ஆகஸ்ட் மாதம், 2023

நவீன் அந்த ஆபிசில் சேர்ந்து ஏழு மாதங்கள் ஆகி இருந்தது. அவனது சிரிப்பு, பிரசென்டேஷன் செய்யும் விதம், ஆங்கிலப் புலமை என ஷாலினி அவனை நிறைய விஷயங்களில் ரசித்திருக்கிறாள்.

அந்த ரசனையே அவளையும் அறியாமல் அவன் மீது ஓர் ஈர்ப்பை உருவாக்கி இருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக அவன் ஷாலினியை மரியாதையாக நடத்தும் விதம், குறிப்பறிந்து பேசும் விதம், நகைச்சுவையாகப் பேசிச் சிரிக்க வைப்பது எல்லாம், தன்னைப் பற்றி அவன் அதிகமாக அறிந்து வைத்திருக்கிறான் என்கிற எண்ணத்தை அவளுக்குள் துளிர்விடச் செய்தது. அதுவே நட்பு என்கிற வட்டத்திற்குள் இட்டுச் சென்றது.

அவன் ஆபிசுக்கு வராத நாட்கள் எல்லாம் மெதுவாக நகர்ந்தன ஷாலினிக்கு. பக்கத்தில் இருக்கும் நாட்களில் புது தெம்பாக இருந்தது.

அன்று அருணிடம் வீட்டுக்குச் சீக்கிரம் வருவதாகச் சொல்லியிருந்தாள் ஷாலினி. மணி 6.30 ஆகியிருந்தது. ரிசல்ட் வரவில்லையே என நினைக்கையில் அவளையும் அறியாமல், நவீன் இருக்கும் பக்கம் பார்வை போனது.

மிகச் சரியாக நவீனும் திரும்பிப் பார்த்தான். எப்படிச் சரியாகத் திரும்பிப் பார்க்கிறான் என்று ஆச்சரியம் கலந்த சந்தோஷம் உள்ளூர எழுந்தது ஷாலினிக்கு.

“என்ன ஷாலினி ரிசல்ட் வரலையா?” என்றவாறே ஷாலினியின் கம்ப்யூட்டர் கீபோர்டை இன்னும் கொஞ்சம் வெளியே இழுத்தபடி கேட்டான்.

அவன் நின்ற விதம் ஏதோ ஒன்றை ஷாலினியிடம் சொல்வது போல இருந்தது. நவீனை உட்காரச் சொல்லி, சீட்டிலிருந்து எழுந்துகொள்ள யத்தனித்தாள் ஷாலினி.

அவளின் தோளை அழுத்தி உட்கார வைத்தான். சில நிமிடங்களில் தேவையான ரிசல்ட்டைப் பார்த்ததும், அப்பாடா என சந்தோஷப் பெருமூச்சுடன், வீட்டிற்குக் கிளம்பத் தயாரானாள்.

பஸ் ஸ்டாப்பை நோக்கி நடந்து கொண்டிருக்கையில், மனதிற்குள் நவீனைக் குறித்த எண்ணங்கள் எழுந்த வண்ணம் இருந்தன.

இப்போதெல்லாம் தொட்டுப் பேசுகிறான். சில நேரங்களில் பேசும் போது டீ போட்டு அழைக்கிறான். ஆனால், இவையெல்லாம் மொத்தமாகப் பிடிக்கவில்லை என்று சொல்ல முடியவில்லை. ஆனால், பிடித்திருக்கிறது என்றும் சொல்ல முடியவில்லை. இன்றும் உரசும் வண்ணம் நின்று கொண்டான். நேற்றும் எழுந்துகொள்ளும் போது இடிக்கும் விதமாக நின்றுகொண்டான். ஆனால், எல்லாம் கசப்பு மிகுந்த இனிப்பு போலவே இருக்கிறது. என்ன எதிர்பார்க்கிறான்? நான் அருணுடன் வாழ்ந்து கொண்டிருப்பது தெரியாதா? இல்லை, அவனுக்குக் கல்யாணம் ஆனது எனக்குத் தெரியாது என நினைக்கிறானா?

ஏற வேண்டிய பஸ் தன் முன்னால் நிற்பதைப் பார்த்து, உணர்வு மீண்டவளாக வேகமாக பஸ்சை நோக்கி நடந்தாள்.

அடுத்த நாள் இரவு 8 தாண்டியும் மீட்டிங் சென்று கொண்டிருந்தது.

‘எப்போ பஸ் பிடிச்சி, எப்படி வீடு போய்ச் சேர்கிறது’ என்றவாறே வாட்சைப் பார்த்தபடி நொந்துகொண்டாள்.

அருண் க்ரூப் 1இல் தேர்வாகி, வேலையில் இருந்தால், எனக்கு இப்படி வேலை செய்ய வேண்டிய அவசியமே இருக்காது. இந்த வேலையை எவ்வளவு எளிதாக உதறிவிட்டுச் சென்றிருப்பேன். இப்படி எல்லாம் வேலை பார்க்க வேண்டும் என்று எனக்குத் தலையெழுத்து இருந்திருக்காது. நேரம் காலமே இல்லாமல் மீட்டிங் வைத்துக் கொல்கிறார்கள் என்றபடி எண்ணங்கள் எங்கெங்கோ சென்று வந்தன.

மீட்டிங் முடிந்து ஷட் டவுன் செய்துகொண்டிருந்தவளைப் பார்த்தபடி , நவீன் நின்றுகொண்டிருந்தான்.

