“ வர்ற மே மாசம் லீவ்க்கு நாம பெரியம்மா வீட்டுக்குப் போகலாம்.”

“ஆகா! ஜாலி, ஜாலி” என அம்மா சொன்னதைக் கேட்டு வீடெல்லாம் சுற்றினாள் சுமிதா.

“ எதுக்கு இப்படிக் கத்திக்கிட்டு போற? எப்பவும் போற பெரியம்மா வீடுதானே, ஏன் இப்படிச் சத்தம் போட்டு ஊரைக் கூட்ற?” என அம்மா ஆச்சரியமாகக் கேட்டார்.

“என்னம்மா அப்படிக் கேட்டுட்ட, ஆத்துல போயி நீச்சலடிச்சி மீன் பிடிச்சி விளையாடுவோம், பத்தாத கொறைக்கு வர்ற வழில கால்வாயில எல்லாம் விளையாடுவோம். அங்க சாயப்பட்டறை, நூல் மில், துணி நெய்யும் பவர்லூம்ன்னு எல்லாத்தையும் போயி பார்ப்போம்.”

“அது மட்டுமாம்மா, தியேட்டர்ல படம் பார்ப்போம், பெரியம்மா சுடற பூரிக்கு நான் அடிமை” என அக்கா சுமிதா விட்டதைத் தொடர்ந்தான் விவேக்.

“எல்லாரும் ஒரு பெரிய திட்டத்தோடத்தான் இருக்கீங்க. எப்பவும் எங்க அக்கா சிறப்பாத்தான் கவனிப்பா” எனப் பாசமலரை விட்டுத் தராமல் பேசினார் அம்மா.

“பாருங்கடா, அவங்க அக்காவை அம்மா என்னைக்கு விட்டுத் தந்திருக்காங்க?” என அப்பா ஒருபுறம் கிண்டலாகப் பேசினார்.

“அப்பா ஆரம்பிச்சிட்டீங்களா? எங்களுக்குப் பெரியம்மா வீட்டுக்குப் போக ரொம்பப் பிடிச்சிருக்கு. அதனால போறோம்ப்பா” என சுமிதா முற்றுப்புள்ளி வைகத்தாள்.

“எப்படியோ எல்லாரும் மகிழ்ச்சியா இருக்கறது எனக்கும் மகிழ்ச்சி” என்றார் அப்பா.

“சரி, நாங்க போயி தேர்வுக்குத் தயாராகறோம்ப்பா” எனக் கிளம்பிவிட்டனர் அனைவரும்.

விடுமுறை விட்டதும் அனைவரும் பெரியம்மா வீட்டிற்குக் கிளம்பிவிட்டனர். வழிநெடுக கனவுகளைச் சுமந்தபடியே பேருந்து பயணம் முடிய குமாரபாளையத்திலுள்ள பெரியம்மா வீடும் வந்துவிட்டது. கணவனைப் பிரிந்து இரண்டு குழந்தைகளின் வளர்ப்பைப் பொறுப்பேற்றிருக்கும் பெரியம்மா பவாயிக்குத் தன் தங்கையும், தங்கையின் வீட்டில் கூடவே இருக்கும் தங்கம்மாளும்தான் நெருங்கிய ஆதரவு. அதான் அவர்கள் வந்தாலே பாவாயி மகிழ்வின் எல்லைக்குச் சென்றுவிடுவார். தன் குழந்தைகள் போலவே தன் தங்கை குழந்தைகளையும் கூலி வேலைக்குச் சென்று வாய்க்கும் வயிறுக்கும் இடையே மட்டும் பொருளாதாரம் இருப்பினும் கவனிக்கத் தவறியதே இல்லை. தன் தங்கை படித்து வேலையில் இருப்பதால் உதவி தேவைப்படும்போது உதவுவதுமுண்டு.

“ பெரியம்மா எப்படி இருக்கிங்க? நாங்க எப்படா லீவ் விடுவாங்க இங்க வருவோம்ன்னு காத்திக்கிட்டு இருந்தோம். நாளைக்கு ஆத்துக்குப் போலாமா?” என்றாள் சுமிதா.

“நீங்க எப்ப வருவீங்கன்னு நானும் ஏக்கமா இருந்தேண்டா கண்ணு” என்று கட்டியணைத்துக்கொண்டாள் இருவரையும்.

“அதென்ன அம்மாவோட போட்டோ மாதிரி இருக்கு. எங்க வீட்லகூட அம்மாவோட சின்ன வயசு போட்டோ இல்ல. நீ இங்க ஹால்லயே வைச்சிருக்கயே பெரியம்மா” என விவேக் ஆச்சர்யமாகக் கேடடான்.

