நூலின் ஆசிரியர் போலவே அட்டைப் படத்தில் இருக்கும் தேவதை மெல்லிய சிரிப்போடு, ‘வாருங்கள் வாழ்வைக் கொண்டாடலாம்’ என்று புத்தகத்திற்குள் அழைத்துச் செல்கிறார்!
குழந்தைக்கு அருகிலிருந்து பாடம் சொல்லிக் கொடுப்பது போல ஒவ்வோர் இடத்திலும் ஆசிரியர் மிக அழகாக நம்முடன் உரையாடுகிறார். அனைவருக்கும் மிகவும் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் யதார்த்தமான, தெளிவான நடையில் அமைந்துள்ளது. ஒவ்வொரு கட்டுரையிலும் ஆசிரியர் அன்றாட நடைமுறை வாழ்க்கையிலிருந்து சில எடுத்துக்காட்டுகளுடன் எளிமையாகப் புரிய வைத்துள்ளார்.
அன்புக்கு என்ன தகுதி வேண்டும்?
‘அன்பைக் கொடுக்கவும் அன்பைப் பெறுவதற்கும் இந்தப் பூமியில் இருப்பது ஒன்றே போதுமானது’ என்ற வரிகளைப் படிக்கும் போது நம்மைச் சிந்திக்க வைக்கிறது. இறுதியில் இப்போதாவது சொல்லப் பழகுங்கள், ‘இந்த வாழ்க்கையில் அன்பைப் பெறுவதற்கும், எல்லா இன்பங்களை அனுபவிப்பதற்கும், இந்த வாழ்வைக் கொண்டாட்டமாக வாழ்வதற்கும் நான் போதுமானவளாகவே இருக்கிறேன்!’
‘மாற்றம் முதலில் சுயத்தில் இருந்தே தொடங்கட்டும்’ என்கிற வரி அட்டகாசம்! எத்தனையோ வசதிகள் இருந்தும் மனதில் நிறைவும் மகிழ்ச்சியும் இல்லை என்று நினைப்பவர்களுக்கு இந்த வரிகளைப் படிக்கும்போது எதுவுமே இல்லை என்றாலும் வாழ்வைக் கொண்டாடலாம் என்கிற எண்ணம் தோன்றும். வாழ்க்கையை ரசிக்க நாம்தான் தடையாக இருக்கிறோம்.
இந்த உடல் ஓர் அதிசயம். இந்த மனம் ஓர் அதிசயம்.
நாளை விடிந்தால் வேலை, ஆபிஸ் என்று ஓடுபவர்கள் பலருக்கும் தங்கள் உடலையும் மனதையும் பராமரிக்க நேரமில்லை. அப்படி ஒரு மிஷின் வாழ்க்கையில் வாழும் நமக்கு இந்த இரண்டு அதிசயங்களை எப்படிப் பாதுகாப்பது என்பதை ஆசிரியர் அழகாக கூறியிருக்கிறார். ‘உடல் மற்றும் உள்ளத்தை நன்றாகப் பராமரித்து வந்தால் அதற்கான பலனை எளிதாக அனுபவிக்க முடியும்’ என்ற வரிகளைப் படிக்கும்போது நமக்கு நாமே கவனித்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது. அதிலும் குறிப்பாக, “உடலுக்குச் சரியான அளவு ஓய்வு கொடுப்பது, அளவான உடல் உழைப்பு அல்லது உடற்பயிற்சி கொடுப்பது மனதைப் பராமரிக்க தியானம் மற்றும் புத்தகங்கள் வாசித்தல் என்ற வரிகளைப் படித்ததும் என்னுள் பல மாற்றங்களைச் செய்து கொண்டேன்.
குழந்தைகள் தவறு செய்தால் நல்வழிப்படுத்த எளிமையான, முக்கியமான உத்திகள் அனைத்தும் அருமை. தொலைக்காட்சித் தொடர்களையும் வீடியோக்களையும் நீங்கள் தேர்வு செய்த பின்னரே பார்க்க அனுமதியுங்கள் என்று பெற்றோர்களுக்கு கூறும் அறிவுரை நன்று. சின்சான் பேசும் வார்த்தைகள், மரியாதை குறைவான வார்த்தைகள், வழக்கத்திற்கு மாறான பாவனைகளைத் தொடர்ந்து குழந்தைகள் பார்த்து வரும்போது அவர்களிடம் பல மாற்றங்களைக் காண முடியும். இது போன்ற தொடர்களை குழந்தைகள் பார்ப்பதை முற்றிலும் தடை செய்ய வேண்டும்.
குழந்தைகளை அதைச் செய், இதைச் செய் என்றால் பிடிக்காது. அவர்களது ஆர்வத்தைத் தூண்ட வேண்டும், அவர்களது கவனத்தை திசை திருப்ப வேண்டும் என்று கூறுகிறார். இன்று பல குழந்தைகள் யூடியூப் வீடியோக்கள் பார்த்தே பொழுதைக் கழிக்கின்றனர். குழந்தைகளுக்கு தேவையானதை மட்டும் வாங்கிக் கொடுத்து அவர்களது உணர்வுகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வாழ்வைக் கொண்டாடலாம் என்று பெற்றோர் மனதில் விதைக்கிறார்.
என்ன மாற்றங்கள் செய்தால் உறவில் மகிழ்ச்சியை உருவாக்கலாம்?
