நிறைவான, முழுமையான உடலுறவு இல்லாத பட்சத்திலும், அல்லது பாலுறவே இல்லாமல் போகும்போதும் என்னென்ன உளவியல், உடலியல் பாதிப்புகள், உளவியல் சார்ந்த உடல் பாதிப்புக்கள் ஏற்படுகின்றன என்பதைப் பற்றி இப்போது பேசலாம்.

பெண்கள் உச்சக்கட்டம் அடையாமலிருப்பதும் உடலுறவில் மகிழ்ச்சியில்லாமல் இருப்பதும் அவ்வளவு பெரிய பிரச்னையா என்ன? ஏன் இந்த விஷயத்துக்கு இத்தனை ஆர்ப்பாட்டம், இவ்வளவு ஆராய்ச்சிகள் என்று பலர் நினைக்கலாம், குறிப்பாக ஆண்கள். ஆம், இது அவ்வளவு பெரிய விஷயம்தான். உடலுறவில் சரியாக திருப்தியடையாத பெண்களுக்கு பலவிதமான உளவியல் பிரச்னைகளும், அந்த உளவியல் பிரச்னைகளால் ஏற்படும் உடல் நோய்களும் (Psychosomatic disorders) ஏற்படுகின்றன. இவை அப்பெண்களைத் தீவிரமாக பாதிப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களைச் சார்ந்திருக்கும் குடும்பத்தினரையும் பாதிக்கிறது. மனதளவிலும் உடலளவிலும் திருப்தியாக, மகிழ்ச்சியாக இல்லாத ஒரு பெண்ணால் எப்படி தன்னைச் சார்ந்திருக்கும் தனது குழந்தைகளுக்கு மனமகிழ்ச்சியுடன் தனது கடமைகளை செய்ய முடியும்? அவளது திருப்தியற்ற மனநிலையைத் தனது குழந்தைகள் மேலும் அவளையறியாமலேயே திணிக்கத் தொடங்குவாள்.

‘எங்கம்மா ஏன் சும்மா சும்மா எரிஞ்சு விழறாங்கன்னே தெரியல… நாங்க எந்தத் தப்புமே பண்ணல, ஆனா டொம்… டொம்முனு அடிக்கறாங்க…’ எனப் பல குழந்தைகள் சொல்லக் கேட்டிருப்போம். அவள் அப்படி நடந்துகொள்வது குழந்தைகள் மீதுள்ள வெறுப்பினால் அல்ல. தன் கணவன் மீதுள்ள கோபத்தை அவன் மேல் காட்டமுடியாதபோது இப்படி குழந்தைகள் மீது எரிந்து விழுகிறாள். அடுத்த வீட்டுப் பெண்களிடம் சிடுசிடுக்கிறாள். யாராவது மகிழ்ச்சியாக இருந்தால் பொங்குகிறாள். இவ்வாறு ஆண்டுக்கணக்கில் புழுங்கிக் கொண்டிருக்கும் சில பெண்கள், ‘எனக்குக் கிடைக்காத மகிழ்ச்சி உனக்கும் கிடைக்கக்கூடாது’, என்று தான் பெற்ற பிள்ளைகளின் திருமண வாழ்வுக்கே பங்கம் ஏற்படுத்தும் அளவுக்கு வந்துவிடுவதையும் நாம் நிறையப் பார்த்திருப்போம். தங்களை அறியாமலேயே இப்படிப்பட்ட முரண்பாடான மனநிலைக்குள்ளாகிறார்கள். 

தன் மனைவி ஏன் இவ்வாறு அதீத மன அழுத்தத்துக்கு உள்ளாகிறாள் என்று ஆரம்பகட்டத்திலேயே நன்றாகத் தெரிந்திருந்தும், அதை சரி செய்ய ஆண்கள் தங்கள் ‘ஈகோ’வை விட்டு வெளியே வருவதில்லை. ‘அப்படி என்ன பெரிதாக செய்துவிடப் போகிறாள்…?’ என மிதப்பாக இருப்பவர்கள் அவளது வெறுப்பால் தாங்கள் பெற்ற பிள்ளைகளின் வாழ்க்கையே பாதிக்குமளவுக்கு போகும்போதுதான் அலறியடித்துக் கொண்டு ஒரு விழிப்பு நிலைக்கு வருகிறார்கள். நிறைவான உடலுறவில் ஈடுபடாத பெண்களுக்கு உயர் இரத்த அழுத்தம் (Hypertension), அதீத உடல் பருமன் (Obesity), தைராய்டு பிரச்னை (Thyroid Disorders), சீரான இரத்த ஓட்டமின்மை (Blockage in blood flow) போன்ற கோளாறுகள் ஏற்படுகின்றன.

உடல் செயல்பாடுகள் அதிகமாகும்போது இரத்த ஓட்டமும் அதிகரிக்கும் என்பது நமக்குத் தெரிந்ததே. சரியான உடலுறவில் ஈடுபடாததால் உடலியக்கம் குறைவாகிறது. இதனால் நிறைவான உடலுறவு கொள்ளாத ஆண், பெண் இருவருக்குமே சீரான இரத்த ஓட்டத்தில் பிரச்னை ஏற்படுகிறது. பாலுறவுக் குறைபாட்டால் பெண்களுக்கு அதீத உடல் சோர்வாதலும் அடிமுதுகு சார்ந்த பிரச்னைகளும் தோன்றும். ‘நிறைவான உடலுறவும், உச்சக்கட்டமடைதலும் மன அழுத்தமடையாமல் தடுக்கும்’, என்ற கூற்று ஒருபுறமிருக்க, மனச்சோர்வும், மன அழுத்தமும் குறைவான அளவிலிருப்பவர்கள்தான் உடலுறவில் ஈடுபடுவதிலும் ஆரோக்கியமான ஆர்வமுடையவர்களாயிருக்கிறார்கள் என்று டாக்டர். ஸ்ட்ரீய்ச்சர் (Dr. Streicher) குறிப்பிடுகிறார்.

செக்ஸ் குறைபாடு பெண்ணுறுப்பில் வறட்சி(Vaginal dryness), சிறுநீர் பாதை நோய்த் தொற்று (Urinary tract infection) இடுப்புத் தள பலவீனம் (Pelvic floor weakness) போன்ற பல தீவிரமான பிரச்னைகளுக்கும் காரணமாகிறது. சரியான உடலுறவு இல்லாத பெண்களுக்கு  மாதவிடாய் காலத்தில் அதீத வலியும் பாலிசிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம் எனப்படும் சினைப்பை நோய்க்குறியும் (Polycystic Ovary Syndrome) ஏற்படுகிறது. உடலுறவின் போது சுரக்கும் எண்டோர்ஃபின் நல்ல மகிழ்ச்சியான மனநிலையை ஏற்படுத்துகிறது. நிறைவான உடலுறவே இல்லாமலிருக்கும் போதும் அல்லது உச்சக்கட்டம் ஏற்படாமலிருக்கும்போதும் பெண்ணின் உடலில் எண்டோர்ஃபின் சுரக்காமல் போய்விடுவதால் அவளது மனநிலையில் அடிக்கடி எதிர்மறையான மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டேயிருக்கும்.