“நான் அவளைவிட 15 வயசு பெரியவ. என் காலத்துல நான் படிக்கல. ஆனா, அவ கஷ்டப்பட்டு படிச்சி ஒரு நல்ல வேலைல இருக்கா. எங்கப்பா அவள எப்பவும் பெருமையா நெனப்பாரு. அவரு இருந்தா வீட்ல வைச்சிருப்பாரு. நானும் அவ படிச்சி ஒரு நல்ல நிலைல இருக்கறத நெனச்சி சந்தோசப்படுவேன். அதான் அவ பத்தாவது முடிச்சப்போ அவங்க ஸ்கூல்ல எடுத்த போட்டோவை ப்ரேம் போட்டு வீட்ல வைச்சிருக்கேன். அதப் பார்க்கும் போதெல்லாம் படிக்க வைச்ச அப்பா கண்ணுக்கு வந்து ஒரு தெம்பு கொடுப்பாரு” என்று நினைவுகளில் பெரியம்மா சுழல…

“பத்தாவது படிக்க வைச்சதைப் பெருசா நெனக்கிறீங்களே அதெல்லாம் பெருசா எல்லாரும் படிக்க வேண்டியதானே?” என்றாள் சுமிதா.

“அப்போல்லாம் பொண்ணுங்கள படிக்க அனுப்ப மாட்டாங்க. அதும் வயசுக்கு வந்துட்டா அவ்ளோதான் வீட்டைவிட்டே அனுப்ப மாட்டாங்க. ஆனா, எங்க அப்பா அவள குக்கிராமத்துல இருந்து 15 கி.மீ. தூரம் போயி படிக்க சைக்கிள் வாங்கிக் கொடுத்து அனுப்பிவிட்டாருன்னா அவரு எங்களுக்கு ஸ்பெசல்தான!”

“அவ்ளோ கஷ்டமா அப்போ படிக்கறது. இப்போல்லாம் அவ்ளோ சிரமம் இல்ல. அப்போ நாங்க ஜாலியா படிக்கறோம். அம்மா அப்போ தாவணி கட்டிருக்கீங்க, பொட்டு பாரு பெருசா நேர் பொட்டு வைச்சி அழகா இருக்கீங்கம்மா. இப்போ டீச்சரா வேலை செஞ்சாலும் ஸ்கூல்க்கு சுடிதார் போட்டுக்கிட்டுப் போறீங்க. அப்போ கொஞ்சம் பார்க்க கம்பீரமாவும் இருக்கீங்க. லவ் யூ ம்மா” எனக் கட்டிபிடித்து முத்தம் கொடுத்தான் விவேக்.

“ஏம்மா இந்தத் தாவணி பாவாடை கட்டிக்கிட்டு சைக்கிள்ல 15 கி.மீ. எப்படித்தான் போனயோ? இப்பல்லாம் சுடிதார், கோர்ட் போட்டுக்கிட்டு ஸ்கூல் போறோம். கொஞ்சம் ஈஸியா இருக்கு” என்றாள் சுமிதா.

“நல்லா கேட்ட சுமி. ப்ளவுஸ் தைச்சு தாவணியை எடுத்து சொருகி மடிப்பெடுத்து அங்க ஒரு பின் குத்தி இப்படியே அங்கங்க உடம்பு தெரியக்கூடாதுன்னு ஒரு நாலு ஐஞ்சு பின் குத்திருவோம். தாவணி எங்கடா நகர்ந்திடுமோன்னு எப்பவும் அது மேலயே ஒரு கண்ணு வைச்சிக்கணும். எதேச்சையா நழுவிடுச்சுன்னாகூட ரொம்ப பதட்டமாயிடும். அதனால எப்போவும் அலார்ட்டாவே இருப்போம். சைக்கிள் ஓட்டும்போது இன்னும் சிக்கல். தாவணியோ பாவாடையோ மாட்டக் கூடாதுன்னு வேற கவனமா இருக்கணும். அங்கங்க தாவணி நழுவாம இருக்கற வேற கவனத்துல வைச்சுக்கிட்டே இருக்கணும்” என்று அம்மா பாரதி சொன்னார்.

“நல்ல வேளை இப்போ மாறிடுச்சு. இல்லன்னா இன்னமும் நாங்க எவ்ளோ கஷ்டப்பட வேண்டியிருக்கும்… நினைச்சாவே பக்குன்னு இருக்கு” என டைம் மிசினை ஓட்டிப் பார்த்த உணர்வே வந்துவிட்டது சுமிதாவுக்கு.