“இன்னைக்கு நான் ட்ராப் பண்ணட்டுமா?”

“அது… வந்து .. இல்லை வேணாம்.”

“நான் இன்னைக்கு கார்லதான் ஆபீஸ் வந்தேன், ட்ராப் பண்றதுல எனக்குக் கஷ்டம் ஒன்னும் இல்ல.”

வெள்ளை காரில் நவீன் பக்கத்தில் உட்கார்ந்து இருப்பதைப் பாதுகாப்பாகவே உணர்ந்தாள் ஷாலினி. அவளைத் தாண்டி, அவளின் கழுத்துக்கு அருகில் இருந்த சீட் பெல்ட்டை எடுத்து, அவள் கைகளில் கொடுத்தான். அவனுடைய கைக்கும் அவள் கழுத்துக்குமான நெருக்கம் அடிவயிற்றில் பட்டாம்பூச்சிகளைச் சிறகடிக்க செய்தது.

எஃப்எம் ஆன் செய்தான். மெல்லியதாகக் கேட்டுக்கொண்டிருந்த பாடல் இனிமையைக் கூட்டியது.

ஷாலினிக்கு நவீனின் அருகில் இருப்பது இயல்பாகத் தோன்றவில்லை.

“காலேஜ்ல படிக்கும்போது ஷாலினிக்கு நிறைய ப்ரோபோசல் வந்திருக்கணுமே?” நவீன் லேசாகச் சிரித்தபடி கேட்டான்.

“ஏன் அப்படிக் கேக்குறீங்க?”

“இல்ல… இப்பவே இவ்ளோ அழகு… அப்போ காலேஜ் படிக்கும்போது எவ்ளோ ப்ரோபோசல் வந்துருக்கும்ன்னு தோணுச்சு. அதான் கேட்டேன். அப்படியே அழகும் ஸ்மார்ட்னஸும் சேர்ந்த பெர்ஃபெக்ட் காம்பினேஷன். நான் அதே காலேஜ்ல படிச்சிருந்தா நானும் ப்ரோப்போஸ் பண்ணியிருந்திருப்பேன்.”

ஷாலினிக்கு முகம் வெட்கத்தில் சிவந்தது. என்ன செய்வது என்று புரியவில்லை. சட்டென்று வந்து விழுந்த வார்த்தைகள் சுகமா, வலியா எனத் தெரியாதபடி அழுத்தின. பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள்.

கைப்பையைப் இன்னும் கெட்டியாகப் பிடித்துக்கொண்டாள். ஃப்ரென்ச் மெனிக்யூர் செய்யப்பட்ட விரல் நகங்களில்கூட வெட்கம் பரவியதுபோல இருந்தது.

அந்த விரல்கள் சுமந்துகொண்டிருந்த மோதிரமும் அந்த மோதிரம் சுமந்துகொண்டிருந்த அருண் என்கிற பெயரும் அந்நேரத்தில் அவளை, அவள் உணர்வை மீட்டெடுத்து கொடுத்துக்கொண்டே வந்தன. நவீனின் கைகளைக் கவனிக்க வேண்டும் போல இருந்தது.

நவீனின் கைகள் ஸ்டீயரிங்கை லாவகமாகப் பிடித்திருந்தன. வலது கையில் வெள்ளை ஒற்றைக்கல் மோதிரம் அணிந்திருந்தான். திருமணத்தின்போது மனைவி போட்டதாக இருக்குமோ என்கிற நொடிப் பொழுது எண்ணம் வந்துபோனது.

அவள் முகத்தில் படர்ந்த்திருந்த வெட்கத்தையும், அவள் கைப்பையை பிடித்திருந்த விதத்தையும் ரசித்தவன், திடீரென அவள் கைகளைப் பிடித்து முத்தமிடச் சென்றான்.

கொஞ்சம் சுதாரித்தபடி, இல்லை எனக்கு இதெல்லாம் பிடிக்காது என்றபடி கைகளை இழுத்துக்கொண்டாள்.

நவீனுக்கோ அதே இடத்திலேயே காரை நிறுத்தி அவளை இறக்கிவிட வேண்டும் போல இருந்தது.

அதே ஆபிசில் தங்களுடன் ஒருத்தியாக வேலை பார்த்த கீர்த்தியும் அவளுடன் சேர்ந்து கிசுகிசுக்கப்பட்ட மோகனும், ஷாலினியின் ஞாபகத்துக்குள் வந்து போனார்கள். மோகன் ஆர்த்தியைப் போட்டுவிட்டதாகச் சொல்லி, அதற்காக ஆபிஸ் ஆண் நண்பர்களுக்கு கொடுத்த பார்ட்டியும், கீர்த்தி அவமானத்தில் ஆபிஸ் மாறிச் சென்றதும் ஷாலினியின் மூளை எடுத்துச் சொன்னது.

சரியாக ஐந்தே நிமிடப் பயணத்திற்குப் பிறகு, என் வீடு பக்கம்தான் எனச் சொல்லி இறங்கி சென்ற ஷாலினியைக் கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் நவீன்.

அடுத்த நாள் ஆபீஸில் எதுவுமே நடக்காததுபோல, சாதாரணமாக வழக்கம் போல நடந்துகொள்ளும் நவீனைப் பார்க்கப் பார்க்க மிக வியப்பாக இருந்தது ஷாலினிக்கு, எப்படி இந்த ஆண்களால் ஒன்றுமே நடக்காத மாதிரி ஒரு கூச்ச நாச்சமே இல்லாமல் நடந்து திரிய முடிகிறது?

(தொடரும்)