Photo by Mehmet Turgut Kirkgoz : https://www.pexels.com/photo/erotic-relief-on-wall-12323474/

திருப்தியான, முழுமையான உடலுறவின் போது நமது உடலில் நிகழும் மாற்றங்களால் நன்றாகத்  தூக்கம் வரும். நமது உடலையும், மனதையும் இந்தத் தூக்கம் சீராக்குகிறது. உடலுறவுக் குறைபாடு ஏற்படும்போது இயல்பாகவே தூக்கத்தின் அளவும் குறைந்து விடுகிறது. சிலருக்கு முற்றிலும் தூக்கம் தடைபட்டு விடுகிறது. இந்தத் தூக்கமின்மை மன அழுத்தத்தையும், படபடப்பையும் ஏற்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியில் குறைபாட்டை உண்டாக்கி விடுகிறது. இதனால்தான் நிறைவான உடலுறவு கிடைக்கப் பெறாத பெண்கள் தாங்கள் மிகவும் சோர்வாகவும் பலவீனமாகவும் உணர்வதாகக் கூறிக்கொண்டேயிருப்பார்கள்.

சரிவர உடலுறவு வைத்துக் கொள்ளத் தெரியாத ஆண்கள், பெண்களுக்கு உச்சக்கட்டத்தை ஏற்படுத்தாத ஆண்கள் அதற்குத் தாங்கள் பொறுப்பில்லை என்பது போலவும், அந்தப் பெண்தான் ஏதோ ஒருவிதத்தில் காரணம் என்பது போலவும் குறை சொல்லத் தொடங்குவார்கள். இதனால் அந்தப் பெண்களுக்குத் தன் மீதே சுய நம்பிக்கையில்லாமல் போய்விடும். தங்களிடம்தான் ஏதோ குறையிருக்கிறது என்று நம்பத் தொடங்கி விடும் அந்தப் பெண்கள், எங்கே தன் கணவன் வேறு யாரிடமாவது சென்று விடுவானோ என்ற பயத்திலும், பாதுகாப்பற்ற மனநிலையுடனும் வாழத் தொடங்கிவிடுவார்கள். இந்த எண்ணங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களது மனநலத்தை பாதிக்கத் தொடங்குகின்றன. 

ஒரு வாரத்துக்கு இரண்டு முறையாவது உடலுறவு கொள்பவர்களுக்கு, மாதத்தில் ஒரு முறை மட்டும் உடலுறவில் ஈடுபடுபவர்களைக் காட்டிலும் வெகு குறைவான சதவீதத்தில்தான் இதய நோய்க் கோளாறுகள் ஏற்படுகின்றனவாம். உடலுறவு கொள்வதே ஒரு உடற்பயிற்சி போல் அமைந்துவிடுவதும் அவர்கள் மிகக் குறைந்த அளவே மன அழுத்தம் மற்றும் மனப்பதட்டத்துக்கு உள்ளாவதும்தான் இதற்குக் காரணம் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். நிறைவான உடலுறவு கொள்வது இருதய அமைப்பின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. (Cardiovascular System) அதனால்தான் திருப்தியான உடலுறவு இல்லாமலிருக்கும்போதும் அல்லது உறவேயில்லாமலிருக்கும்போதும் அவர்களின் இருதய அமைப்பில் குறைபாடுகள் ஏற்படுகின்றன. சரியான உடலுறவு இல்லாதபோது, பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் மிக அதீத வலி உருவாவதோடு அவர்களது பெண்ணுறுப்பின் சுவர்களிலும் பாதிப்பேற்படுகிறது.

கணவன் சரியாகத் தன் மனைவியிடம் உடலுறவு வைத்துக் கொள்ளாதபோது அவள் தான் நிராகரிக்கப்பட்டதாகவும் மிகவும் தனிமையாகவும் உணர்கிறாள். சுய மதிப்பையும் நம்பிக்கையையும் இழந்து அதன் தொடர்ச்சியாக மன அழுத்தத்துக்கும் மனப்பதட்டத்துக்கும் உள்ளாகிறாள்.

உடலுறவின்போது ஆணின் தோலுடன் தனது தோலும் மிக நெருக்கமாக உரசிக்கொள்வதால், தான் குழந்தையாயிருக்கும்போது எவ்வாறு தனது தாயின் கதகதப்பை உணர்ந்தாளோ அதே போல் மீண்டும் உணரத் தொடங்குகிறாள். இந்த உணர்ச்சி, மிகுந்த மன மகிழ்ச்சியையும் பாதுகாப்புணர்வையும் அவளுக்குள் தோற்றுவிக்கிறது.

மூன்று முக்கியமான விஷயங்களைத் திருமணம் செய்துகொள்வதற்கு முன்பே ஆண்களும் பெண்களும் புரிந்து கொள்ளவேண்டும்.  

  1. உடலுறவைப் பொறுத்தவரை, பெண்களின் பங்கை விட ஆண்களுக்குத்தான் பொறுப்பு அதிகம். அவர்களது மனமும் உடலும் ஒத்துழைக்க வேண்டியது மிக அவசியம். பெண்களுக்கு உடலுறவுக்குத் தயாராக சிறிது தாமதமானாலும், முன் விளையாட்டுகளின் மூலம் அவள் உடலுறவுக்குத் தயாராகிவிட்டால்போதும். அதன் பிறகு அவள் வேறெந்த விதங்களிலும் பெரிதாக சிரத்தையெடுத்துக் கொள்ளத் தேவையில்லை. 

ஆனால், ஆணுக்கு அதற்குப் பிறகுதான் வேலையே. சிறிய தடங்கல்களும் அவன் மனதில் தோன்றும் எண்ணங்களும், உடல், மன, மூச்சுக் கட்டுப்பாட்டை இழப்பதும் அவனது விந்தை வெளியேற்றி விடக்கூடும். அல்லது விறைப்புத்தன்மையில்லாமல் செய்துவிடும். இந்தப் பிரச்னை பெண்களுக்கில்லை. ஒரு முறை அவளது பெண்ணுறுப்பில் உடலுறவுக்குத் தேவையான திரவம் சுரக்கத் தொடங்கி, பெண் மனதளவிலும், உடலளவிலும் தயாராகி விட்டால், அவ்வளவு சீக்கிரம் அவளது உடலும் மனமும் இயல்பு நிலைக்குத் திரும்பாது.

ஆண்கள் தாங்கள் தொய்வடையாமல் தங்கள் மனைவியை உச்சக்கட்டமடைய வைக்க வேண்டும் என்ற பொறுப்பிலிருப்பதே பல சமயங்களில் அவர்களுக்கு மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தி விடுகிறது. எனவே மிகவும் நிதானமாக உங்கள் மூச்சு, மனம், உடலை மூன்றையும் கட்டுப்படுத்தக் கற்றுக்கொள்ளுங்கள். நான் இந்தப் புத்தகத்தில் ஏற்கெனவே சொல்லியுள்ளபடி உடலுறவுகொள்ளும்போது ஆண்கள் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்காமல் சிறிது இடைவெளி விட்டுத்தொடர்வது, இயங்கும் வேகத்தை ஒரே சீராக இல்லாமல், கொஞ்சம் மாற்றி குறைத்தும் அதிகமாக்கியும் செயல்படுவது என்று பல முறைகளைக் கற்றுக்கொண்டு செயல்படுங்கள்.

