதல்’ என்கிற ஒற்றை வார்த்தையின் மேல் இந்தச் சமூகத்திற்கு உள்ள பயம் மட்டும் எத்தனை யுகம் வந்தாலும் மாறது போல் தெரிகிறது. இவர்கள் செய்து வைக்கும் நிச்சயிக்கப்பட்டு, ஆசிர்வதிக்கப்பட்ட திருமண பந்தத்தில் காதலுக்கான இடம் இருப்பதே இல்லை. கட்டாயம் மட்டுமே இருக்கிறது. கட்டாயத்தின் பெயரில் பழகி, ஒருவரை ஒருவர் புரிந்தும் புரியாமல், வாழ்க்கையை ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்கின்றனர். அதிலும் குறிப்பாக அந்தப் பெண்ணிற்கு விருப்பம் இல்லை என்ற போதிலும் அந்த வாழ்கையில் வாழ்ந்தாக வேண்டும் என்கிற கட்டயத்தை இந்தச் சமூகம் திணித்துள்ளது. இந்த உறவில் எப்படிச் சமத்துவம் நிகழும்?

பிறந்ததில் இருந்து இறக்கும் வரை ஆணாதிக்கத்தை எதிர்கொள்வது மட்டுமல்லாமல், புனிதம், கலாச்சாரம், பண்பாடு போன்ற பெயர்களில் ஆணாதிக்கத்தைத் தனக்கு அடுத்த தலைமுறைக்கும் கடத்துகின்றனர். பெண்ணுக்குப் பெண்ணே எதிரி என்கிற முட்டாள்தனமான கூற்றைத் திணிக்கும் இந்த ஆணாதிக்க சமூகம், அதை மட்டும் செய்யாமல் அவர்களின் இயலாமையைத் தனக்குச் சாதகமாக்கி அவர்களை அடிமைகளாக்கி வைத்துள்ளது.

இன்றைய நவீன யுகத்தில் பெண்ணியம் என்ற வார்த்தையைப் பலரும் கெட்ட வார்த்தைப் போலவும், பெண்ணியம் பேசுபவர்கள் கெட்டவர்கள் போலவும் ஒரு பிம்பத்தை இந்தச் சமூகம் உருவாக்கியுள்ளது. பெண்ணியமும் பெண்கள் சார்ந்து செயல்படும் கோட்பாடுகளும் என்றும் ஆண் இனத்தைத் தன் எதிரியாக எண்ணியுள்ளது என்று இந்தச் சமூகம் எண்ணுகிறது. ஆனால், பெண்ணியம் ஆணாதிக்கத்தை மட்டுமே எதிரியாக எண்ணி செயல்படுகிறது என்கிற உண்மையை இந்தச் சமூகம் என்றுதான் புரிந்துகொள்ளும்?

பெண்ணைப் போன்று ஆண்களுக்கும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற விதிக்கப்படாத வரையறை வகுக்கப்பட்டுள்ளது. எப்படிப் பெண் என்பவள் குனிந்த தலை நிமிராமல் செல்ல வேண்டும் என்கிற முட்டாள்தனமான பழக்கத்தை விதைத்ததோ, அதேபோல ஆண் என்பவன் அழாமல், அதிகம் பேசாமல், கண்பார்வையில் பெண்ணை அடக்கும் ஒருவனாக இருக்க வேண்டும் என்கிறது. அவனது நடை, உடை, பாவனையில் ஏதேனும் பெண் சாயல் தென்பட்டால் உடனே அதனை வைத்து அவனைத் தாழ்த்தி பேசுவது, அவனது பாலினத்தைக் கேள்வி கேட்பது போன்ற செயல்களில் இந்தச் சமூகம் ஈடுபடுகிறது.

