உணவு, உடை, உறைவிடம் ஆகிய மூன்று அத்தியாவசியத் தேவைகளில், உடைகளை உற்பத்தி செய்யும் துறையின்மூலம்தான் மிக அதிகமான சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. விவசாயத்தில், குறிப்பாக நவீனமயமான தொழில்சார் விவசாயத்தில் (Industrialised agriculture) உள்ள சில வழிமுறைகளால் சூழலுக்குப் பாதிப்பு உண்டு என்றாலும் ஆடை உற்பத்தித் துறையோடு ஒப்பிடும்போது அது ஒன்றுமே இல்லை எனலாம். தவிர, உணவுப் பாதுகாப்பு, தன்னிறைவு, அனைவருக்குமான ஊட்டச்சத்து ஆகியவை பற்றியெல்லாம் விவாதங்கள் நடந்துவரும் சூழலில், சூழலைப் பாதிக்காமல் தேவைப்படும் உற்பத்தியை எப்படித் தக்க வைப்பது என்றுதான் பேசவேண்டும். ஆனால், ஆடை அப்படியல்ல. ஏனென்றால் அது அத்தியாவசியம் என்ற ஓர் இடத்திலிருந்து என்றோ நகர்ந்துவிட்டது.

ஆடை உற்பத்தியால் சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள், அதில் பெண்களின் பங்களிப்பு எப்படிப்பட்டது, பெண்கள் இதனால் பாதிக்கப்படுகிறார்களா என்பதையெல்லாம் விரிவாகப் பேசவேண்டும். அதில் வெவ்வேறு கோணங்கள் உண்டு. எந்தப் பக்கத்திலிருந்து பார்க்கிறோம் என்பதைப் பொறுத்து எல்லாமே மாறும். பல வண்ண நூல்கள் நிறைந்த இந்தச் சிக்கலான நூல்கண்டை மெதுவாகப் பிரிக்க முயற்சி செய்யலாம்.

முதலில் மேலை நாடுகளின் நிலை என்ன என்பதைத் தெரிந்துகொள்வோம். 1990கள் வரை, வசந்தகாலம், இலையுதிர் காலத்தின் தொடக்கத்தில் புதிய ஆடை வடிவமைப்புகளை ஃபேஷன் ஷோ மூலம் அறிமுகப்படுத்தும் வழக்கம் இருந்தது. ஆக, ஓர் ஆண்டுக்கு இரு முறை புதிய ஆடைகள் வரும், ஓரளவு பணம் படைத்தவர்கள் பழைய சீசனின் ஆடைகளைக் கைவிட்டுவிட்டுப் புதிய சீசனுக்கான ஆடைகளை வாங்குவார்கள். தொண்ணூறுகளின் பிற்பகுதியில் சாரா போன்ற முக்கியமான ஆடை நிறுவனங்கள், ‘மைக்ரோ சீசன்’ என்ற புது வழக்கத்தை அறிமுகப்படுத்தின. இதன்படி, ஒவ்வொரு வாரமும் ஒரு நுண் காலமாகக் கருதப்பட்டு, வாரத்துக்கு ஒரு புதிய ஆடை முறை அறிமுகப்படுத்தப்பட்டது! மக்களை அதிகமான ஆடைகள் வாங்க வைப்பதற்காக அவர்கள் செய்த தந்திரம் இது. இதனால் மக்கள் அதிகமான ஆடைகளை வாங்கத் தொடங்கினார்கள்.

