Lise Meitner (1878-1968)

புராணக்கதைகளில் வரும் பெண்கள் நீங்கலாக, தனிமங்களின் பெயருக்குக் காரணமாக இருந்த ஒரே பெண் இவர்தான் (Meitnerium-109). ஆஸ்திரியாவில் பிறந்த லிசெவுக்கு அந்தக் கால வழக்கப்படி 14 வயதோடு பள்ளிப்படிப்பு நிறுத்தப்பட்டது. படிப்பின்மீது இருந்த ஆர்வம் தாளாமல் வீட்டிலேயே வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்து, படித்து இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றார்.

அடுத்தகட்டமாக பிரபல இயற்பியலாளர் மாக்ஸ் ப்ளாங்கிடம் பயிற்சிக்காக விண்ணப்பித்தார். அந்தக் கால வழக்கப்படி மேலதிகாரியின் அனுமதி இருந்தால் மட்டுமே பெண் விஞ்ஞானிகள் வகுப்புகளைக் கவனிக்க முடியும். பெண்களைப் பொதுவாக வகுப்புக்குள் அனுமதிக்காத ப்ளாங்க், மெய்ட்னரின் தனித்துவத்தை உணர்ந்து அவருக்கு அனுமதி அளித்தார். வகுப்பு நேரம் முடிந்ததும் என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருந்த மெய்ட்னர், வேதியியலாளர் ஓட்டோ ஹானுடன் இணைந்து பணியாற்றத் தொடங்கினார்.

அடித்தளத்தில் இருந்த ஒரு மரவேலை தொழிற்கூடத்தைப் பல்கலைக்கழக நிர்வாகிகள் ஹானுக்காக ஒதுக்கினர். காலப்போக்கில் மேல்தளங்களில் இருந்த ஆய்வகங்களிலும் ஹான் பணியாற்றத் தொடங்கினார். ஆனால், விதிமுறைகளின்படி நேரடியாகப் பல்கலைக்கழகத்துக்குள் வேலை செய்யப் பெண்களுக்கு அனுமதி இல்லை என்பதால் மரவேலைக் கூடத்திலேயே மெய்ட்னர் ஆய்வைத் தொடர்ந்தார். பல்கலைக்கழகத்துக்குள் நுழையக் கூடாது என்பதாலும் அப்படியே நுழைந்தாலும் அங்கு பெண்களுக்கான கழிவறைகள் இல்லை என்பதாலும் அவசரத் தேவைகளுக்காக அதே தெருவில் ஒரு முனையில் இருந்த உணவகத்தின் கழிவறைகளைப் பயன்படுத்திக்கொண்டார்.

அடுத்த ஆண்டு நிலைமை மாறியது, பல்கலைக்கழகத்துக்குள் பெண்கள் அனுமதிக்கப்பட்டனர், பெண்களுக்கான கழிவறையும் கட்டப்பட்டது. இதற்கு ஆண் அறிவியலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் என்றாலும் மெய்ட்னரின் பணிச்சூழலில் முன்னேற்றம் ஏற்பட்டது. ஹானுடன் இணைந்து பல முக்கிய ஆய்வுக்கட்டுரைகளை எழுதினார்.

1912இல் மெய்ட்னர், ஹான் இருவரும் ஜெர்மனியின் கெய்சர் வில்லியம் பல்கலைக்கழகத்தில் அடுத்தகட்ட ஆய்வைத் தொடங்கினர். இருவரும் சமநிலையில் இருக்கும் விஞ்ஞானிகள் என்றாலும் மெய்ட்னரின் வேலை அங்கீகரிக்கப்படவில்லை. ‘கௌரவ இயற்பியலாளர்’ என்கிற சம்பளம் இல்லாத பதவியே அவருக்கு வழங்கப்பட்டது. ஊதியமே இல்லாமல் மெய்ட்னர் ஒரு வருடம் ஆராய்ச்சி செய்தார். அதன் பின்னர் ஹானைவிடக் குறைவான சம்பளம் அவருக்காக ஒதுக்கப்பட்டது. எந்த நிலையிலும் அவரது வேலையின் தரம் ஒரே மாதிரியாகத்தான் இருந்தது.

