வேலூர்ப் புரட்சி 1806

கா.அ.மணிக்குமார்

காலச்சுவடு பதிப்பகம், அக்டோபர் 2021.

ஆன்லைனில் நூலை வாங்க சுட்டி இங்கே…

தனியார் பள்ளி ஒன்றுக்கு சமீபத்தில் வேலூர்ப் புரட்சி குறித்த சிறப்பு வகுப்பெடுக்கச் சென்றபோது, அது பற்றிய எந்தப் புரிதலும் அவர்களுக்கு இல்லை என உணர்ந்தேன். அதுகுறித்த என் புரிதலும் சற்று தெளிவற்றதாகவே இருந்தது. மூத்த ஆய்வாளர் ஆ.சிவசுப்பிரமணியன் அவர்களிடம் வாசிப்புக்கு ஏற்ற நூல் ஒன்றைப் பரிந்துரைக்குமாறு கேட்டபோது, அவர் இந்நூலை வாசிக்குமாறு வழிகாட்டினார். அவருக்கு என் நன்றி!

“வேலூர்ப் புரட்சியைத் தலைமையேற்று நடத்தியதற்காக மரண தண்டனை பெற்ற சுபேதார்கள் ஷேக் ஆடம், ஷேக் ஹுசைன், ஜமேதார் ஷேக் காசிம், நாயக் ஷேக் மீரான், லேன்ஸ் நாயக் அப்துல் காதர், பெயர் குறிப்பிடப்படாத 19 தியாகிகள், பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள், வெளியிலிருந்து புரட்சிக்கான உந்துதலைக் கொடுத்த காளன், கிளர்ச்சிக்கு மன்னிப்புக் கேட்க மறுத்து பணியைத் துறந்த அனந்தராமன் முதலான எண்ணற்ற போராளிகளுக்கு இந்நூல் காணிக்கை”, என்ற முதல் பக்கம் முதல், பின் இணைப்பிலுள்ள வேலூர்க் கோட்டையின் படங்கள் வரை பக்கத்துக்கு பக்கம் ஆதாரங்கள், அதன் மூலம் கருத்தை நிறுவுதல் என விறுவிறுப்பாகச் செல்லும் ஆய்வு நூல் இது.

ஆய்வு நூல் என்பதால் அடிக்குறிப்புகளுடன் தெளிவாக இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் சென்னை அரசு ஆவணக் காப்பகங்களிலிருந்து தரவுகள், நூல்கள், ஆய்வுக்கட்டுரைகளை பயன்படுத்தி இந்நூல் செழுமையாக்கப்பட்டுள்ளது. 1806ம் ஆண்டு நடந்த சிப்பாய்ப் புரட்சியை இன்னமும் ‘1806 சிப்பாய்க் கலகம்’ என்றே நம் பிள்ளைகள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். எழுச்சி, புரட்சி என எப்படி வேண்டுமானாலும் அவரவர் பார்வைக்கொப்பப் பார்க்கப்படும் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வை, சம நிலையில் நின்று நோக்கி, ஆய்ந்து இந்நூல் எழுதப்பட்டுள்ளது. நூலில் எங்கும் காலனியாதிக்கப் பார்வை இல்லாமல் கவனமாக ஆசிரியர் கையாண்டிருக்கிறார்.

ஆங்கிலேயர் எழுதிவைத்த தரவுகளை அப்படியே எடுத்தாள்வதில் உள்ள சிக்கலை நூல் முழுக்க அங்கங்கே ஆசிரியர் தொட்டுச் செல்கிறார், அழகாகச் சுட்டிக்காட்டுகிறார். முழுக்க ஆங்கிலேயரின் தரவுகளைக் கொண்டு பயணிக்கும் நூலில், இந்தியப் பார்வையுடன் அயலார் தரவுகளை அணுகுவது எப்படி என்பதை ஆசிரியர் கையாளும் விதமே, நம்மை நூலுடன் பிணைத்துவிடுகிறது.

இதற்கு சான்றாக, அறிமுக உரையில், “மாயா குப்தா ஏகாதிபத்தியத்தியவாதிகளின் வாதத்தை உள்வாங்கி, இந்தியச் சிப்பாய்களின் பணதாசை அவர்களது உன்னதமான லட்சியத்தை மறைத்தபோது அவர்களது தலைவர்களால் அவர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்கிறார். கிளர்ச்சியாளர்கள் நிலைமை தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக உணரும்போதே கொள்ளையில் ஈடுபடுகின்றனர் என்பதௌ அவர் நினைவில் கொள்ளவில்லை”, என தெளிவாக எழுதுகிறார்.