இது நடந்துகொண்டிருக்கும்போதே இன்னொருபுறம் Fast Fashion என்ற ஒரு விஷயமும் உருவானது. அதாவது, மிகப்பெரிய ஆடை வடிவமைப்பாளர்களின் டிசைன்களை எல்லாராலும் வாங்க முடியாது, ஆகவே அவற்றை அப்படியே பிரதி எடுப்பதாகவோ சிறிய மாற்றங்களுடனோ சில வடிவமைப்புகளை உருவாக்கி, எல்லா அளவுகளிலும் பெரிய அளவில் உற்பத்தி செய்வதுதான் Fast Fashion. ஐரோப்பாவில் சில கடைகள் ஆரம்பித்து வைத்த இந்த வழக்கம் எல்லா மேலை நாடுகளிலும் பரவியது. குறிப்பட்ட அளவு பணம் இருந்தால்தான் ஃபேஷன் நிறைந்த ஆடைகளை அணிய முடியும் என்ற நிலை மாறியது. முக்கியமான ஆடை நிறுவனங்கள் அனைத்துமே இந்தப் புதிய நடைமுறையில் தங்களை இணைத்துக்கொண்டன. குறைவான விலைக்கே நவீன ஆடைகள் கிடைக்கத் தொடங்கின. விழாக்காலங்களின்போது மட்டுமே ஆடைகள் வாங்குவது என்ற நிலை மெதுவாக மாறியது.

இந்த இரண்டு போக்குகளாலும் ஆடைகள் மீதான நுகர்வு பல மடங்கு அதிகரிக்கவே, பயன்படுத்திவிட்டுத் தூக்கி வீசும் பொருள்களாக ஆடைகள் மாறின. இப்போதைய நிலவரப்படி, ஓர் ஆண்டுக்கு சராசரியாக 530 லட்சம் டன் ஆடைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன, இவற்றில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்ட ஆடைகள், சிறிது காலம் கழித்து குப்பைத்தொட்டிக்கு வந்துவிடுகின்றனவாம். ஒட்டுமொத்த ஆடை உற்பத்தியில் 1%க்கும் குறைவான ஆடைகளே மறுசுழற்சிக்குச் செல்கின்றன. ஆடை உற்பத்தி நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கும் அதே நேரம், குப்பை மேடுகளுக்கு வந்து சேரும் ஆடைகளும் அதிகரிக்கின்றன. பல ஆடைகள் பத்து முறைகூட அணியப்படுவதில்லை. 20 ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தோடு ஒப்பிடும்போது ஆடை உற்பத்தி 4 மடங்கு அதிகரித்திருக்கிறது. ஆடைகளைப் பொறுத்தவரை ஒட்டுமொத்த நுகர்வு 60% அதிகரித்திருக்கிறது. ஓர் ஆடையை வாங்கிவிட்டால் அதைப் பயன்படுத்தும் காலம் பாதியாகக் குறைந்திருக்கிறது.

மலை மலையாக ஆடைகள் குவிந்து கிடக்கும் குப்பை மேடுகளில், பழைய ஆடைகளிலிருந்து வரும் வேதிப்பொருள்கள் பெரிய அச்சுறுத்தலாக இருக்கின்றன. இவை நிலத்தடி நீர், காற்று ஆகியவற்றை மாசுபடுத்துகின்றன, தூய்மைப் பணியாளர்களின் ஆரோக்கியத்தையும் பாதிக்கின்றன. சில நேரம் இந்த ஆடைகள் எரிக்கப்படுவதும் உண்டு, அது காற்று மாசுபாட்டை ஏற்படுத்துகிறது. செயற்கை இழை ஆடைகளிலிருந்து வரும் ஞெகிழி இழைகள் கடல்நீரில்கூடக் கண்டறியப்பட்டிருக்கின்றனவாம்.

இன்னொருபுறம், இந்தத் துரித ஃபேஷனுடைய உற்பத்தி செயல்பாடுகள் முற்றிலுமாக லாபத்தைக் குறிவைத்து வடிவமைக்கப்பட்டிருக்கின்றன என்பதால், அந்தச் செயல்முறையே சூழ லைப் பாதிப்பதாக இருக்கிறது.

