ஆகஸ்ட்மாதம், 2023

அன்றொரு நாளில்

அனந்தசயன கோலத்தில் நானும்,

என் மடியில் முகம்பதித்தபடி நீயும்,

விரகம் தீர்த்த பின்னும் விலகாமல் இருக்கையிலஜென்மங்களில் மேல்

நம்பிக்கை இல்லாத நானோ

ஏழு ஜென்மமும் நீயே வேண்டும் என

நினைத்திருந்தேன்.

இன்றைய பொழுதிலோ,

என் காதில் பதிகங்களாய் பதிந்த உன்

வார்த்தைகள் ரீங்காரமிட

குகை சித்திரங்களாய் நான் உள்ளிழுத்த

நம் இசைவான கணங்களின்

நினைவுகள் நிழலாட

உன் இதழ் பதித்த முத்தத்தின் ஈரம்

சற்றும் குறையாமல் இம்சிக்க

என்னைச் சுற்றும் உன் வாசனையின்

தீவிரம் குறையாதா என ஓடித்திரிகிறேன்.

என்னுள் உறைந்த உன் பெயரை

எந்த நெருப்பிலிட்டு

கரைக்க என அல்லாடுகிறேன்.

தீரா தித்திப்பாய் என் உடலில் பதிந்த

உன் தீண்டல்களை

எங்கு போய் அழிக்க, என இடம் விட்டு இடம் அலைகிறேன்…

உன் பிரிவு என்னை இத்தனை துயரில் ஆழ்த்தும் எனச் சத்தியமாக நான் அறிந்திருக்கவில்லை.

என்னுள் இத்தனை ஆழமாக, ஆணிவேராக இறங்கி முற்றும் வியாபித்திருப்பாய் எனக் கணித்திருக்கவில்லை.

இதோ வழுக்கு மரத்தில் ஏறி ஏறி கீழே வழுக்கும் சிறுவன் போல, நடந்ததை மனம் ஏற்க முயற்சி செய்து, முயற்சி செய்து தோற்றுக்கொண்டிருக்கிறது. காரணம் சொல்லி விலகிப் போயிருந்தால் சிறு ஆறுதலாவது எனக்கு எஞ்சியிருக்கும்.

இப்போது என்னிடம் இருப்பதெல்லாம் ஒரே ஒரு கேள்வி மட்டுமே.

ஏன் இப்படிச் செய்தாய் எனக்கு என எழுதி முடித்த நித்யாவுக்கு விழிகளின் ஓரம் கண்ணீர் கசிந்தது.

அமித் டெல்லியில் ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்தான். டெல்லியில் நடுத்தர வர்க்கம் வசிக்கும் குடியிருப்பு பகுதியில், நான்காவது மாடியில் இருந்தது அவன் குடியிருந்த வீடு. இரு முறை மட்டும் நித்யா அங்கு போயிருக்கிறாள். அந்த இரு முறையும் நான்கு மாடிகள் ஏறுவது இவ்வளவு கஷ்டமாக இல்லை. ஆனால், இன்று சுமக்க முடியா பளுவைத் தோளில் ஏற்றிக்கொண்டு, குனிந்தே செல்லும் சுமை தூக்கியியைப் போல படியேறினாள்.

அடுத்த நாள் மாலை அமித் வெளிநாடு செல்கிறான். இப்போது பார்த்துக்கொள்வதுபோல், இதற்கு அப்புறம் முடியுமா என அவளுக்குத் தெரியவில்லை.

அமித் வீட்டு பெல்லை அழுத்திவிட்டு, கதவருகில் காத்திருந்தாள். முகத்தில் சோகம் இழையோடியது. உள்ளிருந்து அவன் குரலைக் கேட்க முடிந்தது. உள்ளே வா என்றான். கதவைத் திறந்து உள்ளே சென்றாள்.

அமித்தின் தாய்மொழி மராட்டி. ஆனால், அவனுக்குத் தமிழ் நன்றாகவே பேச தெரிந்திருந்தது. அவன் மராட்டியில் போனில் பேசிக்கொண்டிருந்தான். பேசியபடியே பக்கத்தில் வந்து உட்காருமாறு செய்கை செய்தான். அவளும் பக்கத்தில் போய் உட்கார்ந்துகொண்டாள்.