“பள்ளிகள்ல எங்க காலத்துல தாவணி, பாவாடை போட்டோம். அப்புறம் நிறைய பேர் பாலின சமத்துவம் உடையில் வேண்டும்ன்னு குரல் கொடுக்க, பள்ளி சீருடைகள் மாற்றம் கண்டுச்சுன்னு சொல்லலாம். தாவணி கட்டும்போது படிக்கறது ஒரு பக்கம்ன்னாலும் உடைலயே கவனம் செலுத்த வேண்டியிருந்துச்சு. இப்போ இருக்க உடைல அந்தச் சிக்கல் எதுவுமில்ல. இப்பவும் பெண் ஆசிரியர்கள் சேலையில்தான் வரணும்ன்னு எழுதப்படாத விதி நம் பள்ளிகள்ள, சமூகத்துல இருக்கு. ஒரு காலத்துல ஆண் ஆசிரியர்கள் வேட்டி கட்டிக்கிட்டு வந்தாங்க இப்போ வேட்டி மறைஞ்சு பேண்ட் ஆயிடுச்சு. இயல்பா மாற்றம் கண்டுச்சு அங்க. ஆனா, பெண்களுக்குன்னு வரும்போது பாராமுகமாகவே இருக்கு. ஆனா, ஆசிரியரான தொடக்கத்துல சேலை கட்டிக்கிட்டு போனேன். கற்றல் – கற்பித்தல் பணி செய்வது ரொம்ப சிரமமா இருந்துச்சு. அதுவும் சேலை கட்டிக்கிட்டு எப்படிக் குழந்தைகளோட செயல்பாடுகள், விளையாட்டு, கலை நிகழ்ச்சிகளெல்லாம் சொல்லிக் கொடுக்கறது. தாவணி மாதிரியே உடை மேல கண்ணு வைக்கறதா இருக்கு. சேலையோட வண்டி ஓட்டறது, பேருந்து பயணம் போறதெல்லாம் நினைச்சுக்கூடப் பார்க்க முடியல. அதான் சுடிதார்க்கு மாறிட்டேன். என்ன மாதிரி மாற்றத்தை முன்னெடுக்கக்கூடிய ஆசிரியர்களும் இந்த மாதிரி உடை மாற்றத்தை நடைமுறைப்படுத்தியிருக்காங்க” என்று பெரிய வரலாற்றையே தன் நினைவுகளில் இருந்து பகிர்ந்து கொண்டார் ஆசிரியராக உள்ள பாரதி.

“எல்லோரும் சமம்ன்னு சொல்றோம்ல்லமா. அப்போ உடைல எப்படித்தான் சமத்துவமா இருக்கணும்ன்னு நினைக்கிறீங்க?” என்றாள் சுமிதா.

“அதான் கோர்ட், சுடிதார்ன்னு மாறிடுச்சுல்ல அப்புறமென்ன இன்னும் மாறணும்ன்னு சொல்றியா?” – விவேக்.

“கேரளாவுல பாலின பேதமில்லாம உடை அணியணும்ன்னு அரசாங்கம் சொல்லி நடைமுறைப்படுத்தியபோது, இங்க இருக்க சமூக ஆர்வலர்களும் வரவேற்றாங்க. உடை பொதுவாக்கப்படணும், அப்போதான் பாலின சமத்துவம் அடைஞ்சதா அர்த்தம்” எனப் பாரதி ஒரே வார்த்தையில் நச்சென்று கூறினார்.

(தொடரும்)

படைப்பாளர்:

சாந்த சீலா

சாந்த சீலா கடந்த 17 ஆண்டுகளாக ஆசிரியராகப் பணிபுரிகிறார். கும்முடிப்பூண்டியை அடுத்த பூவலை கிராமத்தின் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர். பேருந்து வசதி கூட சரியாக இல்லாத இந்த ஊரிலேயே தங்கி, பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு கல்வியறிவு தருகிறார். இவரால் இந்தப் பள்ளியில் இடைநிற்றல் குறைந்திருக்கிறது. பள்ளி மேலாண்மைக் குழுவின் ஆசிரிய உறுப்பினராகவும் இருக்கிறார். கல்வியின் நோக்கமான படைப்பாற்றல் வெளிப்பட குழந்தை மையக் கல்வி அமைய வேண்டும் என்றும் விளிம்புநிலை குழந்தைகளும் மையநீரோட்டத்தில் இணைய வேண்டும் செயல்படும் அரசு பள்ளி ஆசிரியர். குழந்தைகளைக் கொண்டாடுவோம் கல்வி இயக்கம், குழந்தைநேயப் பள்ளிகள் கூட்டமைப்பு போன்ற அமைப்புகளில் செயலாற்றிக் கொண்டுவருகிறார். ஹெர் ஸ்டோரீஸில் இவர் எழுதிய குழந்தைகள் பற்றிய தொடர், ‘நாங்கள் வாயாடிகள்’ என்ற நூலாக வெளிவந்திருக்கிறது.