1938இல் ஹிட்லரின் ஆட்சிக்கால நெருக்கடி தாங்க முடியாமல் யூதரான மெய்ட்னர், ஜெர்மனியை விட்டு வெளியேறினார். ஸ்டாக்ஹாமில் ஓர் ஆய்வுக்குழுவில் சேர்ந்தார். ஆனால், மெய்ட்னரின் புது மேற்பார்வையாளரான மன்னே சீக்பான் பெண் வெறுப்பு மனநிலை கொண்டவராக இருந்தார். அதனால் ஆய்வகத்தில் அவருக்கென தனி இடமோ வேலையைத் தொடங்குவதற்கான வளங்களோ உடனடியாகத் தரப்படவில்லை.

இதற்கெல்லாம் அசராத மெய்ட்னர் கடிதம் மூலம் ஹானுடன் ஆரம்பித்த ஆய்வைத் தூரத்திலிருந்தே தொடர்ந்துகொண்டிருந்தார். யுரேனியத்தின் அணுக்கரு வினைகளை ஆராய்ந்துகொண்டிருந்த ஹானின் ஆய்வுக்குழுவுக்கு ஆலோசனைகளையும் அறிவியல் கோணங்களையும் கடிதம் மூலம் அனுப்பினார். “வேறு நாட்டுக்குப் போய்விட்டாலும் மெய்ட்னரே அந்தத் திட்டத்தின் வழிகாட்டியாக இருந்தார்” என்கிறார் ஆய்வுக்குழுவைச் சேர்ந்த ஃப்ரிட்ஸ் ஸ்ட்ராஸ்மன்.

ஹானுடன் மெய்ட்னர்

நியூட்ரான்களைக் கொண்டு இடித்தால், யுரேனியம் இரண்டு தனிமங்களாகப் பிரிவதாக ஹானின் குழு கண்டுபிடித்தது. வியந்துபோன ஹான், ‘இது ஏன் நிகழ்கிறது என்பதற்கான அட்டகாசமான விளக்கம் ஒன்றை நீங்கள் தருவீர்கள் என்று நினைக்கிறேன்’ என்று மெய்ட்னருக்குக் கடிதம் எழுதினார். கடிதத்தைப் படித்துத் தரவுகளை ஆராய்ந்து, ‘அணுக்கரு பிளவு’ (Nuclear fission) என்ற கருத்தாக்கத்தை மெய்ட்னர் முன்வைத்தார். அணுக்களின் காலகட்டம் பிறந்தது. வரலாறு அந்த நொடியிலிருந்து மாறியது.

பல துறையின் கூட்டு முயற்சிகள் அந்தக் காலத்தில் நோபல் கமிட்டியால் அங்கீகரிக்கப்படவில்லை என்பதால் அணுக்கரு பிளவைக் கண்டறிந்ததற்கான நோபல் பரிசு ஹானுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. மெய்ட்னருக்கு வருத்தம் இருந்தாலும் அதை ஒதுக்கிவிட்டு அடுத்தகட்ட வேலைகளைப் பார்த்தார். அணுகுண்டு ஆராய்ச்சிக்கான அழைப்பு விடுக்கப்பட்டபோது, “வெடிகுண்டுக்கான வேலையில் ஒருபோதும் ஈடுபடமாட்டேன்” என்று அறிவித்தார். ஒரு பேராசிரியராகப் பல்வேறு ஆராய்ச்சி மாணவர்களை உருவாக்கினார். இயற்பியல் துறையில் பல விருதுகளைப் பெற்றார்.

(தொடரும்)

படைப்பாளர்:

நாராயணி சுப்ரமணியன்

கடல் சார் ஆய்வாளர், சூழலியல் ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் என்ற பன்முக ஆளுமை இவர். தமிழ் இந்து உள்ளிட்ட முன்னணி இதழ்களில் சூழலியல், கடல் வாழ் உயிரினங்கள் குறித்து தொடர்ச்சியாக எழுதி வருபவர். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய ‘விலங்குகளும் பாலினமும்’ தொடர் புத்தகமாக வெளிவந்து, சூழலியலில் மிக முக்கியமான புத்தகமாகக் கொண்டாடப்படுகிறது!