உறவுகளால் உண்டாகும் உணர்வுகளைச் சமன்படுத்தி எப்படி மகிழ்ச்சியைத் தக்க வைப்பது என்று மிக அழகாக நான்கு பகுதிகளாக, சின்னச் சின்ன உதாரணங்களோடு உறவுகளைக் குறித்து தெளிவான முடிவுகளை எடுப்பதற்கு ஆசிரியர் ஆலோசனைகளை வழங்கியுள்ளார். பொதுவாகக் கோபத்திலோ கவலையிலோ எடுக்கும் முடிவுகள் சரியாக அமைவதில்லை என்று ஆசிரியர் கூறுவது மிக இனிது.
ஆம், உறவுகளின் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் உணராமல் பகைத்துக்கொண்டு, வாழ்பவர்களுக்கு இந்தக் கட்டுரையைப் படிக்கும் போது உறவுகளால் ஏற்படும் நன்மைகளைத் தெளிவுப்படுத்தி மகிழ்ச்சியோடும் மன அமைதியோடும் வாழக் கற்றுத் தருகிறார். அதேபோல ஒர் உறவில் ஏன் வெளியே வரவேண்டும் என்பதற்கான ஒரு பலமான காரணத்தோடு வெளியே வரவும் தயாராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
வேண்டியதைக் கொடுத்தால் என்ன?
இதில் ஆசிரியர் கூறுவது யதார்த்தமான உண்மை. அன்பை வெளிப்படுத்துவதில் முக்கியமாக இருப்பது அவர்கள் கேட்பதைக் கொடுப்பதுதானே என்ற கேள்வியைப் படிக்கும் போது சரிதானே என்று தோன்றும். தண்ணீர் கேட்டால் தண்ணீரைக் கொடுங்கள். ஓவர் பெர்ஃபாட்மன்சஸை ஒதுக்கி வையுங்கள் என்ற வரிகளைப் படிக்கும் போது நம்மை அறியாமலேயே நம் முகத்தில் சிரிப்பு வருகிறது. இனி ஓவர் பெர்ஃபார்மன்ஸை ஒதுக்கி வைப்போம்.
நம்மில் பெரும்பாலானோர் அடுத்தவர் என்ன நினைப்பாரோ என்று தயங்கி நம் உணர்வுகளை வெளிப்படுத்துவதில்லை. நாமும் அப்படித்தான் என்று ஒரு வரையறை வைத்துக்கொண்டு நமக்காகப் பேசத் தயாராக இருக்க மாட்டோம். தனக்காக, தான் பேசத் தயாராக இல்லாத போது இன்னொருவர் எப்படி நமக்காகப் பேசுவார் என்று ஆசிரியர் கேள்வியை முன் வைத்து ஒரு சிறிய உதாரணத்துடன் நம் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அந்த உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டியதும் நமது கடமையே என்று கூறுகிறார். நம் கருத்தை வெளிப்படையாகச் சொல்ல தயங்காமல் நம் தேவைகளுக்காகப் பேசத் தொடங்கி, உதவிகள் கேட்டு, வாழ்வைக் கொண்டாடலாம் என்று அழகாகக் கூறியுள்ளார்.
எதிர்மறை எண்ணங்களைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்காமல், அதிலிருந்து விடுபட ஆசிரியர் கூறும் குட்டி உதாரணங்களைப் படிக்கும்போது சுவாரசியமாக இருந்தது. அதிலும் குறிப்பாக தாமஸ் எடிசன் அன்னையின் பாஸிட்டிவ்வான வார்த்தைகள் அவரைப் புகழ்பெற்ற விஞ்ஞானியாக மாற்றியது எனக் குறிப்பிட்டுள்ளார். நம் மனதில் எதிர்மறை எண்ணங்களை வளரவிடாமல் மனதை எந்தச் சூழ்நிலையிலும் பாஸிட்டிவான எண்ணங்களோடு வாழ்வை வளமாக்குவோம்!
Herstories வலைத்தளத்தில் கட்டுரை வெளியானதும் படித்து விடுவேன். கட்டுரைகளை படித்தவுடன் மனதிற்கு தெளிவும் அன்றைய நாள் முழுவதும் உற்சாகமாக இருப்பது போல் உணர்ந்துள்ளேன். சில மாதங்களுக்கு முன் புத்தகக் காட்சியில் ஆசிரியர் ஜான்சி ஷகியின் கையெழுத்துடன் புத்தக்கத்தை வாங்கியபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
முத்துலட்சுமி மாதவகிருஷ்ணன்
2012ஆம் ஆண்டு டாக்டர் செஃப் தாமு அவர்களால் தேர்வு செய்யப்பட்டு ‘கிச்சன் குயின் ஆஃப் சென்னை’ என்கிற பட்டத்தை வென்றிருக்கிறார். பாரம்பரிய சமையல் மற்றும் புதுமையாக முயற்சி செய்த ரெசிபிகளை ஸ்டெப் பை ஸ்டெப் படங்களோடு இணையதளத்திலும் யூடியூப்பிலும் பகிர்ந்து வருகிறார். அவள் விகடன், அவள் கிச்சன் இதழ்களிலும் பல்வேறு குறிப்புகளைப் பதிவு செய்திருக்கிறார். தினம் தினம் விதம் விதமான உணவுகளை முயல்வதிலும், அவற்றை படங்கள், வீடியோக்களோடு பகிர்வதிலும் முத்துலெட்சுமிக்கு மிகுந்த ஆர்வம் உண்டு.