அங்கிருந்து தொடங்கும் நம் வாசிப்பு, வீரர்களுக்கு சரியான ஊதியம் தரப்படாமை, இந்தியர்களான ராணுவ உயர் அதிகாரிகள் அதிகார மட்டத்திலிருந்து 1791ல் கார்ன் வாலிஸால் தூக்கியெறியப்பட்ட விதம், திப்புவின் வீழ்ச்சிக்குப் பிறகு இஸ்லாமியரை அச்ச உணர்வுடன் பார்த்த ஏகாதிபத்தியம், புரட்சியில் காளன் உள்ளிட்ட பறையர்களின் பங்கு, நிலவுடமை சமூகத்தை கலைத்துப்போட்ட ஆங்கிலேயரின் வரிவிதிப்புத் திட்டம், வேளாண்மை பொய்ப்பு, சிறு மன்னர்களின் மறைமுக எதிர்ப்பு என பல காரணிகளை ஆசிரியரின் பார்வையில் அலசிச்செல்கிறது.

படைகளின் கீழ்நிலையில் வைக்கப்பட்ட வீரர்கள், மாதக்கணக்கில் ஊதியமின்றி பணி செய்யக் கட்டாயப்படுத்தப்பட்டது, அவர்களது மனைவி மக்கள் பிச்சையெடுத்து வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டது போன்ற காரணிகளை முதன்மையாகக் கொள்ளாமல், ‘தொப்பியில் இருந்த தோல், கிளர்ச்சிக்கு வித்திட்டது’ என ஆங்கிலேய வரலாற்றாளர்களால் முன்வைக்கப்பட்ட வெற்று வாதத்தை, இந்த நூல் அடித்து நொறுக்குகிறது. ஆனால் புரட்சிக்கான உடனடி காரணி என 13 மார்ச் 1806 அன்று வெளியிடப்பட்ட ஆணையைத் தெளிவாக ஆசிரியர் சுட்டுகிறார்.

“இந்திய வீரன் ஒருவன் சீருடையில் இருக்கும்போது தனது சாதிக் குறிகளை முகத்தில் வெளிப்படுத்தக் கூடாது, காதணி அணியக்கூடாது…பணியில் இருக்கும்போதும் அணிவகுப்பின்போதும் முகத்தைச் சுத்தமாக வழித்திருக்க வேண்டும்…” என ஆணையைச் சுட்டுபவர், இந்த வரைமுறைகள் தங்களை கிறிஸ்தவர்களாக மாற்ற ஆங்கிலேயர் செய்யும் சூழ்ச்சி என பாளையங்கோட்டையிலிருந்து வந்த படைப்பிரிவினர் நம்பக் காரணமாயிற்று எனும் கருத்தை முன்வைக்கிறார். அதற்கு முன்பாக 1803ம் ஆண்டு பாளையங்கோட்டையில் நடந்த மதமாற்றத்தை நேரில் கண்டிருந்த வீரர்கள் அச்சம் கொண்டது ஏன் என நம்மால் உணர முடிகிறது.

நூல் செய்திருக்கும் இன்னொரு முக்கியப் பணி, அவ்வமயம் இங்கிருந்த சாதிய, மதப் பிரிவினையை தெளிவாக விளக்கியிருப்பதே. இந்தக் கிளர்ச்சியை முன்னெடுத்த காளன் என்ற பறையரை கவனப்படுத்துவதும், புரட்சியின் பலனாய் இஸ்லாமியரே அதிகம் மரண தண்டனை பெற்றனர் என்பதும் நுணுக்கமாக ஆராயப்பட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

‘பறையர்களுடன் பள்ளர்கள் சேர்ந்து பல தலித் மக்கள் அதிக அளவில் வேலூர்க் கிளர்ச்சியில் பங்கெடுத்துள்ளனர்’ எனப் பதிவு செய்யும் ஆசிரியர், படைகளில் ‘சைவ பாரம்பரிய நில உடைமையாளர்களான வேளாளர்களும் பலிஜா நாயுடுகளும் கலந்திருப்பது தமிழகப் பகுதிகளில் கடுமையாக விவசாயம் பாதிக்கப்பட்டிருந்ததையும் அதனால் அச்சமூக மக்கள் ராணுவத்தில் பணிபுரிய கட்டாயப்படுத்தப்பட்டிருக்கின்றனர் என்பதையும் நாம் புரிந்துகொள்ளலாம்’ என்கிறார். ‘கள்ளர் மறவர் எண்ணிக்கையைக் காட்டிலும் விவசாயத்துக்குச் சென்றிருந்த அகமுடையார் அதிக எண்ணிக்கையிலிருப்பது வேளாண் குடியினரின் துயரை உறுதிப்படுத்துவதாக உள்ளது’, என்றும் பதிவு செய்கிறார்.

