அபூர்வ சகோதரர்கள் என்றவுடன் நம் எண்ணத்தில் வருவது, கமல் நடித்த குள்ள மனிதனாக நம்மை பிரமிக்க வைத்த 1989 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்தான். ஆனால், இதே பெயரில் 1949ஆம் ஆண்டே ஒரு திரைப்படம் வெளிவந்திருக்கிறது. இந்த இரு திரைப்படங்களின் கதைகளுக்குள் தொடர்பு எதுவும் இல்லை.

அபூர்வ சகோதரர்கள் என்கிற இந்தத் திரைப்படம், Gregory Ratoff என்கிற திரைப்படத்தைத் தழுவி எடுக்கப்பட்டது. அந்த Gregory Ratoff திரைப்படம் ‘அலெக்ஸாண்ட்ரா டுமா’ என்பவரின் ‘தி கோர்சிகன் பிரதர்ஸ்’ நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது. அதாவது இந்தத் திரைப்படத்தின் மூலக்கதை ‘தி கோர்சிகன் பிரதர்ஸ்.’

டி.ஜி. ராகவாச்சாரி என்கிற ஆச்சார்யா இந்தத் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.

கதை இது தான்:

மகேந்திர பூபதியும் மார்த்தாண்டனும் இரு ஜமீன்தார்கள்.

பூபதியின் மனைவிக்கு இரட்டைக் குழந்தைகள் ஒட்டிப் பிறந்தன. மருத்துவர் அவர்களைத் திறமையாகப் பிரிக்கிறார். ஆனாலும் ஒரு சிக்கல். மூத்த குழந்தையின் உணர்ச்சிகள் அனைத்தும் இளைய குழந்தையைப் பாதிக்கிறது. ஆனால், இளைய குழந்தையின் உணர்ச்சிகள் மூத்த குழந்தையைப் பாதிப்பதில்லை.

குழந்தைகளின் பிறப்பு குறித்து நடத்திய விருந்தின்போது, பூபதியின் கோட்டைக்கு மார்த்தாண்டன் தீ வைக்க, அனைவரும் இறந்துவிடுகின்றனர். ஆனால், மருத்துவர் குழந்தைகளைச் சுரங்கத்தின் வழியாகத் தனது வீட்டிற்குத் தூக்கிச் சென்றுவிடுகிறார். அனைவரும் இறந்துவிட்டனர் என நினைத்து அழுதுகொண்டே வரும் பூபதியின் உதவியாளர் மருது, குழந்தைகளைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறார். இரு குழந்தைகளும் ஒரே இடத்தில் வளர்ந்தால் ஆபத்து என இருவரும் முடிவு செய்கிறார்கள். மூத்த குழந்தை விஜயனை மருத்துவர் வளர்க்க, இளைய குழந்தை விக்கிரமனை மருது காட்டில் வளர்க்கிறார்.

ஒரு சூழ்நிலையில் விஜயன், காஞ்சனா என்கிற பெண்ணைச் சந்திக்க நேருகிறது. இருவரும் காதலிக்கிறார்கள். குழந்தைகள் வளர்ந்த பின், வளர்த்தவர்களே அவர்களை ஒருவருக்கு இன்னொருவர் அறிமுகப்படுத்தி வைக்கிறார்கள். இரட்டையர்கள் தங்கள் குடும்பத்தை அழித்தவர்களைப் பழிவாங்க முடிவு செய்கிறார்கள்.

இதற்கிடையில் மார்த்தாண்டன் காஞ்சனாவைத் திருமணம் செய்யும் நோக்கத்துடன் அடைத்து வைக்கிறார். காஞ்சனா தப்பி சகோதரர்களிடம் செல்கிறார். அண்ணன், காதலிக்கும் போது தம்பிக்கும் அதே உணர்வு ஏற்பட்டு, உணர்ச்சிவசப்படுகிறார். இதனால், சகோதரர்களுக்கு இடையே சண்டைகள் எழுகின்றன. இதை அறிந்து அங்கிருந்து வெளிவரும் காஞ்சனா, மார்த்தாண்டனிடம் சிக்கிக்கொள்கிறார்.

விஜயன் மேல் இருந்த கோபம் தம்பிக்கு மாறவேயில்லை. இதனால், விஜயன் மட்டும் மாறுவேடத்தில் காஞ்சானாவைக் காப்பாற்றச் செல்கிறார். காஞ்சனாவுடன் வெளியில் செல்ல முயலும்போது இருவரும் பிடிபட்டுவிடுகிறார்கள். விஜயனை அடிக்கும்போது, தம்பிக்கு வலிக்கிறது. மனம் திருந்திய தம்பி, அண்ணனைக் காப்பாற்றச் செல்கிறார்.

