பெண் குழந்தைகளின் வாழ்க்கை இங்கு திருமணத்தை மையப்படுத்திதான் கட்டமைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு என்று தனி வாழ்க்கை ஒன்று இருப்பதை நம் சமூகம் உணர தலைப்பட்டதே இல்லை. பெரும்பாலான பெண் குழந்தைகள் வயதுக்கு வந்ததில் இருந்து திருமணம் என்ற ஒற்றை இலக்குடன்தான் படிப்பில் ஆரம்பித்து வேலை வரை முடிவு செய்கின்றனர். பெண்ணுக்கு இப்படி என்றால் பெண்ணின் பெற்றோர் பெண் குழந்தை பிறந்ததில் இருந்தே அவளது திருமணத்துக்காகச் சேமிப்பைத் தொடங்கிவிடுகின்றனர்.

குழந்தைப் பருவம் முடிந்து பதின் பருவம் வரும்போது ஹார்மோன்கள் காரணமாக உள்ளுக்குள் நடக்கும் மாற்றங்கள் ஒருபுறம், ‘பெரிய பெண்ணாயிட்ட, இன்னொருத்தன் வீட்டுக்குப் போகப் போற’ என்கிற குடும்பத்தின் அழுத்தம் என இரண்டு பெரும் அழுத்தங்களுக்கிடையில் தனக்கு என்ன தேவை, தன் நாட்டம் என்பது எதில், தன் எதிர்காலம் குறித்து என்ன செய்ய வேண்டும் என்ற எந்த முடிவுக்கும் வரமுடிவதில்லை.

மத்திய, மேல் மத்திய வர்க்கத்தவர் வீடுகளில் பெண் குழந்தைகள் விருப்பப்பட்ட படிப்பு, வேலை என நகர முடிந்தாலும், திருமணம் என்ற ஒன்று அவர்களில் பலரின் கனவுகளை, எதிர்கால விருப்பங்களை அடியோடு தகர்த்து விடுவதாகத்தான் அமைகிறது. எனக்குத் தெரிந்து மருத்துவம் படித்த பெண் வீட்டையும் குழந்தையும் பார்த்துக் கொள்ள தன் மருத்துவக் கனவை தியாகம் செய்திருக்கிறார். இது ஓர் உதாரணம்தான். இதே போல பல பெண்கள் தங்கள் படிப்பு வேலை குறித்த கனவுகளை மூட்டைக் கட்டி வைத்துவிட்டு, குழந்தைகளை அருகில் இருந்து கவனித்துக்கொள்ள அதற்கு தோதான, தனக்கு விருப்பமே இல்லாத சின்னச் சின்ன வேலைகளில் தங்கள் வாழ்க்கையையும் கனவுகளையும் தொலைத்துவிட்டு வாழ்கின்றனர்.

கணவர், குழந்தைகள்தான் வாழ்க்கை தனக்கென ஒரு வாழ்க்கை இல்லை என்பதான மாய வலையில் சிக்கிக்கொள்ளும் பெண்கள் தன் இளமைப் பருவம் முழுவதையும் குழந்தைகள் வளர்ப்பிலும், குடும்பத்தைக் கவனித்துக் கொள்வதிலும்தான் பெரும்பாலோனர் செலவிடுகின்றனர். குடும்பம் தாண்டி வேறு ஒன்றைச் சிந்திக்க முடியாத நிலை தானாக வாய்க்கப்பெற்றுவிடும். ஏனென்றால் நம் குடும்ப அமைப்பு பெண்களை அப்படியாகத்தான் வார்த்து எடுக்கிறது.

குடும்பத்திற்குள் மூழ்கி முத்தெடுத்த பெண்ணிடம் சென்று உங்களுக்கு என்ன பிடிக்கும் என்று கேட்டுப் பாருங்களேன். கண்டிப்பாகப் பெரும்பாலான பெண்கள் தனக்கு என்ன பிடிக்கும் என்று சொல்ல முடியாமல் தடுமாறுவார்கள். காரணம், குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்குப் பிடித்தது, பிடிக்காததைக் கணக்கெடுத்து அதற்கேற்றாற் போல தன்னை டியூன் செய்திருப்பார்களே தவிர, தனக்குப் பிடித்தது பிடிக்காததைப் பற்றி யோசிப்பதைக்கூட மறந்திருப்பார்கள். கணவரைச் சுற்றியோ, அல்லது பிள்ளைகளைச் சுற்றியோ தன் வாழ்க்கையை அமைத்துக்கொண்டு தன் வெளியிலிருந்து, திரும்பிக்கூடப் பார்க்க முடியாத தொலைவிற்குச் சென்றிருப்பார்கள்.