கிளர்ச்சிக்குப் பின் நடந்த விசாரணையில் பங்கேற்ற ‘பறையர் குடியிருப்பில் வசித்துவிட்டுப் பின் கோட்டைக்குள் குடிபுகுந்த தமிழ் தெரிந்த ஐரோப்பியப் பெண்’ ஒருவரின் சாட்சியம் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. இவரே பறையரின் பங்கு குறித்து ஒளிபாய்ச்சுபவர். திருமதி பர்க் என்ற அந்தப் பெண், அதிருப்தியுற்றிருந்த பறையர் மக்கள் ‘பீச் கமிட்டி’ என்ற பெயரில் ஒருங்கிணைந்து காலைமுதல் இரவு வரை கூட்டங்கள் நடத்தியதையும், தங்கள் சுண்டு விரல்களை இணைத்து, நாம் அனைவரும்  ஒன்றென ஒருவருக்கொருவர் சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்டதாகவும் சொல்லியிருக்கிறார்.

வயதான, முடமாகியிருந்த பறையர் சாதியைச் சேர்ந்த காளன் என்ற துப்பாக்கி வீரர் சதிகாரர்களில் முக்கியமானவர் என பர்க்கால் அடையாளம் காட்டப்பட்டார். பர்க்கின் மகன் முன்னிலையில், தன்னை கிராமத்தின் தலைவன் என சொல்லும் காளன், வெகுவிரைவில் இந்நாட்டில் ஒரு ஐரோப்பியர்கூட இல்லாதவாறு பார்த்துக் கொள்ளப் போவதாகத் தன்னிடம் சொன்னதை அந்தப் பெண் குறிப்பிட்டார் என ஆசிரியர் மேற்கோள் காட்டுகிறார்.

காளன் குறித்து அந்தப் பகுதியில் ஏதேனும் நாட்டார் பாடலாகவாவது தரவு கிடைக்கும் என எண்ணுகிறேன். அந்தப் பகுதியை ஆய்வு செய்பவர்கள் முயன்றால், கட்டாயம் ஏதேனும் வாய்மொழி வரலாறு, கர்ண பரம்பரைக் கதை கிடைக்க வாய்ப்புண்டு. கொல்லப்பட்ட, கைதுசெய்யப்பட்ட வீரர் பட்டியலில் அதிக அளவில் ஒரு தலைமுறைக்கு முன்னர் கிறிஸ்தவத்தைத் தழுவிய பறையரின் பெயர்கள் இருக்கின்றன என சுட்டும் ஆசிரியர், மதம் மாறிய இந்துக்களை ஐரோப்பியர் மதிப்பதில்லை என்பதை வலியுறுத்துகிறார்.

இதில் ஆங்கிலேய அரசுக்குத் ரகசியத் தகவல் திரட்டப்பட்டபோது, புதிய தலைப்பாகை சாதிய உணர்வுடன் அணிய மறுக்கப்பட்டது என்றும் பறை அடிக்கும் பறையர் அணியும் தொப்பிபோல இருந்ததால் மற்ற சாதியினர் இதைக் கடுமையாக எதிர்த்தனர் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆசிரியரின் பார்வை ஆங்கிலேயர் பார்வையிலிருந்து எப்படி மாறியிருக்கிறது எனப் புரிந்துகொள்ள இந்த ஒரு எடுத்துக்காட்டு போதுமானது!

புரட்சி ஒரே நாளில் ஏற்பட்டுவிடவில்லை என்பதை படிப்படியாக ஆதாரங்கள் மூலம்  ஆசிரியர் நிறுவுகிறார். கூடவே முஸ்தபா பேக் என்பவர் ஆங்கிலேயருக்கு எழுச்சி குறித்த தகவல் தரமுயன்று தோற்றதையும் வெளிப்படுத்துகிறார். எழுச்சியை ஆங்கிலேயர் எதிர்பார்க்கவில்லை என்பது அவர்களது மேட்டிமைத்தனமான போக்கில் வெளிப்படுகிறது. ஏற்கனவே ஃபேன்கோர்ட்டின் மனைவி எழுதிய குறிப்புகளை வாசித்திருந்தேன் என்பதால், ஆசிரியர் குறிப்பிடுவதைத் தெளிவாக விளங்கிக்கொள்ள முடிந்தது.

