பெண்கள் படிப்பதும் வேலைக்குப்போவதும் சாதனை புரிவதும் இயல்பான விஷயம் இப்போது. ஆனால், பெண்கள் வீட்டை விட்டு வெளியே வருவதும், படிப்பதுமே சாதனையாக இருந்த காலத்தில் எழுத்தில் சாதிப்பதெல்லாம் சாமானிய விஷயம் இல்லை. சுதந்திரப்போராட்டத்தின் போது, பொது வாசிப்பு உருவாகி இருந்த சமயத்தில் பெண்களின் வாழ்க்கைப் பிரச்சனைகளை, தேவைகளை அவர்களின் உரிமைகளை சமூகத்திற்கு அங்கதச்சுவையோடு வெளிப்படுத்தியவர் குமுதினி. நாடகங்கள், கட்டுரைகள் எழுதுவது மட்டுமல்லாமல், மொழிபெயர்ப்பு, பயணக்கட்டுரை என பலதளங்களிலும் பல ஆண்டுகள் தொடர்ந்து வெற்றிகரமாக செயல்பட்டவர் எழுத்தாளர் குமுதினி.  

குமுதினியின் இயற்பெயர் ரங்கநாயகி. ஸ்ரீரங்கம் ஸ்ரீனிவாச ஆச்சாரியார், லட்சுமியம்மாள் தம்பதியருக்கு 1905-ல் பிறந்தார். இவருடன் பிறந்தவர்கள் மூன்று சகோதரர்கள், மூன்று சகோதரிகள். இவரது தந்தை ஸ்ரீனிவாச ஆச்சாரியார் நீதிபதியாகப் பணிபுரிந்தவர். அக்கால முறைப்படி வீட்டிலேயே, தந்தையிடம் கல்வி பயின்று வந்தார் குமுதினி.

குமுதினிக்கு 10 வயதில் 16 வயதான ஸ்ரீனிவாச ஐயங்காருடன் மணம் நிகழ்ந்தது. திருமணத்திற்குப் பிறகும் வீட்டிலிருந்தபடி கல்வி பயின்றார் குமுதினி. சில காலங்களிலே குடும்ப பொறுப்புகள் காரணமாக கல்வி தடைப்பட்ட போதும் கணவரின் ஆதரவில் இலக்கியங்களை வாசித்து வந்தார். இள வயதில் ஏற்பட்ட ஒரு காய்ச்சலால் காதுகேட்கும் திறனை இழந்தார். அந்த தனிமையே அவரை எழுதத் தூண்டியது. கட்டுரைகள், நாடகங்கள் என பலவற்றை படைக்க ஆரம்பித்தார். 1950களில் கலைமகளில் தொடராக வந்த இவரது உளவியல் கட்டுரைகள் அக்காலத்தில் மிகுந்த கவனத்தைப் பெற்றவை.

குமுதினியின் மகன் நந்தகுமாரின் மனைவி பிரேமா நந்தகுமார் எழுத்தாளர், கல்வியாளர். அவர் குமுதினியின் வாழ்க்கை வரலாற்றை எழுதியிருக்கிறார். எழுத்தாளராகவும் காந்தியவாதியாகவும் சமூக செயல்பாட்டாளராகவும் இருந்த சிறந்த பெண்மணியான குமுதினியைப் பற்றி அவரது மருமகளான பிரேமா நந்தகுமார் நம்மோடு பகிர்ந்து கொண்ட நினைவலைகள் சில.

எழுத்தாளர் குமுதினி அவர்களை (திருமதி ரங்கநாயகி தாத்தம்) நான் என் சிறு வயதிலிருந்தே அறிவேன். பத்து வயதிலேயே அவருடன் கடிதத்தொடர்பு கொண்டேன். அதற்கு அந்த வயதிற்கு எனக்கு புரியக்கூடிய மொழிநடையில், படிப்பின் முக்கியத்துவம் மற்றும் நூல்கள் தரும் உயர்ந்த காட்சிகளைப் பற்றி  ஒவ்வொரு கடிதத்திலும் எனக்கு பதில் எழுதுவார். 

