ஆடை உற்பத்தி மற்றும் தூக்கியெறியப்பட்ட ஆடைகளால் ஏற்படும் சூழல் பாதிப்புகளைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். மேலை நாடுகளில் இது எவ்வளவு பெரிய பிரச்னை என்று புரிந்துவிட்டது, இனி இந்தியாவில் இந்தப் பிரச்னையின் தீவிரத்தன்மையைப் பேசலாம்.

மேலை நாடுகளின் நுகர்வுத்தன்மையையும் இந்தியாவையும் அப்படியே நேரடியாக ஒப்பிட்டுவிட முடியாது. Global South என்ற வகைமைக்குள் இந்தியா வருகிறது. Global North வகை நாடுகளுக்கான பொருட்களை உற்பத்தி செய்யும் களமாகவும் அவற்றின் கழிவுகளை ஏற்கும் இடமாகவும் இந்தியா போன்ற Global South வகை நாடுகள் பார்க்கப்படுகின்றன. இந்தப் போக்கு எல்லாத் துறைகளிலும் இருக்கிறது.

இந்த வகை நாடுகளை மேலை நாடுகள் பார்க்கும் விதமே தனி. ‘ஆஹா, இங்கு நுகர்வோர் இருக்கிறார்கள், இங்கு கடை விரிக்கலாம்’, ‘இந்தப் பொருளாதாரச் சூழலில் குறைவான கூலியில் வேலை நடக்கும்’, ‘நமது குப்பைகளை இங்கு கொட்டலாம்’ என்று எல்லாக் கோணத்திலும் இந்த நாடுகள் சுரண்டப்படுகின்றன. ஒரு வகையில் இந்தியாவும் அப்படித்தான் இருக்கிறது. ஒரே நேரத்தில் நுகர்வுக்களமாகவும் உற்பத்திக் கூடமாகவும் குப்பைகளை ஏந்திக்கொள்ளும் இடமாகவும் இருக்கிறது.

இந்தியாவில் நடக்கும் உற்பத்தியை எடுத்துக்கொள்வோம். இந்தியாவின் சராசரி வருடாந்திர உற்பத்தியில் 14% ஆடைத்துறையிலிருந்து வருவதுதான். உலக அளவில் அதிகமான பொருட்களை உற்பத்தி செய்து ஏற்றுமதிக்கு அனுப்பும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. கேப், லெவி ஸ்ட்ராஸ், ஹெச்&எம், நைகி போன்ற பல நிறுவனங்களின் முக்கிய உற்பத்திக்கூடங்கள் இங்குதான் இருக்கின்றன. வெளிப்படையாகப் பார்க்கும்போது இது பெரிய தொழில் வளர்ச்சியாகத் தெரியலாம். ஆனால், இதில் வெளிநாட்டு நிறுவனங்களின் உழைப்புச்சுரண்டல் எவ்வளவு இருக்கிறது என்று கவனிக்க வேண்டும். குறைவான கூலி தந்தால் போதும் என்பதற்காக ஒரு வெளிநாட்டு நிறுவனம் இங்கு தொழிற்கூடங்கள் அமைக்குமானால் அது நிச்சயம் தொழில் வளர்ச்சி அல்ல.

இன்னொருபுறம் இந்த ஆடை தொழிற்கூடங்களில் வேலை செய்வது யார் என்பதையும் பார்க்க வேண்டும். இந்தியாவின் ஆடை பணியாளர்களில் 60% பேர் பெண்கள்தாம். உலக அளவிலேயே 80% ஆடை பணியாளர்கள் பெண்கள்தாம், அதிலும் பெரும்பாலான மேலை நாட்டு ஆடை நிறுவனங்களின் உற்பத்தி, வளரும் நாடுகளைச் சேர்ந்த தொழிற்கூடங்களில்தாம் நடக்கின்றன. ஆகவே, உலகளாவிய ஆடை உற்பத்தியில் வளரும் நாடுகளின் பெண்கள்தாம் பெரும்பாலான தொழிலாளர்களாக இருக்கிறார்கள்.