நித்யாவுக்கு அவன் அருகில் இருப்பது எப்போதுமே பிடித்திருந்தது. அவன் பேசுவது எதுவும் புரியவில்லை. ஆனால், அவன் போகும் அமெரிக்கப் பயணம் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறான் என்பதை மட்டும் புரிந்துகொண்டாள்.

பேசிக்கொண்டே நித்யாவின் தோள்களில் கை போட்டுக் கொண்டான். மெதுவாகத் தன்னை நோக்கி இழுத்து, தன் மார்பில் சாய்த்துக்கொண்டான். ஒவ்வொரு முறை அவன் அணைக்கும் போது, அவள் புதிதாகப் பிறந்தாள். கண் மூடி, அவன் மார்பில் இருந்துவந்த, பழகிப்போன வியர்வை கலந்த ஸ்ப்ரே வாசனையை சுவாசிக்கையில் அவள் இதயம் பலமாகத் துடித்தது. அந்த வாசனை அவளுக்குப் புதிதல்ல. ஆனால், அன்று ஒருவித மன நெருடலைத் தந்தது.

அவன் பேசிவிட்டு போனை ஆஃப் செய்தான். திரும்பிப் பார்த்து, அவள் முகத்தைத் தன் இரு கைகளால் வாரிக்கொண்டான். இதழோடு இதழ் பதித்து அழுத்தமாக ஒரு முத்தமிட்டான். ஏதோ உணர்ந்தவளாகச் சட்டென்று விலகிக் கைகளால் தள்ளினாள்.

இந்த முத்தமும் அவளுக்குப் புதிதல்ல. ஆனால், இன்று ஏதோ ஒரு வருத்தமும் கோபமும் இயலாமையும் அந்த முத்தத்தை அது வழக்கமாகத் தரும் மயக்கத்தைத் தடுத்தது.

அமித் சராசரி உயரமும் கொஞ்சம் பூசினாற் போன்ற உருவமும் கொண்டவன். கையை அவன் மார்பில் பதித்து விலக்குகையில் அவன் பிடியின் அழுத்தம் விலகாதிருக்கவே அவள் உள்மனம் வேண்டியது. அவன் மார்பின் ரோமங்கள் தருகின்ற கதகதப்பிலிருந்து மீள கைகள் சற்றே தயங்கின.

ஏன், என்ன ஆச்சு நித்யா? தவிர்க்கும் காரணத்தை கேட்டான் அமித்.

“உன் வீட்ல என்னைப் பத்திப் பேசு. நம்ம கல்யாணம் பத்தி பேசுனு எத்தனை தடவை சொல்றேன். நீ ஏன் பதிலே சொல்ல மாட்டேங்கிற?”

“அதை அப்புறம் பேசலாம் ப்ளீஸ். முதலில் என் பக்கத்தில் வந்து உட்கார்” சிறு சிரிப்புடன் அமித் சொன்னான்.

“நான் உட்காரவில்லை. எனக்கு டெல்லியில் இப்போது நீ மட்டும்தான்… நீ போனதுக்கு அப்புறம் எப்படிச் சமாளிக்க போறேன்னு தெரியல. ஆனா, அதைப் பத்தி நீ துளிகூடக் கவலைப்பட்ட மாதிரியோ என்ன பத்தி நினைக்கிற மாதிரியோ தெரியல.”

அமித் கண்களை வேறு பக்கம் திருப்பிக்கொண்டான். அவளை நேராகப் பார்ப்பதைத் தவிர்த்தான்.

முந்திய நாள் ஷாப்பிங் செய்த கவர்களில் ஒன்றினைத் திறந்து, அதிலிருந்த டி-சர்ட்டின் மேல் ஒட்டியிருந்த ஸ்டிக்கரைக் கை நகங்களால் எடுத்துக்கொண்டிருந்தான்.

“நான் உங்கிட்டதான் பேசுறேன். ப்ளீஸ் பதில் சொல்லு.”

அமைதியாகக் குனிந்தே இருந்தான். அவள் கண்களைப் பார்ப்பதை இன்று தவிர்த்துக்கொண்டே வந்தான்.

