வேலைக்காரி 1949 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். 1947 ஆம் ஆண்டு அண்ணாவால் நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமிக்காக எழுதப்பட்ட இந்த நாடகம் பிற்காலத்தில் திரைப்படமாகி இருக்கிறது. 1844 ஆம் ஆண்டு வெளியான, அலெக்ஸாண்டர் டுமாஸ் (Alexandre Dumas) எழுதிய புதினமான தி கவுண்ட் ஆஃப் மான்டே கிறிஸ்டோ (The Count of Monte Cristo) விலிருந்து இப்படத்தின் கரு உருவாகி இருக்கிறது.

A. S. A. சாமி என்னும் அருள் சூசை ஆரோக்கிய சாமியால் இயக்கப்பட்டு, ஜூபிடர் பிக்சர்ஸின் M. சோமசுந்தரம் மூலம் தயாரிக்கப் பட்ட இப்படம் பெரு வெற்றி பெற்று இருக்கிறது.

திரைப்படம் பிப்ரவரி 1949 இல் வெளியிடப்பட்டது. அதாவது ஒரே மாதத்தில் அண்ணாவின் நல்லதம்பி, வேலைக்காரி என இரு திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. இப்படம் தெலுங்கில் சந்தோஷம் எனவும், இந்தியில் நயா ஆத்மி எனவும், கன்னடத்தில் மல்லி மதுவே எனவும் மறு ஆக்கம் செய்யப்பட்டது.

நடிகர்கள்

ஆனந்தன்- கே.ஆர்.ராமசாமி

மணி- டி.எஸ்.பாலையா

மூர்த்தி, யோகி -எம்.என். நம்பியார்

டி.பாலசுப்ரமணியம்- வேதாச்சலம்

பாலு – புளி மூட்டை ராமசாமி

முருகன்- டி.பி.பொன்னுசாமி

அரசு வழக்கறிஞர் – எஸ்.ஏ.நடராஜன்

சொக்கன்- பி.எஸ்.சிவானந்தம்

சுந்தரம் -M. K. முஸ்தபா

எம்.என்.கிருஷ்ணன்- பாலு வீட்டு வேலைக்காரராக

பி.எஸ்.தட்சிணாமூர்த்தி, நாட் அன்னாஜி ராவ், எம்.கே.கோபாலர், எம்.ஏ.கணபதி

பெண் நடிகர்கள்

அமிர்தம்- எம்.வி. ராஜம்மா

சரசா- வி.என்.ஜானகி

பி.கே.சரஸ்வதி -சுந்தர கோஷ்

முத்தாயி – கே.எஸ்.அங்கமுத்து

பாக்யம்- எம்.எஸ்.எஸ்.பாக்யம்

ஆனந்தனின் தாய் -எம்.எம். ராதா பாய்

நடனம்

லலிதா, பத்மினி

வேதாச்சலம் பணக்காரர். சரசாவும் மூர்த்தியும் அவரது பிள்ளைகள். மூர்த்தி நல்லவர். சரசா ஆணவம் கொண்டவர். இவர்களின் வீட்டுப் பணிப்பெண் அமிர்தம். அமிர்தத்தின் தந்தை முருகேசன், வேதாச்சலம் குடும்பத்திற்கு நம்பிக்கையான வேலையாள்.

முருகேசன், அமிர்தத்திற்கு மாப்பிள்ளை பார்த்திருக்கிறார். மாப்பிள்ளைக்கு வசதி உண்டு; ஆனால், வயதானவர். அதனால் அமிர்தம் மறுக்கிறார். ஆனால், முதலாளி, அவரது மகள் வயதானால் என்ன எனக் கேட்கிறார்கள். மூர்த்தி, அமிர்தத்திற்குப் பரிந்து பேசுகிறார். மாப்பிள்ளையின் தம்பியும் தங்கையும் பெண் பார்க்க வருகிறார்கள். மூர்த்தி கொடுத்த யோசனையின் பேரில், அமிர்தம், தனது முகத்தை அலங்கோலம் செய்துகொள்கிறார். மாப்பிள்ளையின் அக்கா, இதுவா பெண் எனக் கோபித்து செல்கிறார். திருமணம் நின்று போகிறது.

