அன்புள்ள அண்ணா,
என் மனைவிக்கு மாதவிடாய் நேரத்தில் கடுமையான வயிற்றுவலியும் உதிரப்போக்கும் இருக்கிறது. திருமணமானது முதல் இதற்காகப் பல மருத்துவம் செய்து பார்த்துவிட்டோம். ஒன்றும் பலனில்லை. உதவி ப்ளீஸ்.
விஜய்,
வில்லிவாக்கம்
அன்புள்ள விஜய்,
மாதவிடாய் நேரத்தில் சில பெண்களுக்கு வரும் கடுமையான வயிற்றுவலி Dysmenorrhea எனப்படும். இயல்பு வாழ்க்கையைப் பாதிக்கக்கூடிய அளவுக்குக் கடுமையான வயிற்று வலி ஓரிரு நாட்களுக்கு மேலும் தொடர வாய்ப்பு உண்டு. சிலருக்கு வலியுடன் வயிற்றுப் போக்கு, வாந்தி, தலைவலி, மயக்கமும் வரலாம்.
டிஸ்மெனோரியா முதன்மை, இரண்டாம் நிலை என்று இருவகைப்படும். முதன்மையான டிஸ்மெனோரியா கருப்பையின் சுவர்களில் படிந்திருக்கும் ப்ரோஸ்டோக்லாண்டின்ஸ் எனும் இயற்கை அமிலங்களினால் ஏற்படுகிறது. இந்த அமிலமானது கருப்பை தசைகளையும் ரத்த நாளங்களையும் சுருங்கச் செய்கிறது. மாதவிடாயின் முதல் நாள் இந்த அமிலத்தின் அளவு அதிகமாக இருப்பதனால் வலியும் அதிகமாக இருக்கும். உதிரப்போக்கு தொடர, கருப்பையின் புறணியும் கசடாகி வெளியேற, அமிலத்தின் அளவும், வலியும் குறைகிறது.
தீர்வு முதன்மை டிஸ்மெனோரியா தன்னால் ஓரிரு நாளில் சரியாகிவிடும் என்பதால் இதில் கவலைப்பட ஏதுமில்லை. ஆனால், வலியைக் குறைக்கவும் இதமாக உணரவைக்கவும் பல நிவாரணங்கள் உள்ளன.
வெந்நீர்ஒத்தடம்: வலியில் அவதிப்படும் உங்கள் இணையருக்கு வயிற்றில் இதமாக வெந்நீர் ஒத்தடம் கொடுக்கலாம். வெந்நீர்ப் பைகள் எல்லா மருந்துக் கடைகளிலும் கிடைக்கும்.
உடற்பயிற்சி: மெதுவாகச் சில உடற்பயிற்சிகள் செய்யச் சொல்லுங்கள். நீங்களும் மனமகிழ்வாகப் பேசிக்கொண்டே அதனைச் செய்யுங்கள். உங்கள் அன்பும் சிரிப்பும்தாம் அந்த நேரத்தில் மிகவும் தேவையாக இருக்கும்.
எண்ணெய்மசாஜ்: ரோஸ்மேரி, காமோமைல், பெப்பர்மிண்ட், டீ ட்ரீ முதலிய எண்ணெய்கள் கொண்டு இதமாக மசாஜ் செய்யுங்கள். ரொம்ப வலிக்கும்படி செய்து விடாதீர்கள். உங்கள் இணையரின் மனம் போல, அன்போடு செய்யுங்கள்.
உணவுப்பழக்கங்கள்: அந்தமூன்று நாட்கள் மட்டும் பழுப்பு அரிசி சமைத்துக் கொடுங்கள். சாறுள்ள நிறைய பழங்களையும் பச்சைக் காய்கறிகளையும் உண்ண வையுங்கள். சாப்பிட அடம்பிடித்தால் ஜூஸ் போட்டுக் கொடுங்கள்.
ஆஸ்பிரின்முதலியமிதமானவலிநிவாரணிகள்: வலி தாங்க முடியாத அளவுக்கு இருந்தால் ஓர் ஆஸ்பிரின் கொடுக்கலாம். ஆனால், இது பழக்கமாக வேண்டாம்.
உச்சகட்டம்மாதவிடாயின் போது உடலுறவு கொள்வது நோய்த்தொற்று ஏற்பட வழிவகுக்கும் என்றாலும் வேறு வழிகளில் உங்கள் இணையருக்கு உச்சகட்டம் (orgasam) ஏற்பட வழிசெய்யுங்கள். உச்சகட்டம் அடைவது உடலையும் மனதையும் தளர்வாக்கி வலியிலிருந்து உடனடியாக நிவாரணம் தரும். உறக்கமும் நன்றாக வரும்.
—-
இரண்டாம் நிலை டிஸ்மெனோரியா என்பது கருத்தரிப்பு உறுப்புகளில் ஏற்படும் பிரச்னைகளால் உண்டாவது. இது வழக்கமான மாதவிடாய் வலியைவிட அதிக நாள் நீடிக்கும்; முறையான சிகிச்சை செய்துதான் குறைக்க முடியும். ஃபைராய்டு முதலிய கட்டிகள் மற்றும் இயல்பாகவே கருப்பையில் இருக்கும் சில கோளாறுகளினால் இந்த இரண்டாம் நிலை டிஸ்மெனோரியா ஏற்பட வாய்ப்புள்ளது.
(ஆண்கள் நலம் தொடரும்)
படைப்பாளர்:
ஜெ.தீபலட்சுமி
பெண்ணிய செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான ஜெ.தீபலட்சுமி தொடர்ச்சியாக பெண்ணுரிமைக் குரலை எழுப்பி வருபவர். ‘இப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப்படுவதில்லை’ என்ற நூலை எழுதி இருக்கிறார். ஊடகங்களில் இவர் எழுதிய பெண்ணியக் கட்டுரைகள், ’குத்தமா சொல்லல, குணமாதான் சொல்றோம்’ என்கிற நூலாக ஹெர்ஸ்டோரீஸ் பதிப்பகத்தில் வெளிவந்திருக்கிறது. ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளிலும் சரளமாக எழுதியும், பேசியும் வருகிறார். எழுத்தாளர் ஜெயகாந்தனின் சிறுகதைகள் சிலவற்றைத் தொகுத்து ‘The Heroine and other stories’ என்ற நூலாக மொழிபெயர்த்திருக்கிறார்.