வேறு எந்தத் துறையிலும் இல்லாத அளவுக்கு ஆடைத் துறையில் மட்டும் இத்தனை பெண்கள் ஏன் வந்தார்கள் என்பது முக்கியமான கேள்வி. இதற்குத் தன்னுடைய அனுபவத்திலிருந்தே பதில் தருகிறார் வங்கதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண் ஆடைத் தொழிலாளி. “பெண்களைக் கைப்பாவைகள் போல இவர்களால் ஆட்டி வைக்க முடியும். ஆனால், ஆண்களை அப்படி இம்சிக்க முடியாது. நாங்கள் வைக்கும் கோரிக்கைகளைக் கண்டுகொள்ளாத முதலாளிகள் ஆண்களின் கோரிக்கையை நிறைவேற்றுகிறார்கள். ஆண்களாக இருந்தால் அந்த நிர்ப்பந்தம் வந்துவிடும் என்பதாலேயே இவர்கள் பெண்களை வேலைக்கு வைக்கிறார்கள்” என்று வேதனையுடன் கூறுகிறார்.

ஆய்வுக்கோணத்தில் இதை அணுகும் மதுமிதா தத்தா, விரிவான காரணங்களைத் தருகிறார். வளரும் நாடுகளின் பொருளாதாரச் சூழலால், குறைவான ஊதியமாக இருந்தால்கூட வேலை செய்யத் தயாராக இருப்பவர்கள் பெண்கள் மட்டுமே என்பதால் அவர்கள் இதற்குள் வருகின்றனர் என்கிறார். சில நேரம் வீட்டிலிருந்தபடியே ஆடைகளைத் தைப்பது, செப்பனிடுவது போன்றவற்றைப் பெண்கள் செய்துவிடலாம் என்பதும் ஒரு முக்கியக் காரணம். ஊதியத்தைக் குறைப்பது, தொழிற்சங்கம் அமையாமல் தடுத்து நிறுத்துவது, அதிகாரத்தின் மூலம் தொழிலாளர்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைப்பது ஆகியவற்றை உறுதிப்படுத்த, பெண்கள் இத்துறைக்குள் கொண்டுவரப்பட்டனர் என்கிறார் மதுமிதா தத்தா.

பொருளாதாரக் காரணங்களுக்காக ஆடைத்துறையில் நுழையும் பெண் பணியாளர்கள் எல்லா விதத்திலும் சுரண்டப்படுவதை ஆய்வுகள் உறுதி செய்திருக்கின்றன. மிகக் குறைவான கூலி, வசைகள், பாலியல் சுரண்டல், கட்டாயப்படுத்தி அதிக நேரம் வேலை வாங்குவது என்று இந்தத் துறையில் எல்லாமே நடக்கின்றன. இது போன்ற தொழிற்கூடங்களில் தொடர்ந்து வேலை நடந்து கொண்டே இருக்க வேண்டும் என்கிற கட்டாயம் இருக்கிறது.

இடைவேளைக்காக எடுத்துக்கொள்ளும் பத்து நிமிட அவகாசம்கூட இங்கு கணக்கில் வைக்கப்படும். பழந்தமிழ் இலக்கியத்தில், ‘ஓய்வே இல்லாத வேலை’ என்கிற பொருளில் ‘எக்காலும் ஏய்ப்பில் தொழில்’ என்று நெசவுத் தொழிலைக் குறிப்பிட்டிருப்பார்கள். இந்தியாவின் ஆடைத் தொழிற்கூடங்களில் நடக்கும் வேலையும் அப்படித்தான். தமிழகத்தின் சில ஊர்களில் இருக்கும் ஆடைத் தொழிற்சாலைகளில் மாதவிடாய்க் காலத்தில் பெண்களின் வேலை கெடாமல் இருப்பதற்காக, சம்பந்தப்பட்ட நிறுவனங்களே மாத்திரைகளைக் கொடுத்திருப்பதாக ஒரு சர்ச்சை வெளியானது பலருக்கு நினைவிருக்கலாம். அந்த அளவுக்குச் சுரண்டல் புரையோடிப் போயிருக்கும் துறை இது.