மூர்த்தி, அமிர்தத்திற்கு வேறு யார் மீதும் விருப்பம் இருக்கிறதா எனக் கேட்க, அமிர்தம் இல்லை என்கிறார். மூர்த்தி, தனது காதலைச் சொல்கிறார். மூர்த்தியும் அமிர்தமும் காதலிக்கிறார்கள்.

இன்னொரு பக்கம், வேதாச்சலத்திடம் சுந்தரம் கடன் வாங்கியிருக்கிறார். வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத அவரை வேதாச்சலம் அவமானப்படுத்துகிறார். இதனால், சுந்தரம் தற்கொலை செய்துகொள்கிறார். அதே நாள், மிகுந்த பணத்துடன் வரும், சுந்தரத்தின் மகன் ஆனந்தன், தூக்கில் தனது தந்தையைப் பார்த்து, வேதாச்சலத்தைக் கொல்வதற்காகக் கத்தியைக் கூர்மையாக்கும் போது, அவரது நண்பன் மணி, பழிவாங்க கத்தியைத் தீட்டாதே; புத்தியைத் தீட்டு எனச் சொல்கிறார்.

ஆனந்தன், வேதாச்சலத்தைப் பழிவாங்க காளி தேவிதான் உதவ முடியும் என நினைத்து கோயிலில் சென்று வேண்டுகிறார். ஆனால், வேதாச்சலத்திடம் மேலும் மேலும் செல்வம் குவிகிறது. இதனால் கோபம் கொண்ட ஆனந்தன், தேவியின் சிலை முன் நின்று திட்டுகிறார். இதனால் கோபம் கொண்ட மக்கள் அவரைத் துரத்துகின்றனர். ஆனந்தன் ஓடுகிறார். அப்போது அந்த வழியாக மணி வருகிறார். இருவரும் ஓர் இடத்தில் ஒளிந்து இருக்கிறார்கள். அங்கு ஒரு மூட்டையில் இறந்த உடல் ஒன்று இருக்கிறது. பார்த்தால், அந்த ஆள் ஆனந்தன் மாதிரியே இருக்கிறார். கூடவே அவரது நாட்குறிப்பும் உள்ளது. அவர் பெயர் பரமானந்தம். பெரிய பணக்காரர்.

ஆனந்தன், பரமானந்தம் வேடத்தில் அவரது ஊருக்குச் செல்கிறார். கூடவே மணியும் செல்கிறார். பணக்காரர் என நம்பி, அவருக்கு சரசுவை, அவரது அப்பா வேதாச்சலம் மணமுடித்து வைக்கிறார். ஆனந்தன் மனைவியைக் கொடுமைப்படுத்துகிறார். மாமனாரின் நற்பெயரைக் கெடுக்கிறார். மூர்த்திக்கும், மாமனாருக்கும் இடையே பிளவை ஏற்படுத்துகிறார். இதனால் மூர்த்தி வீட்டைவிட்டு வெளியேறுகிறார். சென்னை சென்று, தனது நண்பரின் உதவியைப் பெற்ற பிறகு அமிர்தத்தைத் திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து செல்கிறார்.

அமிர்தத்தை கிராமத்திற்கு அழைத்துச் சென்று யாருக்காவது மணமுடிக்கலாம் என அவரது அப்பா திட்டமிடுகிறார். அதனால், அமிர்தம் வீட்டை விட்டு வெளியேறுகிறார்.

சென்னை சென்ற மூர்த்தியிடம் பணம் இல்லை எனத் தெரிந்ததும், நண்பர்கள் நிராகரிக்கிறார்கள்.

மகளின் இறப்பினால் மனப்பிறழ்விற்கு ஆளான பணக்காரரான பாலு, அமிர்தத்தைத் தன் மகள் என நினைக்கிறார். அமிர்தத்தின் உதவியால் குணம் பெற்று அவரைத் தன் வீட்டில் வாழச் செய்கிறார்.

அமிர்தம் இறந்துவிட்டதாக மூர்த்தி தவறான தகவலைப் பெறுகிறார். இதனால் அமைதி பெற, யோகி நடத்தும் ஆசிரமம் செல்கிறார். யோகியின் மோசடிகளைக் கண்டுபிடிக்கிறார். அதனால் ஏற்பட்ட கைகலப்பில், யோகி இறந்துவிடுகிறார். மூர்த்தி கொலைக் குற்றம் சாட்டப்படுகிறார். ஆனந்தன் வட இந்திய வழக்கறிஞராக மாறுவேடத்தில் வந்து வழக்கை நடத்துகிறார். யோகி காவல்துறையினரால் தேடப்படும் குற்றவாளி என்பதை நிறுவுகிறார். அது கொலை அல்ல தற்காப்புக்காக நடந்தது என்கிறார். நீதிமன்றம் மூர்த்தியை விடுவிக்கிறது.