எனது பதின்ம வயதில் எங்களது குடும்ப நண்பர்கள் எனக்குப் பலவிதமாக பரிசளிப்பார்கள்.  ஆனால் குமுதினி ஒரு நாற்பது பக்க நோட்டுப்புத்தகத்தில் எனக்குத் தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருதம், ஹிந்தி  மொழிகளில் உள்ள சிறந்த வரிகள் சிலவற்றை (சங்க இலக்கியம் உள்பட) தன் திருத்தமான கையெழுத்தில் எழுதி அனுப்பியிருந்தார். எனது வீட்டில், கடந்த எழுபது ஆண்டுகளில் நான் எனக்கென  பெரியதொரு நூல் நிலையம் அமைத்துக்கொண்டிருந்தாலும், அவற்றில் மிகவும் பெருமையுடன் நான் மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டுவது இந்த நோட்டுப்புத்தகத்தைத் தான்!

            குழந்தை வளர்ப்பு பற்றிய நூல், மரியா மாண்டிசோரியுடன் நேர்காணல், குழந்தைகள்  நல்ல முறையில் வளர்ச்சி பெற கவிதைகள், கட்டுரைகள் என பலவற்றை எழுதியிருக்கிறார். இதிலிருந்து அவர் வளரும் சமூகம் பற்றிய சிந்தனையில் எப்பொழுதும் ஈடுபட்டிருந்தது தெரியும்.

 குமுதினி அவர்களின் கதைகளில் ’நந்துவின் பிறந்தநாள்’ எனும் கதை மிகவும் பிரசித்தி பெற்றது. ஆறு வயதுக் குழந்தை நந்து தனது  பிறந்தநாளை தன் நண்பர்களுடன் எப்படிக் கொண்டாடினான் என்று  விவரிக்கும் இக்கதையின் பாங்கு தான் அதனைச்செவ்வியல் இலக்கியமாக இன்று வரை மக்கள் பேசக்காரணம்.

குமுதினி அவர்கள் நாடகங்களும் எழுதியிருக்கிறார்.  அவற்றில் ஒரு சில நாடகங்கள் மேடையேறியுள்ளன. தில்லி பாதுஷாவின்  மகள், ஸ்ரீரங்கநாதருடைய விக்கிரகத்தைக் கண்டு மையல் கொண்டதும், அவளது திருவுருவம் இன்றும் அரங்கர் கோவிலில் வணங்கப்படுவதும் அனைவரும் அறிந்ததே. இந்த நாடகம்  டில்லி சென்ற நம்பெருமாள் எனும் நாடகமாக 1980இல் அரங்கேறியது.  இதில், பிரபல காலக்ஷேப விற்பன்னர் திரு எம்பார் விஜயராகவாச்சாரியார்  கதாநாயகனாகத் தோன்றி நடித்ததை திருவரங்கம் முழுவதும் கண்டு களித்தது.

அங்கதச்சுவையுடன்  ஆழ்ந்த  கருத்துக்களை சொல்லும் விதமாக இருப்பதன் காரணமாக திருமதி குமுதினியின்  கதைகள், நாடகங்கள் அனைத்தும் இன்றும் சிந்திக்க வைக்கின்றன. இதற்கு அவரது விசுவாமித்திரர் எனும் நாடகமே சான்று.  இதற்குக் காரணம் அவரது அயராத  உழைப்பு, அபாரமான படிப்பு எனலாம்.  பள்ளி செல்லாமலேயே, தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், ஹிந்தி மற்றும் குஜராத்தி மொழிகளில் அவர் பெற்றிருந்த தேர்ச்சி வியப்பிற்குரியது.

 அன்று இந்திராகாந்தி அவர்கள் காங்கிரஸ் கட்சிக்காக ஒரு  சேனை நடத்தியதுபோல், அரிச்சந்திரன் மகன் லோஹிதாக்ஷனும் சிறுவர்களை வைத்து விசுவாமித்திரருக்கு எதிராகச் செயற்படுவதற்காக ஒரு சேனை அமைப்பதை நாம் விசுவாமித்திரர் நாடகத்தில் காணலாம்.  முடிவில் விசுவாமித்திரர் அரியாசனத்தை விட்டு இறங்கி, அரசனாக இருந்தது போதும் என்று மீண்டும் தவம் செய்யச் சென்றுவிடுகிறார். படிப்பு, தவம் என்று ஆண்கள் தங்களை முதன்மைப்படுத்திக்கொண்டு, பெண்களது பெருமையை கவனிக்காமல் இருப்பதை  சிரிப்பின் மூலம் சிந்திக்கவைக்கும் நாடகம் அது. 