எங்கேயோ யாரோ அணிந்துகொள்ளப்போகும் ஆடைகளுக்காக இந்தியப் பெண்கள் சுரண்டப்படுவது ஒருபுறம் என்றால், அதே துணிகளை அணிந்த பிறகு தூக்கிப்போடும் இடமாகவும் இந்தியாதான் இருக்கிறது. பல செய்தி ஊடகங்கள் இதை உறுதிப்படுத்துகின்றன.

மீண்டும் நம் சுற்றுச்சூழல் பிரச்னைக்கு வரலாம். மேற்கத்திய நாடுகளைப் பொறுத்தவரை துரித ஆடை என்பது நுகர்வு மற்றும் சூழல் பிரச்னை மட்டுமே. ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை இதில் பெண்களின் உழைப்புச் சுரண்டல் இருக்கிறது, உலகளாவிய அரசியலின் பாரபட்சமான கொள்கை முடிவுகளும் இருக்கின்றன. மேலை நாடுகளின் நுகர்வால் வளரும் நாடுகளின் பெண்கள் சுரண்டப்படுகிறார்கள், வளரும் நாடுகளின் குப்பை மேடுகள் நிரம்பி வழிகின்றன. சூழல்-பெண்ணியம்-முதலாளித்துவ சுரண்டல் என்று எல்லாக் கோணங்களிலும் பிரச்னை விரிகிறது. இந்தியாவில் நிலைமை ஓரளவாவது பரவாயில்லை. வியட்நாம், வங்கதேசம் போன்ற நாடுகளில் குறைந்தபட்ச கூலிகூடத் தராமல் மணிக்கணக்கில் ஆடைத் தொழிற்கூடங்களில் பெண்கள் வேலை வாங்கப்படுகிறார்கள். ஆடைக் குப்பை என்று வந்துவிட்டால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பது ஆப்பிரிக்காதான். அங்கு உள்ள நதிகளில்கூட மேலை நாடுகளிலிருந்து குப்பைகளாக வந்து குவிந்த பழைய ஆடைகள் மிதக்கின்றன. அந்தக் கண்டத்தையே ஒரு குப்பை மேடாகத்தான் மேற்கத்திய நாடுகள் பாவிக்கின்றன.

சுற்றிச் சுற்றிப் பார்த்தால் எல்லாமே ஒன்றோடொன்று பிணைந்திருக்கிறது. ‘இந்த எல்லாப் பிரச்னைகளுக்கும் மேலை நாட்டுப் பெண்களின் நுகர்வுப் பழக்கம்தானே காரணம்? பெண்ணுக்குப் பெண்ணே எதிரி என்று சொல்வார்களே, அது உண்மைதான் போல’ என்று தோன்றுகிறதா? அவசரப்பட வேண்டாம். பிரச்னையின் இன்னோர் அம்சத்தையும் பார்த்துவிடலாம். நமது சிக்கலான நூல்கண்டில் கடைசி சரடு இது.

Pimkie Apparels

ஆடை உற்பத்திக் கூடங்களில் கடைநிலைப் பணியாளர்களாக, இறுதிக்கட்ட நுகர்வோராக இருப்பவர்கள் பெண்கள்தாம். ஆனால், இந்த மிகப்பெரிய உற்பத்தி சங்கிலியின் முக்கியமான முடிவுகளை எடுக்கும் இடம் பெண்களுக்கு வழங்கப்படுவதில்லை. உலக அளவில் ஆடை நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புகளில் இருப்பவர்களில் 12.5% மட்டுமே பெண்கள் என்கிறது ஓர் ஆய்வு. நிறுவனங்களின் முக்கிய நிர்வாகக் குழு உறுப்பினர்களிலும் 26% மட்டுமே பெண்கள்.

