வருண் அன்று உறுதியாக இருந்தான். இனியும் பொறுத்துப் போவதில்லை. இந்தத் திருமண வாழ்வில் தனக்கான உரிமைகளை, தன் மகிழ்ச்சியைப் போராடியாவது நிலாவிடம் பெற்றுவிட வேண்டும் என்று காலை முதல் அதே சிந்தனையாக இருந்தான்.

‘சனிக்கிழமை நிலா நண்பர்களுடன் வெளியில் சென்றால் மதிய உணவுக்கு வந்துவிட வேண்டும். ஊர் சுற்றப் போனாலும் தான் போன் செய்தால் எடுத்துப் பேச வேண்டும், பல ஆண்டுகளாக அவன் போக ஆசைப்பட்டுக் கொண்டிருக்கும் கொடைக்கானலுக்கு இந்த ஆண்டாவது அவள் தன்னை அழைத்துப் போக வேண்டும். நிலாவின் பெற்றோர் இருக்கும்போது வேட்டிதான் கட்ட வேண்டும் என்று நிர்பந்திக்கக் கூடாது. இஷ்டப்படி ஷார்ட்ஸ் அணிய அனுமதிக்க வேண்டும்’ என்பது போன்ற கடுமையான விதிகளை நிலாவிடம் தலையணை மந்திரம் போட்டுச் சம்மதிக்க வைப்பதுதான் வருணின் போர்த் தந்திரம்.

காலையில் டீ போட்டு, இட்லி ஊற்றி, சட்னி செய்து, சாம்பார் வைத்து, பொரியல் செய்து, மாவை எடுத்து ஃப்ரிஜ்ஜில் வைத்து, இட்லி பாத்திரத்தை ஊற வைத்து, குழந்தைகளுக்கு ஸ்னாக்ஸ் வைத்து, லஞ்ச் கட்டி, சேஷாத்ரி மாலை லீவு சொல்லி இருந்ததால் பாத்திரங்களைக் கழுவி, கிச்சனைத் துடைத்துவிட்டு, அவசர அவசரமாகக் குளித்துக் கிளம்பி, மறக்காமல் போகும் வழியில் பெட்ரோல் போட்டு, பாங்கில் சென்று ஸ்கூல் ஃபீஸ் கட்டி, அலுவலகத்துக்குப் போய் வேலைகளில் மூழ்கினாலும் இடைவேளையில் இரவு நிலாவிடம் பேச வேண்டியதையே மனதுக்குள் ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தான். மன அழுத்தத்தில் தலை லேசாக வலிப்பது போல் இருந்தது.

“ஹேய் வருண்! யூ ஆர் லுக்கிங் க்ரேட். கமிங் ஃபார் அ டீ டேட்?” முகமெல்லாம் சிரிப்புடன் ஆதிரை அழைத்தபோது சட்டென்று மனதில் ஓர் உற்சாக ஊற்று எழுந்தது. வீட்டில் இருக்கும் வருண் வேறு, இங்கே அலுவலகத்தில் பிறர் கண்களுக்குத் தெரியும் வருண் வேறு என்பதை அவன் உணர்ந்தே இருந்தான். ஆனால், ஏனோ இந்த வருணுக்குக் கிடைக்கும் அங்கீகாரத்தில் ஒரு சுகமும் அதனை நீண்ட நேரம் தக்க வைத்துக்கொள்ளும் ஏக்கமும் ஒரு சேரப் பிறந்தன.

ஆதிரை கொஞ்சம் வழிகிற டைப்தான். அவளது பல பேச்சுகள் எரிச்சலை ஊட்டி இருக்கின்றன. ஆனால், உண்மையில் பித்துப்பிடிக்காமல் இருக்க வேண்டுமானால் சின்னச் சின்னக் கிறுக்குத்தனங்கள் அவசியம் என்று உணர்ந்தான் வருண். எப்போதும் போல் முகத்திலடித்த மாதிரி ஏதாவது நக்கலாகச் சொல்லிக் கட் செய்துவிடாமல், “வித் ப்லெஷர்” என்று வருண் எழுந்ததைப் புருவம் விரிய ரசித்தாள் ஆதிரை. அவளுடன் அரட்டையடித்து வந்த பிறகு சற்று ஆறுதலாகவே உணர்ந்தான் வருண்.

மாலை வீடு திரும்பி இரவு உணவு வேலைகளையும் குழந்தைகள் படிப்பையும் ஒன்றாகக் கவனித்து, மீண்டும் பாத்திரங்களைக் கழுவி எடுத்து, கிச்சனைத் துடைத்துவிட்டு மிஞ்சி இருந்த பாலை உறைக்கு ஊற்றலாம் என்று சுட வைக்க அடுப்பில் வைத்தான். அதற்குள் படுக்கை விரிப்புகள் மாற்றிப் பத்து நாளுக்கு மேல் ஆனது நினைவுக்கு வந்தவனாகப் படுக்கை அறைக்குச் சென்று அவற்றை இயந்திரகதியில் மாற்றி முடித்தான். அப்படியே சோர்வாகப் படுக்கையில் அசந்து விழுந்துவிட்டான்.

