ஓவியம் : சித்ரா ரங்கராஜன்

2010 ஆம் ஆண்டு சிறந்த படத்துக்கான அகாடமி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட ‘அவதார்’ திரைப்படத்தில் சொல்லப்பட்ட நாவிகளின் போராட்டக் கதை ஒரு கற்பனை கதையல்ல, அது நிஜம் என்கிறது டைம்ஸ் நாளிதழ்.

கிழக்கு இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள நியாம்கிரி மலைத்தொடரைத் தாயகமாகக் கொண்டுள்ள டோங்ரியா கோந்த் பழங்குடி வீர மங்கைகளின் நிஜ போராட்ட கதை.

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள நியாம்கிரி மலைப் பகுதியைச் சேர்ந்த டோங்ரியா கோந்த் என்று அழைக்கப்படும் பழங்குடி, பல்லாயிரம் ஆண்டுகளாக வற்றாத நீரோடைகள், அடர்ந்த காடுகள் நிறைந்த மலைகள், ஆழமான பள்ளத்தாக்குகள் மற்றும் பெரிய பலா மரங்களுடன் வாழ்ந்து வருகின்றனர். தங்களை ‘நீரோடைகளின் பாதுகாவலர்கள்’ என்று அழைத்துக் கொள்கிறார்கள் இவர்கள்.

ஒடிசாவின் 62 பழங்குடியினரில் டோங்ரியா கோந்த் எண்ணிக்கையில் மிகப்பெரியது. திராவிடப் பேச்சுவழக்கு எனக் கருதப்படும் கூவி என்கிற தனி மொழிக்காக இவர்கள் அறியப்படுகிறார்கள். அவர்கள் கொண்டாடும் மெரியா திருவிழா புகழ்பெற்றது.

தனித்துவமான நகைகள், பச்சைக் குத்தல்கள் மற்றும் சிகை அலங்காரங்களின் மூலம் டோங்கிரியா பெண்கள் தங்களை அலங்கரிக்கின்றனர். பெண்கள் காதுகளில் அதிகமான வளையங்கள் அணிகின்றனர். பெண்கள் மூக்கில் மூன்று வளையங்களை அணிகின்றனர். டோங்ரியா பெண்கள் தங்கள் தலைமுடியில் கிளிப்புகள் மற்றும் கழுத்தில் பெரிய வளையங்கள், மணிகளை அணிகிறார்கள்.

அவர்கள் இப்பகுதியின் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களைப் பற்றிய நெருக்கமான அறிவைக் கொண்ட இயற்கை ஆர்வலர்கள். அவர்களின் கலாச்சாரம், வாழ்க்கை முறை மற்றும் இயற்கையின் மீதான அவர்களின் அன்பு ஆகியவை டோங்ரியா கோந்த் பெண்கள் நெய்யும் சால்வைகளில் பிரதிபலிக்கின்றன. பொதுவாக பச்சை, சிவப்பு, மஞ்சள், பழுப்பு நிற நூல்கள் சால்வைகளில் பயன்படுத்தப்படுகின்றன. பச்சை நிறமானது பல்லுயிரியலைக் குறிக்கிறது, சிவப்பு அவர்களின் மத நம்பிக்கையையும், மஞ்சள் அமைதியையும், பழுப்பு டோங்கிரியாக்களுக்கு மிக முக்கியமான தெய்வமான தரணி பேனுவையும் குறிக்கிறது.

டோங்ரியா கோந்த் பழங்குடி மலைகளின் வளமான சரிவுகளில் விவசாயம் செய்து, அவற்றின் விளைச்சலை அறுவடை செய்கிறார்கள். நியம்கிரி மலையின் சரிவுகளைப் பயிரிடுவதற்கான உரிமையை நியம் ராஜா அவர்களுக்கு வழங்கியுள்ளார் என்றும், தாங்கள் அவருடைய அரசப் பரம்பரையினர் என்றும் அவர்கள் நம்புகிறார்கள். அவர்கள் தங்கள் காடுகள், அவர்கள் வைத்திருக்கும் தாவரங்கள், வனவிலங்குகள் பற்றிய அறிவைக் கொண்டுள்ளனர். காடுகளில் இருந்து காட்டு மா, அன்னாசி, பலா, தேன் போன்ற காட்டு உணவுகளைச் சேகரிக்கின்றனர். நியம்கிரி மலையில் அரிய மருத்துவ மூலிகைகளும் ஏராளமாகக் காணப்படுகின்றன. கீல்வாதம், வயிற்றுப்போக்கு, எலும்பு முறிவுகள், மலேரியா, பாம்புக் கடி உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்குச் சிகிச்சையளிக்க அந்த மூலிகைகள் பயன்படுகிறது. ஆரஞ்சு, வாழை, இஞ்சி, பப்பாளி, நறுமண பிசின் போன்ற பயிர்களை உற்பத்தி செய்து உள்ளூர் சந்தைகளில் விற்கப்படுகின்றன. டோங்ரியாக்கள் தங்கள் காடுகளில் இருந்து கிட்டத்தட்ட 200 வகையான உணவுகளைச் சேகரித்து நூற்றுக்கும் மேற்பட்ட பயிர்களைத் தங்கள் வயல்களில் அறுவடை செய்கின்றனர்.