“அமித், உன்னைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நீ ஒரு மும்பைக்காரன் என்பதைத் தவிர எனக்கு உன்னோட பெர்சனல் விஷயங்கள் எதுவுமே தெரியாது. எந்த கம்பெனியில் வேலை செய்யுற என்பதைத் தவிர, உன்னோட ஆபிஸ் விஷயங்கள்கூட எதுவும் தெரியாது. எனக்குத் தெரிஞ்சதெல்லாம், நான் உன்னை ரொம்ப நேசிக்கிறேன்னு மட்டும் தான்… இப்ப எல்லாம், நீ என்ன லவ் பண்றியான்னுகூட எனக்கு டவுட்டா இருக்கு” என்றாள்.

வேகமாக நிமிர்ந்து, “ஐ லைக் யூ சோ மச். நித்யா, ஐ லவ் யூ சோ மச்” என்றான் அமித்.

“அப்பறம் ஏன் எந்தப் பதிலும் சொல்லாம இருக்க?”

பேசிப் பேசி அவள் சோர்ந்தே விட்டாள். பெருமூச்சுடன் அவனுக்கு அடுத்து உட்கார்ந்தாள்.

கேட்டு, கேட்டு வற்புறுத்துவதில் என்ன சோர்வுதான் மிஞ்சியது. அவனுக்காக, அவன் எழுதுவதற்காக, தான் வாங்கி வைத்திருந்த மான்ட் ப்ளாங்க் ஃபவுன்டன் பேனாவைக் கொடுத்தாள்.

அவன் வாங்கிக்கொண்டே கொஞ்சம் சிரியேன் என்றான்.

வெளியில் சிரித்துக் கொண்டே, பெரிய வெற்றிடத்தைச் சுமந்து அவன் வீட்டை விட்டு வெளியே வரத் தயாரானாள்.

“இன்னைக்கு இங்க இருந்துட்டுப் போயேன். இன்னைக்கு ராத்திரி, உன் மடியில் படுத்துத் தூங்கணும் போல இருக்கு.”

சிறு புன்னகை ஒன்றை மட்டும் பதிலாகத் தந்துவிட்டு , அங்கிருந்து கிளம்ப முயன்றாள்.

“நித்யா, அங்க போன உடனே எனக்கு நம்பர் மாறிவிடும். புது நம்பர் எடுத்துட்டு உன்னைக் கூப்பிடுகிறேன்” என்றான் அமித்.

இன்றோடு அது நடந்து முடிந்து ஒன்றரை வருடம் ஆகிவிட்டது. ஒருமுறைகூட அவனிடமிருந்து அழைப்பு வரவில்லை. அனுப்பிய மெயில்களுக்கும் பதில் வரவில்லை.

இதை எல்லாம் அமித் திட்டமிட்டுச் செய்ததாகவே சில நேரம் நினைத்துக்கொள்வாள் நித்யா.

அவனோடு இருந்த பிணைப்பு, இவ்வளவு ஆழமாக இருந்திருக்கும் என்பதை அறியாதவளாக, ஓர் உறவின் பிரிவு இத்தனை துன்பத்தில் ஆழ்த்தும் என்பதை நித்யா கடுகளவும் நம்பாதவளாகவே இருந்தாள். காதல் உறவில் துன்புறும் பெண்களை எமோஷனல் ஃபூல் என்றே கருதிவந்தாள், அமித் தன்னை விட்டுச் செல்லும் வரை.

நித்யாவின் நண்பன் கவின் மூலமாக அறிமுகமானவன் அமித். பார்த்த மாத்திரத்திலே பிடித்துப் போனது நித்யாவிற்கு. ஆறு மாதங்களாக அமித்தும் நித்யாவும் அடிக்கடி சந்தித்துக் கொண்டார்கள். பல நேரம் நித்யாவின் வீடு. அது அவள் வேலை பார்க்கும் கம்பெனியில் இருந்து தரப்பட்டதாகவும், சகல வசதிகளுடன் கூடியதாகவும் இருந்தது. ஆனால், இன்று காதல் என்கிற புயல் தந்து சென்ற சேதாரங்களை மறப்பதற்காக, டெல்லியில் இருந்து மாற்றலாகி சென்னையில் தஞ்சமடையத் தயாராகிக் கொண்டிருந்தாள்.

(தொடரும்)