  1. 50 நாட்கள் உடலுறவில் ஈடுபட்டால் அதில் ஒன்றிரண்டு நாட்கள்தான் உங்களிருவருக்குமே மிகவும் திருப்தியான நாள்களாக அமைய வாய்ப்புண்டு. இது உங்களுக்கு மட்டுமல்ல, எல்லா தம்பதியினருக்குமே இப்படித்தானிருக்கும் என்று புரிந்து கொள்ளுங்கள். சிலருக்கு இன்னும் கூட இந்த விகிதம் குறைவாயிருக்கும். 

உங்களுக்கு நிறைவான உடலுறவு அமைவதேயில்லை என்று தோன்றினால் கீழ்க்காணும் கேள்விகளுக்கு நீங்களே பதில் கண்டுபிடியுங்கள்:

  1. உடலுறவு கொள்ளும் சமயத்திலும் பொதுவாக மற்ற நேரங்களிலும் நீங்கள் இருவரும் மகிழ்ச்சியான மனநிலையிலிருக்கிறீர்களா?
  2.  வேறெந்த பிரச்னைகளைப் பற்றிய பயம் இல்லாமலிருக்கிறீர்களா?
  3.  நல்ல சூழலுள்ள இடத்தில் உறவு வைத்துக் கொள்கிறீர்களா? 
  4. உங்கள் உடலும் மனமும் அப்போது ஆரோக்கியத்துடனிருக்கிறதா?
  5. ஒருவர்மீது ஒருவர் அப்போது மிகுந்த காதலுடனிருக்கிறீர்களா?

இவற்றையெல்லாம் அலசுங்கள். ஏனெனில் இது  போன்ற பல விஷயங்களை சார்ந்துதான் உடலுறவில் ஈடுபடும் உங்களிருவருக்கும் திருப்தியும் மகிழ்ச்சியும் கிடைக்கும்.

மேற்சொன்னவையெல்லாமே எப்போதாவதுதான் அத்திப்பூத்தாற்போல் அமையும். அடிக்கடி உடலுறவு கொள்ள முயற்சி செய்கிறீர்கள்தான், ஆனாலும், அந்த எல்லா முயற்சிகளுமே நிறைவான, திருப்தியான உடலுறவாய் அமைந்து விடாது என்பதை முதலிலேயே புரிந்து கொள்ளுங்கள். அதற்கு உங்கள் மனதைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள். அவ்வாறு ஒரு நாள் நிறைவில்லாத கலவி அமைந்து விட்டால், அதற்கு ‘நீதான் காரணம்’ என்று மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டிக் கொள்ளாதீர்கள். அது அடுத்த முறை நீங்கள் உடலுறவு கொள்வதற்கே ஒரு மிகப் பெரிய மனத்தடையாகி விடும்.

‘எல்லா முறையும் எனது ஆணுறுப்பால் அவளை உச்சக்கட்டமடைய வைக்க முடியாது. அது சாத்தியமல்ல. ஒருவேளை இன்றும் அவ்வாறு முடியாமல் போனால், அதற்கு பதிலாக நான் இந்த மாற்று முறைகளைப் பயன்படுத்தி அவளை உச்சக்கட்டமடைய வைப்பேன்’ என்று ஆண்கள் முன்கூட்டியே உங்கள் மனதுக்குள் திட்டமிட்டுக் கொள்ளுங்கள். புதிதாக அன்று அவளுக்கு ஆச்சர்யமூட்டும் வகையில் படுக்கையறையில் ஏதாவது செய்யுங்கள். உங்களது படைப்புதிறனை, புதிதாக சிந்திக்கும் திறனை வேலையில் மட்டும்தான் காட்ட வேண்டும் என்ற அவசியமில்லை. படுக்கையறையில் திடீரென அவள் எதிர்பார்க்காத பரிசு கொடுப்பது, அவளுக்குப் பிடித்த ஒரு பொருளை அங்கு வைப்பது என ஏதாவது வித்தியாசமாக செய்து அசத்துங்கள். அதேபோல்தான், மாற்று வழிகளில் அவளை உச்சக்கட்டம் அடைய வைக்கும்போதும் வித்தியாசமான கோணங்களில் அவற்றை முயற்சி செய்து பாருங்கள்.

3. மூன்றாவது மிக முக்கியமான விஷயம். பெண்களின் உடல் ஆரோக்கியமாக இருக்கும் பட்சத்தில், அவர்களது கடைசி மூச்சு இருக்கும்வரை, அவர்களால் உடலுறவு கொள்ள முடியும். அதிகபட்சம் ‘லூப்ரிகன்ட்ஸ்’ எனப்படும் பெண்ணுறுப்பை வழுவழுப்பாக்க சில வகையான எண்ணெய்கள்  தேவைப்படலாம், அவ்வளவுதான். ஆனால், ஆண்களுக்கு அது சாத்தியமில்லை.

ஒவ்வொரு தனி நபருக்கும் அவர்கள் எந்த வயது வரை உடலுறவில் செயல் திறனுடனிருப்பார்கள் என்பதில் மாறுபாடுகளிருக்கும். எல்லா ஆண்களும் இந்த வயது வரையில்தான் உடலுறவில் ஆர்வமாயிருப்பார்கள் அல்லது சிறப்பாக செயல்படுவார்கள் என்று தீர்மானமாக சொல்லமுடியாது. ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்த அளவுகளில் மாற்றம் ஏற்பட்டுக்கொண்டேதான் இருக்கிறது. 

இருபந்தைந்து முப்பது வருடங்களுக்கு முன்பிருந்த ஆண்களின் உணவுப்பழக்கம், தினசரி வாழ்க்கையில் அவர்கள் கடைபிடித்த ஒழுங்கு முறைகள், உடலுழைப்பின் அளவு, அவர்களது மனநிலை இவை எதுவுமே இப்போதிருக்கும் ஆண்களிடம்  இருக்குமா என்றால் நிச்சயமாய் இல்லை. அப்படியிருக்க அத்தனை வருடங்களுக்கு முன்பு எந்த வயது வரை உடலுறவில் சிறப்பான செயல்பாட்டுடனிருந்தார்களோ அதேபோலவே இப்போதுள்ள ஆண்களாலும் எப்படியிருக்க முடியும்? நிச்சயமாக தங்கள் வாழ்க்கை முறையிலும், உணவுப்பழக்கத்திலும் நிறைய மாற்றங்களை செய்து கொண்டால்தான் அது சாத்தியம்.