இந்த அற்புதமான பன்முகத்தன்மை அவர்களை ஆண்டு முழுவதும் பராமரிக்கிறது. அவர்களின் மலைகளுக்கு அப்பாலிருந்து உணவு அல்லது பொருட்கள் அவர்களுக்கு தேவைப்பட்டதில்லை. பழங்குடியினர் கோழி, பன்றிகள், ஆடுகள், எருமைகளையும் வளர்த்து வருகின்றனர். டோங்ரியா ஆண்கள் காடுகளின் ராட்சதப் பனை மரங்களிலிருந்து சாறு சேகரிக்கிறார்கள், இந்தப் பனை சாறு நியம்கிரி மலைகள் முழுவதும் அவர்கள் செய்யும் நீண்ட நடைப்பயணங்களுக்கு உடல் வலிமை வழங்குகிறது. கிராமங்களிலும் மலை உச்சிகளிலும் அறுவடைக்குப் பிறகும், புத்தாண்டு பயிர் நடுவதற்கு முன்பும் பாரம்பரியமாக விலங்குகள் பலி கொடுக்கப்படுகின்றன. ஒவ்வொரு கிராமத்திலும் உள்ளூர்க் கடவுள்களை வணங்குவதற்கான புனித இடங்கள் உள்ளன. கோழிகள், ஆடுகள், பன்றிகள், எருமைகள் பலியிடப்படுகின்றன. டோங்ரியா கோந்த் மக்களுக்கு அரசியல், மதத் தலைவர்கள் இல்லை; குலங்கள், கிராமங்கள் தங்கள் சொந்த தலைவர்கள் மற்றும் குறிப்பிட்ட சடங்கு செயல்பாடுகளுடன் தனிநபர்களைக் கொண்டுள்ளனர். ஆண்கள், பெண்கள் பூசாரிகளாக இருக்கின்றனர்.

நியாம்கிரி மலைகள் பருவமழையில் நனைந்து, வம்சதாரா ஆறு உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட வற்றாத நீரோடைகள் ஆறுகளாக உருவாகின்றன. இந்த நீரோடைகள் மலைகளில் வாழும் சமூகங்களுக்கும் சமவெளிகளில் உள்ளவர்களுக்கும் முக்கியமான குடிநீர், பாசன நீரையும் வழங்குகின்றன. வம்சதாரா ஆறு ஒடிசா, ஆந்திரா மாநிலங்களில் உள்ள ஆயிரக் கணக்கான மக்களுக்கு குடிநீர், பாசன நீர் வழங்குகிறது. பல நூற்றாண்டுகளாக புலிகள், சிறுத்தைகள், ராட்சத அணில்கள், சோம்பல் கரடிகள் சுற்றித் திரியும் காடுகளின் வளமான பல்லுயிரியலைப் பராமரிக்க டோங்ரியா மக்கள் உதவியுள்ளனர். டோங்ரியாக்கள் தங்கள் கடவுள்கள், மலைகள் மற்றும் நீரோடைகள் மீது வைத்திருக்கும் ஆழ்ந்த மரியாதை அவர்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் பிரதிபலிக்கிறது. அவர்களின் கலை வடிவங்கள்கூட மலைகளைப் பிரதிபலிக்கின்றன, கிராமத்தின் கோயில்களில் காணப்படும் முக்கோண வடிவங்களில் கிராமம், பண்ணை, காடுகள் ஒத்திருக்கின்றன.

அவர்களின் இப்படிப்பட்ட உயிர்நாடியான நியம்கிரி டோங்கர் மலையில் பிரிட்டிஷ் சுரங்க நிறுவனமான வேதாந்தா ரிசோர்சஸ் திறந்த பாக்சைட் சுரங்கம் அமைக்க திட்டமிட்டது.

டோங்கிரியா பழங்குடியின் அனுமதியின்றி, அதன் நதிகளைச் சீர்குலைத்து, மலைகளின் மேற்பரப்பில் இருக்கும் மதிப்பிடப்பட்ட 2 டாலர் பில்லியன் மதிப்புள்ள பாக்சைட்டைப் பிரித்தெடுத்து, ஒரு திறந்தவெளி சுரங்கத்தை உருவாக்க வேதாந்தா நிறுவனம் திட்டமிட்டது.

சுரங்கத்திற்கு அனுமதி பெறுவதற்கு முன்பே, வேதாந்தா நிறுவனம் லான்ஜிகர் நகரில் ஒரு சுத்திகரிப்பு நிலையத்தை உருவாக்கியது, மேலும் மலைகளில் இருந்து பாக்சைட்டை சுத்திகரிப்பு நிலையத்திற்கு நேராகக் கொண்டு வரும் கன்வேயர் பெல்ட்டில் வேலை செய்யத் தொடங்கியது. காடுகளைப் பயன்படுத்தக் கூடாது என்கிற நிபந்தனையுடன் சுத்திகரிப்பு ஆலைக்கு அரசு ஒப்புதல் அளித்திருந்தது. சுத்திகரிப்பு நிலையம் கிராமத்தை முற்றிலுமாக அழித்தது, நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களை உள்ளூரில் ‘புனர்வாழ்வு குடியேற்றத்திற்கு’ இடம்பெயர்ந்தது.