பிறப்பு முதல் இறப்பு வரை அடுத்தவர் என்ன சொல்வார்கள்? இந்தச் சமூகம் நம்மைப் பற்றி என்ன நினைக்கும்? நம்மை ஒதுக்கி விட்டால் என்ன செய்வது என்கிற எண்ணங்கள் மட்டுமே இங்கு பல பெண்களை இன்னமும் அந்த நான்கு சுவற்றுக்குள் பூட்டி வைத்துள்ளது. அதிலும் அவர்கள் இல்லை என்றால் அந்தக் குடும்பமே செயலிழந்து போய் விடும் என்கிற மனக்கோட்டையை அவர்கள் மனதில் கட்டிக்கொண்டு அந்த ஒரு கோட்டைக்கு மட்டுமே ராணியாக வாழ்ந்து வருகின்றனர் இந்தப் பெண் சமூகம். குடும்பம் என்னும் ராஜ்யத்துக்கு இவர்கள் ராணி என்று இந்த ஆணாதிக்க குணம் படைத்த சமூகம் நம்பவைத்துள்ளது. அவர்கள் ராணியாக வாழும் இந்த மனக்கோட்டையைக் களைத்தால் அவர்கள் இந்த ஆணாதிக்க சமூகத்திற்கு அடிமையாக இருக்க மாட்டார்கள் என்கிற காரணத்தால் அவர்களுக்கு எந்த அறிவையும் புகட்டாமல் வைத்துள்ளது இந்தப் பண்பாட்டை பாதுகாக்கும் சமூகம்.

இங்கு படித்து முடித்து வேலை பார்க்கும் பல பெண்கள்கூட இன்னமும் அடிமைகளாகத் தன் குடும்பத்தின் கட்டுப்பாட்டிற்குள், சுதந்திரம் என்கிற வார்த்தைக்கான அர்த்தத்தையும் அதன் ருசியையும் உணராத ஜீவன்களாக வாழ்கின்றனர். இந்த நிலை ஒரு பக்கம் இருக்க மற்றொரு புறத்தில் சுதந்திரம் பற்றிய புரிதலைக் கொண்ட பெண்கள் தன் அடையாளத்தை நிலை நிறுத்தும் முயற்சியில் ஈடுப்படும் போது அவர்களின் சித்தாந்தத்தைத் தவறு என்பதுபோல உருவகப்படுத்தி அவர்கள்மீது உளவியல் ரீதியான தாக்குதலை நடத்துகின்றனர்

இங்கு பெண் என்பவள் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் பல துன்புறுத்தலுக்கு ஆளாகிறாள். எது சுதந்திரம் என்று அவள் எண்ணுகிறாளோ அதை அவள் எந்தத் தயக்கமும் எந்தத் தடங்கலும் இல்லாமல் செய்ய, என்று இந்தச் சமூகம் விடுகிறதோ அன்று மட்டுமே அவள் அவளாக இருக்க முடியும். அவள் அவளாக, அவளுக்காக, அவளால் மட்டுமே இந்த இடத்திற்கு வந்துள்ளாள் என்ற எண்ணம் எப்போது இந்தச் சமூகத்தில் நிலைக்கிறதோ அன்று மட்டுமே அவளுக்கான அங்கீகாரமும் அடையாளமும் கிடைக்கும். அவளது சுதந்திரம் எது என்பதை அவள் மட்டுமே முடிவு செய்ய வேண்டும், வேற எந்த ஆணோ பெண்ணோ அல்ல.

படைப்பாளர்:

பிரியங்கா சிவமணி. சென்னை பல்கலைக்கழகத்தில் இதழியல் துறையின் முனைவர் பட்ட மாணவி. சினிமாவின் மீதும் பெண்ணியம் மீதும் அதீத ஆர்வம் கொண்டவர். பாலின அரசியல் குறித்த ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். சக மனிதரைச் சமமாக நடத்த வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பவர். கற்பி, ஒன்றுசேர், புரட்சி செய் எனும் கூற்றைப் பின்பற்றுபவர்.