பல வருடங்களுக்கு முன்பிருந்த ஆண்களுக்கு அவர்கள் தினசரி செய்யும் வேலைகளிலேயே மூச்சுப் பயிற்சிகள், கட்டுப்பாடு, உடலுக்கு வலு சேர்க்கும் பயிற்சிகள் போன்றவை உள்ளடங்கியிருந்தன. அவற்றுக்கென அவர்கள் மெனக்கெடத் தேவையிருக்கவில்லை. ஆனால், இப்போதுள்ள காலகட்டத்தில் மேற்சொன்ன அனைத்து விஷயங்களையுமே மேற்கொள்ள ஒரு ஆண் மிகவும் மெனக்கெட வேண்டியிருக்கிறது. தவறான உணவுப் பழக்கங்கள், போதிய உடற்பயிற்சியின்மை, ஓய்வில்லாத வாழ்க்கை முறை, மன அழுத்தம், போட்டி நிறைந்த உலகம், எனப் பல்வேறு பிரச்னைகளால் அவனது மனம் அமைதியிழந்திருக்கும் போது அவனால் உடலுறவில் போதிய கவனமும், ஆர்வமும் செலுத்த முடிவதில்லை. ஆரம்பத்தில் ஒரு எதிர்பார்ப்பில் ஈடுபடும் ஆண் போகப் போக அதில் தன் பொறுப்பை ஒழுங்காக செய்ய முடியாமல் போகும் காரணத்தால், ஆர்வமிழந்து கொஞ்சம் கொஞ்சமாக உடலுறவையே வெறுக்கத் தொடங்குகிறான்.

 ஐம்பது வயதுக்கு மேல்தானென்றில்லை. இப்போதெல்லாம் திருமணமான சில மாதங்களுக்குள்ளாகவே உடலுறவில் ஆர்வமில்லை அல்லது சரியாகச் செயல்படமுடியவில்லை என மருத்துவர்களைத் தேடிச் செல்வோரின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டேதானிருக்கிறது. பொழுதுபோக்குக்கு வேறு, பல விஷயங்கள் வந்துவிட்டதாலும் உடலுறவுக்குப் போதிய முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இது வேடிக்கையாயிருந்தாலும் தற்போதைய உண்மை நிலவரம் இதுதான். திருமணமான ஒரு மாதத்திலேயே, ‘என் கணவர் ஆஃபீஸ் விட்டு வந்தவுடனே ஃபோனைக் கையிலெடுத்துட்டு உட்கார்ந்திடறாரு. என்னைக் கண்டுக்கறதேயில்ல…’ என்று பல இளம் பெண்கள் கதறுகிறார்கள். 

ஆண்களும் பெண்களும் நிறைவான, முழுமையான உடலுறவு தங்கள் இருவரின்  உடல் மற்றும் மன ஆரோக்கியத்துக்கு எந்தளவுக்கு அவசியமென்பதைக் கட்டாயம் உணரவேண்டும். ‘நான்லாம் சாகறவரைக்கும் மேட்டர்ல ஆக்டிவ்வா இருப்பேன்…’ என்று ஒரு மிதப்பாக சொல்லிக்கொண்டு திருமணம் செய்து கொள்ளும் ஆண்களுக்கு திடீரென உடல் பிரச்னைகளாலோ, மனநல பாதிப்புகளாலோ அல்லது வாழ்க்கை முறை மாற்றங்களினாலோ விறைப்புத்தன்மை இல்லாமல் போய் விடும்போது, மிகவும் பதறி, சுக்குநூறாக நொறுங்கிப் போய்விடுகிறார்கள். 

தன்னால் உடலுறவில் செயல்பட முடியாமல் போகும்போது மிகுந்த மன உளைச்சலுக்கும், தாழ்வு மனப்பான்மைக்கும் உள்ளாகும் அவர்கள் மூன்று விதமான செயல்களில் இறங்குகிறார்கள்.

  1. தனக்குள்ளேயே முடங்கிப் போய்விடுவது. மனைவிக்கும் தன்னைச் சுற்றியிருப்பவர்களுக்கும் மிக அதீதமாய் அடங்கிப்போய் வாழ்க்கையை ஓட்டுவது.
  1. தனது அதீத தாழ்வுமனப்பான்மையை (Inferiority Complex) மறைக்க அளவுக்கதிகமான உயர்வு மனப்பான்மையுடன் (Superiority Complex) நடந்து கொள்ளத் தொடங்குவது. 

பல ஆண்கள் தன்னைப் பெரிய ஆள் என்று காட்டிக் கொள்வதற்காக தேவையில்லாமல் செலவு செய்வது, தேவையில்லாத விஷயங்களில் ஈடுபடுவது என்று ஏதேதோ செய்து தங்கள் இருப்பைப் பறைசாற்றிக் கொண்டேயிருப்பார்கள். ‘நான் காஸ்ட்லி கார் வெச்சிருக்கேன் பாத்தியா, புது மாடல் ஃபோன் வாங்கியிருக்கேன் பாத்தியா…’ என்று யாரிடமாவது காலில் விழுந்து கடன் வாங்கியாவது என்னிடம் நிறைய பணமிருக்கிறது என்று தன்னைச் சுற்றியுள்ளவர்களிடம் வீண் பந்தா காட்டிக் கொண்டேயிருப்பார்கள்.

இன்னும் சிலர் தன் மனைவி மற்றும் குழந்தைகள் மீது அளவுக்கதிகமான ஆதிக்கம் செலுத்தத் தொடங்குவார்கள். ‘இவன் தனக்கு அடிமையாவான் போலிருக்கே’ என்ற அவர்கள் மனதில் நம்பிக்கையேற்படுத்தும்படியான  முகபாவனையில் யாராவது இருந்தால், அவர்களையெல்லாம் ஆட்டிப் படைத்து துவம்சம் செய்வார்கள். அவர்களது மனதில் துளியும் அமைதியும், நிதானமுமிருக்காது. அந்த அமைதியின்மையை முடிந்தவரை தான் சந்திக்கும் எல்லோரிடத்திலும் பரப்பிவிடுவார்கள்.

  1. மூன்றாவது வகையினர், எனக்கு எந்தப் பிரச்னையுமில்லை, என் மனைவிக்குத்தான் என் மீதும் உடலுறவிலும் விருப்பமில்லை என்று அவளைக் குறைசொல்வார்கள். இப்படி பேசிக்கொண்டு, தான் மிகுந்த ஆண்மையுடனும் ஒரு பெண்ணைத் திருப்திப்படுத்துமளவுக்கும் இருக்கிறேன் என்பதை மற்றவர்களுக்குப் பறை சாற்றிக் கொள்ளும் வகையில் பல பெண்களுடன் வெளிப்படையாக பலரும் பார்க்கும்படி சுற்றித் திரியத் தொடங்குவார்கள். இன்னும் சிலர் இன்னும் ஒரு படி மேலே போய், இன்னொரு திருமணமும் செய்து கொண்டு தங்கள் ‘ஆண்மையை’ நிரூபிக்க குழந்தையும் பெற்றுக்கொள்வார்கள். ‘நான் சிறப்பாக செயல்பட்டு, என் மனைவியைத் திருப்திப்படுத்தி குழந்தை பெற்றுக் கொண்டேன் பார்த்தீர்களா…?’ என்று பறைசாற்றிக் கொள்கிறார்களாம்.