அவர்களின் விவசாய நிலங்களைப் பறித்துக்கொண்டது. சுத்திகரிப்பு நிலையத்தின் மாசுபாடு காரணமாகத் தோல் பிரச்னைகள், கால்நடை நோய்கள் மற்றும் பயிர் சேதங்கள் உருவாகின. சுத்திகரிப்பு நிலையத்தின் முக்கியக் கழிவுப் பொருளான ‘சிவப்பு சேறு’ என்கிற ஒரு நச்சுக் குழம்பு வெயிலில் மெல்லிய தூசியாக காய்ந்து அபாயகரமாக மாறி நிலத்தடி நீரை மாசுபடுத்தியது மட்டுமல்லாமல் அதன் நச்சுக் கழிவுகள் வம்சதாரா ஆற்றிலும் கசிந்தன.

தங்களின் உயிருக்கும் மேலான நியாம்கிரியைப் பாதுகாக்க பத்து ஆண்டுகளுக்கு டோங்ரியா கோந்த் பெண்கள் டோங்ரியா ஆண்களுடன் தோளோடு தோள் நின்று போராடி வந்தனர். ஒரு முறை வேதாந்தாவின் புல்டோசர்கள் மலையை அழிக்காமல் தடுக்க மலையின் அடிவாரத்தைச் சுற்றி மனிதச் சங்கிலியை உருவாக்கினார்கள். 1,600 கிலோமீட்டர்களுக்கு மேல் டெல்லிக்குப் பயணம் செய்து, போராட்டத்தில் கைது செய்யப்பட்ட தங்கள் தலைவர்களை போலீசார் விடுவிக்க வேண்டும் என்று கோரியவர்கள் டோங்கிரியா இனப் பெண்கள்.

எங்கள் காடுகளை யாருக்கும் கொடுக்க மாட்டோம் என்று உலகத்திற்கு உரைத்தார்கள். இதற்காக இங்குள்ள பெண்கள் அனைவரும் சிறைக்குச் செல்லவும் தயாராக இருந்தார்கள். இவர்களின் கடினப் போராட்டத்திற்குப் பலனாக, வேதாந்தா நிறுவனம் சட்டத்தை மீறியதாகவும், டோங்ரியா கோண்டின் உரிமைகளைப் புறக்கணித்ததாகவும் ஓர் அறிக்கையுடன், சுரங்க மேம்பாடு 2010 இல் இந்திய அரசாங்கத்தால் நிறுத்தி வைக்கப்பட்டது. 2006 வன உரிமைச் சட்டம் கீழ் பழங்குடியினர், வனக் குழுக்களின் உரிமைகளுக்கு வழங்கப்படும் பாதுகாப்பைக் காரணம் காட்டி, உள்ளூர் பழங்குடியினரைக் கலந்தாலோசிக்க ஒடிசா அரசுக்கு இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 2014 இல் இந்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் சுரங்கத்திற்கான அனுமதியை மறுப்பதாக அறிவித்தது.

டோங்ரியா பழங்குடி பெண்கள் வேதாந்தாவுக்கு எதிராக உள்நாட்டிலும், தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அவர்கள் சாலைத் தடைகளை நடத்தினர். எக்காரணத்திற்கும் அவர்கள் போராட்டத்தைக் கைவிடவில்லை. அவர்களின் மன உறுதியும் விடாமுயற்சியும் அவர்களுக்கு சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்துள்ளதுடன், நாடு முழுவதும், உலகம் முழுவதும் உள்ள பழங்குடி மக்களைத் தங்கள் வனங்களைக் காக்க ஊக்கப்படுத்தியுள்ளது.

(தொடரும்)

படைப்பாளர்:

சித்ரா ரங்கராஜன்

Example Ad #2 (only visible for logged-in visitors)

கட்டிடக் கலை மற்றும் உட்புற வடிவமைப்பாளராக சென்னையில் தன் கணவருடன் நிறுவனத்தை நடத்திவருகிறார். ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதுவதை ஆர்வமாகக் கொண்டுள்ளவர். புத்தகங்களுக்குப் படங்கள் வரைவதிலும் நாட்டம் கொண்டவர். பெண்ணியச் சிந்தனையில் மிகுந்த ஆர்வமுள்ளவர். ஒருவரின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதில் ஓர் எழுத்தாளருக்கு முக்கியப் பங்குண்டு என்பது இவருடைய வலுவான கருத்து. ஹெர் ஸ்டோரிஸில் ‘மேதினியின் தேவதைகள்’ என்கிற தலைப்பில் தொடர் எழுதிக் கொண்டிருக்கிறார். இது இவருடைய இரண்டாவது தொடர்.