பெண்கள் ஃபேஷன் துறையில் போதுமான நிபுணத்துவம் பெறவில்லை என்றுகூடச் சாக்கு சொல்ல முடியாது. உலக அளவில் ஃபேஷன் படிப்பவர்களில் 78% பேர் பெண்கள்தாம். அப்படியானால் பெண்களுக்குத் தேவையான தகுதியும் திறமையும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், ஆடை உற்பத்தித் துறை அவர்களைத் தையல் மெஷினோடு நிறுத்திவிடுகிறது. குறைந்தபட்சம் ஆடை வடிவமைப்பாளர் என்கிற இடம்கூட பல நிறுவனங்களில் பெண்களுக்குத் தரப்படுவதில்லை. நிறுவனத்தின் உயர்மட்டத்துக்குப் போகப் போக பெண்களின் பிரதிநிதித்துவம் குறைகிறது. பெண்களை முன்னேற விடாமல் தடுக்கும் கண்ணாடிக் கூரை கோட்பாட்டோடு இதை ஒப்பிட்டு, பேஷன் துறையின் இந்தப் பாரபட்சத்தைக் கண்ணாடி ரன்வே (Glass Runway) என்று அழைக்கிறார்கள் நிபுணர்கள்.

முடிவெடுக்கும் பொறுப்புகளில் பெண்கள் இல்லாதபோது, அவர்களால் அந்தத் துறையில் இருக்கும் சூழல் பாதிப்புகளையோ உழைப்புச் சுரண்டலையோ எப்படித் தடுக்க முடியும்? ஆண்களால் நிர்வாகிக்கப்படும் ஆடை நிறுவனங்களில் பெண்கள் சுரண்டப்படுகிறார்கள், பெண்களைக் குறிவைத்து விளம்பரங்கள் உருவாக்கப்படுகின்றன. பெண்கள் நுகர்வோராக இருக்கிறார்கள், அதீத நுகர்வாலும் உற்பத்தி செயல்முறைகளாலும் சூழல் பாதிக்கப்படுகிறது. இந்தச் சுழற்சியில் இருக்கும் பாலின பாகுபாடுகளை முற்றிலும் தவிர்த்துவிட்டு, ‘சூழல் சீர்கேட்டையும் சுரண்டலையும் குறைக்க வேண்டும். ஆகவே பெண்களே உங்களது நுகர்வைக் குறைத்துக்கொள்ளுங்கள்’ என்று பேசுவது எப்படி நியாயமானதாகும்?

ஒரு பேச்சுக்காக நுகர்வுப்பழக்கத்தை மாற்றிக்கொள்வதாக ஒருவர் முடிவெடுக்கிறார் என்றே வைத்துக்கொள்வோம். சூழலைப் பாதிக்காத சுரண்டல் இல்லாத ஆடைகள் நம்முடைய வாங்கும் திறனுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டுமே? சூழலைப் பாதிக்காத கச்சாப் பொருள்கள், உற்பத்தி முறை, சம்பந்தப்பட்ட தொழிலாளர்களுக்கான நியாயமான கூலி என்று எல்லாமே ஆடையின் விலையில் சேரும்போது அது நுகர்வோரின் கைக்கும் காசுக்கும் எட்டாததாக மாறிவிடுகிறது. சுற்றுச்சூழலைப் பாதிக்காத ஆடைகளுக்கான மானியங்கள், முறைப்படுத்தப்பட்ட விலை, சந்தையில் மாற்றம் ஆகியவை வரும்வரை இவற்றின் விலை விண்ணைத் தொட்டபடிதான் இருக்கும். இந்த மாற்றங்களைச் செய்யாமல், கையிலிருக்கும் காசை எல்லாம் கொடுத்து, சூழலைக் காப்பாற்றுங்கள் என்று நுகர்வோரைக் கட்டாயப்படுத்த முடியாது.