உதாரணமாக, ஓர் ஆடை உற்பத்தியில் தேவைப்படும் நீரின் அளவை எடுத்துக்கொள்வோம். ஒரு பொருளை உற்பத்தி செய்யும் செயல்முறையின்போது செலவழியும் நீரை மறைநீர் (Virtual water) என்பார்கள். ஒரு சாதா வெள்ளை நிறப் பருத்தி டீஷர்ட்டை உற்பத்தி செய்ய 2494 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது! ஒரு ஜீன்ஸ் பேண்ட்டை உருவாக்க 8000 முதல் 20,000 லிட்டர் வரை தண்ணீர் தேவைப்படுகிறது! இவை சாயமேற்றாத உடைகளுக்கான கணக்குகள் மட்டுமே, அதே டீஷர்ட்டில் வண்ணம் வேண்டுமென்றால் கூடுதல் நீரைச் செலவழிக்க வேண்டும். இப்போதைக்கு ஆண்களின் மேலை நாட்டு உடைகளுக்கான மறைநீர் அளவுகளைத்தான் வெளியிட்டிருக்கிறார்கள். பெண்களின் ஆடைகள், வெவ்வேறு நாடுகளின் மரபுசார் ஆடைகள் ஆகியவற்றுக்கான மறைநீர் ஆராய்ச்சி நடந்துகொண்டிருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது, அது உண்மையா என்று தெரியவில்லை.

மறைநீர் என்று வரும்போது ரேயான், நைலான் போன்ற செயற்கை இழைகளின் நீர்த் தேவை கொஞ்சம் பரவாயில்லை, ஆனால், அவற்றின் உற்பத்தி முறையே நுண் மாசுகளை ஏற்படுத்துவதாக இருக்கிறது. ஆகவே அதைக் கணக்கில் எடுத்துக்கொண்டால் மறைநீர் குறைவு என்ற நல்ல அம்சம் மங்கிப்போய்விடும். எப்படிப் பார்த்தாலும் பாதிப்புதான்.

உலக அளவில் ஆடை உற்பத்தித் துறை மட்டுமே ஆண்டுக்கு 79 பில்லியன் கன மீட்டர் அளவு நன்னீரைப் பயன்படுத்துகிறது என்கிறது 2017ல் வந்த ஓர் ஆய்வு. 2030ம் ஆண்டுக்குள் இந்த அளவு இரண்டு மடங்காக உயரும் என்றும் கணித்திருக்கிறார்கள். ஏற்கெனவே தண்ணீர்த் தட்டுப்பாட்டின் விளிம்பில் நின்றுகொண்டிருக்கும் பூமியை இது நிச்சயம் பாதிக்கும்.

இவற்றைத் தவிர, ஆடை உற்பத்தித் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவுகள், சாயப்பட்டறைக் கழிவு நீரால் மாசுபடும் நீர்நிலைகள் என, எந்த அம்சத்தை எடுத்துக்கொண்டாலும் அதில் சூழல் பாதிப்புகள் தென்படுகின்றன.

துரித ஃபேஷனை மையமாகக் கொண்ட ஆடை உற்பத்தித் துறை சுற்றுச்சூழலைப் பாதிக்கிறது என்று உறுதியாகத் தெரிந்துவிட்டது. இதில் பெண்களின் பங்களிப்பு என்ன? ஃபேஷன் உலகத்தைப் பற்றிய பேச்சு வரும்போதெல்லாம் அதில் பெண்களே மையமாக இருக்கிறார்கள், இது வெறும் கற்பிதமல்ல. ஆடைகளைப் பொறுத்தவரை நுகர்வோராக இருப்பது 70 முதல் 80% பெண்கள்தாம். ஆண்களுக்கான ஃபேஷன் உடைகளும் உருவாக்கப்படுகின்றன என்றாலும், வடிவமைப்பு முறைகள் தொடங்கி ஆடைகளை விற்பனை செய்யும் வணிக மையங்கள் வரை எல்லாமே பெண்களைத்தான் குறி வைக்கின்றன. சரியாக சொல்லப்போனால், பெண்களின் மனத்தில் இருக்கும் உணர்வுகளையே இவை குறி வைக்கின்றன. காலம் காலமாக ஒரு குறிப்பிட்ட புறத்தோற்றத்துடன் பெண் தன்னை முன்னிறுத்திக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தும் சமூகக் கட்டமைப்பை இவை எளிதாகக் கையில் எடுத்துக்கொள்கின்றன.