குழந்தை பெற்றுக் கொள்வதற்கு ஓரிரு நிமிடங்கள் செயல்பட்டு விந்தை வெளியேற்றிவிட்டாலே போதும். அதற்கும் ஒரு பெண்ணை உடலளவிலும் உணர்வுரீதியாகவும் திருப்தியடைய வைத்து உச்சக்கட்டமடைய வைப்பதற்கும் எந்தத் தொடர்புமில்லை, குழந்தை தர முடிந்த ஆண்களெல்லாம், மனைவியை உச்சக்கட்டமடைய வைக்கத் தெரிந்தவர்கள் என்றால் இங்கே கணவன் மனைவிக்குள் உடலுறவு மற்றும் உணர்வுகள் சார்ந்த பிரச்னைகளே இருக்காதே. எதற்கு குழந்தைகள் பெற்ற பிறகும் விவாகரத்துக் கேட்டு நீதிமன்றங்களுக்கு அலைந்து கொண்டிருக்கிறார்கள்? 

நிறைவான காமத்தையும், காதலையும் கொடுக்கத் தெரிந்த ஆணுக்கு, பிரிவு, மணமுறிவெல்லாம் தேவையேபடாதே? அதீத அன்பும், புரிதலுமல்லவா அங்கிருக்கும்?

Photo by Aleksandar Pasaric: https://www.pexels.com/photo/woman-bending-backwards-3139074/

எனவே, ஒரு பெண்ணுக்குக் குழந்தையைக் கொடுத்துவிட்டு அவளை நான் உடலளவிலும் மனதளவிலும் திருப்தியாய் வைத்திருக்கிறேன் என்று காட்டிக் கொள்ளாதீர்கள். அதுதான் உண்மை என்று மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கும் மனதை ஆண், பெண் இருபாலருமே மாற்றிக்கொண்டாக வேண்டும். வயதான ஆண்கள், தன்னைவிட வயதில் மிகக் குறைவான பெண்களைத் திருமணம் செய்துகொள்வதெல்லாம்கூட பெரும்பாலும் இத்தகையை சுய நிரூபித்தல்களுக்காகத்தான்.

தனது மனைவியிடம் அனுசரித்துப் போகவும் மனமில்லாமல், வேறு மாற்று வழிகளில் அவளைத் திருப்திப்படுத்தவும் முயற்சியெடுக்காமல் இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதன் மூலம் தன் ஆண்மையை நிரூபிக்க முயல்வார்கள். ‘என்னிடத்தில் எந்தப் பிரச்னையுமில்லை. பார், இப்போது நன்றாக இருக்கிறேன்… ஒரு சின்னப் பெண்ணைத் திருப்தியாக வைத்திருக்கிறேன்’ என்ற பிம்பத்தைத் தன் மனைவியிடமும் தன்னைச் சுற்றியிருப்பவர்களிடமும் காட்டிக்கொள்ள, அவர்கள் மனதில் பதியவைக்க புதிய மனைவியிடம் எவ்வளவு நன்றாக நடந்துகொள்ள முடியுமோ அவ்வாறெல்லாம் நடந்து கொள்வார்கள். 

ஆனால், அந்தப் புதிய பெண்ணிடத்திலும் வேறு மாற்று முறைகளைப் பயன்படுத்தித்தான் அவளை மகிழ்ச்சிப்படுத்த முடியுமே தவிர, அவன் உடல்நிலையில் எந்த மாற்றமுமிருக்காது. அவனது முதல் மனைவியிடம் பேசிப் பார்த்தால், உண்மையான சிக்கலே அவனிடம்தான் என்பது புரியும். ஒருவேளை சட்டரீதியாக விவாகாரத்து செய்யவும் இன்னொரு பெண்ணை மணக்கவும் வசதியில்லாத ஆண்கள் திருமணத்தை மீறிய உறவுகளில் ஈடுபடுவார்கள். இதன் மூலம் தங்கள் ஆண்மையை மற்றவர்கள் முன் நிலைநிறுத்த, பறைசாற்ற முற்படுவார்கள்.

ஒரு ஆணுக்குக் கடைசி வரை விறைப்புத் தன்மையும் உடலுறவில் சிறப்பாகச் செயல்படும் திறனும் மாறாமல் அப்படியேயிருக்கும் என்ற எண்ணம் ஆண், பெண் இருவருக்குமே இருப்பதால்தான் அந்த நிலையில் அவனுக்கு மாற்றம் ஏற்படும்போது அவர்களது திருமண வாழ்வில் பிரச்னைகள் ஏற்படுகின்றன. அந்தப் பெண் இது தன் கணவனுக்கு மட்டுமே ஏற்பட்டிருக்கும் கோளாறு என்றும் மற்ற ஆண்கள் அனைவருமே கடைசி காலம்வரை உடலுறவில் சிறப்பாகத் தொய்வின்றி இயங்குவார்கள் என்ற அறியாமையில் தன் கணவனின் நிலையை  நினைத்து மிகவும் பயப்படுகிறாள். உடலுறவு விஷயத்தில் தன் எதிர்காலத்தை நினைத்துக் கலங்குகிறாள். 

தனது கணவனுக்கிருக்கும் இந்தப் பிரச்னையைப் பிற ஆண்களிடம் சொல்லும்போது, யாரும் அவர்கள் நிலையை சரிசெய்துகொண்டு, எவ்வாறு அவர்களிருவரும் சேர்ந்து வாழ வேண்டுமென்று ஆலோசனை சொல்வதில்லை. அதற்குமாறாக இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி அந்தப் பெண்ணுடன் எப்படியாவது உறவு வைத்துக் கொள்ளத்தான் முற்படுவார்கள். ஏனெனில், உடலுறவு சார்ந்த பிரச்னையாக மட்டும் கணவன் இதை எடுத்துக்கொள்வதில்லை. இந்நிலையும் வாழ்க்கையில் இயல்பாக ஏற்படக்கூடிய ஒரு நிலைதான், இதை நம்மால் கடந்து வர முடியும் என்று நினைப்பதில்லை. அந்தப் பெண்ணிடம் தங்கள் இயலாமையை மறைக்க மிகவும் முரட்டுத்தனமாக நடந்து கொள்ளத் தொடங்குகிறார்கள். இப்படித் தங்கள் நடத்தையில் கணவன் மிருகத்தனமாக மாறும்போதுதான் பல மனைவிகள் இன்னொரு ஆணுடன் தங்கள் வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

இவர்கள் நாடும் அந்த ஆணும் அது என்னவோ இவளது கணவனுக்கு மட்டுமேயிருக்கும் ஒரு குறைபாடு  என்பது போல் மிகைப்படுத்திச்சொல்லி அவள் மனதில் இன்னும்  பீதியைக் கிளப்பி விடுகிறான். பிற ஆண்களனைவருமே உன் கணவனை விட சிறப்பாகச் செயல்படுவார்கள், குறிப்பாகத் தான் அத்தகையவன், தனது கடைசி மூச்சு இருக்கும் வரை சிறப்பாக இயங்கும் திறனுடையவன் என்பது போல அவளை மூளைச் சலவை செய்கிறான். அவளது கணவன்  உடலுறவு கொள்வதில்லை என்பதையும் தாண்டி, அதுமட்டுமல்லாமல் அவள் தனது கணவனால் அந்த சமயத்தில் சரியாக நடத்தப்படாமலிருப்பதாலும் உலகத்திலுள்ள அத்தனை பாசத்தையும் காதலையும் அவள் மீது தான் பொழிவதைப் போலவும் அவன் காட்டிக் கொள்கிறான். ‘இப்படில்லாம் அவன் நடந்துக்கிட்டான்னுதான் மேடம் நான் நம்பி இவனை இரண்டாவது கல்யாணம் பண்ணேன்… ஆனா, ஒரு வருஷம் ஏதோ நடந்துச்சு… அதுக்கப்புறம் இவனுக்கும் சுத்தமா ஆர்வமில்லை…’ என்று கண்களைக் கசக்கிக் கொண்டு வந்து நிற்கும் பெண்கள் ஏராளம். 