“ம்க்கும்” நிலாவின் லேசான செருமலில் விழிப்புத் தட்டியது.

“நிலா…”

“ஏன் வருண், உனக்கு இந்த வீட்டைப் பத்தி நினைப்பே இருக்காதா?”

“ம்… என்ன?” தூக்கக் கலக்கத்தில் அலங்க மலங்க விழித்தான் வருண்.

எதற்காக இப்படிச் சொல்கிறாள்? “நிலா நிலா… ஏன் இப்படிச் சொல்ற?”

நிலாவின் படு தீவிரமான முகம் வருணைச் சஞ்சலமாக்கியது. மாமனார் ஏதேனும் போட்டுக் கொடுத்திருப்பாரோ? என்னவாக இருக்கும் என்று பத்து நிமிடங்கள் கெஞ்சிய பிறகு நிலா பேசத் தொடங்கினாள்.

“நானும் பார்க்குறேன். இப்பல்லாம் நீ கவனமாவே இருக்குறதில்லை. இப்பப் பாரு பாலை அடுப்புல வெச்சிட்டு நீ பாட்டுக்கு வந்து தூங்கிட்டே. அது பொங்கி வழிஞ்சு…. தீயுற ஸ்மெல் வந்து நான் போய் நிறுத்துனேன்.”

“ஐயோ…”

“ஃபேனைப் போட்டு ஆஃப் பண்ணம வந்துடுற. அப்றம் நான் சொன்னப்புறம்தான் போய் ஆஃப் பண்ற.”

“சாரி நிலா…”

“குழந்தை கத்துறா, என்னான்னு கேளுன்னு நான் பத்து தடவை சொன்னப்புறம்தான் போய்ப் பாக்குற.”

“டோர் பெல் அடிக்குதுன்னு அஞ்சு தடவை சொன்னப்புறம்தான் போய்க் கதவைத் திறக்குற.”

“அது வந்து…”

“வெளில போய் வேலை பாக்குற ஆண்களுக்கு எத்தனையோ சலனங்கள் வரும். ஆனா, நீதான் கவனமா இருக்கணும்.”

“ஐயோ நிலா… அப்டிலாம் ஒண்ணுமில்ல.”

“இப்பதான் கிச்சன் சிங்க்கைப் பாக்குறேன். அவ்ளோ கறையா இருக்கு. சேஷாத்ரியும் நீயும் என்ன பண்றீங்களோ தெரியல. அவனுக்கு ஓவரா செல்லம் குடுத்து கெடுத்து வெச்சிருக்கே. நல்லா ஏமாத்துறான் உன்னை… எங்கே போற?”

“பால் வழிஞ்சிடுச்சுல்ல, கிச்சனைத் துடைச்சிட்டு வரேன் நிலா.”

அமைதியாக வருணைப் போக விட்டாள் நிலா.

கிச்சனுக்குப் போய்ப் பார்த்தால் பால் பாத்திரம் கழுவப்பட்டு அடுப்பும் துடைக்கப்பட்டு இருந்தது. அதற்கு விலையாகத்தான் அவ்வளவு லெக்சரா என்று ஒரு கணம் நினைத்தாலும் பூரித்துப் போனவனாகப் படுக்கையறைக்குத் திரும்பிய வருண் நிலாவைக் கட்டிக்கொண்டான்.

“தாங்க்யூ நிலா. ஐயம் சாரி. இனிமே கவனமா இருக்கேன்.”

“இட்ஸ் ஓகே டார்லிங். எல்லாம் உன் நல்லதுக்குத்தான் சொல்றேன்.”

நிலா கொடுத்த அதிர்ச்சி வைத்தியம் வருண் பேச நினைத்த தீர்மானங்களை எல்லாம் ஜன்னல் வழியே பறக்க வைத்திருந்தன.

அசதியும் அயர்ச்சியும் அடித்துப் போட பேசாமல் உறங்கத் தொடங்கினான் வருண்.

(ஆண்கள் நலம் தொடரும்)

படைப்பாளர்:

ஜெ.தீபலட்சுமி

பெண்ணிய செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான ஜெ.தீபலட்சுமி தொடர்ச்சியாக பெண்ணுரிமைக் குரலை எழுப்பி வருபவர். ‘இப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப்படுவதில்லை’ என்ற நூலை எழுதி இருக்கிறார். ஊடகங்களில் இவர் எழுதிய பெண்ணியக் கட்டுரைகள், ’குத்தமா சொல்லல, குணமாதான் சொல்றோம்’ என்கிற நூலாக ஹெர்ஸ்டோரீஸ் பதிப்பகத்தில் வெளிவந்திருக்கிறது. ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளிலும் சரளமாக எழுதியும், பேசியும் வருகிறார். எழுத்தாளர் ஜெயகாந்தனின் சிறுகதைகள் சிலவற்றைத் தொகுத்து ‘The Heroine and other stories’ என்ற நூலாக மொழிபெயர்த்திருக்கிறார்.