அங்கு மருத்துவரையும் மார்த்தாண்டன் அழைத்து வருகிறார். மருத்துவர், “இவன் யார் என்றே தெரியவில்லை எனச் சாதிக்கிறார். அடித்த அடியில் விஜயன் இறந்துவிட, உடலை மருத்துவர் எடுத்துச் செல்கிறார். மாற்று மருந்து கொடுத்து விஜயனை மீட்டு எழுப்புகிறார்.

இறுதியில் நடந்த சண்டையில் தம்பி இறந்துவிடுகிறார். விஜயன் காஞ்சனா திருமணம் செய்துகொண்டு வாழ்கிறார்கள்.

இந்தத் திரைப்படத்தில் நடித்தவர்களின் பட்டியல் பின்வருமாறு உள்ளது. பானுமதியின் பெயரைத்தான் முதலில் போடுகிறார்கள்.

காஞ்சனாவாக பி.பானுமதி

விஜயசிம்மன், விக்ரமசிம்மனாக எம்.கே.ராதா

மார்த்தாண்டனாக நாகேந்திர ராவ்

அடப்பக்காரராக நாராயண ராவ்

டாக்டர் நஞ்சப்பாவாக ஜி.பட்டு

ஜம்புவாக வி.பி.எஸ்.மணி

மகேந்திர பூபதியாக டி.பாலசுப்ரமணியன்

மரகதமாக சூர்யபிரபா

நீலவேணியாக லட்சுமிபிரபா

ராஜேஸ்வரி தேவியாக வெங்குமாம்பா

டாக்டரின் சகோதரியாக கிருஷ்ணா பாய்

டாக்டரின் உறவினராக ஷியாம் சுந்தர்

கடை ஊழியராக ஜி.வி.சர்மா

மருதப்பாவாக ஸ்டண்ட் சோமு

ராஜசேகரராக ஜே.எஸ்.காஷ்யப்

வேலைக்காரராக ராமகிருஷ்ண ராவ்

மாயாண்டியாக வேலாயுதம்

விஜயராவ், பலராம், ஆனந்த்,

சிப்பாய்களாக டி.எஸ்.பி.ராவ், சம்பத்குமார்

ஜெமினி சிறுவர்கள் மற்றும் பெண்கள்

M. K. ராதா, பானுமதி, வில்லனாக வரும் நாகேந்திர ராவ் எனப் பலரின் நடிப்பு நன்றாக இருக்கிறது. அதிலும் பானுமதி அம்மா மிக நளினமாகவும் துடிப்பாகவும் இயல்பாகவும் நடித்து உள்ளார். இப்படம் தெலுங்கு மற்றும் இந்தியில் எடுக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் M K ராதாவும் இந்தியில் ரஞ்சனும் நடித்து உள்ளனர். பானுமதிதான் மூன்று திரைப்படங்களிலும் நாயகியாக இருந்திருக்கிறார்கள்.

கணவன் மனைவி பாடுவதாக ஒரு பாடல் வருகிறது. வெளிநாடு செல்ல விரும்பும் கணவன், போகாதே என சொல்லும் மனைவியின் இந்த உரையாடல் எக்காலத்திற்கும் பொருத்தமானது.

‘பரதேசம் போகாதே பாவம் பெண் பாவம் பொல்லாதுடா

பதறுவதேனோ பணம் காசு தேடி வாரேன் பாரடி

பயமென்ன கூறடி

ஆடி பண்டிகை நவராத்திரி அடுத்து வரும் தீவாளி

கூடி கலந்து பேச இயலாம ஓடுவதேனோ ஜோலி

கல்யாணம் கட்டி காப்பு கழத்தும் முன்னே போகுதோ

நான் என்ன ஆவுதோ

கோலாலம்பூர் கண்டி சீமை கொழும்புதான் போனாலும்

கொண்டவளுன்னை நான் மறவேனே

பூசிக்குவேனே பாரு

நான் கூடவே வாரேன்

குடும்பத்தில் மாமி என்னை பேசுவா

கொழுந்தியா ஏசுவா

எனப் பாடல் வருகிறது. அந்த நேரம் நாயகி, வில்லனிடமிருந்து தப்பித்து ஓடி உள்ளே வருகிறார். அவர்களுடன் இணைந்து ஆடுவதற்கான நடன அசைவுகள் தெரியாமல், பிறரைப் பார்த்துப் பார்த்து ஆடுவது எல்லாம் பானுமதி அவர்களின் நடிப்புத் திறமைக்கு ஓர் எடுத்துக்காட்டு.

கல்யாண சமையல் சாதம் போன்று பல உணவுப்பொருட்களைப் பட்டியல் இடும் லட்டு லட்டு மிட்டாய் வேண்டுமா என்ற பாடல் ஒன்று வருகிறது. இவ்வகையான பாடல்களுக்கு இதுவே முன்னோடி என நினைக்கிறேன். பாடல் அப்போது மிகவும் பிரபலமாக இருந்திருக்கிறது. பாடியவர் பானுமதி அம்மா.

