அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவிற்கு மிகத் தாமதமாகச் சென்றேன். நல்லவேளை கூட்டம் நடந்துகொண்டிருந்தது. பெண்களால், பெண்களுக்காக எழுதி வெளியிடப்பட்ட 21 நூல்கள் அங்கே வெளியிடப்பட்டது கண்டு ஆச்சரியமடைந்தேன். இரவும் 9.30 வரை பலரையும் பார்த்துப் பேசிக்கொண்டிருந்தது மகிழ்ச்சியாக இருந்தது. இதுவரை நான் இப்படி ஒரு நிகழ்ச்சியைக் கண்டதில்லை.

கூட்டம் முடிந்ததும் புத்தகம் வாங்குவதற்காகச் சென்றேன். என் கண்ணில் பட்டது ‘சஹானா’ எழுதிய ‘தடம் பதித்த தாரகைகள்.’ மேலும் சில நூல்களை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்துவிட்டேன். வேலையின் காரணமாக உடனே படிக்க முடியவில்லை. இப்போது படிக்க எடுத்து இரண்டே நாள்களில் முடித்துவிட்டேன்.

நெஞ்சில் அமைதி. கண்களில் நீர். இப்படி ஒரு நூலை எழுதிய சஹானாவுக்காக மகிழ்ச்சியான கண்ணீர். தடம் பதித்த தாரகைகளுக்கான நன்றி கண்ணீர்.

இந்த நூலில் இடம்பெற்ற ‘தடம் பதித்த தாரகைகள்’ பெரும்பாலும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள். சுமார் 100 – 150 ஆண்டுகளுக்கு முன் தங்கள் தடங்களை அழுத்தமாகப் பதித்தவர்கள். ‘கடினமான, அவலமான சூழலிலிருந்து விடுபட வேண்டும், எங்களால் இனியும் இதைச் சகிக்க முடியாது. எங்களுக்கும் உணர்வு உண்டு. உரிமை வேண்டும், அங்கீகாரம் வேண்டும்’ என்று செயலில் இறங்கியவர்கள்.

இந்த நூலில் இவர்தான் சிறப்பானவர். அவர்தான் சிறப்பானவர் என்று சொல்ல முடியாது. ஒவ்வொரு பெண்ணும் தன் அளவில் சிறப்பானவராக இருக்கிறார்.

எனக்கு மிகவும் பிடித்தவர் ‘கிராண்ட்மா கேட்வுட்.’ 11 குழந்தைகளைப் பெற்று, வளர்த்து, வீட்டு வேலை, விவசாய வேலை என உழன்றுகொண்டே இருந்தவர். கணவனின் கொடுமைகளையும் அனுபவித்துக்கொண்டிருந்தார். இனிமேல் சகிக்கவே முடியாது என்ற சூழலில் விவாகரத்து பெற்றார். பிள்ளைகளுக்கும் திருமணம் முடிந்து பேரப்பிள்ளைகளும் வந்துவிட்டார்கள். 67 வயதில் யதேச்சையாகப் பத்திரிகையில் பார்த்த அப்பலாச்சியன் மலையேற்றம், அவரை ஈர்த்தது. அது நாள் வரை ஆண்கள் மட்டுமே சென்ற இந்தப் பயணத்துக்குக் கிளம்பினார். கரடுமுரடான பாதைகள், நதி, கடும் குளிர், வன விலங்குகள் என எந்தப் பயமும் இல்லாமல் 146 நாட்களில் 3489 கி.மீ. பயணம் சென்று திரும்பிய முதல் பெண்மணி கிராண்ட்மா கேட்வுட். ஒரு முறை மட்டுமல்ல மூன்று முறை சென்று வந்தது ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்ததைவிட, பத்திரிகையாளர்களிடம் அவர் சொன்ன காரணங்கள் என் கண்களைக் குளமாக்கிவிட்டன.

கிராண்ட்மா கேட்வுட்

ஏன் இந்தப் பயணங்களை மேற்கொண்டீர்கள் என்ற கேள்விக்கு, ‘குடும்ப வன்முறைகளிலிருந்து உயிர் பிழைத்ததற்காக, எனக்காக வாழ வேண்டும் என்பதற்காக, வாழ்க்கையில் எல்லாவற்றிலிருந்தும் விடுபட வேண்டும் என்பதற்காக, சாவதற்குள் ஏதாவது செய்ய வேண்டும் என்ற வெறி போன்ற எந்தக் காரணத்தை வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள்’ என்கிற கிராண்ட்மா கேட்வுட்டின் வரிகளைப் படித்ததும் என் மனதை ஏதோ செய்தது.

என் பிள்ளை அமெரிக்காவில் படிக்கிறான், அமெரிக்காவில் வேலை செய்கிறாள் என்று நாம் பெருமையாகப் பேசுகிறோம். அந்த நாட்டில்தான் 150 வருடங்களுக்கு முன்பு இன வெறி தாண்டவமாடியிருக்கிறது. இந்தப் பெண்களின் சாதனைகளுக்குப் பிறகு ஆம்பிரகாம் லிங்கன், ஒபாமா போன்றவர்கள் நாட்டை ஆளும் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

அதில் ஜோஸ்பின் பேகர் என்ற பெண் சந்தித்த அவமானங்களை வார்த்தைகளால் சொல்ல முடியல. அதேபோல உலகின் முதல் பெண் மருத்துவர் எலிசபெத் பிளாக்வெல், உலகைச் சுற்றி வந்த முதல் பெண் நெல்லி பிளை, ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற வில்மா ருடால்ஃப், கண்டுபிடிப்பாளரும் நடிகையுமான ஹெடி லாமர், ஆப்பிரிக்க அமெரிக்க முதல் பெண் தொழிலதிபர் மேடம் சி.ஜே. வாக்கர் எனத் தடம் பதித்த தாரகைகளின் வாழ்க்கை ஒவ்வொன்றும் பாடம்.

பெண்களின் வரலாறு பெரிதாக வெளியே அறியப்படவில்லை என்ற கூற்றை இந்த நூல் ஓரளவு தீர்க்கக்கூடும்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் முன்னாள் தலைவர் மோகனாவைச் சந்தித்த பிறகுதான் நான் ஏராளமான புத்தகங்களையும் சாதித்த பெண்களையும் அறிந்துகொண்டேன். இந்த நூலை அனைவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும். பள்ளிகளில் பாடமாகக்கூட இந்த நூலை வைக்கலாம்.

படைப்பாளர்:

ஜான்சிராணி. குடும்ப நல ஆலோசகர். 15 வருடங்களாக பழநி பாலாஜி கருத்தரித்தல் மையத்தில் பணியாற்றி வருகிறார். 16 வருடங்களாக பள்ளி, கல்லூரி, இரவுப் பள்ளி, மாணவர் விடுதிகளில் தன்னம்பிக்கைப் பேச்சாளாராக மாணவர்களிடம் உரையாடி வருகிறார். சமூக ஆர்வலர். புத்தகங்கள் படிப்பதில் நாட்டம் அதிகம் உள்ளவர்.