“பெண்களுக்குக் கிடைக்கும் சமூக, பொருளாதார, அரசியல் வாய்ப்புகளை அவர்களுடைய புறத்தோற்றத்துடன் மட்டுமே இணைத்து வைத்து ஒரு மாயத்தோற்றத்தை ஃபேஷன் துறை உருவாக்குகிறது” என்கிறார் பெண்ணியவாதி மின்ஹா ஃபாம். பெண்ணியம் பேசுபவர்கள் ஃபேஷன் துறையில் உள்ள சாதக பாதகங்களைப் பற்றியும் வெளிப்படையாகப் பேச வேண்டும் என்றும் அவர் வலியுறுத்துகிறார்.

பெண்களையே குறிவைத்து இயங்கும் ஃபேஷன் துறையில் பெரும்பாலான நுகர்வோர் பெண்களாகத்தான் இருக்கிறார்கள். ஆனால், இதை அப்படியே எடுத்துக்கொண்டு, துரித ஆடைகள் மூலம் ஏற்படும் எல்லாச் சூழலியல் பாதிப்புகளுக்கும் பெண்களே பொறுப்பு என்று சொல்லிவிட முடியுமா? பழி மொத்தத்தையும் பெண்கள் தலையில் போட்டுவிட முடியுமா? நிச்சயமாக இல்லை. ஒரு சராசரி நுகர்வோருக்கு எவ்வளவு பொறுப்பு தேவையோ, ஆடைகளை வாங்கும் பெண்களுக்கும் அவ்வளவு பொறுப்பு தேவை, அவ்வளவுதான். நவதாராளமய சமூகத்தில், ஒட்டுமொத்தமாக லாபத்தை மட்டுமே முன்வைக்கும் பொருளாதார முறையில் இருந்துகொண்டு தனியாக நுகர்வோரின் பழக்க வழக்கங்களை மட்டும் மாற்றிக்கொள்ளச் சொல்வது ஒரு ஏமாற்றுவேலை. சொல்லப்போனால், தங்களது பொறுப்பிலிருந்து நிறுவனங்கள் தப்பிக்கும் வேலை. பெண்களும் இதில் கவனம் செலுத்த வேண்டும் என்று வேண்டுமானால் சொல்லலாம், ஆனால் “நாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்வோம், சூழலைச் சிதைக்காமல் நுகர்வை மேற்கொள்வது உங்கள் கடமை” என்று நிறுவனங்கள் நழுவ முடியாது.

பாதி நூல்கண்டைத்தான் பிரித்திருக்கிறோம். இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இந்தத் துறை எப்படி இயங்குகிறது? இங்கு உள்ள பெண்கள் பங்குதாரர்களா, பாதிப்புக்கு உள்ளாகக்கூடியவர்களா? ஃபேஷன் என்பது சூழல் பெண்ணியத்தில் எப்படிப் பார்க்கப்படுகிறது? இதில் பெண்களின் பொறுப்பு எப்படிப்பட்டது என்பதை எல்லாம் அடுத்ததாக நாம் விவாதிக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தத் துறையில் பெண்களுக்கான இடம் பற்றிய ஒரு பெரிய கருதுகோளே இருக்கிறது. அது என்ன?

(தொடரும்)

படைப்பாளர்:

நாராயணி சுப்ரமணியன்

கடல் சார் ஆய்வாளர், சூழலியல் ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் என்ற பன்முக ஆளுமை இவர். தமிழ் இந்து உள்ளிட்ட முன்னணி இதழ்களில் சூழலியல், கடல் வாழ் உயிரினங்கள் குறித்து தொடர்ச்சியாக எழுதி வருபவர். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய ‘விலங்குகளும் பாலினமும்’ தொடர் புத்தகமாக வெளிவந்து, சூழலியலில் மிக முக்கியமான புத்தகமாகக் கொண்டாடப்படுகிறது!