பெண்களின் பெரி மெனோபாஸ் காலக்கட்டங்களில் அவர்களின் குழந்தைகள் பெரும்பாலும் தங்களின் பதின் பருவத்திற்குள் நுழைந்திருப்பார்கள். பெண் குழந்தையாக இருந்தாலும் சரி, ஆண் குழந்தையாக இருந்தாலும் சரி இந்த வயதில், புதிய விஷயங்களையும் தனக்கான தனி உலகத்தையும் தேடுவதில் கவனத்தைக் குவிப்பதால் பெரும்பாலான நேரத்தை நண்பர்களுடன் செலவழிப்பார்கள். இன்னும் சொல்லப்போனால் எதிர்பாலினரை ஈர்க்கும் ஹார்மோன் விளையாட்டுகள் அவர்களிடத்தில் தொடங்கியிருக்கும்.

ஆனால், தன் இளமையை வழியனுப்பி வைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் பெண்களுக்கு, தன் கண் முன் பொங்கும் இளமையுடன் தன் மகள்களைப் பார்க்கும்போது தேவையற்ற எரிச்சல் உண்டாகும். இந்த ஆழ் மனக்குமுறலை தன்னையறியாமல் மகள்களைக் கண்டிப்பதன் மூலம் வெளிப்படுத்துவார்கள். ஏன் இந்த டிரஸ் போடுற, ஏன் இப்படி மேக்கப் போடுற என்று நச்சரித்துக்கொண்டே இருப்பார்கள். அவர்கள் மீதுள்ள அக்கறையால்தான் அப்படிச் செய்வதாக நம்புவார்கள். ஆனால், இவ்வளவு நாள்கள் கண்டிப்பு காட்டாத அம்மா திடீரென்று ஏன் இப்படி என்று குழந்தைகள் குழம்பிப்போவதுடன், ஒரு கட்டத்தில் அம்மாவை எதிர்க்கத் தொடங்குவார்கள். அல்லது தந்தை அதிக பாசம் என்றால் அப்பாவுடன் சேர்ந்து அம்மாவை கிண்டல், கேலி என்று அதிக எரிச்சலடையச் செய்வார்கள். இந்தக் காலக்கட்டத்தில் அம்மா, மகளுக்கு இடையில் முரண்கள் அதிகரிக்கும். ஒரு சில பெண்களோ மகளின் உடைகளை அணிவது, மேக்கப் போடுவது என்று மகள்களுக்குப் போட்டியாக மாறி அதனாலும் வீட்டுக்குள் சண்டைகள் அதிகரிக்கும்.

ஆண் குழந்தைகள் தங்கள் நண்பர்கள் மூலம் புது உலகத்தை இந்த வயதில் எட்டிப் பிடிக்க முனைவார்கள். அவர்களுக்கு அம்மாவின் வார்த்தைகள் நச்சரிப்பாகவும் கண்டிப்பு அடக்குமுறையாகவும் தெரியத் தொடங்கும். அதனால் அம்மாவின் பேச்சைப் புறக்கணிக்கத் தொடங்குவார்கள் அல்லது உனக்கு ஒன்றும் தெரியாது என்று அடக்கத் தொடங்குவார்கள். அதிகம் படிக்காத, வேலைக்குச் செல்லாத அம்மா என்றால் மட்டம் தட்டுதல் அதிகளவில் நடக்கும்.

உடல்நிலை சரியில்லாமல் சமைக்க முடியாமல் போனால்கூட, புரிந்துகொள்ளாமல் சிடுசிடுக்கும் குழந்தைகள் அதிகம். இந்தச் சிடுசிடுப்பில் கணவர்களும் சேர்ந்து கொண்டு, ‘அப்படி என்னதான் பிரச்னை உனக்கு? ஒவ்வொருத்தங்க வெளில வேலைக்கும் போயிட்டு வந்துட்டு, வீட்டையும் பார்க்கலையா? சமைக்கிறதை மட்டும்தான் செய்ற. அதைக்கூடச் செய்ய முடியாதா’ என்று தங்கள் பங்குக்குத் தேளாகக் கொட்டுவார்கள். அவர்களைப் பொறுத்தவரை வேலைக்குச் செல்லாமல் இருப்பதால் வீட்டில் இதையெல்லாம் செய்தே ஆக வேண்டும்.

எந்தக் குடும்பமும் குழந்தைகளும் உலகம் என்று சுழன்றோமோ அந்த உலகம் நம்மை அந்நியப்படுத்துவது போன்ற உணர்வோ அல்லது நாம் அந்த உலகத்திலிருந்து அந்நியப்பட்ட உணர்வோ பீடிக்கும்.