ஆனந்தன் தனது கட்டணமாக மூர்த்தி பாலுவின் மகளைத் திருமணம் செய்ய வேண்டும் என்கிறார். வேறு பெயரில் இருக்கும் அமிர்தம், மூர்த்தி திருமணம் நடைபெறுகிறது. ஆனந்தன், வேதாச்சலத்திடம், மூர்த்தி ஒரு வேலைக்காரனின் மகளான அமிர்தத்தை மணந்துகொண்டார் என்பதையும், தான் யார் என்பதையும் வெளிப்படுத்துகிறார். வேதாச்சலம் தன் தவறுகளுக்கு மன்னிப்புக் கேட்கிறார். “ஒன்றே குலம் ஒருவனே தேவன் என உலகிற்கு எடுத்துச் சொல்வேன்” என்பதுடன் திரைப்படம் நிறைவு பெறுகிறது.

திரைப்படத்தில் லலிதா பத்மினி ஆடும் ஓரிடம் தனிலே பாடல் மிகவும் புகழ் பெற்ற பாடல்.

ஓரிடம் தனிலே – நிலை

இல்லாதுலகினிலே

உருண்டோடிடும் பணம் காசெனும்

உருவமான பொருளே

ஊரும் பேரும் தெரியாதவரை

உயர்ந்தோராக்கிடுமே

காசு நல்ல காரியம் செய்யாது

கண்மூடி தூங்க கருணை காட்டாது

களவு கொலையும் உண்டாக்கும்

கவலை மிகவும் சேர்க்கும்

காமுறு இன்பம் சொந்தம்

எல்லாமே நீக்கும்

‘குடத்தை இடுப்பில் வைத்துக்கொண்டு, வளைந்து வளைந்து நடப்பது போலல்லவா வளைந்து வளைந்து பேசுகிறாய் என்கிற கேள்விக்கு மனதில் பாரம் இருந்தால் நாக்கு வளையத்தானே செய்யும்’ என்கிற பதில் போன்ற பல வரிகள் அண்ணாவின் சிறப்பிற்கு எடுத்துக்காட்டுகள்.

கதையில் தந்தையைப் பழிவாங்க மகளைத் துன்புறுத்துவது என்பது எந்த வகையான செயல் எனப் புரியவில்லை. இதை நாயகன் செய்வது என்பது எனக்கு ஏற்பில்லாததாகத் தோன்றியது.

நம்பியார் நல்லவராக வரும் சில படங்களில் இதுவும் ஒன்று. மூர்த்தியாக அவ்வளவு பாந்தமாகப் பொருந்துகிறார். அவர் எப்போது வில்லன் என்கிற முத்திரை குத்தப்பட்டார் எனத் தெரியவில்லை. வில்லன் என்றாலே அவன் பெரிய நம்பியார் என்று சொல்லும் சொல்லாடல் மக்களிடம் இருக்கும் அளவிற்கு அவர் வில்லனாகவே பார்க்கப்படுகிறார். நாயகனாகவும் வருவதற்கான முழுத்தகுதியும் பெற்றவர் என இதைப் போன்ற சில திரைப்படங்கள் சொல்கின்றன. யோகியாகவும் அவரே வருகிறார். இருவரும் ஒருவருக்கு இன்னொருவர் சண்டை போட்டு ஒருவர் இறக்கிறார்.

ஆனந்தன் வடநாட்டு வக்கீலாக வரும்போது மாறுவேடத்திற்காக தாடி மீசையுடன் மச்சம் வைத்து இருக்கிறார். மச்சம் என்பதுதான் மாறுவேடத்தில் அடையாளம் என அப்போதிருந்தே இருந்து இருக்கிறது.

இணையத்தில் திரைப்படம் இருக்கிறது என்றாலும், அதன் பிரதி அவ்வளவு தரமாக இல்லை. சிரமப்படுத்தான் பார்க்க வேண்டி உள்ளது. சிறிது புதுப்பித்தால் நன்றாக இருக்கும்.


(தொடரும்)

படைப்பாளர்:

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’ என்கிற புத்தகமாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கிறது.