ஓர் அவியல், ஒரு பொரியல், ஒரு மசியல், ஒரு துவையல் ஒரு அப்பளம் பப்படம், ஜாங்கிரி தேன்குழல், சாம்பாரு மோர்க்குழம்பு சட்டினி எல்லாம் சமைக்காட்டி எல்லாரும் பட்டினி பட்டினி

லட்டு லட்டு மிட்டாய் வேண்டுமா?

ரவா லாடு பூரியும் வேணுமா

லட்டு லட்டு

துட்டு துட்டு தரவேண்டாமே

கொஞ்சம் கூடமாட வேலை செய்வீர்

லட்டு லட்டு

ஐயா டவுசர் காரரே? அழகு மீசைக்காரரே அடுப்பூத வாங்க

ஐயா அவுஸ்தாரயா அவுல் இடிச்சுத் தாறேன்யா

அவுல் இடிச்சுத் தாருங்க மாவரைச்சுத் தாருங்க

ராஜாங்கத்தில் சேகவம்னா மாசா மாசம் சம்பளம்

ராணுவத்துக் காரன் கிட்ட ஆணவமா பேசுறே

ராணுவத்து காரரே ராஜாங்க வீரரே

பட்டு சட்ட காரரே கத்திய கழற்றி வச்சி

கொஞ்சம் கத்திய கழற்றி வச்சி

காய்கறிய வெட்டித்தர வாங்க வாங்க

மலையாள வீரரிடம்; எரிசேரி, புளிசேரி ஒரு அவியல் ஒரு பொரியல் சக்கைப் பிரமன் கறிமீன்

ஆந்திர வீரரிடம்; ஆவக்காய் கோங்குரா பச்சடி, பெசரட், பாயாசம் பப்பு

கன்னட வீரரிடம்; கண்டிகை போளி. துப்ப தோசை, ஹப்பளம்

இந்துசதானி / டெல்லி வீரரிடம்

கோதுமை அல்வா பாதாம் கீர், குலாப் ஜாமூன் ஜிலேபி லட்டு ரொட்டியும் கூட சுட்டுத்தருவேன் பனாரஸ் வாலி

இப்படி பாடல் போகிகிறது.

இதே கதை நீரும் நெருப்பும் என்கிற பெயரில், 1971ஆம் ஆண்டு எம். ஜி. ஆர், ஜெயலலிதா போன்றோர் நடித்து வெளிவந்தது.

திரைப்படக் கதையில் பெரிய மாற்றம் இல்லை.

மாலை நேரத் தென்றல் என்கிற பாடல் மிகவும் இனிமையாக உள்ளது.

கடவுள் வாழ்த்துப் பாடும் என்ற பாடல் எம்ஜிஆரின் வாள் வித்தையைச் சொல்வதற்கான பாடல். பார்க்க விறுவிறுப்பாக இருக்கிறது.

ஒரு துவையல், ஓர் அவியல், ஒரு பொரியல், ஒரு மசியல்,

கத்தரிக்கா, சாம்பாரு, காரவடை, மோர்க்குழம்பு, தக்காளிப் பருப்பு ரசம், தயிர்வடை, பாயாசம், சப்பாத்தி, வடை

புஞ்சயரி, புழிசேரி, அவியல், தீயல், குறுக்கு காளன் பச்சடி, கிச்சடி

கடுமாங்ஙாக்கறி, கூட்டுக்கறி, பப்பு, வண்ணணு, பிரத்யேகம், பரிப்பு பப்படம், உப்பேரி

குண்டூரு கோங்குரா, ராஜமண்ட்ரீ ஆவக்காய, பெசவாடா பெசசெரட்டு

பந்தரு தொக்குடு லட்டு, ருசி சூஸ்தாவா, ஹைதராபாது ஹல்வா, ஒண்டிக்கி சலவா

மங்களூர் போண்டா, ஹூப்பள்ளி பேடா, மைசூர் பாக் பகோடா

இப்படி இந்தப் படத்தின் பாடல் வருகிறது. இந்தப் பாடல் காட்சியில் ஜெயலலிதாவின் ஆடல் பாடல் அழகு.

‘கொண்டு வா’ என்கிற பாடல் ஜெயலலிதா போதையுடன் ஆடுவது போலக் காட்டுவதற்காக வலிந்து வைக்கப்பட்ட பாடல் எனத் தெரிகிறது. இந்தப் பாடலுக்கு முன்வரும் சண்டையும் அப்படியே தெரிகிறது. மொத்தத்தில் அபூர்வ சகோதரர்கள் அளவிற்கு நீரும் நெருப்பும் திரைப்படம் மனதில் ஒட்டவில்லை.


(தொடரும்)

படைப்பாளர்:

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’ என்கிற புத்தகமாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கிறது.