இதில் இன்னொரு பிரச்னையும் இருக்கிறது. ‘பொதுவாக ஆடைகள் சுற்றுச்சூழலைப் பாதிக்கும், ஆனால், எங்களது நிறுவனத்தின் ஆடை அப்படியல்ல’ என்று பொய் சொல்லி நுகர்வோரைத் தன்பக்கம் இழுக்கும் விளம்பர யுத்தியும் உண்டு. ஆடைகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பற்றிய குற்ற உணர்வில் இருப்பவர்கள் இதில் எளிதாக ஏமாந்துவிடுவார்கள். இவ்வாறு சூழலைக் காட்டி போலியான தகவல்களைத் தந்து, நுகர்வோரைக் கவர்ந்திழுப்பதைப் பசுமை கண்துடைப்பு (Greenwashing) என்பார்கள். பொறுப்பான நுகர்வோராக இருக்க விரும்புகிறவர்கள் பசுமை கண்துடைப்பு நடக்கிறதா என்று வேறு சரிபார்க்க வேண்டும், எல்லாவற்றையும் ஆராய்ந்த பிறகே பொருள் வாங்க வேண்டும். ஆனால், நிறுவனங்கள் எதையுமே மாற்றிக்கொள்ளத் தேவையில்லை. அலுப்பாக இருக்கிறது, இல்லையா?

இன்னொருபுறம் இந்த ஆடை தொழிற்கூடங்களில் வேலை செய்வது யார் என்பதையும் பார்க்க வேண்டும். இந்தியாவின் ஆடை பணியாளர்களில் 60% பேர் பெண்கள்தாம். உலக அளவிலேயே 80% ஆடை பணியாளர்கள் பெண்கள்தாம், அதிலும் பெரும்பாலான மேலை நாட்டு ஆடை நிறுவனங்களின் உற்பத்தி, வளரும் நாடுகளைச் சேர்ந்த தொழிற்கூடங்களில்தாம் நடக்கின்றன. ஆகவே, உலகளாவிய ஆடை உற்பத்தியில் வளரும் நாடுகளின் பெண்கள்தாம் பெரும்பாலான தொழிலாளர்களாக இருக்கிறார்கள்.

உலகெங்கிலும் வாங்கும் சக்தி அதிகரித்துவரும் நிலையில் நுகர்வு பற்றிய விரிவான வாதங்களை மேற்கொள்ள வேண்டும் என்பது உண்மைதான். ஆனால், அமைப்புரீதியான குளறுபடிகளை வைத்துக்கொண்டு நுகர்வோரை மட்டும் பொறுப்பாளர்களாக மாற்ற முடியாது. மேலை நாடுகளில் நுகர்வு அதிகம்தான். ஆனாலும் அவர்கள் தூக்கியெறியும் துணிகள் ஆப்பிரிக்காவின் நதிகளை மூச்சுத்திணறச் செய்வதற்கோ அந்தத் துணியை உற்பத்தி செய்ய வியட்நாமில் ஒரு பெண் சுரண்டப்படுவதற்கோ அந்த நுகர்வோர் காரணமில்லையே? நுகர்வோர் -பாதிக்கப்படுவோர் என்று இருபுறமும் பொதுமக்களை, குறிப்பாகப் பெண்களை நிறுத்தி வைத்துவிட்டு நிறுவனங்கள் தங்களது லாபத்தை ஈட்டிக்கொள்கின்றன என்பதாகவே இதைப் பார்க்கிறேன்.

பெண்கள் பல படிநிலைகளில் இயங்கும் துறை இது. ஆகவே நிச்சயமாக இதன் சூழல் பிரச்னைகளைப் பற்றிப் பேசும்போது பால்சார்ந்த விவாதங்கள் வந்துவிடும். ஆனால், சில நேரம் உயிரற்ற அம்சங்களுக்குக்கூட நாம் பால் அடையாளங்கள் கொடுக்கிறோம், அது சூழல் பிரச்னையாகவும் மாறுகிறது. அது என்ன?

(தொடரும்)

படைப்பாளர்:

நாராயணி சுப்ரமணியன்

கடல் சார் ஆய்வாளர், சூழலியல் ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் என்ற பன்முக ஆளுமை இவர். தமிழ் இந்து உள்ளிட்ட முன்னணி இதழ்களில் சூழலியல், கடல் வாழ் உயிரினங்கள் குறித்து தொடர்ச்சியாக எழுதி வருபவர். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய ‘விலங்குகளும் பாலினமும்’ தொடர் புத்தகமாக வெளிவந்து, சூழலியலில் மிக முக்கியமான புத்தகமாகக் கொண்டாடப்படுகிறது!