டீன் ஏஜ் குழந்தைகள் இருப்பவர்களுக்கு ஒருவித பிரச்னை என்றால், சிறு வயதில் திருமணமாகி, திருமண வயதில் பிள்ளைகள் இருக்கும் பெண்களுக்குத் தங்கள் குழந்தைகளின் திருமணம் குறித்த பிரச்னையோ அல்லது வளர்ந்து தனியே செல்வதாலோ, ஏற்படும் வெறுமை வேறு வகை பிரச்னையாக உருவெடுக்கிறது.

திருமணமாகி பிள்ளைகள் ஓரளவு வளர்ந்து தங்கள் உலகை நோக்கி நடக்கத் தொடங்கும்போது சந்திக்கும் இந்த வெறுமையைக் கடக்கதான் பலர் பெரிதாகச் சிரமப்படுகின்றனர். பெரும்பாலான பெண்கள் நம் உணர்வுகளை உள்வாங்கி அதே அளவு உணர்வுகளைப் பிரதிபலிக்கும் துணையை அதிகம் எதிர்பார்க்கின்றனர். பிள்ளைகளின் பிரிவு, அல்லது அவர்கள் உலகத்துக்கான தேடலில் அவர்கள் கவனம் குவிந்திருக்க, அது வரை அவர்கள் உலகத்துக்குள் இருந்த தான் அந்நியப்பட்டுப் போன உணர்வை அடையும்போது கணவனிடம் நெருக்கத்தை, அங்கீகாரத்தை எதிர்பார்க்கின்றனர். அவரிடம் ஆதரவு கிடைக்கும் பெண்கள் ஓரளவு சமாளித்துக் கொள்கிறார்கள். அது கிடைக்காத பெண்கள் மிகவும் சோர்ந்து குழம்பிப் போகிறார்கள். தன் உணர்வுகளை மதிக்காத உறவு எதுவாக இருந்தாலும் அதைத் தன்னையறியாமல் வெறுக்கவும், அவர்களிடம் இருந்து விலகி இருக்கவும் முயற்சிக்கிறார்கள். ஆனால், நமது இந்தியக் குடும்ப அமைப்பில் பெண் அப்படி விலகிச் செல்வது பெரும்பாலும் சாத்தியமில்லை.

தனித்து விடப்பட்ட மனம் விரக்தியை நோக்கி நகரத் தொடங்கும். ஏற்கெனவே மெனோபாஸ் காரணமான மாற்றங்கள் மனதிலும் உடலிலும் ஏகப்பட்ட மாற்றங்களை ஏற்படுத்தியிருக்க, தன் நிலை குறித்த ஐயம் பூதாகரமாக உருவெடுக்கிறது. அவள் உலகம் என்று நினைத்த ஒன்று அவள் கைகளில் இருந்து கை நழுவிச் செல்வதை, கையறு நிலையில் வேடிக்கை பார்த்துக்கொண்டே இருக்க வேண்டிய நிலைதான் பலருக்கு. அந்த விரக்தி, எரிச்சல், கோபம் அவளிடம் இருந்து பலவாக வெளிப்படத் தொடங்கும். அவள் எதை உலகம் என்று நினைத்தாளோ அந்த உலகத்தில் அவள் ஒரு பொருட்டு இல்லை, அவளுக்கென அந்த உலகத்தில் எந்த முக்கியத்துவமும் இல்லை என்பதை எத்தனை பெண்களால், இது இயற்கைதான், இப்படித்தான் நிகழும் என்று சாதாரணமாக எடுத்துக்கொண்டு கடக்க முடியும்?

ஒரு பெண்ணிடம் கணவன், குழந்தைகள் வளர்ப்பு, வீடுதான் உன் உலகம் என அதற்குள்ளேயே உழல விட்டுவிட்டு, திடீரென்று அனைத்தையும் விட்டுவிட்டு இனி உன் வேலையை மட்டும் பார் எனக் கூறுவது அவளுக்குள் எவ்வளவு அதிர்வுகளை ஏற்படுத்தும் என்பதை பற்றித் தெரிந்துகொள்ள முயற்சித்து இருப்போமா? அவளுக்கான ஆறுதலை, குமுறல்களுக்கான வடிகால்களை இந்தக் குடும்ப அமைப்பு வழங்குகிறதா? இதில் இருந்து அவர்கள் வெளி வர என்னவெல்லாம் செய்யலாம், செய்ய வேண்டும் என்பதை பற்றி அடுத்து பார்ப்போம்.

(தொடரும்)

படைப்பாளர்:

கமலி பன்னீர்செல்வம். எழுத்தாளர். ‘கேட் சோபின் சிறுகதைகள்’ என்ற நூல் இவர் மொழிபெயர்ப்பில் வெளிவந்து, பாராட்டுகளைப் பெற்று வருகிறது.