குறிப்பாக ஆல்கஹால், சிகரெட், போதை போன்ற விஷயங்களுக்கு அடிமையாகயிருக்கும் ஆண்களை மறுமணம் செய்து கொள்ள நேரிடும்போது , மிக விரைவிலேயே முதல் கணவனிடம் சந்தித்த அதே பிரச்னைகளை இங்கும் எதிர்கொள்கிறார்கள். அதனால் நபர்களை மாற்றுவது உங்கள் கணவரிடமிருக்கும் உறவில் ஏற்படும் உணர்வுகள் சார்ந்த பிரச்னைகளையோ அல்லது பாலுறவுப் பிரச்னைகளையோ எந்த விதத்திலும் சரி செய்யாது. நிதர்சனத்தை, ஒரு ஆணின் உடல் நிலை மாற்றங்களை சரியாக உணர்ந்து, உள்வாங்கி, அவனுடன் உட்கார்ந்து பேசி, கலந்தாலோசித்து அந்த நிலைமையை சரி செய்யுங்கள். மாற்று வழிகளை இருவரும் சேர்ந்து பின்பற்றுங்கள். 

அப்படி உங்கள் கணவன் தன்னிடமிருக்கும் பிரச்னையை ஒப்புக் கொள்ளாமல், இயல்பாக செயல்படாமல் உங்களைத் துன்புறுத்தும் வழிகளில் இறங்கினால் தற்காலிகமாக உங்கள் பிறந்த வீட்டிற்கோ அல்லது கணவனின் பெற்றோரிடமோ செல்லுங்கள்… நெருக்கமான உறவினர்கள் உதவியுடன் ஒரு நல்ல மருத்துவரிடம் நீங்களிருவரும் சென்று ஆலோசனை பெறுங்கள். உங்கள் கணவர் அதீதக் கொடூரமாக உங்களிடம் நடந்து கொள்ளத் தொடங்கினால் மட்டுமே உங்கள் கணவரைப் பிரியும் முடிவை நீங்கள் எடுக்கலாம். ஏனெனில், அத்தகைய கைமீறிய, ஆபத்தான சூழலில் உங்களுக்கு காதல், காமம் இவற்றையெல்லாம் உங்கள் கணவனிடமிருந்து போராடிப் பெற்றுக் கொள்வதைவிட,  நீங்களும் உங்கள் குழந்தைகளும் உயிருடன், பாதுகாப்பாக வாழ்வது மிகவும் முக்கியம். கூடவேயிருந்து உங்கள் கணவரை சரி செய்யும் கதையெல்லாம் இந்த ஆபத்தான சூழ்நிலையில் வேலைக்காகாது. அந்தப் பொறுப்பை உங்கள் கணவரோ அல்லது அவரைப் பெற்று விட்டு, எதுவுமே சொல்லிக் கொடுக்காமல் வளர்த்திருக்கும் அவர் பெற்றோரோ எடுத்துக் கொள்ளட்டும்.

இத்தைகைய அதீத எல்லைகளுக்கெல்லாம் உங்கள் கணவர் செல்லவில்லை எனும்போது அவருக்குத் தேவை ‘உடலுறவில் தன்னால் சிறப்பாக செயல்படமுடியவில்லை என்ற குறைபாட்டால், தனது மரியாதை இழிவுக்குள்ளாகாமலிருக்க வேண்டும்’ என்பது மட்டுமே என்பதைப் புரிந்து கொண்டு செயல்படுங்கள். தனக்கு உடலுறவில் நாட்டமின்மை ஏற்படும் போதும் தனது உடல் அதற்கு ஒத்துழைக்காமல் போகும் காலகட்டத்திலும்  குறைந்த பட்சம் அந்தக் கணவனுக்காவது, இது எல்லா ஆண்களும் அவர்கள் வாழ்க்கையில் ஏதோ ஒரு கட்டத்தில் எதிர்கொள்ளும் நிலைதான் என்ற புரிதலிருக்கவேண்டும்.

அப்படியிருந்தால், அவன் தன் மனைவியிடம் இதைக் குறித்து நேரடியாகப் பேசிப் புரிய வைப்பான். அல்லது தகுந்த நிபுணர்கள் யாரிடமாவது ஆலோசனைக்கு அழைத்துச் சென்று அந்தச் சூழலை இருவரும் சேர்ந்து எதிர் கொள்ள முயற்சி செய்வான். ஆனால், அவனும் இது தனக்கு மட்டுமே ஏற்பட்டிருக்கும் ஒரு குறைபாடு என்று நம்புவதால்தான், அவன் தன் மனைவியிடம் நிதானமாக நடந்து கொள்ளாமல், மேற்கூறிய மூன்று வழிகளில் செயல்பட்டு அவர்களிருவருக்குமுள்ள இடைவெளியை இன்னும் சிக்கலாக்கிக் கொள்கிறான். எங்கே தனது மனைவி உடலுறவுக்காக இன்னொருவனை நாடிச் சென்று விடுவாளோ என்ற பயத்திலும் பதட்டத்திலுமே இன்னும் அவளைக் கொடுமைப்படுத்தத் தொடங்குகிறான். அந்தக் கொடுமை தாங்காமல் அவள் யாரையாவது திருமணம் செய்து கொண்டு விட்டால், தான் அவளைக்  கேவலமாக நடத்தியதால்தான் அவள் தன்னைக் கைகழுவி விட்டுத் தப்பித்துப் போய்விட்டாள் என்பதை உணர்ந்திருந்தும் அந்த உண்மையை ஒப்புக்கொள்ள மறுப்பான்.

அவள் தனது உடல் சுகத்துக்காக இன்னொரு ஆணைத் தேடிப் போய் விட்டாள் என்று அபாண்டமாகப் பழி சுமத்துவான். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மாறி, மாறி குறைகூறிக்கொண்டு பேட்டி கொடுக்கும் பல தம்பதிகளின்  உண்மை நிலைமை பெரும்பாலும் இப்படித்தானிருக்கும். ஆண், பெண் இருவருக்குமே இந்த விஷயத்தைப் பற்றிய புரிதல் திருமணத்துக்கு முன்பே இருந்துவிட்டால், அந்த நிலையை ஆண் அடையும் போது அவர்கள் இருவரும் அந்தச் சூழ்நிலையை இயல்பாகக் கையாள்வார்கள். பெண்களுக்கு மெனோபாஸ் நிலை எப்படி இயல்பானதோ, அதே போல் ஆண்களுக்கும் ஒரு காலகட்டத்தில் விறைப்புத் தன்மையில்லாமல் போய்விடுவது இயல்புதான் என்று இருவருமே புரிந்து கொள்ளவேண்டும்.