புரட்சியின் போது ‘காகிதப் புலியான’ திப்புவின் மகன் இளைஞன் மொய்சுதீனை எப்படி ஆங்கிலேயர்கள் குறைகண்டுபிடித்து பலிகடா ஆக்கிக்கொண்டிருந்தனர் எனச் சொல்லும்போது, அதை சமகால இந்தியாவுடன் ஒப்பிட்டு சிரித்துக்கொள்ளத்தான் என்னால் முடிகிறது. ஃபக்கீர்களின் எண்ணிக்கை அதிகரித்ததை எழுச்சிக்குப் பின் ஆங்கிலேயர் ஆய்வுசெய்யும் பகுதியும் ஒப்பிட்டு சிரிக்கக்கூடியதே. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் போலத்தான் இஸ்லாமிய வெறுப்பை ஆங்கிலேயர் கொண்டிருந்தனர் எனத்தெரிகிறது.

தங்கள் உயிர்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மொய்சுதீன், மொய்னுதீன் இருவரையும் இந்திய வீரர்கள் பலிகொடுக்கும்போது அதை நம்மால் விளங்கிக்கொள்ள முடிகிறது. ஒருவேளை திப்புவின் குடும்பம் ஜூலை 10 அன்று சற்றுத் தீவிரம் காட்டி வீரர்களுடன் நின்றிருந்தால், புரட்சி இன்னும் அதிக வலுப்பெற்றிருக்கும் என்ற தெளிவான சித்திரத்தை ஆசிரியர் தீட்டுகிறார். ஒரு குதிரை மேல் ஏறவேண்டும் என்பதற்காக வேண்டுகோள் கடிதங்கள் எழுதி, மறுப்பை சந்தித்திருந்த மொய்சுதீன் அவர்களை முன்னெடுத்துச் செல்ல கட்டாயம் முயன்றிருக்கமாட்டார் என்பது தெளிவு.

பல ஆங்கிலேய அதிகாரிகள் முஸ்லிம்களும், உயர்சாதி இந்துக்களும் நடத்தியதே வேலூர்ப் புரட்சி என்றும், ஒடுக்கப்பட்ட சாதியினர் அதில் பங்கேற்கவில்லை என ‘நிறுவியதன்’ விளைவு, ஒடுக்கப்பட்ட சாதி வீரர்களின் ஆதரவு கிளர்ச்சிக்கு இல்லை என கம்பெனி அரசு நிலைப்பாடு எடுக்கக் காரணமாக அமைந்தது எனவும் ஆசிரியர் சொல்கிறார்.

கிளர்ச்சியில் ஈடுபட்ட 23ம் படையின் 2ம் பிரிவிலிருந்தவர்கள் அனைவரும் தென் தமிழகத்திலிருந்து ராணுவத்தில் சேர்க்கப்பட்டவர்கள் என்பதால், இந்த ‘சதியில்’ மருது பாண்டியரின் கை இருந்ததாக அக்னீவ் என்ற அதிகாரி சந்தேகித்ததை ஆசிரியர் குறிப்பிடுகிறார். தென் தமிழகத்துக்கு இந்த எழுச்சியில் இருந்த பங்கும் இவ்வாறு புலப்படுகிறது.

பெரும்பாலான வரலாற்றாளர்கள் 1806 சிப்பாய் எழுச்சியை 1857ம் ஆண்டுப் புரட்சியுடன் ஒப்பிட்டு, இதை குறிப்பிடத் தகுந்ததில்லை என மறுக்கும் பாங்கைக் கண்டதுண்டு. அதற்குக் காரணியாக, 1857ம் ஆண்டு நடந்த எழுச்சி மத்திய, வட இந்தியா முழுக்கப் பரவியது என்ற காரணம் முன்வைக்கப்படுகிறது. இந்நூலில் அந்தப் பொதுமையையும் ஆசிரியர் உடைத்திருக்கிறார். வாலாஜாபாத், ஐதராபாத், நந்திதுர்க்கம், சங்கரிதுர்க்கம், பெங்களூர், பெல்லாரி, பாளையங்கோட்டை ஆகிய இடங்களில் இதன் எதிரொலி கடுமையாகவே இருந்தது என்பதை ஆய்ந்து பதிவு செய்திருக்கிறார்.