காந்தீயத்தில் முழு நம்பிக்கை வைத்திருந்த குமுதினி அவர்கள் ஜே.ஸி. குமரப்பா எழுதியுள்ள் தி வில்லேஜ்  அப்லிஃப்ட் எனும் நூலை அற்புதமாக கிராம இயக்கம் எனும்  தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார். மொழிபெயர்ப்பும் அவருக்கு கைவந்த கலையே.  அவரது முதல் மொழிபெயர்ப்பு நூல் ரவீந்திரநாத் தாகூரின் “யோகாயோக் எனும் புதினம்.  இதை  குமுதினி என்று மொழிபெயர்த்தார். கதாநாயகியின் பெயரும் குமுதினி தான். இந்த மொழிபெயர்ப்பைக் கண்டு வியந்த அக்காலத்து பிரபல எழுத்தாளர்கள், குமுதினி என்ற பெயரையே அவருக்கு புனைப்பெயராக சூட்டினர். தாகூரை முதன்முறையாக தமிழிலக்கியத்திற்கு அறிமுகப்படுத்தியது இந்தப் புதினமே.

மகாத்மா காந்தியிடம்  மட்டற்ற பக்தி கொண்டு சுதந்திர பாரதம் உருவாக வேண்டும் என்று அயராது உழைத்தவர்களில் குமுதினியும் ஒருவர். காந்தீயத்தை முன் வைத்து அவர் எழுதியுள்ள கதைகள் மற்றும் கட்டுரைகள் அனைத்துமே விடுதலைப் போராட்டத்தை எடுத்துக்கூறுகின்றன. இவற்றை ஒரு  மணித்திரள்  எனலாம். இதற்கு முக்கிய காரணம் வெறும் பேச்சு, எழுத்து என்று அவர் பின்தங்கவில்லை. 

வார்தா ஆசிரமத்திற்குப் பல முறை சென்று காந்தியடிகளிடம்  நேரில் பயிற்சி பெற்றவர்.  வாழ்நாள் முழுவதும் அவரது கணவர் திரு ஸ்ரீரங்கம் சினிவாச தாத்தாச்சாரியாரும் குமுதினி அவர்களும் கதராடையே அணிந்தனர்.  தனது புடவைகளுக்கான கதர் நூலை தானே இராட்டினத்தில் நூற்ற பெருமையும்  குமுதினிக்கு உண்டு.  அந்த இராட்டினத்தை ஒரு தெய்வீக உருவமாக வீட்டில் வைத்திருக்கிறேன்.

காந்தீய சேவையில் ஈடுபட்ட குமுதினி அவர்கள் ஜாதி, மதம் போன்றவற்றை முக்கியமாக நினைக்கவில்லை. கலப்பு மணத்தை அவர் எதிக்கவில்லை என்பதற்கு அவர் எழுதியுள்ள, திவான் மகள்  எனும்  புதினம் (திரு கி.வா. ஜகன்னாதன் ஆசிரியராக இருந்த கலைமகள் காரியாலயம் அச்சிட்டது)    சாட்சியாக விளங்குகிறது.

பயணக்கட்டுரைகள் பல எழுதியுள்ளார். குஜராத் மாநிலத்தில்  ஜுனாகாட் போன்ற இடங்கள்,  இலங்கை, பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளுக்குச் சென்றது மட்டுமல்லாமல், மிக ரசமான பயண இலக்கியங்களும் படைத்திருக்கீறார்.

அவரது இறுதி நாட்களில், நம்மாழ்வாரின் 100 பாசுரங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இறுதிவரை  ஆழ்வாரின் திருவாய்மொழி மீது அளவற்ற ஈடுபாடு கொண்டிருந்த என் மாமியார், திருமதி குமுதினி அவர்கள், அப்பாசுரங்களின் நினைவிலேயே ஆழ்ந்து, 1986ஆம் ஆண்டு ஆசாரியன் திருவடிகளை  அடைந்தார். 

  

படைப்பாளர்:

ஸ்ரீதேவி மோகன்

ஏழு ஆண்டுகால பத்திரிகையாளரான ஸ்ரீதேவி மோகன், குமுதம், தினகரன் உள்ளிட்ட இதழ்களில் பணியாற்றியிருக்கிறார். 2015–ம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற ஒன்பதாம் உலகத் தமிழ் மாநாட்டில் கலந்துகொண்டு ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்துள்ளார். 2018-ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற ‘தமிழ் இலக்கியத்தில் மதம், சமூகம்’ பற்றிய சர்வதேச மாநாட்டில் பங்கேற்று ஆய்வுக்கட்டுரை அளித்துள்ளார். எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரி மற்றும் திருவையாறு ஐயா கல்விக்கழகம் இணைந்து நடத்திய எட்டாவது தமிழ் மாநாட்டில் ஆய்வறிக்கை சமர்ப்பித்துள்ளார்.

­­