ஆண்குறி உட்புகும் உடலுறவு முறை மட்டுமன்றி, மற்ற முறைகளையும் ஆரம்பம் முதலே பின்பற்றுங்கள். கலவி மட்டுமல்லாமல், ஒன்றாக சமைப்பது, விளையாடுவது, பயணம் செய்வது, நடப்பது, ஒருவரையொருவர் சீண்டுவது, பொழுது போக்குக்கென சில விஷயங்களை இருவரும் ஒன்றாக சேர்ந்து செய்வது, உடல் பிடித்து விடுவது, குழந்தைகளோடு சேர்ந்து நேரம் செலவழிப்பது என எல்லாமே சேர்ந்ததுதான் நிறைவான தாம்பத்யம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

அப்படியொரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும்போது, அந்த ஆணுக்கு ஒரு நாள் விறைப்புத் தன்மையில்லாமல் போய்விடும்  நிலைமை வரும்போது, அது மிகப் பெரியதொரு பாதிப்பை இருவருக்குமே ஏற்படுத்தாது. எல்லா ஆண்களுக்கும் எப்போதாவது ஏற்பட்டேயாக வேண்டிய நிலைதானே இது என்று எளிதாக அதை ஏற்றுக் கொள்வார்கள். இந்த விஷயத்தைக் குறித்து இருவரும் ஆரம்ப நாள்களிலிருந்தே அதிகமாகப் பேச வேண்டும். வேறெந்தெந்த மாற்று முறைகள் உங்கள் மனைவிக்குப் பிடித்திருக்கின்றன என்று வெவ்வேறு முறைகளைக் கையாண்டு பார்த்துக் கண்டுபிடியுங்கள்.

மிக இளம் வயதிலேயே விறைப்பற்றத் தன்மை ஏற்படும்போது வேண்டுமானால், ஒருவேளை அதற்கு மருத்துவரீதியிலான காரணங்கள் இருக்குமென்றும், அதை நிவர்த்தி செய்ய வழியிருக்கிறதென்றும் உங்கள் மனதுக்கே தோன்றினால் மட்டும் தகுந்த மருத்துவரை அணுகுங்கள். ஆனால், உங்கள் மனதை லேசாக, எந்த எதிர்பார்ப்புகளுமில்லாமல் வைத்துக் கொள்ளுங்கள். சரியாகிவிட்டால் மட்டும்தான் இனி நமக்கு வாழ்க்கை, இல்லையென்றால் எதுவுமுமேயில்லை என்பன போன்ற அதீத கற்பனைகளைச் செய்து கொள்ளாதீர்கள். இளம் வயதில் பெரும்பாலும் மனதளவிலான காரணங்களைச் சரிசெய்தாலே  இப்பிரச்னைகளிலிருந்து விடுபட்டு விடலாம்.

Unconsummated marriage என்ற காரணத்திற்காக அதாவது திருமணமாகியும் தன் துணையுடன் உடலுறவில் ஈடுபடமுடியவில்லை என்ற காரணத்திற்காக விவாகரத்து கேட்டு விண்ணப்பிக்கும் தம்பதிகள் பலர். அவர்கள் கொஞ்சம் நேர அவகாசமெடுத்து தகுந்த   நிபுணர்களை சந்தித்து உறவுகள் மேம்பாட்டிற்கு ஆலோசனைகளும் தேவைப்பட்டால் பாலியல் மருத்துவர்களிடம் சிகிச்சையும் எடுத்துக் கொண்டாலே விவாகரத்தைத் தவிர்த்து விடலாம். தங்கள் வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியான மணவாழ்வைத் தொடரலாம்.

மிக இயல்பாக, அமைதியான மனதுடன் மருத்துவரை அணுகுங்கள். ஆண்கள் தங்கள் வாழ்க்கையில் ஒரு பெண் நுழைவதற்கு முன்பே இந்த விஷயங்களில் தங்களைச் சரிசெய்து கொள்வது நல்லது. உடலுறவு தொடர்பான விஷயங்களில் கொஞ்சமும் ஆர்வமேயில்லையென்றாலோ அல்லது ஏதாவது உடல் பிரச்னைகளால் உங்களால் பாலுறவில் சிறப்பாகச் செயல்பட முடியாது என்று உங்கள் மனதுக்குத் தோன்றினாலோ ஒரு மருத்துவரை அணுகிப் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். ‘செக்ஸ் தெரபிஸ்ட்’ உதவியுடன் உங்களுக்குப் பரிசோதனைகள் செய்து சரிசெய்து விடுவார்கள். ‘ஒரு வேளை திருமணம் செய்து கொண்டாலும் உங்களால் இயல்பான பாலியல் வாழ்க்கையை நடத்த முடியாது’ என்று மருத்துவர்கள் கூறும் பட்சத்தில் திருமணத்தைத் தவிர்த்துவிடுவதுதான் நல்லது. 

மானம், மரியாதை இவற்றுக்காக சும்மா பேருக்கு ஒரு திருமணம் செய்து கொண்டு, தெரிந்தே ஒரு பெண்ணின் வாழ்க்கையைக் கெடுக்காதீர்கள்.

இதேதான் பெண்களுக்கும். உடலுறவில் ஆர்வமின்மை, அதீத வெறுப்பு, அல்லது திருமணம் , குழந்தை பெற்றுக் கொள்வது இவற்றில் அதீத பயம் போன்ற பிரச்னைகள் உங்களுக்கு இருந்தால், திருமணத்துக்கு முன்பே தகுந்த மருத்துவர்களை அணுகிப் பரிசோதனைகள் செய்து கொள்ளுங்கள். 

பெரும்பாலும் தகுந்த ஆலோசனைகள், தேவைப்பட்டால் சிகிச்சைகளின் மூலம் சரிசெய்து விடுவார்கள். வெகு குறைந்த சதவீதத்தினருக்கு மட்டுமே, உண்மையிலேயே திருமண உறவு சரிப்பட்டு வராது  என்று நூறு சதவீதம் உறுதியாகத் தெரிந்தால் மட்டுமே, எந்த மருத்துவரும் திருமணம் செய்து கொள்ளாதீர்கள் எனப் பரிந்துரைப்பார். அப்படி சொல்லும் பட்சத்தில்  நீங்கள் திருமணம் செய்வதைத் தவிர்ப்பதே நல்லது. அல்லது இத்தகைய பிரச்னைகளுடனிருக்கும் ஆண், பெண் இருவருமே தங்கள் உடல்நிலையைப் பற்றிய உண்மையைச் சொல்லி அதை ஏற்றுக்கொள்ளும் நிலையிலிருப்பவர்களையோ அல்லது அதே போன்ற பிரச்னையுடனிருப்பவர்களையோ வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொண்டு மாற்று முறைகளில் ஒருவரையொருவர் மகிழ்ச்சிப்படுத்திக் கொள்ளுங்கள். 

செயற்கை முறைகளில் குழந்தை பெற்றுக் கொள்ளவும் வாய்ப்புகளிருப்பதால், தகுந்த மருத்துவர்களுடன் ஆலோசித்து அவர்களது உதவியுடன் குழந்தையும் பெற்றுக் கொண்டு சிறப்பாக வாழுங்கள். பொய் சொல்லியோ, உண்மையை மறைத்தோ மட்டும் திருமணம் செய்து கொள்ளாதீர்கள.