போலவே ஜான் கேயை மேற்கோள் காட்டும் ஆசிரியர், ஆங்கிலேயப் பெண்களும் குழந்தைகளும் படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதெல்லாம் புனைவு, கட்டுக்கதை என்பதைத் தெளிவாக்குகிறார். கிளர்ச்சிக்காரர்கள் பெண்களை, குழந்தைகளை எதுவும் செய்யவில்லை என ஃபான்கோர்ட்டின் மனைவியே தன் கையால் தெளிவுற எழுதியிருப்பது, இதற்குக் கூடுதல் வலுசேர்க்கிறது. 800 பேருக்கும் மேலாக கிளர்ச்சியில் கொல்லப்பட்டார்கள் என்பதை ஆர்தர் காக்ஸ் வாயிலாகத் தெளிவுபடுத்தும் ஆசிரியர், சுற்றிவளைத்து கிளர்ச்சிக்காரர்கள் எப்படி சுடப்பட்டார்கள் என விவரிக்கிறார். வாசிக்கும் நமக்கு மனம் கனக்கிறது. கூடவே 1857ம் ஆண்டு நடந்த கிளர்ச்சியில் தென்னிந்தியா, குறிப்பாக தமிழகம் பெருமளவில் பங்கேற்காததற்கு பீரங்கி வாயிலிருந்து சுடப்பட்டு உடல் சிதறி இறந்துபோனவர்களின் ரத்தம், அது தந்த அச்சவுணர்வு காரணமென மிகச்சரியாக சுட்டுகிறார்.

இந்த சிக்கலான சூழலை சமாளிக்க, எப்படி வெல்சு உள்ளிட்ட அதிகாரிகள் மத அடிப்படைவாதம் கொண்டு முஸ்லிம் சிப்பாய்களைத் தனிமைப்படுத்த விரும்பினர் என்பதையும் மேற்கோள் காட்டுகிறார். வரலாறு எழுதப்படும்போது ஆதிக்கநாட்டு அறிஞர்கள் எப்படி ‘வார்த்தை விளையாட்டு’ விளையாடுகிறார்கள் எனவும் ஆசிரியர் தெளிவாகக் காட்டுகிறார். மருத்துவமனையில் தஞ்சம் புகுந்திருந்த ஆங்கிலேயரை கிளர்ச்சிக்காரர்கள் கொன்றனர் என சொல்லப்படும் தகவலைக் கொண்டு, ‘நோயாளிகளைக் கூட விடவில்லை’ என்ற கருத்து ஆங்கிலேயரிடம் பரவியிருந்தது. ‘தஞ்சம் புகுந்த’…’நோயாளிகள்’ அல்ல என்பதை ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

பொது எதிரியான ஆங்கிலேயர் ஆதிக்கத்துக்கு எதிராக இந்திய வீரர்கள் ஒன்றுபட்டதே வேலூர்ப் புரட்சி; வீரர்கள் உணர்ச்சிவசப்பட்டுச் செயலில் இறங்கவில்லை. ஏகாதிபத்தியக் கொள்கையை வெறுத்து, மத, சாதித் தடைகளை மீறி ஆங்கிலேயர் ஆட்சியைத் தூக்கியெறியத் திட்டமிட்டனர் என ஆசிரியர் அழுத்தந்திருத்தமாக தன் முடிவை முன்வைக்கிறார்.

இந்த வரலாறை, சாதி, மதம் தாண்டி ஏகாதிபத்தியத்தை எதிர்த்த கிளர்ச்சிக் குரல்களை, நம் தலைமுறை வரை கொண்டு வந்து சேர்க்காததன் காரணமே இன்று இந்த அளவுக்கு அழுகிப்போயிருக்கும் சாதி, மத அழுக்கு மண்டியிருக்கும் சமூகத்தில் ஏகாதிபத்தியம் நம் குரல்வளைகளை நசுக்கும் சூழலுக்கு நாம் தள்ளப்பட்டிருப்பதன் காரணமென நான் நினைக்கிறேன். இதுவே சொல்லப்படவேண்டிய வரலாறு.

குறைந்தபட்சம் வரலாற்றாசிரியர்களாவது இந்த நூலை வாசித்து, குழந்தைகளுக்கு வேலூர்ப் புரட்சியை அறிமுகம் செய்துவைப்பார்களென நம்புகிறேன். வரலாறை மீட்டுருவாக்கம் செய்திருக்கும் மிகமுக்கியப் பணியை செவ்வனே செய்து முடித்திருக்கும் நூலாசிரியர் மணிக்குமாருக்கு அன்பும், வாழ்த்துகளும்.

நூலறிமுகம் வாசிக்க:

கட்டுரையாளர்:

நிவேதிதா லூயிஸ்

எழுத்தாளர், வரலாற்றாளர்.