இந்தத் தொடரைப் படிக்கும் அனைவருமே, திருமணமான புதிதில் உங்கள் இருவரது உடலும்  சரியான நிலையிலிருக்கும்போதே எவ்வளவு முடியுமோ அவ்வளவு நெருக்கமாக உங்கள் மனைவியுடன் நேரம் செலவழியுங்கள். இது பிற்காலத்தில் உங்கள் உடல், உடலுறவுக்கு ஒத்துழைக்காத காலகட்டத்தில் ஒரு அதிருப்தி மனநிலையை ஏற்படுத்தாது. சரியான வயதில் நன்றாக உணவு உண்டு, விளையாடி வாழ்க்கையை அனுபவித்தவர்களுக்கு வயதான காலத்தில் உணவுக்கட்டுப்பாடுடனிருப்பதோ, அமைதியாக ஓரிடத்திலிருப்பதோ பெரிய பாதிப்புக்களை ஏற்படுத்தாது.

பிறகு பார்த்துக் கொள்ளலாம் என காலாகாலத்தில் தங்கள் வாழ்க்கையில் எதையுமே அனுபவிக்காமல் தள்ளிப்போடுபவர்கள்தான், பிற்காலத்தில் என்ன வசதி வந்தும், தான் நினைத்தபடி ஒரு வாழ்க்கையை வாழமுடியாமல் போகும்போது மிகுந்த மன உளைச்சலுக்குள்ளாகிறார்கள். பிறரையும் வாழ விடாமல் கெடுப்பார்கள்.

சில பெண்களுக்கு முப்பந்தைந்து வயதிலும், சிலருக்கு நாற்பதுகளிலும், சிலருக்கு ஐம்பதைத் தாண்டிய பிறகும் மெனோபாஸ் ஏற்படுவது எப்படி இயல்பானதோ,  இப்போதுதான் நிகழும் என்று எப்படி யாராலும் குறிப்பிட முடியாதோ, அதேபோல்தான் ஆண்களுக்கும் எந்த வயதிலும் அவர்களது உடல் பாலுறவுக்கு ஒத்துழைக்காமல் போகலாம்… அதுவும் இயல்பானதுதான். அதனால் எப்போதுமே வேலை வேலை, நிறைய சம்பாதிக்க வேண்டும், நிறைய சேமிக்க வேண்டும் என்று பணத்துக்குப் பின்னால் மட்டும் ஓடாமல் உங்கள் அந்தரங்க வாழ்வுக்கும் போதுமான நேரத்தை செலவழியுங்கள். உங்களை உடலளவிலும் மனதளவிலும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள சரியான உடலுறவு மிகவும் அவசியம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். 

உங்கள் மனைவியின் மனதையும் உடலையும் சீராக வைத்திருப்பதில், பாலுறவு வாழ்க்கையில் தங்களது பங்கு எவ்வளவு முக்கியம் என்பதை ஒவ்வொரு ஆணும் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். உங்கள் மனைவி உடலுறவில் உச்சக்கட்டமடைந்தால்தான் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் உச்சக்கட்டத்தை அடைய முடியும். உங்கள் குழந்தைகள் மகிழ்ச்சியாகவும் நிறைவான மனதுடனும் வலம் வர முடியும். உங்கள் குடும்பம் சிறப்பாக இருந்தால்தான், அடுத்தவர்களைத் தேவையில்லாமல் துன்புறுத்தாமல், உங்களைச் சுற்றியிருக்கும் சமூகத்துக்கு எந்த பங்கமும் ஏற்படுத்தாமல் வாழ்வீர்கள். இவையெல்லாமே ஒரு சங்கிலித் தொடர் போலத்தான்.

ஒரு குடும்பத்தில் வாழும் பெண் மகிழ்ச்சியாக இல்லையென்றால், கண்டிப்பாக அவள் கணவனால் எதையும் சாதிக்க முடியாது. ஒரு வீட்டிலுள்ளவர்கள் வெற்றி, மன நிம்மதி, ஆரோக்கியம், மகிழ்ச்சியுடன் வாழ வேண்டுமென்றால் அந்த வீட்டிலுள்ள பெண் அப்படியெல்லாம் இருந்தாக வேண்டும்… அவளை அப்படி வைத்திருக்க வேண்டிய முழுப் பொறுப்பும் அந்தக் கணவனுக்கு மட்டும்தானிருக்கிறது என்று புரிந்து கொள்ளுங்கள். உங்கள் மனைவியை உடலளவிலும், மனதளவிலும் 100% மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் வைத்துக் கொண்டீர்களென்றால் அவள் அதைவிட உங்களை 1000 மடங்கு  சிறப்பாக வைத்திருப்பாள். பாலியல் உறவு குறித்து உங்களது பல சந்தேகங்களுக்கும் இந்தப் புத்தகம் ஒரு பதிலாகவும், உங்களது இல்லற வாழ்க்கையில் நீங்கள் இன்னும் சிறப்பாக செயல்பட ஒரு நல்ல வழிகாட்டியாகவுமிருந்திருக்கும் என்று நம்புகிறேன். 

இந்தத் தொடரைப் பற்றிய உங்களது கருத்துகளை என்னிடம் feedbacktocelinroy@gmail.com என்ற மின்னஞ்சல் வழியாகப் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களுக்கு ஏதாவது சந்தேகமிருந்தாலோ அல்லது அடுத்தது இன்னும் என்னென்ன தலைப்புகளில்  தொடர்கள் வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அவற்றையும் தெரியப்படுத்துங்கள். 

மீண்டும் சந்திப்போம்…

வாழ்த்துக்கள்!

வணக்கம்…

படைப்பு:

செலின் ராய்

காட்சித்தகவலியல் (Visual communication) துறையில் இளங்கலையும்இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் (Mass communication & Journalism) உளவியல் (Psychology) இவையிரண்டிலும் முதுகலைப் பட்டமும் அழகியலில் (Advance Diploma in Beautician) அட்வான்ஸ்டு டிப்ளமோ பட்டமும் பெற்றவர்விரிவுரையாளருக்கான தேர்வில் தேர்ச்சி பெற்று (UGC – NET) பல கல்லூரிகளில் துறைத்தலைவராகப் பணியாற்றியவர்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு விடுமுறையில் எழுதத் தொடங்கிதமிழில் பல முன்னணி இதழ்களில் எழுதியவர். புத்தகங்கள், மொழிபெயர்ப்பு நூல்கள் எழுதியுள்ளார். பிரபல பெண்கள் பத்திரிக்கைக்கு 21 வயதிலேயே ஆசிரியரான போது, ‘ The Youngest Editor of Tamilnadu’ என ‘The Hindu’ பத்திரிக்கை செய்தி வெளியிட்டது53 ஆடியோ மற்றும் வீடியோ சிடிக்களை பல தலைப்புகளிலும் வெளிட்டுள்ள இவர் எழுதுவதுடன் உறவுச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான பல பயிலரங்குகளை தமிழகமெங்கும் நடத்தி வருகிறார்இவருக்கு மனித உரிமைக் கழகம் மனித நேயத்துக்கான விருது வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.